தொட்டால் தொடுதிரை பூ மலரும்

Standard

முன்னொரு காலத்தில் டயனோரா என்றொரு டிவி பிராண்ட் இருந்தது. விற்பதற்கு அங்கம் அவிழ ஆடையணிந்த அணங்கைகள் அக்கம்பக்கம் அதிர ”கீ……….ப் இன்ன்ன்ன்ன் டச்” என்று ஸ்டிரியோவில் விளம்பர ஸ்லோகம் விண்ணப்பிப்பார்கள். என்னுடன் தொடர்புகொண்டிரு என்று டிவி அன்று அரைகூவியது, மின்தொடர்புசாதனங்களின் செயல்பாட்டிற்கே இன்று இன்றியமையாத ஸ்லோகமாகிவிட்டது. கணினி சி.ஆர்.டி. திரையில் தொடங்கி, கியோஸ்க்களின் பில் போடும் மெஷின், சூதாட்ட ஸ்லாட் மெஷின்கள், வங்கி ஏ.டி.எம்.கள், பாம் பைலட், ஸ்மார்ட் ஃபோன் என அநேகமாக அனைத்து மின்திரைகளுமே இன்று தொடுதிரைகளாகிவிட்டது. ஐபாட், ஐஃபோன், ஐ.நா., ஐயா, என்று அனைவருமே சற்று அழுத்தினால்தான் கவனிக்கிறார்கள்.

நான்கு வெவ்வேறு தொழில்நுட்பங்களைகொண்ட தொடுதிரைகள் – டச் ஸ்க்ரீன் – மார்கெட்டில் உலவுகிறது. ரெஸிஸ்டிவ் டச், கப்பாஸிட்டிவ் டச், அக்கௌஸ்டிக் டச் மற்றும் இன்ஃப்ரா ரெட் டச்.

ரெஸிஸ்டிவ் டச் தான் ஆதியில் (1977இல் என்று நினைக்கிறேன்) தோன்றியது. விலை கம்மி. ரஃப் அண்ட் டஃப். தொடுகிறேன் பேர்வழி என்று அதன்மீது முழங்கையால் தோசைவார்த்தாலும் திரை செயல்படும். ஆனால் ஆறேழு லேயர்கள் கொண்டதால், திரைக்குபின் இருப்பவை (எழுத்து, எக்ஸெட்ரா) சற்று மங்கலாகத்தான் தெரியும்.

ஆப்பிள் ஐபாடுகளில் வரும் கப்பாஸிட்டிவ் டச் ஒரளவு லேட்டஸ்ட். சற்று விலை அதிகம். மேல்நாட்டு மருமகள் போல சற்று மிருதுவாய் ஹாண்டில் செய்யவேண்டும். ஆனால், அவளுக்கே உரிய குணமாய், மெல்லிய சருமத்தினாலாகி (கம்மி லேயர்கள்), திரையினுள் இருப்பது, பளீரென்று தெரியும்.

ரெஸிஸ்டிவ் டச் என்பது அடிப்படையில் ஒரு கண்ணாடி பலகை. கணினி இன்னபிற மின் ஊடகங்களின் முகமான (காத்தோட் ரே டியுப்) சீ.ஆர்.டி. அல்லது (லிக்விட் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே) எல்.ஸீ.டி. மின்திரையின் மீது வைக்கப்பட்டிருக்கும். இக்கண்ணாடியின் வெளிப்புறம் பாலிமர் பூச்சு கொண்டது. சிராய்ப்புகளை தடுக்க. இந்த பாலிமர் பூச்சிற்கும் கண்ணாடி பரப்பிற்கும் இடையே, ஒன்றன்மீது ஒன்றாக, இடையே பாலியெஸ்டர் பொட்டுகளால் பிரிக்கப்பட்ட, இரண்டு அதிமெலிதான உலோக மின்கடத்தி பரப்புகளை வைத்திருக்கிறார்கள். கண்ணாடி பலகையில் இடமிருந்து வலமாகவும், வெளியே இருக்கும் பாலிமர் பூச்சினில் மேலிருந்து கீழாகவும் மிகக்கம்மியான மதிப்பில் வோல்டேஜ் பாய்கிறது. விரலால் அல்லது நிரடியால் ஓரிடத்தில் திரையை அழுத்துகையில், பாலிமர் பூச்சிலிருந்து கண்ணாடி பலகை வரை அனைத்தையும் அழுத்துகிறோம். இதனால் இடையே உள்ள இரண்டு மின்கடத்தி பரப்புகளும் நாம் அழுத்துமிடத்தில் தொட்டுக்கொண்டு, பூச்சு மற்றும் கண்ணாடி பேனலின் வோல்டேஜ்களை “ஷார்ட்” செய்கிறது. தொட்ட இடம் எது என உள்ளிருக்கும் கட்டமைப்பு மென்பொருளுக்கு தெரிவிக்க.

