நேனோ: ஓர் அறிமுகம்

Page

nano-t
தமிழினி வெளியீடு.
தொலைபேசி: +91-9344290920/+91-8667255103

  • பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும், திருப்தியும், இந்த நூலின், 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன — தினமலர் மதிப்புரை

ஆன்லைனில் வாங்க


புத்தக முன்னுரை

“நேனோ” என்பது அறிவியலாளர்களுடன் ‘நேனு நேனு’ என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் துறை. வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் (nanobot) எனும் நுண்ணூடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்தியை “நேனோ” என்று பெயரிடும் அளவிற்கு இத்துறை இன்று பிரபலம்.

இயற்கையை அறிதலுக்கு அறிவியல் சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ தொழில்நுட்பம் விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள்,  தொழில்நுட்பங்கள், இயற்கையில் உயிரினங்களிடையே ஏற்கெனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது.

எனக்குப்புரிந்த அறிவியல் எல்லைக்குள், நேனோ அறிவியல் என்கிற இளகிய பொதுத்தரப்பின் கீழ் இத்துறையின் ஏன் எதற்கு எப்படி-யை அறிமுகமாய் விளக்கமுற்படுகிறேன். உள்ளடக்கத்தின் வசனநடையும் கோமாளி உடையும், அறிவியல் துறையின் தீவிரத்தை உள்வாங்க ஏதுவாக்கும் குதூகல மனநிலைக்கான பாவனைகளே.

ஆங்கில nano தமிழில் நேனோ-வோ நானோ-வோ? நேனோ என்றே புத்தகத்தினுள் உச்சரிக்கப்போகிறேன். மைக்ரோ என்றால் ஏற்கெனவே நுண் என்று பழக்கத்தில் உள்ளது (மைக்ராஸ்கோப் – நுண்ணோக்கி). நேனோவை அதி-நுண் எனலாம். ஆனால் நேனோ என்றே வைத்துக்கொண்டிருக்கிறேன். மைக்ரோ (micro), நேனோ (nano), பிகோ (pico), ஃபெம்ட்டோ (femto), அட்டோ (atto) போன்ற அதி-நுண் அளவைச் சொற்களை, சைக்கிள், பெடல், பிரேக், (குடிக்கும்) காபி என்பதுபோல அப்படியே புழக்கத்திற்கு கொண்டுவந்து உபயோகித்தாலும், விளக்கங்களை தமிழில் கொடுத்தால் போதுமானது என்கிற கருத்தில். இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு, நீனு நேனோ-ன்னா நேனு நோ நோ என்று வாசிக்காமல் போய்விடாதீர்கள்.

இப்புத்தகத்தை எழுதத் தூண்டுகோலாய் இருந்து, அதைச் செம்மையாக வெளியிடும் தமிழினிக்கு என் நன்றி.

*

அட்டை வடிவமைப்பு: அருண்