அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். என் பெயர் விக்னேஷ்வரன். சில ஆண்டுகளுக்கு முன்னால் நானும் என் மனைவி விஷ்ணுப்ரியாவும் UK-வில் வசித்துவந்த போது நாங்கள் இருவரும் சேர்ந்து வாசித்து மகிழ்ந்த ‘அமெரிக்க தேசி’யை அவள் வெகுவாய் ரசித்து தங்களுக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். லட்சியம், கனவு, கற்பனை, விருப்பம், தேடல் என்ற பல உந்துதல்களால் வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வந்த நான், பல்வேறு சம்பவங்கள் மற்றும் அனுபவங்களின் வழியாக என் தேடலின் முடிவு நான் தொடங்கிய இடத்திலேயே உள்ளது என்று கண்டுகொண்ட நாட்களில் தான் நாங்கள் அமெரிக்க தேசியை வாசித்தோம். ஆகையால் தேசிகனின் வாழ்க்கையை மிகத் தெளிவாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
நான் இப்படி கனவுத்தேடலில் (பொறுப்புணர்ச்சியோடும் தான்) ஈடுபட்டுக்கொண்டிருந்த காலங்களில் என் பெற்றோர்களும் உற்றோர்களும் எங்கள் வருங்காலத்தைப் பற்றியும் என் நடவடிக்கைகளையும் எண்ணி எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் என்று பின்னால் இப்போது தெளிவாகப் புரிந்தாலும் அப்போது அந்த அனுபவங்கள் எனக்குத் தேவை தான் என்றும் நம்புகிறேன். ஒருமுறை என் மனைவி என் அப்பாவிடம் அமெரிக்க தேசியைப் பரிந்துரைத்து புத்தகத்தை ஆர்டர் செய்து வரவழைத்தும் கொடுத்தாள். அப்பா நூலினை அவ்வப்போது ‘வாக்கிங்க்’ போகும்போது எடுத்துச் சென்று வாசித்தார் என்று எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் அது அவருக்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது டைரிக்குறிப்புகள் வழியாக அறிந்தேன். அதனைப் புகைப்படம் எடுத்து இத்துடன் இணைத்துள்ளதோடு அவரது எழுத்தினை சுலபமாகப் படிப்பதற்கு ஏதுவாக ஒரு வேர்டு டாக்குமெண்ட்டில் தட்டச்சு செய்து அதனையும் இணைத்துள்ளேன்.
அவர் என்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்றும், நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளும் போது என் கருத்துகள் நடைமுறைக்கு ஒவ்வாதனவாய் கற்பனை மிகுந்தனவாய்த் தோன்றி அவருக்கு பெருத்த கவலை ஏற்பட்டிருந்தாலும் அவற்றை என்மீது திணிக்காமல் அவர் எப்போதும் என் போக்குக்குத் துணையாய் இருந்திருக்கிறார் என்றும் இதனை வாசிக்கும் போது மேலும் நன்றாகப் புரிந்துகொள்கிறேன். அதனால் நன்றியறிதலும் ஏற்படுகிறது. தேசிகனின் வார்த்தைகள் அவருக்குள் ஏதோ ஒரு ஆழத்தைத் தொட்டிருக்கின்றன. தங்களிடம் இதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. நன்றி!
அன்புடன்,
விக்னேஷ்வரன்.
*****
[கீழுள்ளவை விக்னேஷ்வரனின் தந்தையாரின் டைரி குறிப்புகளில் இருந்து — அருண்]
அமெரிக்க தேசி
இப்புத்தகத்தின் ஆசிரியர் திரு.அருண் நரசிம்மன் குடவாசலில் பிறந்து ஶ்ரீரங்கத்தில் வளர்ந்தவர். அமெரிக்கப் பல்கலையில் ‘வெப்பவியல் துறையில்’ பிஎச்டி படிப்பில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றவர். தற்போது சென்னை ஐஐடியில் பணிபுரிந்து வருகிறார். நான் படித்த நாவல்களில் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நாவல்களில் மிகச் சிறந்த ஒன்று என இதைக் கருதுவதால் இந்நாவலைப் பற்றி எழுதவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
நாவலில் வரும் தேசிகன் என்ற முதன்மை பாத்திரம் மூலமும், உரையாடல்கள் மற்றும் அவனது எண்ணங்கள் மூலமும் நாவலின் பலபக்கங்களில் வாழ்க்கைத் தத்துவங்கள் யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. தேசிகன் தான் படித்த ஸெயிண்ட் ஜோசஃப் கல்லூரி, பௌதிகத்தில் பட்டம் பெற்றது, தன் பள்ளி அனுபவங்கள், கல்லூரி வாழ்க்கை, பின் திருச்சியில் வேலையிலிருந்தபோது கிடைத்த காதல் அனுபவங்கள் எல்லாமே படிக்க சுகானுபவமாக இருந்தது.