கப்பாஸிட்டிவ் டச் இவ்வளவு சிரமம் இல்லை. திரைமீது ஒரே கண்ணாடி பலகை. அதன் இருபுறமும் உலோக மின்கடத்திபூச்சு. நாம் கைவைக்கும் பக்கத்தில், உலோக பூச்சிற்கும் வெளியே, சிராய்ப்பு ஏற்படாமல் ஒரு பாலிமர் பர்னால் பூச்சு. பலகையின் நாட்புறமும் எலக்ட்ரோடுகள் பொருத்தி வோல்டேஜ் கொடுத்திருப்பார்கள். இவை வெளிப்புற உலோகப் பரப்பின் மீது மின்சாரமிடும்.

அதாவது மின்சாரத்தை கடத்தியில் தேக்கிவைப்பர். ரெஸிஸ்டிவ் டச்சில் வோல்டேஜ் வேறுபாட்டிற்கிடையே ஆற்று நீர் போல மின்சாரம் பயணிக்கிறது என்றால், கபாஸிட்டிவ் டச்சில் குளத்தில் தேங்கி இருப்பது போல நாற்புறத்திலும் வோல்டேஜ் வேறுபாடுசெய்து மின்சாரத்தை மின்கடத்தியினுள்ளேயே தேக்கிவைத்துள்ளோம். இது ரெஸிஸ்டிவ்விலிருந்து கபாஸிட்டிவ்விற்கான முக்கியமான வேறுபாடு. (உட்புற இரண்டாவது மின்கடத்தி பூச்சு தேவையற்ற மின்சலனங்களை தடுக்கும் ஒரு கேடயம் போல; லூஸில் விடுவோம்).

நாம் தொட்டதும், கப்பாஸிட்டிவ் டச் வகை திரையில், தொட்ட இடத்தில் தேங்கியிருக்கும் மின்சாரத்தை விரலால் நம் உடல்வழியாக கடத்தி ”எர்த்” செய்கிறோம். தொட்ட இடத்தில் சட்டென ஏற்படும் மின்பற்றாக்குறையை கட்டமைப்பு மென்பொருள் இடம்கண்டுகொள்கிறது. கர்ஸர் அம்புக்குறி அவ்விடத்திற்கு விரைந்து, கட்டளையை செயல்படுத்துகிறது.

அக்கௌஸ்டிக் டச் வகையில் கண்ணாடி பலகை மட்டுமே. பாலிமர் பூச்செல்லாம் கிடையாது. பலகையின் ஓரங்களுக்கிடையே, அல்ட்ராஸவுண்ட் எனப்படும் மீயொலி ஒரு தடிமனுக்கு பலகையின்மேல் பாய்ந்துகொண்டிருக்கும். சுற்றிலும் கரைகளில் முட்டிக்கொண்டு வியாபித்திருக்கும் குளத்துநீர்போல. ஸ்டாண்டிங் அக்கௌஸ்டிக் வேவ்ஸ், நிற்றொலியலைகள். விரல் நுனியால், அல்லது நிரடியால் தொட்டதும், அவ்விடத்தில் ஒலியை (ஒலியின் ஆற்றலை) உறிஞ்சுகிறது. குளத்தில் ஓரிடத்தில் உயரத்திலிருந்து ப்ளக் என்று கல்லெறிவதைப்போல. சுற்றிலும் வைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்டியூசர்கள் கண்ணாடி பரப்பில் எங்கு இவ்வாறு ஒலி ஆற்றல் குறைகிறது என்பதை நிர்ணயித்து, கர்ஸர் அவ்விடம் நகருகிறது, அல்லது அவ்விட கட்டளை செயலாகிறது.

இன்ஃப்ரா ரெட் வகை தொடுதிரையும் இவ்வாறே செயல்படுகிறது. கண்ணாடி பரப்பின்மீது ஒரு தடிமனுக்கு நம் காதால் கேட்கமுடியாத மீயொலிக்கு பதில், ஒளி உமிழும் டையோடுகள் மூலம், கண்ணால் பார்க்கமுடியாத இன்ஃப்ராரெட் ஒளியலை அவ்வளவே. நிரடி ஒளியை தடுத்து கர்ஸரை அவ்விடம் ஆட்கொள்கிறது.

