ஏலியன்ஸ் தேடல், பேய், பிசாசு: அறிவியலா புரட்டா

Standard

ஏலியன்ஸ் – அந்நியர்கள், வேற்றுகிரகவாசிகள், வளி-அறிவு-ஜீவராசிகள் – பற்றி சென்றவருடம் நிறைய எழுதிவந்தோம். மீண்டும் தொடர்வோம். இங்கு ஏலியன்ஸ் டாப்பிக்கில் நம் அனைவருக்கும் எழும் ஆதார கேள்வி ஒன்றை விவாதிப்போம்.

உலகில் சாமான்யர் இதுவரை பார்த்திராத ஏலியன்ஸ், வளி-அறிவு-ஜீவராசிகளை இருப்பதாய் ஏன் நம்பலாம்? எந்தவிதத்திலும் எவ்வகை தேடலுக்கும் இதுவரை தென்படாத இவர்கள் இருப்பதாய் மட்டும் ஏன் நம்பவேண்டும்? அறிவியல் சிந்தைக்கே ஒவ்வாத செயலாய் படுகிறதே. அப்படிப் பார்த்தால் பேய் பிசாசு இருப்பதாய் நம்மில் பலர் நம்புகிறோமே. அதை மூட நம்பிக்கை என்று சாடும் அறிவியல் சிந்தை, ஏலியன்ஸ்களை மட்டும் ஏன் இருப்பதாய் நம்மை நம்பச்சொல்லவேண்டும்?

ஏலியன்ஸ் பற்றிய கேள்விமட்டுமில்லை இது.அறிவியலாளார்கள் பலர் அடிக்கடி சந்திக்கும் கேள்விகளின் ஒருவிதம் இது. அறிவியல் சிந்தைக்கும் அதை புரிந்துகொள்ள முற்படும் சாதா மசாலா ரோஸ்ட் சிந்தைக்கும் நடக்கும் ஆதார சம்பாஷணையின் ஒரு பிரிவு.

சற்று விஷயம் தெரிந்தவர்கள் இவ்வகை கேள்விகளின் சாராம்சத்தை அறிவியலாளர்களிடம் வேறுவகையாக கேட்பார்கள். பேய் பிசாசு இருப்பதை நம்ப மறுக்கிறீர்கள், ஆனால் நியூட்ரினோ, ஹிக்ஸ் போஸான் என்றெல்லாம் கண்ணுக்குத் தெரியாத, இதுவரை யாருமே பார்த்திராத அணுவிலும் சிறிதான துகள்களை இருப்பதாய் நம்பி Large Hadron Collider என்று பெரிய உந்திகள் வைத்து துகள்களை முடுக்கி, மோதவிட்டு தேடிக்கொண்டிருக்கிறீர்களே.

இப்படிக் ஏலியன்ஸ், மற்றும் பேய் பிசாசுகள், மனிதப்புலன்களுக்கு நேரடியாக கைகூடாத இயற்கை பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு சுருக்கமான பதில்: பேய்ஸ் தியரம், Bayes Theorem (Bayes Inference).

அசாத்தியமான உரிமனங்களுக்கு, அவைகளின் நம்பகத்தன்மையை உயர்த்த அசாத்தியமான சாட்சியங்கள் வேண்டும் என்றார் கார்ல் ஸாகன்[1] (இதை கார்ல் ஸாகன் தான் முதன்முதலில் சொன்னாரா என்பது நிச்சயமில்லை. ஆனாலும் முதலில் பரிச்சையமாக்கியவர் என்பதால் இப்போதைக்கு அப்படி எடுத்துக்கொள்வோம்). இதுதான் பேயஸ் தியரத்தின் சாராம்சம்.

உதாரணமாக, நாங்கள் தினம் ஒன்றரை லிட்டர் பாக்கெட் பால் வாங்குவோம். இதை விடியற்காலை, நாங்கள் எழுவதற்கு முன்பே, வாசலில் மூன்று அரை லிட்டர் பாக்கெட்டுகளாக பால்காரர் போட்டிருப்பார். தூக்கக்கலக்கத்துடன் மரவ ட்டையையெல்லாம் மிதித்து (செருப்புகாலுடந்தான்) தடுமாறியபடி பொறுக்கிக்கொள்வேன். தினம் எழுந்து காலையில் வாசலுக்கு வந்தால் மூன்று பால் பாக்கெட் இருக்கும் என்பது எனக்கு பரிச்சயம். ஆச்சர்யம் இல்லை. எனக்கு இது சாதாரண, சாத்தியமான நிகழ்வு.

