கிருஷ்ணகான சபாவில் அஸ்வத் நாரயணன் விக்னேஷ் ஈஸ்வர் இருவரும் இணைந்து வழங்கிய மாலைக் கச்சேரி இறுதிவரை இணக்கமான நல்லிசையாகவே ஒலித்தது.
ஆரபி ராகத்தில் தியாகராஜரின் ‘ஸாதின்சனே’ கிருதியை விறுவிறுப்பான பிரமாணத்தில் இணைந்து தொடங்கிய நேர்த்தி, வராளி புன்னாகவாராளி ருத்திரப்பிரியா என அன்றைய ராகங்களில் ஆலாபனை நிரவல்கள் ஸ்வரகல்பனை என அனைத்தையும் சரிவிகிதத்தில் பிரித்துக்கொண்டது, எடுப்புகளில் தடுமாற்றங்கள் இன்றிக் கிருதிகளைச் சேர்ந்து பாடுவது, அதேசமயம் கார்வையோ வரிகளின் இறுதியோ என்கையில் ஒருவர் மட்டும் ஒலித்துக் கேள்வி ரசனையைக் கூட்டுவது என மேடையில் இருவரின் மனவொழுங்கும் நன்கு அமைந்துவிட்டுள்ளது.
மேல்ஸ்தாயி சஞ்சாரத்தில் பளிச்சென அஸ்வத் தொடங்கிய காம்போதி ராக ஆலாபனை விரிகையில் மத்தியில் விக்னேஷால் தொடரப்பட்டு தரஸ்தாயி சஞ்சாரங்கள் அகாரக் கார்வைகள் என ஓங்கி ஒலித்த அவரது குரலில் கற்பனைவளத்துடன் எழுந்தது. வாக்கியப் பரிமாற்றமாய் இருவரும் இணைந்து குறைத்து ஆலாபனையை முடித்தது நிறைவு. அன்றைய வைகுந்த ஏகாதசித் திருநாளை முன்னிட்டு அரங்கன் மீது தியாகராஜரால் ஆக்கப்பட்ட ‘ஓ ரங்க சாயி’ கிருதி அதன் பல்வகை ராக சொல் அழகுப் பரிமாணங்களும் வெளிப்பட வழங்கப்பட்டது.
அடுத்து துளசிதாஸரின் இந்திப் பாடல். சிந்துபைரவி ராகத்தில் மெட்டமைத்தது வயலின் வித்வான் ஶ்ரீராம்குமார். முற்பகுதியில் உசேனி ராகத்தில் மூன்று நிமிடம் செய்யப்பட இவரது தனி ஆலாபனையே அன்றைய கச்சேரியின் உயரொளி எனலாம். சுவாதித் திருநாளின் தனஶ்ரீ ராகத் தில்லானாவுடன் கச்சேரி நிறைவுற்றது.
தத்தமது வழிகளில் இசைக்கும் இரு கலைஞர்கள் சேர்ந்து பாடும் கச்சேரியில் அனைத்துமே ஒத்திகைகளில் ‘செட்டப்’ செய்ததா என்றால் அவசியம் இல்லை. இக்கச்சேரியின் எடுத்துக்காட்டு ஒரு கட்டத்தில் ஸ்வரகல்பனைப் பரிமாற்றங்களில் விக்னேஷ் குரல் மேல்ஸ்தாயிக் கோர்வைகளை அடுக்கிக்கொண்டே போக உடன் பாடிவந்த அஸ்வத் தானும் அங்கு எட்டி நாராசமாக்காமல் சட்டென மத்திய ஸ்தாயி ஸ்வரங்களாய் இணைந்து பாடிய சமயோசிதம், எத்தனை ஒத்திகைபார்த்தாலும் கைவராத அபாரம். பலே.
அஸ்வத்-விக்னேஷ் இணையில் ஆலாபனைகளில் அபாரமான கற்பனைவளம் ஒருவருக்கு வாய்த்துள்ளது என்றால் மற்றொருவருக்கு லயம் பலம். எடுத்த பிரமாணம் இறுதிவரைப் பிசகாமல் அமர்த்தலான பிடிகளுடன் சாகித்திய சுத்தத்துடன் செவ்வியல் சௌக்கியமான சீரான பயணம் அடுத்தவரது. செம்மங்குடி அரியக்குடி என இரண்டு உயர்வான இசைவழிகள் தத்தமது பலங்கள் பிறழாமல் தொடர்ந்து மேடையில் ஒத்திசைக்கும் என்கையில் ரசிகர்களுக்குச் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வமே.
