சில மாதங்கள் முன்னர் ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பரிசு கொடுப்பதற்காகச் சில பிரதிகள் வேண்டும் என்று கோரியதை நான் முன்வைக்கையில் தான் பதிப்பாசிரியருக்கும் விஷயம் தெரியவந்தது. என் ஏலியன்கள் இருக்கிறார்களா? அறிவியல் புத்தகம் முதல் பதிப்பு முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டுள்ளது.
விற்பனையாவதற்குச் சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ளது.
உள்ளடக்கத்தை முழுவதும் புரிந்துகொள்வதற்கு வாசகரின் உழைப்பையும் கோரும் அறிவியல் புத்தகங்கள் தமிழில் விற்கவே விற்காது என்று சாதிப்பவர்கள் உள்ளனர். அவ்வகை உழைப்பை வழங்க ஆயத்தப்படுபவர் மட்டும் வாங்கி வாசித்தால் போதும் என்று கருதுபவர்களும் உள்ளனர். பதிப்பாளர்களிலும் இவ்விரண்டு நிலைப்பாடுகளைக் கொண்டோர் உள்ளனர் — முதல் நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோரும் இரண்டாவதில் எஞ்சும் ஓரிருவரும்.
கலையின் சிறப்பு ஏற ஏற அதன் வர்த்தக வீச்சு சரிந்துகிடக்கும் என்பது சந்தை விதி. தமிழ்ப் புத்தகச் சந்தையும் சந்தை விதிகளுக்கு உட்பட்டதே.
தமிழில் எழுதப்படும் அறிவுத் துறைப் புத்தகங்கள் விற்காது என்று கருதும் பதிப்பாளரும் விற்கும் என்று கருதும் பதிப்பாளரும் உண்மையே சொல்கிறார்கள். இது புரிவதற்கு எனக்கு சில புத்தகக் காட்சிகளும் பழக்கங்களும் தேவைப்பட்டது. விற்காது என்பவர் அச்சிட்ட அடுத்த வருடத்தினுள் இரண்டாயிரம் பிரதிகள் விற்காது என்கிறார் (அப்படிச் செய்தால் அப்புத்தகம் பெஸ்ட்-ஸெல்லர்; நல்ல லாபம் ஈட்டியிருக்கும்). விற்கும் என்பவர் இரண்டு வருடத்தில் அறுநூறில் இருந்து ஆயிரம் பிரதிகள் விற்றுவிடும் என்கிறார் (சுமார் அல்லது சொற்ப லாபமே).
ஏலியன்கள் இருக்கிறார்களா? புத்தகத்திற்கு வாய்த்துள்ளது இரண்டாவது நிலை.
நேனோ ஓர் அறிமுகம் புத்தகமும் இதே வகையில் கிட்டத்தட்ட விற்றுத் தீர்ந்துவிட்டதாம். இரண்டு அறிவியல் புத்தகங்களும் இவ்வருடம் புத்தகக் காட்சியை ஒட்டி மீண்டும் அச்சிடப்படவுள்ளது. என்னுடைய ஒரு புதிய அறிவியல் புத்தகமும் வெளிவரும் என்று அறிகிறேன்.
லைப்ரரி ஆர்டர் என்று தமிழ்நாடு தழுவிய தில்லாலங்கடி ஒன்று உள்ளது. அதை இங்கு சேர்க்கவில்லை. சந்தையில் விற்பனை என்பதை வைத்து மட்டுமே மேற்படி அவதானிப்பு.
(உபரி தகவல்: இப்படி லைப்ரரி ஆர்டராய் மட்டுமே அச்சகத்திலிருந்து நேரடியாக ‘விற்றுத் தீர்ந்த’ அறிவியல் புத்தகம் ஒன்றையும் அடியேன் எழுதும் பாக்கியம் பெற்றேன். எனக்குரிய ‘எழுத்தாளர் பிரதி’யே ஒரு வருடம் கழித்து நான் மொக்கையாக விடைத்துக்கொண்ட பிறகு பெருந்தன்மையாய் பெருத்த ஏப்ப சப்தத்துடன் என் கண்களில் காட்டப்பட்டது.)