ஆனால், ஒரு காலை வாசலில் ஐந்து பால் பாக்கெட்டுகள் இருக்கிறது என்போம். நான் எதிர்பாராத, ஆச்சர்யமான நிகழ்வு இது. எப்படி? இதை விளக்க எனக்கு போதிய நம்பத்தகுந்த சாத்தியங்கள் வேண்டும். உதாரணமாக, ஒருவேளை பால்கார பையன் புதுசோ, எங்கள்வீட்டிற்கு எவ்வளவு என்று அளவு தெரியாமல் போட்டுவிட்டானோ? இருக்கலாம். கடையில் பால்காரரை சந்தித்து விசாரிக்கையில்தான் இந்த விளக்கத்தின் உண்மை தெரியும். அதுவரை நிச்சயம் இல்லை. அதனால் இது அசாத்தியமாக நடக்கக்கூடியாதா, உளவியல் ரீதியாக, மனித இயல்பாக, இது நடக்கக்கூடியதா, ஊரில் மற்றவர்களுக்கு இப்படி நடக்கலாமா, போன்றவைகளை வைத்துதான் என்னுடைய இந்த விளக்கத்தின் நம்பகத்தன்மையை உயர்த்தி, ஒப்புக்கொள்ளமுடியும். மறுப்பு தெரிவிக்க நான் கூறும் விளக்கத்தைக்காட்டிலும் வலுவான சாத்தியங்களுடனான ஒரு விளக்கத்தை, காரணத்தை ஐந்து பால் பாக்கெட் இருப்பதற்காக நீர் கூற வேண்டும். அதுவரை, என் விளக்கம் ஓரளவு ஒப்புக்கொள்ளக்கூடியதே.

மறுப்பாக, நீர், ஒரு வேளை பக்கத்து வீட்டிற்கு போடும் பாக்கெட்டுகளையும் சேர்த்து உங்க வீட்டுக்கு போட்டுவிட்டுபோயிருக்கலாம் என்று விளக்கம் கொடுத்தால், அதுவும்  சாத்தியமே. என் விளக்கத்தையும் உங்கள் விளக்கத்தையும் எப்படி சரிபார்த்து ஒன்றின் நம்பகத்தன்மையை உயர்த்துவது?

இதற்கு மேலும் நமக்கு தகவல்கள் வேண்டும். இதை prior probability என்பார்கள். அதாவது, எங்கள் பக்கத்தில் வீடே இல்லை என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் கூறும் விளக்கம் உடனே சரியில்லை என்றாகிவிடும். அதாவது, நீங்கள் கூறும் விளக்கத்திற்கான prior probability மிகக்குறைவு. பூஜ்ஜியம். இல்லாத வீட்டிற்கு பால் ஏன் போடவேண்டும். இதனால் நான் கூறிய விளக்கமான, பால்காரப்பையன் தவறுதலாக போட்டுவிட்டிருப்பான் என்பதன் நம்பகத்தன்மை உயருகிறது. ஆனால் ஊர்ஜிதம் இல்லை.

ஏனெனில் அடுத்த விளக்கமாய் நீர் பால்காரப்பையன் மூன்றுதான் போட்டிருக்கிறன், ஒருவேளை குரங்கு வேறு எங்காவதிருந்து இழுத்துவந்து இரண்டு பாக்கெடுக்களை போட்டிருக்கலாம் என்று புதிய விளக்கம் கூறலாம். இது அசாத்தியமான விளக்கம். ஊரில் மற்ற இடங்களில் விசாரித்தால் வீட்டில் இவ்வாறு நடப்பதாக முன்னுதாரணம் இருக்காது. அதனால் இ ந்த விளக்கம் உடனே பொய் என்று கூறுவதா? முடியாது.

ஏனேனில், எங்கள் வீடு இருப்பது குரங்கு மான் போன்ற விலங்குகள் பெருவாரியாக இருக்கும், சுதந்திரமாக மானிதர்களுடன் வெளியில் உலாவிப்பழகும், இடத்தில்தான். அதனால் குரங்குகள் உணவிற்காக இப்படி எங்கள் வீடுகளில் புகுந்து சூறையாடிவிடுவது நடப்பதே. அதனால் உம்முடைய புதிய விந்தையான விளக்கம் எனக்கு அவ்வளவு விந்தையில்லை.