*
பார்த்தசாரதி ஸ்வாமி சபாவிற்கென வழங்கிய கச்சேரியை கே. காயத்திரி பழக்கமான கல்யாணி ராக ‘வனஜாக்ஷி’ வர்ணத்தில் தொடங்கினாலும் அடுத்து ‘பரியாசகமா’ கிருதிக்கான ஸ்வரகல்பனையில் அரிய வனஸ்பதி ராகத்தில் சில ஆவர்த்தங்கள் நிதானமாகப் பாடித் தனது மனோதிடத்தை வெளிப்படுத்தினார்.
பொன்னையா இயற்றிய தெலுங்கு மொழி ‘சாடிலேனி குருகுஹமூர்த்தி’ (பூர்விகல்யாணி ராகம்) கர்பபுரிவாசர் இயற்றிய ‘கமலாம்பனா’ (கானடா ராகம்) என வழக்கமாகக் கேட்கப்படாதக் கிருதிகள் தேர்வும் நன்று. பிருந்தாவன சாரங்கா ராகத்தில் ‘சௌந்தரராஜம்’ கிருதிக்கு இவர் வழங்கிய நிதானமான வடிவம் முன்னொரு நாள் இதே அரங்கில் விக்னேஷ் ஈஷ்வர் (நன்றாகவே) வழங்கிய வடிவத்தைக் காட்டிலும் இதமான கூடுதல் நியாயம் செய்தது என்பேன்.
தியாகராஜரின் ‘துளசிவில்வ’ கிருதிக்கு முன்னால் கேதாரகௌளை ராகத்தில் நிதானமாகத் தொடங்கி ராக உருவம் முழுமையாக வெளிப்படும் சஞ்சாரங்களில் விரித்து எம்.எஸ். சுப்புலட்சுமி பாணி மேல்ஸ்தாயி உருட்டல் சங்கதிகள் தெறிக்க நிறைவான ஆலாபனையை வழங்கினார். இதே ராகம் கிருதி என முன்னொரு நாள் இதே அரங்கில் பாடிய நிஷா ராஜகோபாலுடன் ஒப்பிடுகையில் காயத்திரியின் ஆலாபனை அதிக விரிவும் முழுமையும் கொண்டது எனலாம். ஆனால் கிருதியோ முழுக்கச்சேரியோ, நிஷாவிடம் அமையும் அவகாச விகிதங்கள் காயத்திரியிடம் தேவைப்படுகிறது. ஆலாபனை நிரவல் ஸ்வரகல்பனை என அனைத்து அங்கங்களையும் காயத்திரி விளம்பகாலத்தில் ஓரிரு நிமிடங்கள் (ஆவர்த்தங்கள்) முன்னரே முடித்துக்கொள்ளலாமோ.
அன்று பாடிய காயத்திரி உட்பட குரலாகட்டும் வாத்தியமாகட்டும் சீசன் முழுவதும் பல பெண் கலைஞர்களுக்கும், தன்பாட்டுக்கு குறுக்குசால் ஓட்டி இடையூறுகள் செய்யாமல், கிருதிச் சொல் பாங்காய் மிருதங்கம் வாசித்துவரும் ஜே. வைத்தியநாதனுக்குத் தனி சபாஷ்.
*
டி.ஆர்.சுப்பிரமணியம் டி.என்.சேஷகோபாலன் என இரண்டு பரிசோதனைப் பாங்கான அபாரமான இசைவழிகளின் சங்கமிப்பில் கற்றுத்தேறியவர் சிலரே. அகடெமியில் காலைக் கச்சேரி வழங்கிய டில்லி முத்துகுமார் அதிலொருவர். இதனால் ‘சாமோதம்’ என டி.ஆர்.எஸ். பாணியில் கிருதியும் ‘பக்தருக்கு சஹானா’ எனத் தொடங்கும் டி.என்.எஸ்.ஸின் பிரபலமான பல்லவியும் ஒரே கச்சேரியில் அடியேனால் கேட்டு ரசிக்க முடிந்தது. இவை இரண்டிற்கு முன்னாலும் சுத்ததன்யாசி சஹானா ராக ஆலாபனைகள், கல்யாணி ராகக் கிருதி (எந்துதோ நீமனஸி) ஆலாபனை அனைத்திலும் முத்துகுமார் பிரகாசித்தார். நிரவல் தானம் ஸ்வரங்கள் என்கையில் கற்பனை ஓட்டத்திற்கும் குரலில் அவற்றின் தொடர் வெளிப்பாட்டிற்கும் அவசியமான இணைப்பு அவ்வப்போது சீர்கெட்டுத் தடுமாறுவது சிற்றிடர். வந்து கேட்பாரில்லையோ என ஹிந்தோளம் சாரங்கா பிலஹரி ராகங்களில் அமைந்த ஊத்துக்காட்டாரின் பாடலுடன் முடித்துக்கொண்டார். உயர்வான இசை.
