இரண்டு துப்பறியும் நவீனங்கள்

Standard

பலோமினோ மொலெரோவைக் கொன்றது யார் (Who killed Palomino Molero) என்று மர்ரியோ வர்கஸ் (ல்)லியோஸ்ஸா (Mario Vargas Llosa) எழுதிய நாவலையும், ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’ என்று மா. கிருஷ்ணன் எழுதிய நாவலையும் சமீபத்தில் வாசித்தேன். ஓரிரு மாதங்களுக்குள் வாசித்த தற்செயல் இரண்டிலும் சில ஒற்றுமைகளைச் சுட்டியது. சில உள்விரிவுகள். பகிர்ந்துகொள்கிறேன்.

(ல்)லியோஸ்ஸா பெரு நாட்டு எழுத்தாளர். ஸ்பானிஷ் மொழி மூலம். என்னத்தான் சங்கத்தமிழைவிட ஸ்பானிஷ் அதிகம் பரிச்சயம் என்றாலும், ஆங்கில மொழியாக்கத்தில்தான் வாசித்தேன். மா. கிருஷ்ணனை அவர் எழுதிய தமிழிலேயே வாசித்துவிட்டேன்.

இரண்டுமே குறுநாவல்கள். சில மணிநேரங்களில் வாசித்துவிடலாம். இரண்டும் 1980-களில் எழுதப்பட்டதானாலும், கதைகள் 1950 களில் நடப்பவை – ஒன்று பெரு நாட்டு டலெரா கிராமத்தில், மற்றது மதுரைக்கருகில் கிராமத்தில். இரண்டுமே முதல் அத்தியாயத்திலேயே கொலை நடந்துவிடும் மர்மக் கதைகள். இரண்டிலும் போலீஸ்காரர்கள் அதே வகையில். இருவர்தான் பிரதானம். ஒருவர் கெட்டி. மற்றொருவர் தொழிலுக்கு புதுசு அல்லது சற்று மந்தம். அவரது பார்வையில்தான் கதை விரிகிறது. கெட்டி போலீஸ் துப்புதுலக்கிவிடுகிறார்.

ஒருவரை அதிபுத்திசாலியாகவும், பலசாலியாகவும், மற்றொருவரை சராசரி ஆளாகவும் சித்திரித்துக்கொண்டு அவர் வழியாகக் கதை சொல்லும் உக்தி கானன் டாயலின் ஷெர்லாக் ஹோ(ல்)ம்ஸ் வழிவந்தது. சராசரி ஆள் வாசகர்களின் பெரும்பான்மையின் பிரதிநிதி. பதினாறாம் நூற்றாண்டில் கலிலியோ இத்தாலிய மொழியில் எழுதிய ‘இரண்டு பிரதான உலக அமைப்புகளைப்பற்றிய உரையாடல்’ (இத்தாலி: Dialogo sopra i due massimi sistemi del mondo) புத்தகத்திலும் ஸல்வியா(ட்)டி, ஸாக்ரிடோ, ஸிம்ப்ளிசியோ பாத்திரங்கள் இந்த உக்தியை உபயோகித்தே அறிவியல் கருத்துக்களைப் பகிர்ந்தது எனலாம்.

palomino-molero(ல்)லியோஸ்ஸாவின் கதை முதல் வரியில் பிணத்தின் வருணனையில் துவங்குகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் பாத்திரங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே விரிகிறது. கொன்றவன், காரணம், எனக்கு இரண்டாவது அத்தியாயத்திலேயே ஊகிக்கமுடிந்தது. கிருஷ்ணனின் கதையில் கொலையை விவரித்தவுடன். கிருஷ்ணனின் கதையில் அனைவர் மீதும் ஒரு சுற்று சந்தேகம் வந்து விலகி பிறகே கொலைகாரன் பிடிபடுகிறான். அனைத்துத் துப்புக்களும் வாசகர்களுக்கும் சொல்லப்பட்டுவிடும் ‘போங்கடிக்காத’ துப்பறியும் கதை. நடைதான் ஆயாசமானது. எழுபது என்பதுகளின் ‘கணேஷ்’ வேண்டுமானால் தன் பொறுமையை சோதித்துக்கொள்ள முழுவதும் வாசிக்கலாம். ‘வஸந்த்’ நாலு பக்கம் தாண்டமாட்டான் (புடவை கட்டிய பெண் சித்திரம் வருகிறது).

(ல்)லியோஸாவின் கதையில் கொலை மற்றும் துப்பறிதல் உண்மை எது என்பதின் மயக்கத்தை பரிசீலிக்கும் வாகனமாய் உபயோகப்பட்டுள்ளது எனலாம். கொலை சார்ந்த சம்பவங்கள் இவ்வாறுதான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று பாத்திரங்களின் விவரணைகளிலிருந்து ஒரு வடிவம் உண்மைபோலவே போலீஸுக்குக் கிடைத்ததும் நிரூபணம் ஆவதற்கு முன் அச்சம்பவக்கோர்வைகளை சற்றே புரட்டிப்போட்டு புதுக் கோணங்களும், அர்த்தங்களும் விளக்கப்படுகின்றன. இரண்டையுமே தூக்கியடிப்பதுபோல பெரு கிராமத்தின் எளிய மக்களின் நம்பிக்கைகள் இயங்குகின்றன.