ஆனாலும், அடுத்த கேள்வியாக மற்றவர் வீட்டிலிருந்து பால் பாக்கெட்டை தன் உணவாக எடுத்துவந்த குரங்கு, என் வீட்டில் மற்ற பாக்கெட்டுகளுடன் ஏன் போடவேண்டும். எங்கள் மூன்று பாக்கெட்டுகளையும் சேர்த்தல்லவா எடுத்துச்சென்றிருக்கவேண்டும்? இந்த கேள்விக்கான விடை நம்மகமாக கிடைக்காத வரை, உம் விளக்கம் மொத்தமாக பொய்யுரையில்லையெனினும், ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருக்காது. அவ்வகையில் நடந்திருப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு என்பதால், இதன் நம்பகத்தன்மையை உயர்த்த அசாத்தியமான சாட்சியங்களை நீர் சொல்ல வேண்டும்.

கையில் ஏற்கனவே குரங்குகள் இதுபோல் வேறு வீட்டில் செய்திருப்பதற்கான விடியோ வைத்திருந்தால், அது அசாத்தியமான சாட்சியம். உடனே நீர் கூறும் புதிய விளக்கம், விந்தையாக இருந்தாலும், பொதுவில் நடக்காத, அசாத்தியமான நிகழ்வாக இருந்தாலும், ஒப்புக்கொள்ளும் நம்பகத்தன்மையை பெறுகிறது (உம் விடியோ ஒரிஜினல் என்று நம்புவோம்).

ஆனாலும் வாசலில் கிடக்கும் ஐந்து பால் பாக்கெட்டுக்கு அதுதான் சரியான விளக்கம் என்று இப்போதும் கூறமுடியாது. ஏனெனில் நான் கூறிய விளக்கம் பொதுவானது. மிகச்சாத்தியமானது. அதை முறியடிக்கும் அளவிற்கு உங்கள் விந்தை விளக்கம் நம்பகத்தன்மையை பெறவில்லை. அதனால், இரண்டு விளக்கமும் விளையாட்டிற்கு உண்டு. யார் கெலித்தார்கள் என்று நான் பால்காரரை பார்த்து விசாரிக்கும்வரை தெளிவாகாது.

போதும். இப்படி சிந்திப்பதின் கணித சாராம்சம்தான் பேயஸ் தியரம். நிகழ்தகவு கணிதமுறையின் ஒரு சித்தாந்தம். ஒரு நிகழ்வின் “முன் நிகழ்தகவு” (prior probability) எவ்வளவு அதிகமோ, அவ்வளவு அதிகம் அந்த நிகழ்வின் மூலம் அடுத்து நடக்கக்கூடிய நிகழ்வின் சாத்தியம் அல்லது அசாத்தியம்.

இப்போது முன்னர் கேட்ட கேள்வியை பரிசீலிப்போம். பேய் பிசாசுகள் மனிதர்கள் இல்லை என்பது திண்ணம். அவைகளை நான் பார்த்தேன்  என்றால், அது அசாத்தியமான நிகழ்வு. அதற்கான நம்பகத்தன்மையை உயர்த்த அசாத்தியமான சாட்சியங்கள் வேண்டும். இதுவரை நமக்கு கிடைக்கக்கூடிய சாட்சியங்கள் அவ்வளவு அசாத்தியமானது அல்ல என்று நிரூபிக்கமுடிகிறது. பேய் பிசாசுகளை பார்த்ததற்கான தருணங்களை வேறு எளிய காரணங்களால் விளக்கமுடியும் என்று தெரிகிறது.

ஒரு உபகதை. பிற்காலத்தில் அமேரிக்க ஜனாதிபதியான தாமஸ் ஜெஃப்ஃபெர்ஸன் ஒருமுறை சொன்னது, எரிகற்கள் இருக்கிறது என்று நம்புவதைவிட, இரண்டு பேராசிரியர்கள் பொய் சொல்லியிருக்கலாம் என்று நம்புவது எனக்கு சரி. வானிலிருந்து எரிந்துகொண்டே கற்கள் வந்து விழுந்தன என்று இரண்டு பேராசிரியர்கள் தாங்கள் நேரில் பார்த்த சாட்சியாக அமேரிக்காவில் நாளிதழில் பேட்டியளித்தனராம். இதை கேள்விப்பட்டு ஜெஃப்ஃபெர்ஸன் கொடுத்த பதிலடி அது.