மேலுள்ள இரண்டு விற்பனை நிலைப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமானது என்று கொள்ள முடியாது. மிகச் சிறப்பான கவிஞர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவருடைய பிரெஞ்சுக் கவிதைகள் சமகாலத்தில் முன்னூறு பிரதிகளே அச்சிடப்படுகின்றதாம். நுண்கலைகள் அனைத்திற்கும் உலகெங்கிலும் இதே நிலைதான். இதற்கு வருந்த வேண்டியதில்லை என்பேன். ஆர்வம் இருப்பவர்கள் அத்துறை எழுத்தை வாசித்தால் பழகினால் போதும். என்னையும் சேர்த்து அனைவரும் கவிஞர்கள் என்று தமிழ்நாட்டில் நினைத்துக்கொள்வதில் உள்ள அபாயத்தைத் தான் இன்றுவரை அனுபவித்துவருகிறோமே. உலகில் அனைவரும் விஞ்ஞானிகளாகி என்ன செய்யப்போகிறோம்.
குடியாட்சியில் மக்கள் அவர்களுக்கு உகந்த அரசாங்கத்தைப் பெறுகிறார்கள் என்பது சமூக விதி. அரசாங்கத்தின் தன்மை அதை விரும்பும் மக்கள் சமூகத்தின் சமகால குணநலன்களைச் சார்ந்தது. சந்தையில் விற்பனைப் பொருள் என்றாகிவிட்ட பின்னர் எத்துறை எத்திணை எத்தனை என்பது போன்ற புத்தகங்களின் குணாதிசியங்கள் அவற்றைத் தங்கள் மேம்படுதலுக்கோ பொழுதுபோக்கிற்கோ தேவை அவசியம் எனக் கோரும் வாசகர்களைச் சார்ந்தது. அவர்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று முந்தீர்மானித்துவிட்ட அறிவுத்துறைகளில் நுண்கலைகளில் நல்ல புத்தகங்கள் பிரசுரிக்கப்படுவதால் மட்டும் என்ன பயன்?
மேலும் வாசகர்களில் குறிப்பிட்ட சதவிகித்தனர் தான் இலக்கியம் முழுமையாக வாசிக்கிறார்கள். அவர்களே அறிவியலையும் முழுமையாக வாசிப்பவர்கள் என்றே கொள்ள இயலாது. வாசக சமூகத்தின் குழாம்களும் அவற்றில் ஊடாடும் பொது அங்கத்தினர்களின் எண்ணிக்கையும் வருடாவருடம் என்றில்லையெனினும் பத்தாண்டுகளிலாவது மாறுபடுபவை.
நல்ல அறிவுத் துறைப் புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள் தமிழில் ஒருவருடத்தில் இரண்டாயிரம் பிரதிகள் விற்பனை எனும் நிலையை என்றாவது எட்டுமானால் மகிழ்ச்சியே.
ஆனால் உலகில் எச்சமூகத்திலும் எத்துறையிலும் புத்தகங்கள் எட்டிவிடக்கூடாத நிலையொன்று உள்ளது. மோசமான, குறையான, எளிமைப்படுத்திச் சொல்கிறேன் என்று படுத்தி மட்டும் சொல்லும், பிழையான முன்மாதிரிகள் இரண்டாயிரம் பிரதிகள் விற்றுவிடும் நிலை. விளம்பரங்களில், தெரிந்தே செய்யப்படும் விற்பனையை வீங்க வைக்கும் வியாபார உத்திகளில், இவ்வகைப் புத்தகங்களினால் ஏற்படும் ஊறு பொருட்படுத்தப்படவேண்டியதே.
அறிவுத் துறைகளை அறிமுக நிலையிலாவது தமிழிலேயே அறிந்துகொள்ளும் ஆர்வமுள்ள வாசகர்களை திட்டமிட்டுத் தடம்புரட்டிக் காசை வாங்கிக்கொண்டு கைகழுவும் செயலைப் பதிப்பாளர்கள் வர்த்தக லாபம் மட்டுமே கருதிச் செய்யலாம். ஆனால் வாசகர்கள் அவ்வகைப் புத்தகங்களை அடையாளம் கண்டு (நிறைய விளம்பரத்துடன் வெளிவருவதே ஒரு அபாயச் சங்கு…) தொடர்ந்து வாங்காமல் இருப்பது அவசியம். தெரிந்தே மட்டமான புத்தகங்களையே மக்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர் என்றால் அச்சமுதாயத்தின் நிலையைப் பிரசுரமாகி வந்தாலும் நல்ல புத்தகங்களால் தான் என்ன செய்துவிடமுடியும்?
