இது சுய உலா.
கர்நாடக இசையை பற்றி நீள்கட்டுரைகளாக “இணையத்தில் நீ எழுதுவதை யாராவது வாசிக்கிறர்களா என்ன?” என்று அவ்வப்போது நலம்விரும்பிகள் விசனப்படுவர். எழுத்துசார் தொழில் இயல்பின் கை நமைச்சலில் சில அறிவுத்துறை விஷயங்களை தமிழிலும் எழுதவேண்டும் என ஆசை. நண்பர்களின் உந்துதல் மற்றும் அழைப்பினால் மட்டுமே கர்நாடக இசை பற்றி எழுதுகிறேன். எழுதியே சங்கீதத்தை புரியவைத்து கேட்கவைத்துவிடவேண்டும் என்பதற்காக இல்லை. தமிழுலகமே வாசிக்கவேண்டும் என்றும் ஆசையில்லை. அதனால், கட்டுரையின் நீள அகலம், கண அளவு, வாசகர்கள் எத்தனை என்றெல்லாம் கணக்கெடுப்பதில்லை. அறியவும் ஆவலில்லை. ஆனால் எழுதியதை ஆர்வமுள்ள சிலர் வாசிக்கின்றனர் என்பதை எதிர்பாராத வகைகளில் அறிகிறேன் (இப்போதெல்லாம் கச்சேரிகளில் முக்காட்டோடு பின்சீட்டில் வழிந்து அமர்ந்துகொள்கிறேன்).
எழுதிய இசைகட்டுரைகள் பற்றி அவ்வப்போது வரும் மின்னஞ்சல்களில் பாராட்டுமுகமான சிலவற்றை மட்டும் — சுய விளம்பரத்திற்காக — இப்பதிவில் தொகுத்துள்ளேன்.
(எதிர்வினைகளுக்கு பொதுவாக சம்பந்தப்பட்ட கட்டுரையின் அடுத்த கட்டுரையில் பதிலளித்துவிடுவதால் அவைகளையும், நெருக்கமானவர்களுடனான கடித விவாதங்களையும், இங்கு வழங்கவில்லை.)
***
அருண்:
சுட்டிகளுக்கு நன்றி. நீங்கள் எழுதுவதை அவ்வபோது வாசித்துக்கொண்டேவருகிறேன். உங்கள் குடவாசல் பூர்வீகம் அறிந்து மகிழ்ச்சி. எழுத்தை மிகவும் ரசித்தேன். தயவுசெய்து தொடர்ந்து நிறைய எழுதுங்கள், ஏனெனில் தமிழில் கர்நாடக இசையைபற்றி மனோதிடத்துடன் எழுதுவதற்கு அதிகம் பேர் இல்லை.
வாழ்த்துகள்.
சஞ்சய் (சுப்ரமண்யன்)
***
வணக்கம். தற்செயலாக மிக அருமையான அறிவுசெரிந்த ஒரு இசை விமர்சனத்தை (மூன்றாண்டுகளுக்கு முன்பு திரு விஜய் சிவா மியூசிக் அகாதெமியில் செய்த, நான் உடன் வாசித்த கச்சேரி ) படித்தேன். மிக்க நடுநிலையோடும் விளக்கங்களோடும் சுவையாக இருந்தது. நன்றி.
”கடம்” சுரேஷ்
***
வாசிப்பதற்கு மிக தமாஷாக உள்ளது, அதுவும் அந்த வெளிவராத கட்டுரை. (குறுங்கட்டுரை சுட்டி – ஆங்கிலத்தில்)
டி.எம்.கிருஷ்ணா
***
என் கச்சேரியை பற்றிய எழுத்திற்கு நன்றி. அந்த கச்சேரியில் சேனாபதே கீர்த்தனை ஊத்துக்காடு வெங்கடகவி இயற்றியது. முத்துசாமி தீக்ஷதர் இல்லை. “என்னையும் வரச்சொன்னாரோ ரகுநாயகா” கீர்த்தனை நான் இசைவடிவம் அமைக்கவில்லை. அரியக்குடியாரோ, கே.வி.என்.னோ ஏற்கனவே செய்திருக்கவேண்டும்.