பதினெட்டாம் நூற்றாண்டில் எரிகற்களைப்பற்றி மனிதகுலம் விரிவாக அறிந்திருக்கவில்லை. அப்படி ஒரு நிகழ்வின் சாத்தியம் கிடையாது என்றே நினைக்கக்கூடும். அதைக்காட்டிலும், இரண்டு பேர்வழிகள் பதினைந்து நிமிடப் புகழுக்காக பொய் சொல்லியிருக்கலாம் என்ற சாத்தியமே அதிகம். ஆனாலும், பேராசிரியர்கள் கூறியது நிஜம் என்று பிறகு கண்டோம்.

இன்று எரிகற்கள் விழுவதை பார்த்து நம் குழந்தைகள் நம்மிடம் சொன்னாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவர்களை நம்புவோம். இதுவரை நாம் அறிவியல் மூலம் எரிகற்களைபற்றி அறிந்துகொண்ட தகவல்கள், இந்த நிகழ்வு நடக்கலாம் என்பதற்கான prior probability ஐ அதிகமாகிவிட்டது.

ஆனால், இன்றும் பேய் பிசாசுகள் அசாத்தியமான நிகழ்வே.இதுவரை அறிந்துகொண்டுள்ள அறிவியல் கட்டுமானத்திற்குள் வருவதற்கான முன் நிகழ்தகவு மிகவும் கம்மியாகவே இருக்கிறது.

அணுக்கரு துகள்கள், நியூட்ரினோக்கள், ஹிக்ஸ் போஸான்கள் என்று இயற்பியலாளர்கள் தேடும் வஸ்துகளுக்கும், பேய் பிசாசுகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதுதான். குருட்டாம்போக்கில் கண்ணுக்குத்தெரியாத துகள்களை இயற்பியலாளர்கள் தேடிக்கொண்டிருக்கவில்லை. இவ்வகை துகள்கள் இருப்பதற்கான ஒரு இயற்பியல் தியரி, கட்டுமானம் ஏற்கனவே இருக்கிறது. சார்ந்த பல துகள்களை ஏற்கனவே அறிவியல் விதிகளையும் அவர்றின் நீட்சிகளையும் வைத்து கண்டுள்ளனர். உதாரணமாக பாஸிட்ரான் என்பது எலக்ட்ரானுக்கு எதிர் குணங்கள் கொண்ட அணுக்கரு துகள். இது இயற்கையில் உண்டு என்பதாக முதலில் பால் டிராக் என்பவரின் தியரி – கூற்று – அனுமானித்தது. இந்த தியரிய்யின் நம்பகத்தன்மையையினால் இந்தத்துகளை அணுக்கருதுகள்முடுக்கிகளின் பரிசோதனைகளில் தேடத்துவங்கினார்கள். கண்டார்கள். பால் டிராக் நோபல் வென்றார்.

அணுக்கரு துகள்கள் அல்லது இவ்வகை புதிய துகள்கள் நமக்கு இதுவரை தெரிந்த இயற்பியலை புரிதலுக்குட்பட்டே இருக்கிறது. இவை இருக்கலாம் என்பதற்கான சாத்தியங்கள், ஏற்கனவே குரங்கு பால் பாக்கெட் போட்டிருக்கலாம் என்று கூறினோமே அதுபோல, சற்று நடைமுறைக்கு விந்தையான விளக்கங்களை வைத்து அமைந்திருந்தாலும், ஒரு கட்டுக்கோப்பான அறிவியல் சிந்தனைக்குள்ளேயே வருகிறது. கருந்துளைகள், நூல் சித்தாந்தம், குவாண்டம் கணினி, நேனோபுகள், மாற்று உயிர் என்று எவ்வளவுதான் விந்தையான விஷயங்களாக இருந்தாலும், இவை அறிவியலின் விதிகளை சார்ந்தே தோன்றிய சிந்தனைகள்.

ஆனால், வேறு உதாரணமாக, டெலிபதி உண்டா என்றால், உடனே இருப்பதாய் ஒப்புக்கொள்ளமுடியாது. அப்ப பொய்யா என்றால், மொத்தமாக இல்லை. ஆனால், உண்மை என்பதற்கு அசாத்தியமான சாட்சியங்கள் வேண்டும்.