(ல்)லியோஸா 1950 களில் கடற்கரை பிராந்தியத்தில் ராணுவதளம் அருகிலிருக்கும் பெரு கிராமத்தையும், அதன் மணல் பாறைகளையும், மருட்சிகளையும், எதார்த்தங்களையும், ஏமாற்றங்களையும், ஓணான்களையும், புழுதியையும், மதுவையும், இன்கா நாகரீகப் பழமையுடைய பெருவின் வரலாற்றில் சமீப சில நூற்றாண்டுகளாய் வேரூன்றியிருக்கும் கிறித்துவத்தையும், வகுப்பு வேற்றுமைகளையும், கதைப்போக்கினூடே விவரிக்கிறார். (ல்)லியோஸாவின் பெண் பாத்திரங்கள் கலர்ஃபுல். சதை புஷ்டியானவர்கள். சிலர் அர்த்த புஷ்டியுடனும்.

kathiresanதுப்பறியும் நவீனம் எனும் வகையில் கிருஷ்ணனின் கதை சரியாகத்தான் உள்ளது. தனியம்சம் என்றால் அவரே வரைந்துள்ள சித்திரங்களைக் குறிப்பிடலாம்.  இருந்தாலும் கதையை பலவருடங்கள் முன்னர் நடப்பதாய் எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் கதைமாந்தர்களின் ‘யதார்த்தம்’ உறுத்தும். ‘செந்தில்-டிராயர்’ ‘சப்பியின்ஸ்பெக்டர்கள்’ முதல் பால்யத்தின் அவசரங்களில் கவனித்த மனிதர்களில் இருந்து உருவான பாத்திரங்கள் போலும். அனைவரும் ‘பிளாக் ஆர் வைட்’ ஸ்டீரியோடைப்ஸ். பெண்களுக்கு எண்ணங்களே இல்லை. தலைப்பில் வரும் ‘காதல்’, கதையில் தட்டுப்படவில்லை. முடிவை வைத்து ஊகிக்கலாம். தலைப்பை நம்பி ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’ பார்த்தமாதிரி ஆகிவிட்டது.

இருகதைகளிலும் கிராமத்திலிருந்து அருகிலிருக்கும் ஊர்களுக்கு விசாரணைக்குச் செல்வதற்கு அத்துவானத்தில் ‘த்ராட்டில்’ விட்டுவிடும் வாடகைக் கார், பஸ், நெடுஞ்சாலை லாரிகள் என பெரும்பாலும் போலீஸிற்கு ஓஸிச் சவாரிகள் (கிருஷ்ணன் கதையில் அவ்வபோது மதுரையிலிருந்து போலீஸ் ஜீப் வருகிறது). பிரத்யேக வாகன வசதி இல்லாதது ஐம்பதுகளின் யதார்த்தம்?

(ல்)லியோஸ்ஸாவின் கதையில் கொலையான தெருப்பாடகன் மொலெரொ ‘சோலொ’ என்றறியப்படும் ‘தாழ்ந்த’ குலத்தைச் சேர்ந்தவன். வேரூன்றியிருக்கும் வகுப்புப் பேதத்தின் தாக்கம் பாத்திரங்களின் எண்ணங்களில் நமக்கு உணர்த்தப்படுகிறது. கிருஷ்ணனின் கதையில் வகுப்புப்பிரிவுகளை குறிக்கும் பெயர்களுடனான பல பாத்திரங்கள் ஒருவகையிலேயே தமிழ் பேசுகிறார்கள் (எல்லாருமேவா ‘வந்துண்டும்’ ‘போயிண்டும்’ இருப்பா?).

கிருஷ்ணன் கதையில் வரும் சில எளிய உணவு வகைகள் வாசிக்கையில் நாக்கில் ஜலம். டிபன் கேரியரில் அடைத்த அரிசி உப்புமா, தேங்காய் சட்னி என்று துவங்கி, மதுரை ஓட்டல் இட்லி அளவிற்கு உப்பியிருக்கும் பொன்னாங்காணி கீரை வடை என்று போகிறது. வீட்டில் இக்கீரை வடையை செய்யச்சொல்லி சாப்பிட்டேன். முன்பே எனக்கு வடை பிடிக்காது. இப்போது கீரையும். (ல்)லியோஸ்ஸாவின் கதையில் அவ்வப்போது குறிப்பிடப்படும் பிஸ்கோ, சிச்சா போன்ற மதுவகைகள் சுவைக்க எங்கள் வீடுகளில் கிடைப்பதில்லை.

வனவிலங்குகள் மற்றும் சூழலியல் பாதுகாப்புப் பணிகளுக்காக மா. கிருஷ்ணன் பத்மஸ்ரீ பட்டம்பெற்றவர் என்று அறிகிறேன். அவர் ‘ஸ்டேட்ஸ்மன்’ சஞ்சிகையில் பல பத்தாண்டுகள் முன்னர் ஆங்கிலத்தில் எழுதிய சூழலியல் இயற்கையியல் கட்டுரைகள், ‘மழைக்காலமும் குயிலோசையும்’ என்று அவர் வரைந்த சித்திரங்களுடன் தமிழில் தொகுப்பாய் உள்ளது. ஓரளவு வரவேற்பையும் பெற்றுள்ளது நன்று. கிருஷ்ணன் வேறு நாவல்கள் எழுதவில்லை (நல்லவேளை).

‘பலோமினா மொலெரோவை கொன்றது யார்’ புத்தகத்திற்கு 2010இற்கான இலக்கிய நோபல் அங்கீகாரம் கிடைத்துள்ளது. (ல்)லியோஸ்ஸா எழுதியுள்ள பிற நாவல்களில் நிச்சயம் மேலும் சத்தான உள்விரிவுகள் இருக்கவேண்டும். அவரது  எரோடிஸிஸம் ததும்பும் பெண்களைப்பற்றிய கிளர்ச்சியான வருணனைகள் கொண்ட எழுத்தில் காலம் கடந்த நித்யங்களும், முன்னெடுப்புகளும், முன்னோடித்தனங்களும் நோபல் பரிசு கொடுத்தவர்களுக்கும் புலப்பட்டிருக்கவேண்டும்.