உங்களைப்போன்ற விஷய அறிவு உடைய ரசிகர்கள் சபையில் அமர்ந்து கேட்கிறார்கள் என்பது உற்சாகம் அளிக்கிறது. பொறுப்பும் கூடுகிறது.
வசுந்த்ரா ராஜகோபாலன்
***
ஆஹா. அருமை அருண். கலாநிதி மிளிரும் இதுபோன்ற எத்தனையோ கலைஞர்கள் இன்னும் நம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களையெல்லாம் தேடி நாம்தான் செல்ல வேண்டும், சேதுபதி மூலம் உங்கள் எழுத்தை கேள்விப்பட்டு நான் இங்கு வந்து படித்து இன்புற்றது போல.
வாழ்த்துகளும், வணக்கங்களும்.
சுகா [ http://venuvanamsuka.blogspot.com ]
***
சங்கீதப்பிரியா-வில் சமீபத்தில்தான் உறுப்பினராக சேர்ந்தேன். தற்செயலாக அங்கிருந்த ommachi.net சுட்டியை சொடுக்கினேன். எடுத்துக்கொண்ட துறையில் (இங்கு இசை) நகைச்சுவையும் செரிவான விஷயஞானமும் கொண்ட உங்கள் கட்டுரைகளை வாசிப்பது என்று முடிவுசெய்தேன். உங்கள் புகைப்படம் இளவயதை காட்டுகிறது, எனக்கு 73 வயதாகிறது, இதுவரை இசையை கேட்டுரசிக்க முயன்று வீணடித்திருக்கிறேன்; ஆனால் அறிவார்த்தமாகவோ இலக்கணத்துடனோ இன்றியும், கர்நாடக மரபிசையை கேட்பதில் ஆனந்தம். இப்போதாவது மிச்சம் இருக்கும் வாழ்நாளில் மரபிசையின் அடிப்படைகளை தெரிந்துகொள்வோமே என்றிருக்கிறேன்.
டாக்டர். பாகீரதி-யின் 2006 கச்சேரியைபற்றிய உங்கள் முதல் கட்டுரை என்னைக் கவர்ந்தது. தஞ்சாவூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி என்று என் சிறுவயதை நானும் காவேரிக் கரையில்தான் கழித்துள்ளேன். அதனால் உங்கள் எழுத்து என் சிறுவயது அனுபவங்களை ஞாபகப்படுத்துகிறது. உங்கள் எழுத்து வடிவம் தி.ஜானகிராமனையும், தேவனையும் எனக்கு ஞாபகப்படுத்துகிறது. அந்தக் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.
கடவுள் அருள் உங்களுக்கு.
எஸ். அனந்தராமன்
*
அன்புள்ள ஸ்ரீ. நரசிம்மன் அவர்களுக்கு
உங்கள் வலைப்பதிவை தற்செயலாக கவனித்ததும், உங்கள் முயற்சிக்கு நன்றி கூறவேண்டும் என நினைத்தேன். எவ்வளவு படைப்பூகமான எழுத்து, உயரிய மொழிநடை, மற்றும் தகவல் செழுமை; அனைத்தும் என்னை மகிழ்விக்கிறது. நான் கர்நாடக இசையை பொறுத்தவரை நான் கத்துகுட்டி, தமிழ் மொழியில் ஓரளவு தேர்ச்சி பெற்றவன். உங்கள் வலைப்பதிவுகளில் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.
பி. வி. சம்பத்.
*
கல்பகம்`ஸ்வாமிநாதன்`அறிமுகத்துக்கு`நன்றி.
நல்லாயிருக்கு அண்ணா. மனத்தடையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு இதைப் போல் நிறைய எழுத வேண்டுமென்று விண்ணப்பம்.
