அச்சுவை பெறினும்… நாவல் விமர்சனம் – கோகுல் பிரசாத்

Standard

arunn-novel-2-tதொல்ஸ்தோய் எழுதியதொரு கதையில் இரு பிள்ளைகளுக்கு தகப்பனான ஒருவன் அந்தக் குழந்தைகளின் ஆசிரியர் மீதே காதல் வயப்படுவான். அது அறிந்து அவனது மனைவி அவளது தோழியிடம் தான் ‘எப்படியெல்லாமோ’ நேசித்த பூஜித்த தனது கணவன் தனக்கே துரோகம் இழைத்துவிட்டதை எண்ணி ஆற்றாமையோடு சபித்து புலம்புவாள். அதற்கு பதிலுரைக்கையில் அந்தத் தோழி ‘உன் கணவனின் தவறுகளை மன்னிக்கும் அளவுக்கு நீ அவனைக் காதலித்தாயா?’ எனக் கேட்பாள். இல்புறக் காதலை இல்லற அறனும் அன்பும் பொறுக்க வல்லதா என்பதில் தான் அருண் நரசிம்மனின் இரண்டாவது நாவலான ‘அச்சுவை பெறினும்…’ மையம் கொள்கிறது.

ஆண் பெண் உறவுச் சிக்கல்களே பேரிலக்கியங்களின் பேசுபொருளாக இருந்திருக்கின்றன அல்லது எதிரெதிர் துருவங்களாக நிலைகொள்ளும் மனித மனத்தின் அக முரண்களையும் அது கொள்ளும் பாவனைகளையும் சமரசமின்றி மோதவிட மல்யுத்தக் களம் அமைத்துத் தரும் படைப்புகள் பேரிலக்கியங்களாக உருப்பெறுகின்றன. இதனையும் உணர்வுகளைக் கடத்துபவையே கலையாகின்றன என்பதனையும் தெளிவுற அறிந்தவராக கணந்தோறும் மாறும் மையக் கதாபாத்திரங்களின் மன நிலைகளை ஆசிரியர் திறம்படக் கையாள்கிறார்.

ரங்கனும் ரேஷ்மாவும் மத்திய வயதில் மீண்டெழும் இளமையின் தினவை பெரும் உற்சாகத்துடன் எதிர்கொள்கிறார்கள். மீண்டு வந்த முதல் காதல் மீட்டிய பரவசத்தின் திளைப்பில் கலங்கித் தெளிகிறார்கள், தெளிந்தபின் கலங்குகிறார்கள். வேண்டும் என கண்டடைந்த பின் ரங்கனை அரவணைக்கும் மனச் சமாதானங்களும் அதனை சமூக நியதிகளுடன் பொருத்திப் பார்த்து அடியாழ உள்ளத்தின் விருப்பத்தினை ஏற்கனவே அறிந்துவிட்டதினால் ஏற்கத் தயங்கும் ரேஷ்மாவின் பயங்களும் பாசாங்கும் பதினைந்து வருட இடைவெளிக்குப் பின் இருவரும் சந்தித்துக் கொள்ளும் இரு தினங்களையும் சிக்கலாக்குகின்றன. காதல் காமம் குறித்து அதுவரை அவர்கள் இருவரும் கொண்டிருந்த புரிதல்களை மீளாய்வுக்கு உட்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. ததும்பித் தத்தளித்துக் கொண்டிருக்கும் மனத்தை விலக்கி அவதானிப்பது அத்தனை எளிதல்லவே! வாழ்க்கை குறித்த மேலதிக புரிதலை அடைகிறார்கள் அல்லது அவ்வாறு அடைந்து விட்டதாக நம்பவே விழைகிறார்கள்.

எதாவது ஒரு கதாபாத்திரத்தின் மீது மட்டும் அதீத கவனம் குவித்து மற்றதை தவறவிடும் வாய்ப்புகள் அநேகம் உள்ள இக்கதையில் இருவரின் மன ஊசலாட்டங்களையும் அதன் அத்தனை திசைமாற்றங்களோடு அவதானித்தபடியே நகர்வது இதன் சாதனை. உள்ளொடுங்கிய சில நுட்பங்கள் வாசகரால் கண்டறியப்படுகையில் இதன் இயங்கு தளம் மேலும் விசாலமடைகிறது. உள்ளுணர்வில் ஏற்கனவே அறிந்து கொண்டது போல ரங்கனின் பாட்டி அவனது தாத்தா கொண்டிருந்த இல்புறக் காதலைப் பற்றி ரங்கனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார். ரங்கனுக்கும் அவனது மன்னிக்கும் இடையேயான மெல்லிய ஈர்ப்பு கலந்த அன்பும் உரையாடல்களும் ஆசிரியரின் புத்திசாலித்தனத்திற்குச் சான்று. கொந்தளிப்பற்ற சமநிலை விரவிக் கிடக்கும் கதையில் நாவலின் உச்சம் அன்ன கரீனினா குறித்த வேதவல்லியின் உரை தான். அதன் மூலம் இந்த நாவல் தொல்ஸ்தோயின் துணையுடன் மற்றொரு வாசிப்பைக் கோருகிறது.

Words Pun மீதான ஆசிரியரின் ஈர்ப்பை முதல் அறுபது பக்கங்களுக்கு சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். அதன் பிறகு அதுவே பழகிவிடும். தமிழ்த்தேனில் தோய்த்து எடுத்த அபாரமான நடை சிக்கலான விஷயங்களையும் தடுமாற்றமின்றி வாசகருக்கு உணர்த்தி பிரமிக்க வைக்கும் அதே சமயம் சில இடங்களில் பல வாக்கியங்கள் வெறுமனே Presumptuousஆக இடம்பெற்றிருக்கின்றன. வெங்காயத்தை உரிக்க உரிக்க உள்ளே ஒன்றுமில்லாது போவதைப் போல. கண்ணீர் உப விளைவு. காதலில் அமிழ்ந்திருப்போரின் உடல்மொழி பற்றியும் வாய் முத்தம் தருவது பற்றியும் தேவையின்றி வகுப்பெடுக்கிறார்.

இருவரும் உறவு கொண்டு அதன் உக்கிரமான விளைவுகளையும் அவரவர் இல்லற துணைகளின் நிலைப்பாடுகளையும் நோக்கி நகர்ந்திருந்தால் நாவல் இன்னும் வலுவாகக் காலூன்றி நின்றிருக்கும். ரேஷ்மா ரங்கனிடம் ‘நீ கதை எழுதத் தான் எங்கிட்ட வந்திருக்கியா?’ எனக் கேட்கும் கேள்விக்கு நாவலிலேயே விடை இருக்கிறது. இறுதி அத்தியாயத்திற்கு முந்தையதில் ரங்கன் ரிஷியின் கதையை எழுதத் தொடங்கி அழித்துவிட்டு பின் மீண்டும் தட்டச்ச தொடங்குகிறான். இதுகாறும் நாம் கேட்டது ரிஷி கூறிய ரங்கனின் கதையா? ரங்கனின் கதையை எழுதத்தான் நாம் பார்வையாளரானோமா? It’s a loop. இது புதைகுழியில் தலையை விட்டுக் கொள்வது அல்ல கடலில் முங்கி முத்தெடுப்பதும் அல்ல. கரையலைகளில் சுகமாக கால் நனைப்பது.

கோகுல் பிரசாத்