நினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன்

Standard

பேராசிரியர் ஜாக் ஹோல்மன் வெப்பவியல் துறையில் ஒரு முன்னோடி. உங்களில் சிலர் அறிந்திருக்கலாம், கேள்விப்பட்டிருக்கலாம். அவருடைய ஹீட் டிரான்ஸ்ஃபர், தெர்மோடைனமிக்ஸ் போன்ற வெப்பவியல் பாட புத்தகங்கள் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே மிகப்பிரபலம். மே 1, 2013 அன்று இயற்கை எய்தினார். நினைவாக, அவருடனான அனுபவங்கள் சிலவற்றை பதிவுசெய்கிறேன்.

முனைவர் பட்டப்படிப்பினூடே நான் பேராசிரியர் ஹோல்மனிடம் ஆசிரிய உதவியாளனாக நான்கு வருடம் (1998 – 2002) இருந்தேன். ஒரு முறை உராய்வு ஆற்றல் இழப்பு எவ்வகையில் (கார்களில் பொருத்தப்பட்டுள்ளவை போன்ற) என்ஜின்களில் செயல்படுகிறது என்பதை விளக்குவதாய் சொதப்பினேன். அத்தவறான விளக்கத்தினால் ஒரு சந்தேகம் வேறு அவரிடம் எழுப்பினேன். மௌனமாய் என்னை சில நொடிகள் கவனித்துவிட்டு, “நீ பதில் கண்டுபிடித்தால் சொல்” என்றார். அன்றிரவு யோசிக்கையில் என் தவறான விளக்கம் புரிந்தது. சந்தேகத்தின் விடையும் எனக்கே விளங்கிவிட்டது. மறுநாள் மன்னிப்பு கலந்த தயக்கத்துடன் அவர் அறையில் விவரித்தவுடன், “அட, நீயாகவே முயன்று ஒன்றை அறிந்துகொண்டுவிட்டாய் போலிருக்கிறதே” இறங்கியிருந்த கண்ணாடியின் மேலிருந்து ஊடுருவியது பார்வை. குறுநகையுடன்.

சிறு (பணக்கார) மெத்தடிஸ்ட் பல்கலைகழகமாகையால் முதுகலை பாடதிட்டங்கள் பெரிய பல்கலைகளில் உள்ளதுபோல விரிந்திருக்கவில்லை. பட்டப்படிப்பில் தகுதிபெற எனக்கு துறைக்குள்ளேயே குறைந்தபட்ச பாடங்கள் மேலும் சில தேவைப்பட்டது. எனக்கு வெப்பவியல் துறையில் ஆர்வம் என்றறிந்து, சார்ந்த எந்தப் பாடத்தையும் எனக்கு அளிக்க முன்வந்தார் ஹோல்மன். இர்ரிவெர்ஸிபிள் தெர்மோடைனமிக்ஸ் என்றறியப்படும் வெப்பவியல் துறையிலேயே கடினமான சில பகுதிகளை கற்றுக்கொடுத்தார். ‘எனக்கு மட்டுமே’ என்றியங்கிய பிரத்தியேகமான வகுப்புகளில்.