ரா. கிரிதரன்
*
அறிமுகத்திற்கும் – காலம் கடந்த பொழுதினில் ஒரு இசைக்கலைஞரினை பற்றி அறிந்துகொள்வதை சங்கடமாகவே உணர்கிறேன் – வீடியோ பகிர்விற்கும் நன்றி
ஆயில்யன்
*
உங்கள் விமர்சனம் எனக்கு கல்பகம் பாட்டியின் கச்சேரியை நேரில் கேட்டதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது. நன்றி. உங்கள் மொழி வெளிப்பாடு நன்றாக உள்ளது. மற்றவரிடமிருந்து ஏதோ ஒன்று வித்தியாசப்படுத்துகிறது, ஆனால் எது என்று எனக்கு குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.
உத்ரா துரைராஜன்
*
நான் முப்பத்தியைந்து வருடம் முன்னர் இசைக்கல்லூரியில் படிக்கையில், திருமதி. கல்பகம் ஸ்வாமிநாதன் என் அபிமான குரு. இன்றும் அவர்களை அன்புடன் நினைவுகூர்கிறேன். அவரது மருமகள் திருமதி. மங்களம் எனது வகுப்புத்தோழி. அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அனுதாபங்கள். அவர்களது ஆன்மா சாந்தி அடையட்டும்.
நான் சாமந்தரணி, இலங்கையிலிருந்து எழுதுகிறேன்.
*
சௌக்யமா எழுதறீர். தொடர்ந்து நிறைய எழுதவும். நன்றி.
மானஸ்தன்
*
ஹை அருண்,
நான் மேற்கூறிய கச்சேரிக்கு வரவில்லை. ஆனாலும் உம்முடைய தமிழ் நடையை மிகவும் ரசித்தேன். அதில் கலந்திருந்த நயமான நகைச்சுவை நன்றாக இருந்தது.
இவற்றை எல்லாம்விட சஞ்சய் சுப்ரமணியமே தன்னுடைய ப்ளாக் ஸ்பாடில் உங்களுடைய விமர்சனத்திற்கு link ஏற்படுத்திக்கொடுத்திருப்பது மிகவும் பாரட்டுக்குரியது.
சம்பத்
*
(ரா. தா. ப. கட்டுரைகள் குறித்து)
இதைப்போன்ற ஒன்றைத்தான் பலகாலமாக தேடிக்கொண்டிருந்தேன். இசையை ஊடுருவி அணுகமுடியும் என்ற அனுமானம், தெளிவு என்னிடத்தில் உண்டாகியது. பல கோடி வணக்கம் உங்களது முயற்சிக்கு. பொறுமையாய் எல்லாவற்றையும் படித்து அனுபவித்து கிரஹிப்பேன் என்பது உறுதி. அநேக வாழ்த்துக்கள், ஆர்.டி.பி.க்கும் உங்களுக்கும்.
சுப்ரமணியன் ஆனந்த் [ http://ashokan.blogspot.com/ ]
*
உங்கள் எழுத்துநடை, சிக்கலான இயலை எளிமையாக, ஜோக்குகளுடன், விளக்கும் முறை, இவைதான் என்னை உங்களை படிக்கவைக்கிறது. அற்புதமான காரியம். தொடருங்கள்.
ஜெகதீஸ்வரன்.
*
உங்கள் தொடக்கம் என்னை இதை வாசிப்பதை நிறுத்திவிட தூண்டினாலும் (எனக்கு எதுவும் புரியாதோ என்று கவலைகொள்ளவைத்தது), உங்கள் எழுத்துநடையே தொடர்ந்து வாசித்திட தைர்யத்தை கொடுத்தது. அற்புதமான கார்யத்தை செய்திருக்கிறீர்கள் – என் போன்றவர்களை கர்நாடக இசையை அறிமுகம் செய்து கேட்கவைக்க உதவியிருக்கிறீர்கள்.
சில வார்த்தைகளையும் கருத்துகளையும் புரிந்துகொள்ள ஒருமுறைக்கு இருமுறை எனக்கு வாசிக்கவேண்டியிருந்தது. ஆனால் தொடர்ந்து படித்தால் பிடித்துக்கொள்வேன் என்று எண்ணுகிறேன். என் வீட்டருகில் கச்சேரிகள் நடக்கையிலும் கவனித்துக்கொள்கிறேன்.