தேசிகன் ஶ்ரீரங்கத்தில் ஒரு வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்தவன். ஆராய்ச்சிப் படிப்பு செய்ய வேண்டும் என்ற லட்சிய வெறியால் அமெரிக்கா சென்று, அங்கு பல கஷ்டங்கள் பெற்று, நேர்கொண்ட பார்வை மாறாமல் லட்சிய வேட்கையுடன் தனக்கு வந்த இன்னல்களையும், படிக்கும்போது சகமனிதர்கள் மற்றும் பல்கலைப் பேராசிரியரின் தடைகளையும் தன் லட்சியங்களால் கடந்தவன். பல நண்பர்களையும் சம்பாதித்தவன். பல துரோக சம்பவங்களையும் அமெரிக்காவில் சந்தித்தவன். ஆனால் எல்லாவற்றையும் தன் லட்சிய வேட்கையால் கடந்தவன். தன் நோக்கம் மாறாத வகையில் கடும் உழைப்பைக் கொடுத்து, பிஎச்டி முடித்து பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆகாமல் தன் தாய்த்திருநாட்டுக்கே திரும்ப வந்து பணிசெய்தவன். அவனுடைய பார்வையிலும் எண்ணங்களிலும் கீழ்க்காணும் வகையிலுள்ளவை பொன்னேட்டில் பொறிக்கச் செய்யும் வகையில் ஆசிரியரின் எழுத்து வலிமை மிகவும் பாராட்டத் தக்கது.
“இரவு படுக்கையில் மனம் தொலைந்து புரள்கையில் தேசிகனுக்குத் திரண்டெழுந்தது ஒன்றுதான். வாழ்க்கையில் இனியாவது தனக்குப் பிடித்ததை மட்டுமே செய்ய வேண்டும். அதன் மூலமே பொருளீட்டிக் கொள்ள முனைய வேண்டும். வாழும் வாழ்க்கையில் நிலைத்திரு. உயிர்த்திரு. வாழ்க்கையைப் பணத்திற்கு விற்று நிலைத்திருத்தலை வாங்க நினைக்காதே. ‘கற்கக் கசடற’ என்பது ஓர் இலக்கு என்றால் கற்றபின் வாழ்க்கையில் அதற்கேற்ப நிற்க வேண்டும். மாடல்ல மற்றையவை.“
(அற்புதமான வரிகள்)
“அனுபவங்கள் வளர்ந்து நம் உலகப்பார்வையும் மாறவே செய்யும். கூடவே லட்சியங்களும். நமக்கிருக்கும் திறமைகளை எக்காலகட்டத்திலும் செம்மையாக்கி, மனத்தில் திரளும் இலட்சியங்களை அடையவே முயல வேண்டும். அக்காலகட்டத்தில் சாதனைகள் சோபித்து சுயம் பிழைத்தோங்கும். பிடித்தமானதாகவே வளரும் வாழ்க்கை”
(வைர வரிகள்)
“தெளிவு அவசியம். உள்ளத்தில் அமைதி. இன்று நிச்சயம் அமைதி மேலோங்கியுள்ளது. எதிலும் என்னைக் குறைத்து உள்ளதை உள்ளவாறே காணும் அமைதி. அரங்கன் கருவறையில் அரைநிமிட நாழிகை என்றாவது கிட்டும் அமைதி.”