கற்கையை கறாராய் கருதும் பல்கலைகழகங்களில் முனைவர் ஆய்விற்கு முன்னர், அதற்குத் தகுதியடையவேண்டிய தேர்வுகள் சில உண்டு. இவற்றை முனைவர் ஆய்வை பரிசீலிக்கும் குழுவில் இருக்கும் பேராசிரியர்கள் வழங்குவார்கள். இவ்வகைத் தேர்வுகளின் ‘மகத்துவம்’ சிலபஸ் என்று வரையறைக்குள் அடங்குமாறு ஒன்றும் கிடையாது. ஆய்வுசெய்யும் துறையில் எது கேட்டாலும், அநேக கேள்விகளுக்காவது, ஓரளவேனும் சரியாக பதிலளிக்கவேண்டும். தவறினால், கேள்விக்கணைகள் துளைத்த மலர் மார்புடன் இன்று போய், நாளையோ, அடுத்த செமஸ்டரோ, வருடமோ, புதிய கவசகுண்டலங்களுடன் வந்து, அதே பேராசிரியரை எதிர்கொள்ளவேண்டும். பேராசிரியர் ஹோல்மன் என் முனைவர் பட்டத் தேர்வுகுழு உறுப்பினர். அவரிடம் வெப்பப்பரிமாற்றம் பற்றிய பாடங்களில் தேர்வு எடுத்துக்கொள்ளவேண்டும். தயார் என்று அவர் அறையினுள் ஒருநாள் நின்றேன். நாற்காலியில் சாய்ந்தபடி “அருண், எனக்கு இந்த அறை ஒரே குளிராய் இருக்கிறது. நீ வெப்பக்கதிரியக்க அடுப்பு (ரேடியேட்டர்) ஒன்றை தயாரித்துக்கொண்டுவாயேன்.” நான், “சார்…”. அவர், “அவ்வளவுதான் கேள்வி. போய்ட்டுவா.” “நிஜமாவா சார்?” “அட, ஆமாம்பா. அவ்வளவுதான்.” விக்கித்து நின்ற என்னிடம் அனுசரனையாய், “நிஜமாவே கட்டிக்கொண்டுவரவேண்டாம்; பேப்பரில் எப்படி செய்வது என்று டெக்னிகல் விபரங்களை எழுதிக்கொண்டுவந்தால் போதும். ஆனால் நிச்சயம் என் குளிர் அடங்கவேண்டும். இந்த ரேடியேட்டரை நீ ஆறு மாதத்திலும் கட்டலாம்; ஆறு வாரத்திலும் கட்டலாம்; ஆறு மணி நேரத்திலும்தான். உனக்கே நீ உருவாக்கியதுடன் உடன்பாடு எனும்போது என்னிடம் கொண்டுவா.” அத்தேர்வில் தேறிவிட்டேன் என்பதுடன் நிறுத்திக்கொள்வோம்.

ஆசிரியருக்கும் பேராசிரியருக்கும் வித்தியாசங்கள் பல. மேலுள்ள பகிர்வுகள் ஒன்றைத் தெளிவாக்கும். பேராசிரியர் ஹோல்மன் வகை ஆசான்கள் நம்மை ஒரு துறையை படித்துக்கற்பதை விட செயல்படுத்தி அறிய வைப்பதில் சிறந்தவர்கள்.

பேராசிரியர் ஹோல்மன் (1974)

அமெரிக்காவில் பொதுவாக பல்கலைகழகங்களில் ஒன்பது மாதத்திற்குதான் சம்பளம். கோடை விடுமுறை உம் சாமர்த்தியம். பேராசிரியர் ஹோல்மன் அவரது இரண்டு புத்தகங்களுக்கான புருஃப்-ரீடர் பணியில் என்னை அமர்த்திக்கொண்டார். அதன் மூலம் இரண்டு வருடங்கள், கோடை மாதங்களுக்கான ஊதியத்திற்கு வகை செய்தார். அவருடைய புத்தகங்களில் உள்ள அச்சு மற்றும் உள்ளடக்கப் பிழைகளை கண்டு களைவது என் வேலை. இப்புத்தகங்கள் முன்கூறியபடி சுமார் ஐம்பது வருடங்களாவது பதிப்பில் இருப்பவை. அதனால் அவற்றில் கண்ட பிழைகளை அவரிடம் சுட்டுவதற்குத் தயங்கினேன். பூசிமொழுகி தெரிவிப்பேன். ஒரு தருணத்தில் அவர், “அருண், இவை பிழைகள். குழையாதே. நேரடியாகச் சுட்டு. திருத்தப்படும்.” என்றார்.

இவ்வேலை முடிந்தபின் ஒரு நாள் என் ஆய்வு மேலாளரின் அறைக்கு வந்தார். தன் முதல் புத்தகத்தை எழுதத்தொடங்கியிருந்த அவரிடம், “முதல் வடிவத்தை முடிந்தவரை நேர்த்தியாக எழுதிவிடவேண்டும். இல்லையேல் அவற்றில் இருக்கும் தவறுகள் அடுத்துவரும் பதிப்புகளில் அநேகமாக களையப்படாது.” என்றார். என் மேலாளார், ‘நீர் இதைக் கூறுவதற்குக் காரணம் (என்னைச் சுட்டி) இவன்தானே’ என்றதை ஆமோதித்தார். தரை பிளந்து என்னை விழுங்கிக்கொள்ளாதா என்றானேன்.