அறிவுத் துறைப் புத்தகங்கள் தீவிரமான உள்ளடக்கத்துடன் இருப்பதால் தானே விற்பனை ஆவதில்லை என்பார்கள். நீச்சல் தெரிவதற்கு நீரில் இறங்க வேண்டும். நீரில் இறங்க வேண்டும் என்றால் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்…
இணைய எழுத்து சேர்த்தியாக எழுத்தாள வாசகப் பதிப்பாளப் பெருங்கூட்டம் ஒன்றே இவ்வகை இரட்டுற நிலைபாட்டில் அமிழ்ந்துள்ளது. எந்த அறிவுத் துறை எழுத்து என்றாலும் ஓரிரு பத்திகளில்/பக்கங்களில் அறிவார்ந்த உள்ளடக்கத்தை வழங்கி மீதி எண்பது சதவிகிதம் பக்கவாட்டில் திரும்பி நின்று வேடிக்கை காட்டுவதைச் செய்வது மட்டுமே அறிவுத் துறைகளை ‘சாமான்ய’ வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான நெறி எனும் நிலைப்பாடு. எழுத்தில் வேடிக்கை இயல்பாகக் கைகூடினால் வாசகன் மனத்தில் ஓரளவேனும் சொல்லப்பட்டிருக்கும் அறிவுத் துறை எழுத்து எஞ்சலாம். இல்லையேல் இவ்வகை நிலப்பாட்டுடன் உருவாக்கப்படும் எழுத்தில் அறிவுத் துறை விஷயங்கள் சாக்லெட் சுற்றப்பட்டும் தோலி போலாகிவிடும்.
அறிவியல் சார்ந்த விஷயங்களைப் பொறுத்தவரை நான் கவனிக்கும் மற்றொரு ஊறு, செய்திகளையும் தகவல்களையும், விளக்கங்கள், விவரணைகள் என்று கருதிக்கொள்வது. இந்தச் சமனை அறிவுத்துறை எழுத்தை வழங்குவோரும் செய்துகொண்டுள்ளதே வேதனை.
விளக்குவதற்குச் சுருக்கமாய் ஒரு உதாரணம். நேனோ தங்கம் பற்றி விரிவாகக் கட்டுரை எழுதியுள்ளேன். நேனோ அளவு துகள்களாய் இருக்கையில் தங்கம் நீல நிறத்தில் நம் கண்களுக்குத் தெரியலாம் என்பது ‘லேட்டஸ்ட்’ அறிவியல் தகவல் (மட்டுமே). ஏன் அவ்வாறு தெரிகிறது என்பதற்கான விளக்கம் வழங்குவதும் அதைப் புரிந்துகொள்வதுமே நேனோ தங்கம் செயல்பாடு பற்றிய புரிதலை மேம்படுத்தும். அப்போது (மட்டும்) தான் வாசகன் எழுதப்பட்டுள்ள அறிவுத் துறை கட்டுரை அல்லது புத்தகத்தில் இருந்து செய்தி/தகவல் நிலையைத் தாண்டிய உயர் சிந்தனை எதையோ கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறான்.
செய்திகளை மட்டுமே உள்ளடக்கிக்கொண்டு நான்கைந்து சக்கரைப் பூச்சுக்களுடன் வெளியாகும் ‘அறிவுத்துறை’ கட்டுரைகளை, அவை இடப் பற்றாக்குறையுடனான தின/வார/மாத விற்பனை அவசியங்களுடனான சந்தை ஏட்டுக் கட்டுரைகள் என்கையில் மன்னித்துவிடலாம். என்னைப் பொறுத்தவரை இவற்றை எழுதாமல் இருப்பதே நன்மை என்றாலும். ஆனால் புத்தகங்களில் ‘உட்டாலக்கடி’களையும் ‘ஜல்லியடித்தல்’களையும் மட்டுமே செய்பனவற்றை மன்னிக்கக் கூடாது.