(நூலாசிரியரின் எண்ண ஓட்டத்திற்கு நன்றி)
“மனிதம் என்பது திறமையில்லை. திறமையற்றவன் என்றும் ‘மனிதம்’ நிரம்பியவனாயிருக்கலாம். எங்கும் மனிதனாயிருக்கலாம். திறமை இருப்பதனாலேயே ஒருவன் திறமையற்றவனின் வாழ்வைத் தீர்மானித்து விட முடியாது. அமெரிக்காவில் பலர் செய்வது போல ‘மனிதம் அற்ற திறமை’ மடமை. மனிதமற்ற வல்லமை கொடுமை. உத்தமர்களின் உள்ளங்கள் மனிதநலத்திற்கே என்றால் மத்யமர்களின் மனிதமும் மனிதகுலத்திற்கே. மனிதமே குலத்தைப் பேணுகையில் தனிமனிதத் திறமைகளுக்கு தனித்த உருவேது?”
“லோகக்ஷேமம் வஹாம்யஹம், வஸுதைவ குடும்பகம் என்பவையெல்லாம் ஏற்றளிப்பது மனிதத்தையே. மனிதகுலத்தை ஆள நினைக்கும் கேப்பிட்டலிசமோ கம்யூனிசமோ அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். அந்நாணயம் மனிதத்தை விலைபேச முடியாச் செல்லாக்காசு. காதலும், காமமும் நாணய தரிசனங்களே. கிளரொளி இளமை வெளியில் சுண்டிவிட்ட நாணயம். அந்நாணயம் ‘சர்வே ஜனா சுகினோ பவந்து’ என்று புரந்து பொலியும் நித்யமான அன்பை விலைபேச முடியாத செல்லாக்காசு.”
“அறிவேட்கையுடன் அடையமுடிந்த எதுவோ அன்றே அரங்கனிடம் அறிவிலியாய்ப் பெற்றிருக்க முடிந்ததுவே. எதுவும் இலவசமாய் உனக்குக் கிடைப்பதில்லை. ஆனால் இலவசமாய் இங்கு இருப்பதை இருக்கும் இடத்திலேயே விலையின்றி நீ சென்றடையலாம். இதுவும் ஏதோவொரு ஞானமரபின் சாரமாகத் தான் இருக்க வேண்டும்.”
மேற்கூறிய ‘அமெரிக்க தேசி’ புத்தகத்தில் ஆசிரியர் திரு.அருண் நரசிம்மன் அவர்கள் தேசிகன் கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்து பரவசத்துடன் அனுபவங்களை வாசகர்களுடன் பல இடங்களில் பகிர்ந்துள்ளார். ஆசிரியரின் நல்ல எண்ணம்தான் இப்புத்தகத்தை எழுதத் தூண்டியிருக்கிறது. மிகவும் நல்ல சிந்தனைகளையும் போதனைகளையும் நாம் வாழும் வாழ்க்கைக்கு எது மிகச் சிறந்தது, தேவையானது என எல்லாவற்றுக்கும் விடை இப்புத்தகத்தில் பல இடங்களில் காண முடிகிறது.
என் மூத்த மகன் விக்னேஷ்வரனும் கதையில் வரும் தேசிகன் போல் … அவனது நல்வாழ்க்கைக்கு ஆசீர்வதித்த இறைவனுக்கு நன்றி, நன்றி, நன்றி. [இந்தப் பத்தியில் தனிப்பட்ட குடும்பத்தின் தகவல்கள் இருப்பதால் பொதுவெளியில் வைப்பதற்கு முன்னர் அவற்றை நீக்கியுள்ளேன் — அருண்]
*****
அன்புள்ள விக்னேஷ்வரனுக்கு,
பொங்கல் நாள் வாழ்த்துகள்.
உங்களுடைய மின்னஞ்சலுக்கு நன்றி. நிறைவாக இருந்தாலும் வாசிக்கையில் ஆச்சர்யமே ஓங்குகிறது. உங்களுடைய, உங்கள் தந்தையாருடைய வாசிப்பனுபவங்களுடன் உங்கள் மனைவி விஷ்ணுப்பிரியாவின் வாசிப்பனுபவத்தையும் சேர்த்து கவனிக்கையில் சில கருத்துகள் சொல்லத் தோன்றுகிறது. சுருக்கமாகவே அளிக்கிறேன்.