முனைவர் பட்டத்திற்கான ஆய்வு அநேகமாய் முடிந்துவிட்டது, சில ஆய்வுக் கட்டுரைகளும் சஞ்சிகைகளில் வெளிவந்துவிட்டது, அமெரிக்காவில் ஓரிரு ஆராய்ச்சி மாநாடுகளில் ஆய்வைப் பற்றி பேசியாயிற்று; இந்நிலையில் ஒரு நாள் அறையில் அவருடைய நூலகத்தை குடைந்துகொண்டிருக்கையில் (இதற்கு எனக்கு முழுச் சுதந்திரம்), ஏதோ வேலையாய் இருந்தவர் என் பக்கம் திரும்பி, ‘அருண், உனக்கும் உன் ஆராய்ச்சி மேளாளருக்கும் என்னைவிட *என் ஆய்வுத்துறையை குறிப்பிட்டு* விஷயங்கள் அதிகம் தெரியும்.’ என்றார்.

நல்ல ஆசிரியர், நல்ல ஆய்வாளர் என்பவை மட்டுமல்ல பேராசிரியத்துவம் என்பது. மேலேயுள்ள அனுபவப் பகிர்வுகள் உணர்த்தும். பேராசிரியருக்கான அடக்கமும், பரந்த நோக்கும், என்றும் கற்றுக்கொண்டே இருக்கும் திறந்த மனோபாவமும் கொண்ட ஆளுமை பேராசிரியர் ஹோல்மன்.

ஹோல்மன் கேமராவில் அடியேன் (2001)

அறுபது வருடங்களுக்கு முன்னரே பேராசிரியர் ஹோல்மன் எழுதிய வெப்பவியல் புத்தகங்கள் முன்னோடியானவை. இன்றும் இந்தியாவிலும் பிரபலம். சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் என் தந்தை அவரது பொறியியல் இளங்கலை படிப்பிற்கு உபயோகித்தார். தொன்னூறுகளில் நானும் என் படிப்பிற்கு உபயோகித்தேன். இன்றும் இளங்கலை மாணவர்களுக்கு வெப்பவியலை கற்றுக்கொடுப்பதற்கு உபயோகிக்கிறேன். ஹோல்மனிடம் பணியாற்றி, கற்றுக்கொண்டு, தேறி வந்துவிட்டேன் என்றறிந்த பிறகே (முனைவர் பட்டம் பெற்றதால் அல்ல) என் தந்தை எனக்கும் ஏதோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம் என்பதில் சமாதானமடைகிறார்.

பேராசிரியர் ஹோல்மனின் தெர்மோடைனமிக்ஸ் புத்தகத்தின் முதல் பதிப்பு வெப்பவியலில் சில அரிய தகவல்கள் விளக்கங்கள் கொண்டது. தொடர்ந்து வந்த பதிப்புகளில் சில அத்தியாயங்கள் நீக்கப்பட்டுவிட்டன. இப்புத்தகத்தின் முதல் பிரதியின் மாஸ்டர் காப்பி – கையெழுத்துத் திருத்தங்களுடன் – இன்று என்னிடம் உள்ளது. கர்ணனின் இடதுகைக் கொடையாய், வைத்துக்கொள் என்று ஒரு நாள் என்னிடம் எடுத்துக்கொடுத்துவிட்டார். சில வருடங்கள் கழிந்து, சுமார் ஐந்து வருடம் முன்னால் அவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் அவருடைய தெர்மோடைனமிக்ஸ் புத்தகத்தின் அடுத்த பதிப்பிற்கு இணை ஆசிரியராய் செயலாற்ற என்னை அழைத்தது. சில காரணங்களினால் அவ்வேலை நிறைவேறவில்லை.

