2013 டிசெம்பர் சங்கீத விழா: சஞ்சய் தமிழ் இசைக் கச்சேரி

Standard

2013-dec-jan-03-dinamalar-arunn-review-sanjay[03 ஜனவரி 2014 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம். இந்த கட்டுரையுடன் இசை விமர்சனம் தொடர்பான ‘மார்கழி உற்சவம்’ நிறைவு பெறுகிறது.]

தமிழ் இசைச் சங்கம் சார்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் வழக்கிய கச்சேரியை சஞ்சய் ”உந்தன் பாத பங்கஜம்” என்று சங்கராபரண ராக வர்ணத்தில் துவங்கினார்.

ஆனந்தபைரவி ராகத்தில் “பூ மேல் வளரும் அன்னையே (ஒளிபொருந்தும்)” என்று கலைவாணியின் மேல் மழவை சிதம்பர பாரதி இயற்றிய கிருதி. எதுகை மோனையிடும் வரிகளை சஞ்சய் அருமையாய்ப் பாடினார். ஸ்வரங்களில் அணுஸ்வர ஒலிகளையும் ஏற்றி ஸ க பா ஸ என்று தாவியதை ரசித்தோம். இவ்வுருப்படியே இன்றைய கச்சேரியின் பட்டொளி.

வஸந்தாவில் ஆலாபனை செய்ததே நன்று. வயலினில் வரதராஜனும் வழமையாய் வஸந்தாவை வளர்த்தெடுத்தார். மிஸ்ரசாபு தாளத்தில் சுத்தானந்த பாரதி இயற்றிய “எல்லாம் சிவன் செயல் என்றே” கிருதி. “அஞ்சேல் அஞ்சேல் அச்சத்தை போக்கிடுவேன்” என்ற சரண வரியில் நிரவல். தொடர்ந்து ஸ்வரங்கள். சென்ற கிருதியில் இன்னும் வளர்த்தியிருக்கலாமோ எனத் தோன்றியது. இங்கு சுருக்க முடித்திருக்கலாம் எனத் தோன்றியது.

ஹமீர்கல்யாணியில் ”அவன் செயல் அன்றி ஓர் அணுவும் அசையா” கிருதி முத்தையா பாகவதர் இயற்றியது.

பிரதானமான தோடி ஆலாபனை, மதுரை சோமுவின் இசையை நினைவுறுத்தும் வகையில் வளர்த்தெடுக்கப்பட்டது. ஆதி தாளத்தில் ”எந்நேரமும் ஒரு காலைத் தூக்கிக் கொண்டு” என்று மாரிமுத்தா பிள்ளை இயற்றியதை வழங்கினார்.

அடுத்ததாய் அன்று அகடெமியில் பாடிய “நேற்றந்தி நேரத்திலே நீராடும் கரைதனிலே” என்று வைத்தீஸ்வரன் கோவில் சுப்பராம ஐயர் இயற்றியதை வழங்கினார். உசைனி போன்ற ராகங்களின் வெளிப்பாட்டில் சஞ்சய் எங்கோ உயரத்தில் இருக்கிறார். சில பிடிகளில் ‘பிய்த்து உதறி’ விடுகிறார்.

பஹூதாரியில் ராகம் தானம் பல்லவி. ஆலாபனையில் சஞ்சய் மகோன்னதத்தையும் மறக்கவேண்டியதையும் அருகருகே வழங்கினார். வயலினும் குரலுக்கு விசுவாசமான ஆலாபனையை வழங்கினார். தோடி, சங்கராபரணம் போன்று பஹூதாரியை அள்ளிவழங்கச்சொல்லிப் படுத்துவது நியாயமில்லைதான். இந்த இசை விழாவில் நான் கேட்கும் ஐந்தாவது பஹூதாரி எதிர்பார்ப்பை கெட்டியாக்கிவிட்டது.

மிருதங்கமும் உடன் வாசிக்க, தானம் பகுதி முழுவதுமே மத்யமகாலத்தில் அமைந்தது ஆச்சர்யம். வயலின் தானம் செய்கையில் கஞ்சிராவும் சேர்ந்துகொண்டார்.

“கந்தனடி அவர் எனக்குச் சொந்தமடி வள்ளி மணாளனடி” என்னும் பல்லவி வரியை ஆதி தாளத்தில் சமத்திலிருந்து கால் இடம் தள்ளித் துவங்கிப் பாடினார். ஸ்வரங்கள் பகுதியில் காலங்களையும், நடைகளையும் (திஸ்ரம், கண்டம் என) மாற்றிப்போட்டது சிறப்பு.

ராகமாலிகை கதனகுதூஹுலம், தர்பாரி கானடா, போன்ற ராகங்களில். தர்பாரி கானடாவில் சோமுவின் பிரசித்தமான “மருதமலை மாமணியே-வில்” கேட்கும் சில பிருக்காக்களை கொணர்ந்து கரவொலியை எழுப்பினார்.

தனி ஆவர்த்தனத்தில் இளம் மிருதங்கம் அர்ஜுன் கணேஷ் மனோதிடத்துடன் வாசித்து பாடகரின் ஆமோதிப்பையும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். சில தினங்கள் முன்னால் இதே பாடகருடன் வேறொரு கச்சேரியில் மிருதங்கத்தினால் தேக்கமடைந்த திறனை இன்று இளம் மிருதங்கத்துடன் சேர்ந்து திருவேங்கடம் கஞ்சிராவில் முழு வீச்சுடன் வெளிக்காட்டினார்.

தமிழிசை ரசிகர்களின் நாடியை நன்கு அறிந்துவைத்திருக்கிறார் சஞ்சய். ”துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” என்று பாரதிதாசன் இயற்றியதை தேஷ் ராகத்தில் அவர் எடுத்ததுமே அரங்கில் கரவொலி.

“ஊனின் மேல் ஆவி நீ” என விருத்தம் துவங்கி, “மண்ணுபுகழ் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே” எனும் குலசேகர ஆழ்வார் பாசுரத்தை வழங்கினார். சுத்த சாவேரி. லலிதா. சாரங்கா. ஹிந்தோளம் என்று ராமனை ராகமாலிகையாய் தாலாட்டி நீலாம்பரியில் முடித்து உறங்கவைத்தார்.

இரு கண் இருக்கும்போதே, விண்ணுயர் கோபுரத்தை  “காணவேண்டாமோ” என்று ஸ்ரீரஞ்சனியில் கேட்டு, பாரதியின் “வாழிய செந்தமிழில்” முடித்துக்கொண்டார்.

இசை விழாவின் இறுதியை நெருங்குவதை குரல் அவ்வப்போது உணர்த்தியது என்றாலும், நாகஸ்வரம் போலவே குரலை பழக்குகிறார் சஞ்சய். அவ்வாத்தியத்திற்குதான் இன்று மவுசில்லை. நம் சஞ்சய் போன்றோரின் குரல்களில் மறு அவதாரம் எடுத்திருக்கட்டுமே.

மரபிசையின் செவ்வியல் அம்சங்கள் குறைவின்றி தமிழில் பாடி ரசிகர்களை மகிழ்விக்கமுடியும் என்பதை சமகாலத்தில் சஞ்சய் போன்றோர் அறிவித்துக்கொண்டே இருப்பது நிறைவு.

[இந்த கட்டுரையுடன் இசை விமர்சனம் தொடர்பான ‘மார்கழி உற்சவம்’ நிறைவு பெறுகிறது.]