ரமா
*
அருண் – நல்ல ரசனையோடு ரசிக்கும் விதமாக எழுதியிருக்கீங்க. சூப்பர்!
//ஆந்திராவில் பொதுவில் இப்படி இல்லையாம். இங்கு கச்சேரிகளில் நிச்சயம் பல்லவி பாடுகிறார்கள்//
அப்படியா? ரா-தா-ப முழுதாக கேட்குமளவு பொறுமை குறைந்து வருவது உண்மைதான். என் நண்பன் சொன்னதுதான் ஞாபகம் வருது – இந்த ஐபாட் வந்ததிலிருந்துதான் பாடல்களில் நேர அளவு மேல் ஒரு கண் வைத்துக்கொண்டேயிருக்கிறோம். ரசிக்கும் படி இருக்கும் பாட்டு எவ்வளவு நேரமிருந்தால் என்ன?
ரா. கிரிதரன்
*
நன்றி. என்ன அபாரமான உழைப்பு. ரா.த.ப. தொடரின் முதல் பதிவை படித்ததும் இது என் போன்ற இசையறிவு இல்லாதவர்களுக்கு இல்லை என்று தோன்றியது. ஆனால் என்னால் தொடர்ந்து படிக்க முடிந்ததற்கு காரணம் உங்கள் உழைப்பே. பிறகு வாசித்துப்பார்கையிலும் ரா.தா.ப. கட்டுரை தொடர் எனக்கு இல்லையோ என்றே முடிவுசெய்ய தோன்றுகிறது. உங்கள் விளக்கங்களுக்கு மீண்டும் நன்றி. தொடர்ந்து உங்கள் தொடரை படிக்கிறேன். மேலும் அறிமுகத்திற்கு புத்தகங்களை நாடுகிறேன். நீங்களும் சில புத்தகங்களை குறிப்பிடலாமே.
மோஹன்
*
பின்றீங்ணா! பிரமிச்சுப்போய் பார்த்து, கேட்டு, படித்து, ‘பாவ’மாய்ப் பயந்து நிற்கிறேன்! அட்டகாசம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
*
கர்நாடக சங்கீதம் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும்கூட என் போன்றவர்களால் முதற்கட்டமாக தாளம் போட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து விட்டீர்கள். அந்த நம்பிக்கை சரியோ தவறோ தெரியவில்லை, இருந்தாலும் நன்றி.
கச்சேரிகளில் தாளம் போடுவதற்கு (ரசிகர் லெவெலில்) வகுப்பு எடுக்கும் உத்தேசம் உள்ளதா?
சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கிறேன் :)
பாஸ்கரன் நடராஜன்
*
சிக்கு புக்கு ரயிலே மற்றும் பாட்டும் நானே பாவமுன் நானே போன்ற பாட்டுகளில் உள்ள தாள நுணுக்கங்களை மிக தெளிவாக எடுத்துக்காட்டிய உமக்கு பாராட்டுக்கள்.
சங்கர்
*
(சொல்வனம் இசை கட்டுரைகள் –- சில கடிதங்கள்)
அன்புள்ள சொல்வனம்,
வணக்கம்.
இந்த இதழில் அருண் நரசிம்மன் எழுதியிருக்கும் கட்டுரை வெகு அருமை. ஏற்கனவே பெயர் பெற்ற கலைஞர்களைப் பற்றி எழுதுவது எளிது. குறையோ, நிறையோ பொதுவாக ஏதாவது சொல்லி கச்சேரியை முடித்துவிடலாம். ஆனால் புதிதாக வளரும் கலைஞர்களைப் பற்றிதான் அதிகம் அறிமுகம் இருப்பதில்லை. ஒரு கலைஞர் புகழுச்சிக்குச் சென்றபின் எழுதப்படும் ஆயிரம் கட்டுரைகளை விட, அவருடைய ஆரம்பநாட்களில் எழுதப்படும் ஒரே ஒரு கட்டுரைக்கு இருக்கும் முக்கியத்துவம் அதிகம். இதுபோன்ற கட்டுரைகளை நம் வெகுஜனப் பத்திரிகைகளில் சத்தியமாகப் படிக்கமுடியாது. அவர்கள் நோக்கமெல்லாம் ஏற்கனவே புகழோடு இருக்கும் கலைஞர்களைப் புகழ்ந்து ஐஸ் வைப்பதும், புதிய கலைஞர்களை, “ஏதோ பாட்றான்” என்பது போலச் சொல்வதும்தான். இச்சூழலில் அருணின் சேவை அளப்பரிய சேவை. அவருக்கு என் நன்றிகள்.
