இயற்கையின் நேனொடெக்னாலஜி

Standard

வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணிணிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் எனும் நுண்ணுடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்த்தியை நேனோ என்று பெயரிடும் அளவிற்கு நேனோ என்றதும் அறிவியலாளர்களுடன் நேனு நேனு என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் நேனோ டெக்னாலஜி என்கிற அறிவியல் துறை இன்று பிரபலம்.

இயற்கையை அறிதலுக்கு அறிவியல்சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ டெக்னாலஜி விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், டெக்னாலஜிகள், இயற்கையில் நம்முலக ஜீவராசிகளிடையே ஏற்கனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது. சிலவற்றை எனக்குப்புரிந்த அறிவியல் எல்லைக்குள், இயற்கையின் நேனொடெக்னாலஜி என்கிற இளகிய பொதுத்தரப்பின் கீழ் வரும் சில கட்டுரைகளில் விளக்கமுற்படுகிறேன்.

இதன் முதல் பாகம் தாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும் தலைப்பில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்துள்ளது. படித்துப்பாருங்கள். இதே இதழில் ராமன் ராஜ குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி எழுதியுள்ள தெனாலிராமன் பூனையும், ச்ரோடிங்கர் பூனையும்!  கட்டுரையையும் படிக்காமல் விட்டுவிடாதீர்கள்.

என் கட்டுரையை மீள்பதிவாய் இங்கு பின்னர் வெளியிடுகிறேன். மற்றபடி, கட்டுரையின் வசனநடையும் கோமாளி உடையும், தீவிரத்தை உள்வாங்க ஏதுவாக்கும் குதூஹல மனநிலைக்கான பாவனைகளே. ஆங்கில nano தமிழில் நேனோவோ நானோவோ, நேனொ என்றே உச்சரிக்கப்போகிறேன். மைக்ரோ என்றால் ஏற்கனவே நுண் என்று பழக்கத்தில் உள்ளது (மைக்ராஸ்கோப் – நுண்னோக்கி). நேனோவை அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறேன். மைக்ரோ, நேனோ, பிகோ, ஃபெம்ட்டோ, அட்டோ போன்ற வார்த்தைகளை, சைக்கிள், பெடல் பிரேக், (குடிக்கும்)காபி என்பதுபோல அப்படியே புழக்கத்திற்கு கொண்டுவந்து உபயோகித்தாலும், விளக்கங்கள் கொடுத்தால் போதுமானது என்ற கருத்தில். இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு, நீனு ”நேனொ”ன்னா நேனு ”நோநோ” என்று படிக்காமல்போய்விடாதீர்கள்.