முனைவர் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் ஒரு நாள் பேராசிரியர் ஹோல்மன் அவர் அறையில் உள்ள (ஐம்பது வருடங்கள் அவர் கைப்பட சேர்த்துவைத்திருந்த, நூற்றிற்கும் மேலான பிரத்தியேகமான புத்தகங்கள்  கொண்ட) நூலகம் முழுவதையும் எனக்கு அளிப்பதாய், எடுத்துக்கொள்ளச் சொன்னார். திகைத்துத் திக்குமுக்காடிய நான் சில புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டேன், மிரட்டலுக்குப் பின். ஹோல்மன் வழங்கிய வெப்பவியல் பாடங்களின் ஒலிநாடாக்கள், அவர் பங்குபெற்ற தேவாலய இசைக்குழு மற்றும் பாப் இசைக்குழுவின் பாடல்கள் அடங்கிய மெந்தகடுகள் என்று, அன்றாடப் பரிமாற்றங்களில் என்னிடம் அவரின் சின்னங்கள் பல.

நான் பணியாற்றும்வரையில் என்னை மட்டுமே அவருக்கு ஆசிரிய உதவியாளராய் நியமிக்கச்சொல்லியிருந்தாராம் பேராசிரியர் ஹோல்மன். முனைவர் பட்டம் பெற்றவுடன் துறைத்தலைவரிடம் அறிந்துகொண்டேன். இத்தகவல் தந்த மனோதிடம் இன்றும் செம்மையாக பணிசெய்யவைக்கிறது.

பேராசிரியர் ஹோல்மன் நான் பார்த்தவரையில் கோட்டு-சூட்டிலேயே இருப்பார். டை-பின் சரியான இடத்தில் மினுக்கும். காலையில் யார் முந்தி என்று அலுவலுக்கு விரைகையில், எனக்கு முன் ஏழேகாலுக்கு வந்துவிடுவார். கையில் காகித பையில் மடித்த பேகல் (காலைச் சிற்றுண்டி) மற்றும் மூடி போட்ட பேப்பர் கோப்பையில் காபி (என்று, டிகாக்‌ஷன் மட்டும்) சகிதம். சோதனைச்சாலையில் கண்டதும் சுதாரித்து இருக்கையை விட்டு எழ முற்படும் நம்மை ”குதித்தெழாதே…” என்று பரிவாய் அமர்த்தியபடி, பளபளக்கும் ஷூக்களில் ஹெர்க்யூல் பாய்ரோவை நினைவூட்டும் சிறு சிறு அடிகளாய் நடந்துவந்தபடி…நினைவுகள், இதமாய், பத்திரமாய்.

நான் நிச்சயம் அமெரிக்காவிலேயே பல்கலையில் பணியேற்றுவிடுவேன் என்று திடமாய் நம்பினார் பேராசிரியர் ஹோல்மன். “இந்த நாட்டிற்கு நல்ல பேராசிரியர்கள் தேவை. பல்கலையில் அகாடெமிக்குகள் அனைவரும் பொழுதன்றும் ஆராய்ச்சி மான்யம் தேடுவதாய்ப் போய்விட்டால், மாணவர்களுக்கு யார் பொறியியல் கற்றுத்தருவதாம்?”

நான் இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தில் பணியாற்ற இந்தியாவிற்குச் செல்ல தீர்மானித்துவிட்டேன் என்றறிந்ததும் அவர் அறைக்கு அழைத்து நீண்டநேரம் உரையாடினார். பேராசிரியத்துவம் என்றால் என்னென்ன செய்யவேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும், இப்படி. முடிவில், “அருண், நீ தாராளமாய் இந்தியா போகலாம்; அவ்வப்போது இங்கு எங்களிடமும் வந்துகொண்டிருப்பேன் என்று உறுதியளித்தால்.”

அமெரிக்காவிற்கு மீண்டும் செல்ல எனக்கு நல்ல காரணங்கள் சொற்பமே. பேராசிரியர் ஹோல்மனுக்கு அளித்த வாக்கை காப்பாற்றுவது அக்காரணங்களில் சிறந்தது.

அருண் நரசிம்மன்
பேராசிரியர் ஹோல்மனின் மாணவன்.

*

ஹோல்மனுக்கான அஞ்சலி — மெத்தடிஸ்ட் பல்கலை வலைப்பக்கத்தில்.