போதும். இதற்கு மேலும் விஞ்ஞானம் பேசினால் ஒய் திஸ் கொலைவெறி டா என்று கட்டுரையை புக்மார்க்காய் புஸ்வாணமாக்கிவிடுவீர்கள்.

***

எப்படி இவ்வகை தொடுதிரைகளை சட்டென இனம்கான்பது? நம் விரல் நுனியிலேயே மந்திரம் இருக்கிறது.

ஒரு மின்திரையை ஆள்காட்டி விரலால் தொடுங்கள். ஆனால், விரலின் மிருதுவான, ரேகைகொண்ட உள்பக்கமாக இன்றி, நகத்தால் சற்று அழுத்துங்கள். மின்திரையில் கர்ஸர் எனப்படும் அம்புக்குறி விரலுக்குகீழே நகர்கிறதென்றால், அந்த மின்திரை ரெஸிஸ்டிவ் அல்லது இன்ஃப்ராரெட் வகை தொடுதிரை.

இப்போது, இரண்டு விரலால், திரையின் இரு வேறு இடங்களை, ஒரே சமயத்தில், முன்போல் நகத்தாலேயே அழுத்துங்கள். அம்புக்குறி ஏதோ ஒரு விரல் அழுத்திய இடத்தின்கீழ் நகர்ந்துவிட்டதென்றால், அத்திரை உத்திரவாதமாய் இன்ஃப்ராரெட் வகை தொடுதிரை. அம்புக்குறி இரண்டுவிரல் நகம் அழுத்திய இடத்தின்கீழும் வராமல், இரண்டிற்கும் சராசரியான ஒரு நடுப்பகுதியில் நிற்கிறதென்றால், அது ரெஸிஸ்டிவ் தொடுதிரை.

சரி, இப்படி செய்துபார்த்தும் கர்ஸர் நகரவில்லையெனின்?

தொடுதிரைக்கு உங்கள் நகம் பிடிக்கவில்லை என்று அர்த்தம். பழுதடைந்திருக்கலாம். அல்லது புழுதிபடர்ந்திருக்கலாம்.

இரண்டுமில்லையா? அடுத்த கட்டமாய், நகத்தால் நகராத அம்புக்குறிகொண்ட தொடுதிரையை இப்போது ஆள்காட்டிவிரலின் ரேகை பக்கத்தால் சற்று அழுத்துங்கள். அம்புக்குறி நகர்ந்து அழுத்திய இடத்தின் கீழ் வந்துவிட்டால், திரை கபாஸிட்டிவ் அல்லது அக்கௌஸ்டிக் தொடுதிரை.

மீண்டும் இரண்டு விரல் நுனிகளால், வெவ்வேறு இடங்களில் திரையை அழுத்துங்கள். அம்புக்குறி தொட்ட இடங்களின் இடைப்பட்ட தூரத்தின் சராசரிக்கு அருகில் நிற்கிறதென்றால், கப்பாஸிட்டிவ் தொடுதிரை. ஏதோ ஒரு விரல்நுனியின் கீழ் நிற்கிறதென்றால், அக்கௌஸ்டிக் தொடுதிரை (இதில் மென்பொருள் முதல் தொட்ட இடத்தையே உணருமாறு அமைத்திருப்பார்கள்).

இந்த எளிய பரிசோதனையை பரிந்துரைப்பவர் கலிஃபோர்னியாவிலுள்ள மிகப்பெரிய தொடுதிரை தயாரிப்பு நிறுவனமான எலோ டச் சிஸ்டம்ஸின் பொறியாளர் ஃபிராங் ஷென்.

இப்படி அயலார்களின் பெயர்களை நடுநடுவே கொளுத்திப்போட்டால்தானே, நம்கட்டுரையின் நம்பகத்தன்மை கூடுகிறது. என்ன நான் சொல்வது.

எனிவே, மேற்கூறிய உத்தியில், என்னால் ரெஸிஸ்டிவ் மற்றும் கப்பாஸிட்டிவ் திரைகளை இனம்கண்டுகொள்ளமுடிந்தது.

சார்ந்த சில உபரி விஷயங்கள். ரெஸிஸ்டிவ் டச் ஏன் மங்கலாய் தெரிகிறது; எல்ஸீடி டிஸ்ப்ளேவிற்கும் கண்ணுக்கும் இடையே ஆறு லேயர்கள் இருக்கிறது, அதனால் ஊடுருவும் ஒளி மட்டுபடுகிறது. ரெஸிஸ்டிவ் வகை திரை உள்ளிருக்கும் எல்ஸீடி டிஸ்ப்ளேயிலிருந்து 75 சதவிகிதம் ஒளியையே வெளிக்கொணரும்; கப்பாஸிடிவ் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் செய்தொளிரும்.

