ஏலியன்கள் இருக்கிறார்களா?

Page

aliens-t
தமிழினி வெளியீடு (2013)
தொலைபேசி: +91-9344290920/+91-8667255103

ஆன்லைனில் வாங்க


புத்தக முன்னுரை

ஏலியன்கள் என்றால் நீ என்ன நினைக்கிறாய் என்று என் ஆறு வயது மகளிடம் கேட்டேன். “ஓ தெரியுமே;” (பிறகு எல்லாம் ஆங்கிலத்தில்…) “பிளானெட்டில் வசிப்பவர்கள்.” “அப்ப நாம்?” என்றவுடன், யோசித்து திருத்தி, “இல்லை, மார்ஸிற்கோ ப்ளூட்டோவிற்கோ வந்துபோவார்கள். ஸ்பேஸில் வசிப்பார்கள் அப்பா. ஸ்பேஸ்ஷிப் வைத்திருப்பார்கள்; பீச் (peach), வெளுப்பு, கறுப்பு என்று நம்மைப்போல் கலரில் இருக்கமாட்டார்கள், நீலம், பச்சை கலர்ல, ஓவல் மூஞ்சியுடன், குச்சிக்கால்களுடன், காற்றே இல்லாமல் உயிர் வாழ்வார்கள்”.

எனக்குப் பரிச்சயமான உலகைவிட்டு, அதேசமயம் முழுவதுமாய் மாறுபடாமல் (விவரணையை மீண்டும் படித்துப்பாருங்கள்) சொல்லிக்கொண்டே போகிறாள்.

“நிறுத்து நிறுத்து. இரும்மா; புத்தனாம்பட்டியே பார்கலை நீ, எங்கு புளூட்டோ வரை சென்று ஏலியன்களை பார்த்தாய்?” என்றேன்.

“ஐய்யோ அப்பா, நான் சொல்வது Calvin Hobbesஇல் வரும் ஏலியன்கள். கார்டூன்கள். நிஜத்தில் அவர்கள் கிடையாது.”

“ஓஹோ, அப்ப மற்ற கிரகங்களில் உயிரே கிடையாதா?”

“ஆமாம்பா, நம்மமாதிரி கிடையாது. பாக்டீரியா மாதிரி வேணா இருக்கலாம்.”

ஏலியன்கள் பற்றி நம் அனைவருக்கும் ஒரு மனப்பிம்பம், கருத்து, இருக்கிறது.

வானியல் செய்திகளில் அடிபடும் ஏலியன்கள் என்ற சொல்லுக்கு, நம் உலகில் இல்லாத உயிரினம் என்று பொருள்கொள்ள எத்தனித்து, வேற்றுகிரகவாசிகள் என்கிறோம். நம் உலகில் இல்லாத ஒரு புதிய உயிரினம் என்பது வரை சரி. அது, அவர்கள், வேற்று கிரகத்தில் வசிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விண்வெளியில் (outer space) வாழலாம். ஏலியன்கள் ஒரு அறிவுடைய நீல நிறச்சாயலாகக்கூட இருக்கலாம், டக்ளஸ் ஆடம்ஸ் Hitchhikers guide to the Galaxy போன்ற விஞ்ஞான-நகைச்சுவை கதைப்புத்தகங்களில் குறிப்பிடுவது போல. இன்றைக்கு, 2013இல், நாஸா விஞ்ஞானிகள் ஏலியன்கள் இருந்தால் அவை ஊதா நிற நுண்ணுயிர்களாக (பர்ப்பிள் பாக்டிரியா) இருப்பதற்கே சாத்தியம் அதிகம் என்கிறார்கள்.

வேற்றுகிரகவாசிகள் என்று தமிழாக்கிக்கொண்டாலும், அத்தமிழாக்கத்தை வைத்து ஏலியன்கள் எவை என்பதின் சாத்தியங்களை குறுக்கிவிடக்கூடாது. சொல்லப்போனால் ஏலியன்கள் நம்முடனே இருக்கலாம். மாற்று உயிர் என்று ஒரு நிழல் உயிருருளை (shadow biopsphere), நம்முடனே பூமியில் தழைக்கலாம் என்பதையும் இப்புத்தகத்தில் பார்க்கப்போகிறோம்.

இயற்பியல் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங் சமீபத்தில் (2010இல்) ஏலியன்களைப்பற்றி அபாயகரமானவர்கள் என்றாரே. ஏன்? சரிதானா? அப்படியென்றால் அவர் ஏலியன்கள் இருப்பதை நம்புகிறாரா? நாமும் நம்பலாமா? நிரூபணம் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் கூட ஹாக்கிங் ஏலியன்கள் பற்றி கூறியதும் வானத்தில் ஒளி தெரிந்ததாமே. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் திட்டவட்டமாக பதில்கூற மறுக்கிறார்களாமே, நிஜம்தானா? மக்கள் பீதி அடைவார்கள் என்று மறைக்கிறார்களா? இரவு எங்கள் வீட்டுக் கொல்லைப்பக்கத்தில் கவனிக்கையில், அவ்வப்போது தொடுவானத்தில் ஒளிதெரிகிறதே, அது ஏலியன்களின் விண்வெளிக் கப்பலா? என்ற ஐயங்கள் வினாக்கள்.

இவ்வகைக் கேள்விகளுக்கான பதில்களையும், சார்ந்த அறிவியலையும் விரிவாக ஆனால் எளிமையாக உங்களுக்குத் தருவதே இப்புத்தகத்தின் நோக்கம்.

ஏலியன்கள் இருக்கிறார்களா?

புத்தகத்தினுள் சென்று, தேடுவோமா…

*
அட்டை வடிவமைப்பு: அருண் | பின் அட்டை சித்திரம்: வசுந்தரா
*