[…]
அன்புடன்,
ராஜேஷ்
*
அன்புள்ள சொல்வனம், ஒன்றரை வருடங்களுக்கு முன் சொல்வனம் அறிமுகமான காலந்தொட்டே நான் சொல்வனத்தைப் பெரும்பாலும் விடாமல் படித்து வருகிறேன். ஆனால் இதுவரை கடிதம் எழுதியதில்லை. என் முதல் கடிதம் இது. இதழ் 59 குறித்து எழுதலாம் என நினைத்து எழுதுகிறேன்.
[…]
1. அருண் நரசிம்மன் நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்து மீண்டும் எழுதுவதில் சந்தோஷம். முகப்புக்கட்டுரை வெகு அருமையாக அமைந்துவிட்டது. வாழ்த்துகள்.
[…]
நன்றி
ஸ்ரீனிவாஸ ராகவன்
*
(சேது)
தயைகூர்ந்து ராகம் தானம் பல்லவி கட்டுரைகளுக்காக திரு. அருண் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவிக்கவும். ரா.தா.ப. துறை விஷயங்களை வழங்கவும் மக்களுக்கு கற்பிப்பதிலும் அது அற்புதமான கட்டுரைத் தொடர். இவ்வகை கட்டுரைகள் மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும். தயக்கமின்றி இதை வெளியிடும் சொல்வனத்திற்கு பாராட்டுகள். மூன்றாவது பாகத்தை படித்ததும் கடந்தகாலம் சென்றேன். அது அப்போது 80 வயதை தொட்டிருந்த என் குருநாதர் உட்கார்ந்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னால், எனக்கு நெளிவு சுளிவுகளை விளக்கியது ஞாபகம்வருகிறது. அப்போது அவர் எனக்கு வழங்கியது என்ன என்று உணரவில்லை. ஆனால் இப்போது அவரின் இழப்பை உணர்கிறேன். பலதும் எனக்கு கொடுத்திருகிறார்.
ராம்
*
மதிப்பிற்குரிய சொல்வனம் ஆசிரியருக்கு,
வணக்கம்.
[…]
அருண் நரசிம்மனின் ராகம் தானம் பல்லவியைப் பாராட்டவே இப்போது இந்த மடல்.ஆங்காங்கே பொருத்தமான ஒலி/ஒளி கோப்புகளை இணைத்து விளக்குவது மிக அருமை. குறிப்பாக, தொடரின் நான்காவது பாகத்தில் திரையில் பாடலை ஓடவிட்டு, முன்னால் தாளம் போடும் தன் கையைச் சேர்த்து கட்டுரைக்காக வீடியோ எடுத்திணைக்க பெரிதும் மெனக்கிட்டிருக்கும் அருணைத் தனியாகப் பாராட்ட வேண்டும். இதை வாசித்தால்/பார்த்தால் சிறு சந்தேகங்கள் ஏதும் இருப்பவருக்குக் கூட முற்றிலுமே தெளிந்து விடும். சுவாரஸியமான முறையில் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. இதுபோன்ற ஒரு ராகம் தானம் பல்லவியை & தாள ‘டெமோ’வை நான் இதுவரை அனுபவித்ததில்லை; இதுபோல விஸ்தாரமாக எங்கேயும் நடந்ததாகச் சொல்லிக் கூட கேட்டதில்லை. ஆதிதாளத்தையும் சமத்தில் எடுப்பதையும், ஒரு களை ரெண்டு களை என்பதைல்லாமும் இதற்கு மேல் விளக்க முடியுமா என்பது சந்தேகம். அதுவும் RTP யை விளக்க ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ போன்றதொரு சினிமா பாட்டை எடுத்துக் கொண்டு யாரும் செய்திருக்கிறார்களா என்பது அதைவிட சந்தேகம் தான். சபாஷ்! சில நாட்களாக (கட்டுரையை வாசித்த பிறகு) காதில் விழும் சினிமாப் பாடல்களில் தாளவகையைக் கண்டுபிடிக்கும் புது ரோகம் எனக்கு. ஐயமேயின்றி கட்டுரையாசிரியர் நல்லதொரு அரிய ஆசிரியர் தான். கையைப் பிடித்து அரிச்சுவடி கற்பிப்பது போல ஆசிரியர் சொல்வது, புதிதாக RTP யை அறிமுகப்படுத்திக் கொள்பர்களைக் கருத்தில் கொண்டு என்று நன்றாகவே புரிகிறது. வெள்ளைத் துண்டு விரித்துக் கொண்டு அதன்மேல் தான் ஆதி தாளம் போட்டுப் பழகணும் போலயிருக்கு என்று மாணவர்கள் நினைக்காமல் இருந்தால் சரி : ) ) ! !