இக்கச்சேரிக்குப் பின்னர் அகடெமி கேண்டினில் மதியவுணவு வரிசை என்னை ஓரங்கட்டிவிட மீண்டும் அரங்கினுள் நுழைந்து வளரும் கலைஞர் சாய் விக்னேஷின் நண்பகல் கச்சேரியில் அருமையான சங்கராபரணம் ஆலாபனையைக் கேட்டு ரசித்தேன். செவிக்குணவில்லாத போதே பசி.
*
நாத இன்பத்திற்கான ‘ராம நன்னு புரோவரா’ என ஹரிகாம்போதி ராகத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடும் கிருதியுடன் தனிக்கச்சேரியைத் தொடங்கினார் ஆர். கே. ஶ்ரீராம்குமார். இவ்வாண்டின் ‘சங்கீதக் கலாநிதி’ விருதை ஏற்கும் இவர் எம் எஸ். சுப்புலட்சுமிக்கு உடன் வாசிப்பதில் தன் இசைப்பயணத்தைத் தொடங்கியதை ரசிகர்களுக்குக் குறிப்பால் அறிவித்தார் எனலாம்.
ஆனந்தபைரவி லலிதா துவிஜாவந்தி விஜயஶ்ரீ என அடுத்து வந்த ராகங்களின் வயலின் வாத்தியப் பாங்கான ஶ்ரீராம்குமாரின் தேர்வுகள் தெளிவென்றால், காபி ராகத்தில் தொடங்கிய ஆலாபனை ஶ்ரீராகம் கேதாரகௌளை சாமா லலிதா எனத் ‘தான’ங்களில் விரித்தது ஜோர். திளைத்திருந்த ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றார்போல் ‘இந்த சௌக்கிய மணினே’ என தியாகராஜரின் கிருதியை அடுத்து வழங்கியது முத்தாய்ப்பு. நமது மரபிசைப் பரப்பை செவ்வியல் குலைவுகள் ஏதுமின்றி அயல்நாட்டு வயலின் வாத்தியத்தில் கௌரவமாகவும் மதுரமாகவும் சஞ்சரிக்க முடியும் என்பதை ஶ்ரீராம்குமார் நிருபித்தார்.
கணகணவெனக் கச்சேரியைத் தொடங்கிய மிருதங்க வித்வான் திருச்சி சங்கரன் மூச்சுத் திணறல் அதிகரித்துப் பங்கெடுக்க முடியாமல் விலகிக்கொள்ள, கூட்டம் கணம் திகைக்க, கஞ்சீரா வாசித்திருந்த கே.எஸ். கோபாலகிருஷ்ணன் சட்டென தான் மிருதங்கத்திற்கு மாறிக்கொள்ள, நல்லிசை தொடர்ந்தது. தனி ஆவர்த்தனத்திற்கு அப்ளாஸ் முடிந்ததும் கே.எஸ்.ஜி. இரண்டாண்டுகளாய் மிருதங்கத்தை வாசித்திருக்கவில்லை என்றார். நம்பமுடியவில்லை என்றது அடுத்த சுற்று அப்ளாஸ்.
இலவசக் கச்சேரியில், நிரம்பிய அரங்கத்தாரிடம் தன் உடல் நலக்குறைவிற்கு மூச்சுத் திணறலுடன் சங்கரன் மன்னிப்புக் கோரிய அர்ப்பணிப்பு அசாத்தியம் என்றால் கோபாலகிருஷ்ணனின் பலபக்கவாத்தியத் திறன் அபாரம். கலை அநாதி; தன் போக்கில் தொடரும் என்பதை இந்த மார்கழி இசை விழாவிலும் மீண்டுமொருமுறை நிருபித்துக்கொண்டது.
*