மெய்யில் ஒரு அறிவுத் துறை (உதாரணமாக, அறிவியல்) இயங்கும் விதத்தையோ, கண்டடைந்த புரிதல்களையோ அறிந்துகொள்வதற்கு நாம் செய்தி தகவல் ஆகியவற்றைத் ‘தெரிந்து’கொள்ளும் அறிவுநிலையிலிருந்து நம்மை உயர்த்திக்கொள்ளவதால் மட்டுமே இயலும். அதற்குத்தான் அறிவுத் துறை புத்தகங்கள். பாட புத்தகங்கள் என்றில்லை. அறிமுக நிலையில் என்றாலும், அவ்வாறு செய்தி/தகவல் நிலையைக் கடந்த எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிய தீவிரமான விளக்கங்கள் பரிசீலனைகள் கொண்ட உள்ளடக்கத்துடன் தான் அப்புத்தகங்கள் உருவாகி இயங்கவேண்டும். பெ.நா. அப்புசாமியின் அறிவியல் எழுத்து ஒரு சிறந்த உதாரணம். மோசம் என்பதற்கான உதாரணங்கள் எதிலும் அதிகமே, குறிப்பிடுவதைத் தவிர்ப்போம்.
அறிவுத்துறை எழுத்தை தீவிரமாக்கி உருவாக்கிக் கொண்டுசேர்த்து உள்வாங்கவைப்பதற்கு எழுதுபவரின் உழைப்பு முக்கியம் என்றால், வாசகரின் உழைப்பு அதிமுக்கியம். எழுதுபவர் ஓரளவுதான் உதாரணங்கள் வழங்கி எளிமையாக்கி ஓரிரு வேடிக்கைகள் செய்து விஷயங்களை அளிக்கமுடியும். அவற்றைப் பொறுமையுடன் முழுமையாக வாசித்து மனத்தில் உள்வாங்கி, யோசித்து, எழும் சில சந்தேகங்களை மேலும் சிலவற்றை வாசித்தோ யோசித்தோ விவாதித்தோ வாசகர் புரிந்துகொள்ளவேண்டியிருக்கும். அறிவியல், இசை, எக்கனாமிக்ஸ், இலக்கியம் என்று அனைத்திற்கும் இவ்வகை உழைப்பு அவசியமே.
இவ்வுழைப்பை வழங்கும் வாசகர் குழாம் தமிழர்களுள் இல்லவே இல்லை என்று சாதிப்பவர்கள் — சமகால எழுத்தாளர்கள் சேர்த்தியாக — சாதித்திராதவர்கள். தங்கள் எழுத்தை வாசிப்பவனைத் தம்மை விட அறிவில் சிறுத்தவனாய்க் கொள்ளும் இச்செய்கையும் ஒருவகைப் பாதுகாப்பின்மையே. இதைச் செய்கையில் எதையுமே தீவிரமாய்ச் செய்து பார்த்திராத அவர்களது ஆளுமை மனத்தளவிளாவது விசுவரூபம் பெறுகின்றது போலும். தமிழுலகமே அத்தருணத்தில் அவர்கள் மனக்கண்களில் மீட்கமுடியாத அதளபாதாளத்தில், அறிவேட்கையுடன் ஆவென்று வாய் பிளந்தவாறு… சர்க்கரை தடவிய சாக்லெட் தோலிகளை இரைத்தால் போயிற்று. இது போதும் இத்தமிழர்களுக்கு…
அறிவுத் துறை எழுத்து எடுத்துக்கொண்ட துறையில் வாசகனுக்குத் தெரியாதவற்றை அல்லது வேண்டியவற்றை எளிமையாக்கிச் சொல்ல விழையலாம், அவசியப்படலாம். ஒருபோதும் வாசகனை அவ்வெழுத்தைவிட எளிமையாக்கி நோக்கக் கூடாது. அவ்வாறு ஆகிவிட்டால் என் அறிவுத்துறை எழுத்தும் பிரசுரமானாலும் புறக்கணிக்கப்படவேண்டியதே.