அடுத்தடுத்த பாகங்களுக்காகக் காத்திருக்கிறேன். இனி வரவிருக்கும் நெரவல், ஸ்வரம், தனி பற்றியெல்லாம் என்னென்னவெல்லாம் புதிதாகச் சொல்லப் போகிறார் என்ற அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படுகிறது. அருண் நரசிம்மனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி. வாழ்த்துக்களுடன்,
ஜெயந்தி சங்கர்.
*
அன்புள்ள ஆசிரியர் குழு, அருண் நரசிம்மன்,
அருண் நரசிம்மன் அவர்கள் எழுதிய கட்டுரையின் இரண்டாம் பகுதியைப் படித்தேன். உண்மையில் எனக்குப் புரியாத பல விஷயங்களைப் புரிந்து கொண்டேன். என் கேள்விகளை சீரியஸாக எடுத்துக் கொண்டு அவர் பதிலளித்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், உபயோகமாகவும் இருந்தது. அருணைப் போல நேர்மையாக பதிலளிப்பவர்கள் மிகவும் குறைவு.
சிப்பியிருக்குது-முத்துமிருக்குது, ’மோகம் என்னும்’ இரண்டு எடுத்துக்காட்டுகளோடு பிற கோப்புகளையும் கேட்டேன். தானம் என்றால் என்னவென்று நன்றாகவே விளங்கிக் கொள்ள முடிந்தது. இனிமேல் நானே கேட்டுக்கேட்டுத் தானத்தின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்வேன்.
மிகவும் பயனுள்ள கட்டுரைத் தொடர் இது. என்னைப் போன்ற கர்நாடக இசைத் தற்குறிகளுக்கு இத்தொடரை, குறிப்பாக இரண்டாம் பகுதியைப் பலமாகப் பரிந்துரைக்கிறேன்.
மேலும் நான் என் மடலுக்கு அடுத்த பகுதியிலேயே பதிலளிப்பீர்கள் என நினைக்கவில்லை. (படிப்பீர்கள் என்று கூட நினைக்கவில்லை ;-)). உடனடியாக அருணுக்கு அனுப்பி கடிதத்தையும் பிரசுரித்த ஆசிரியர் குழுவுக்கு நன்றி.
இப்போது ஒரு வேண்டுகோள்.
இந்த ராகம்-தானம்-பல்லவி என்ற வடிவம் நம்மிடையே எத்தனை வருடங்களாக இருக்கின்றன என்ற வரலாறு தெரியுமா? நூறு வருடம் முன்பு கச்சேரிகள் ராகம்-தானம்-பல்லவியில்தான் ஆரம்பிக்குமாமே? அப்போதைய ஜாம்பவான்களுடைய சுவாரசியமான ராகம்-தானம்-பல்லவி anecdotes ஏதும் சொல்லலாமே? அதன் வழியே பல விஷயங்களை நினைவு வைத்துக்கொள்வது எளிது என்பதால் கேட்கிறேன்.
நன்றியுடன்,
பாலரங்கன்
*