ரெஸிஸ்டிவ் டச் தொட்டால் சிணுங்காது; விரலால் அமுக்கவேண்டும். ஏனெனில் இரண்டு மின்கடத்தி பூச்சும் தொட்டுக்கொண்டால்தான், மின்சாரம் குறுக்கால் பாய்ந்து, மென்பொருள் நாம் தொட்டதை உணரும். கப்பாஸிட்டிவ் டச், காதலி கன்னமென செல்லமாய் வருடினாலே போதும். அவ்விட மின்சாரத்தை விரல் உள்வாங்கி, தொட்ட இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆனால், எப்படித்தொட்டாலும் மின்சாரம் பாயவைக்கும் காதலிபோலின்றி, நகத்தால் தொட்டால் கப்பாஸிடிவ் தொடுதிரை கர்ஸர் சரியாக நகராது. நகம் நல்ல மின்கடத்தி அல்ல.

ரெஸிஸ்டிவ் நீண்டகாலம் உழைக்கும்; ஆனால் நாளடைவில், அதிகமாக அமுக்கவேண்டியிருக்கும். கொரியன் மற்றும் சிங்கப்பூர் குருவி கொண்டுவரும் லோக்கல் சரக்கில் சில ரெஸிஸ்டிவ் டச்தான். மலிவு விலையில் என்னிடம் ஒன்று அலமாரியின் கீழ்தட்டில் கிடக்கிறது. உபயோகத்திற்கு அமுக்க முதலில் படிந்துள்ள புழுதியை அழுத்தித்தேய்த்து அகற்றவேண்டும்.

ஐபாடினால், கப்பாஸிடிவ் டச் இப்போது பிரபலம். ஆப்பிள் ஐபாடை நண்பரிடமே ஓசியில் தொட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டதோடு சரி. எனக்கு ஐபாட் அதன் கவனக்கலைப்பினால் ஒவ்வவில்லை. தனிக்கட்டுரையாய் கிண்டில் மகாத்மியம் எழுதுவோம்.

அரசாங்க மான்யத்துடன் கபில் சிபலின் பரிந்துரையுடன் வெளிவரவிருக்கும் நம்மூர் ஆகாஷ் எவ்வகை தொடுதிரை என்று தெரியவில்லை. விலையைப்பார்த்தால் ரெஸிஸ்டிவ்தான் போலக்கீது. டாடா நேனொவைவிட விற்பனைக்கான முன்ஆர்டர் குவிந்துள்ளதாம். என்னைப்பொறுத்தவரை எப்பொருள் எத்தரத்தில் தயாரிக்கப்படவேண்டும் என்ற வரைமுறைகளை கடைபிடிக்கத்தேவையில்லாத நுகர்வோர்சார்ந்த தொழில்நுட்பச் சூழலில், நேனொ, ஆகாஷ் இரண்டுமே, சந்தையில் வெற்றிபெற்றாலும், இந்தியப் பொருளாதாரத்திற்கு தேவையற்ற தொழில்நுட்ப விளைவுகள். மலிவு விலையில், மத்தியவர்கத்தினர் அதிகம்பேர் உபயோகிப்பரே என்றால், அதுதான் என் ஆட்சேபமே.

***

103 வயதில், ஐபாட் உபயோகிக்கும் மிகவயதான பெண்மணி. தகவல்:

http://www.seopressreleases.com/oldest-ipad-user-world/17948

***

தொடுதிரைகள் பற்றி மேலும் தகவலறிய

1) ரெஸிஸ்டிவ் வகை தொடுதிரை  http://resistivetouchscreen.org/

2) நால்வகை தொடுதிரைகள் பற்றி http://computer.howstuffworks.com/question716.htm

3) http://en.wikipedia.org/wiki/Touchscreen (கட்டுரையின் உபயோகித்திருக்கும் முதல் படம் உபயதாரர்)

4) டயனோரா டிவி படம் உபயம் — http://ajithprasad.com/yesteryear-brands-india-old-dyanora-tv-murphy-radio-tinopal-vijay-super-scooter-hero-pen-chelpark-ink/

5) Mark Fischetti, Touchscreens, At your Finger Tips (Working Knowledge), Scientific American, Oct 2006.