புலம் பெயர்ந்து சிலகாலம் வாழ்ந்த தம்பதியர் உங்களிருவருக்கும் இந்நாவலின் வாசிப்பனுவம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் எதிர்பார்க்கக் கூடியவையே. நல்லவேளையாக அவை உங்களிருவருக்கும் பயனுள்ளவையாகவே இருந்துள்ளது என்று அறிகையில் நிம்மதியே. உங்கள் தந்தையின் வயதொத்த அல்லது மூத்த வயதான பலருக்கும் இந்நாவல் பிடித்திருந்திருக்கிறது. சில ஆண்டுகளாக என்னுடன் பகிரப்படும் வாசகக் கருத்துகளில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. சிற்றூரிலிருந்து தொடங்கி நாடு கடந்து மாநகரம் கண்டு ‘வயதிற்கு வர’ முயலும் ஒரு கல்லூரி மாணவனின் அனுபவங்கள் மனவோட்டங்கள் கருத்துகள் ஏன் மூத்த வயதினரையும் பாதிக்கிறது? அவர்களுக்கும் நாவலின் நாயகன் போலவே மகன் மகள் இருப்பார்களே என்பது ஒரு பதில்.
மீட்பின் உறுதியைக் கொஞ்சமேனும் வழங்கமுடியாத கலை ஆக்கங்களால் அவற்றை அனுபவிக்க விழையும் மனிதனுக்கு என்ன பயன். இந்நாவலை எழுதுகையில் என்னளவில் மீட்பளிக்கவல்ல கலைவடிவத்தை முயல்கிறோம் அதற்கான வீச்சைக் குறைக்காமல் வழங்க வேண்டும் என்பதை மட்டுமே உணர்ந்திருந்தேன். அதனாலேயே எழுத்தார்வமும் புனைவு வடிவப் பரிசோதனை விருப்பங்களும் இழுத்துச் சென்ற போக்கில் எழுதிக்கொண்டு போனாலும் நாவலின் சம்பவங்களில் வாய்ப்பமைகையில் மீட்பை அடிக்கோடிடவே முயன்றிருக்கிறேன் — சில இடங்களில் துருத்திக்கொண்டு நின்றாலும், உபதேசக் கருத்துகளாகத் தொக்கி நின்றாலும் திருத்தவில்லை. இந்நாவலின் மீட்பாம்சங்களே அவற்றை உணர முடிந்த (வயதான) அனுபவசாலிகளைக் கவருகிறது என்று கருதுகிறேன்.
இலக்கியம் (கலை) வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் என்பது ஒரு சாரரின் நம்பிக்கை. நமது வாழ்க்கையே இலக்கியத்துடன் அவ்வப்போது ஒத்துப்போவதாகத் தென்படலாம் என்றே கருதுகிறேன். இதன் வெளிப்பாடே நமது தனிப்பட்ட வாழ்க்கையின் சில வினாக்களுக்குத் தேர்வான விடைகளை இலக்கியம் வழங்கும் என்கிற நம்பிக்கை. இதுவும் மீட்பு எனும் யாவருக்கும் பொதுவான கலைக் குணத்தின் சிறு அம்சமே. இவ்வாறு நேரடியாகச் சால்பான விடைகளை வழங்கியதாக நாம் கருதிக்கொள்ளும் குறிப்பிட்ட ஆக்கத்துடன் இணக்கமான உறவேற்படுத்திக்கொள்கிறோம். நம்மை ஏமாற்றிவிட்டதாகக் கருதும் ஆக்கங்களைப் ‘பயனற்றவை’ என்று ஓரங்கட்டுகிறோம்.
நீங்களும் உங்கள் மனைவியும் இந்நாவலை வாசித்துப் பெற்ற அனுபவம் ஒரு வகை; உங்கள் தந்தையாரின் வாசிப்பனுபவம் வேறு வகை. ஒரு நல்ல நாவலின் வாசிப்பனுபவம் எந்த வாசகரை எந்த கட்டத்தில் எவ்வகையில் பாதிக்கும் என்பதை அனுமானிக்க முடியாது. தமிழில் விமர்சகராக அறியப்படுபவர் நாவல் வெளிவந்த சமயம் தனது ‘படித்து மிகவும் நொந்துபோன நாவல்கள்’ பட்டியலில் ‘அமெரிக்க தேசி’யை முதலிடத்தில் வைத்திருந்தார். சாந்தி.
அன்புடன்
அருண்
*