ரூப்பர்ட் ஷெல்டிரேக் என்பவர் டெலிபதியை விளக்க முற்பட்டு ஒரு அறிவியல் சித்தாந்தத்தை, பொய்யாகமுடிந்த அனுமானங்களை வைத்து அமைக்கமுனைந்துள்ளார்[2]. ஆனால் இந்த சித்தாந்தத்தை இன்னமும் கணித கட்டமைப்பிற்குள் கொண்டுவர  இயலவில்லை. இயற்பியலின் விதிகளை வைத்து, டெலிபதியை விளக்க கணித மாதிரி (மாடல்) ஒன்றை நாளை செய்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாதிரியை வைத்து டெலிபதி யார் யாருக்கிடையே நடக்கும், முன்னரே அறிமுகமானவரிடையே மட்டும்தானா (ஏன்), இல்லை ரயில்ஸ்நேக உறவுகூட இல்லாத அன்று அறிமுகமான இருவரிடையே நடக்குமா, டெலிபதிக்கு மொழி ஒரு தடையா, அப்ப தூரம் தடையா, இப்படி பல கேள்விகளுக்கு நமக்கு இதுவரை தெரிந்துள்ள அறிவிற்குட்பட்டு அல்லது அதன் நீட்சியாய், விளக்கங்களை கொடுக்கமுடிகிறது என்போம். அதன் பிறகு விளங்கமுடியா கவிதையிலிருந்து டெலிபதி ஒப்புக்கொள்ளக்கூடிய, புரிகிற கிவிதையான, சாதாரண விஷயமாகிவிடும்.

இதெல்லாம் சரி, ஏலியன்ஸ் விஷயத்தில் எப்படி? பேயஸ் தியரத்தை ஏலியன்ஸ் இருக்கிறார்களா, நம்பலாம என்ற மேட்டருக்கு பிரயோகித்தால், உடனே கேட்கவேண்டிய ஆதாரக் கேள்வி: ஒரு வளி-அறிவு-ஜீவன் பிரபஞ்சத்தில் எங்கோ இருக்கிறது என்பதற்கான முன்-நிகழ்தகவு (prior probability) என்ன?

நேர்மையான பதில்: ஒருவருக்கும் தெரியாது.

ஆனால் முன்னர் குரங்கு பாக்கெட் பால் கொண்டு போடும் உதாரணத்தில் விளக்கியதுபோல, அவை அப்படி செய்வதை விடியோ எடுக்கத்தவறி ஆனால் நேரில் பார்த்திருக்கிறீகள், மற்றவர் நம்பவில்லை என்றால், உங்கள் நிலை என்னவொ, அதுபோலத்தான் ஏலியன்ஸ் பற்றி நீங்கள் நம்புவதும் நம்பாததும்.

ஏனெனில், பிரபஞ்சத்தில் அறிவு-ஜீவராசிகள் இருக்கலாமா என்றால், நிச்சயம் இருக்கலாம், நாம் இருக்கிறோமே. என்பீர்கள். அதனால் நிச்சயம் ஏலியன்ஸ் இருக்கலாம். அதற்கான முந்நிகழ்தகவு கிட்டத்தட்ட ஒன்று என்பீர்கள். ஆனால், உங்களுக்கே தெரியும், கணிதத்தில் ஒரு புள்ளி வழியாக மட்டும் எந்த வகை  வரைகோடுவேண்டுமானாலும் போடலாம். நாம் இருக்கிறோமே என்கிற புள்ளிக்கு, அது சும்மா பிரபஞ்சத்தின் தற்செயல் அதிர்ஷ்ட நிகழ்வு, இல்லை கடவுள் செயல், இல்லை பிரபஞ்சத்தில் நீ மட்டும்தான் அறிவுள்ள இனம், இப்படி எந்த கோடு வேண்டுமானாலும் வரையலாம். சம நிகழ்தகவுகொண்ட சாத்திய விளக்கங்களாய். சுருக்கமாக, ஒண்ணு இங்கருக்கு, இன்னொன்னு எங்கடா, இன்னொன்னு தாங்க இது, என்கிற கௌண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடியாகிவிடும்.

அப்ப, ஏலியன்ஸ் இல்லையா என்றால், அதற்கும் பதில் நாம் இருப்பதை வைத்துமட்டும் கூற முடியாது. இதனால், ஏலியன்ஸ் தேடல் விரயம் என்று உறுதியாக சொல்லமுடியாது. இல்லை என்பதற்கான சாட்சியங்களோ, அறிவியல் கட்டுமானங்களுட்பட்ட நிரூபணங்களோ நம்மிடம் இல்லையே.

பேயஸ் தியரம் தரும் பகுத்தறிவு சிந்தைபடி ஏலியன்ஸ் புரட்டல்ல. பேய் பிசாசுகள் போல அறிவியல் கட்டுமானங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. ஏலியன்ஸ் ஒன்று சுத்தமாக கிடையாது. இல்லை பிரபஞ்சத்தில் எங்கும் விரவி, அநேகம் இருக்கின்றனர். விரைவில் சந்திக்கப்போகிறோம். இந்த இரண்டு நிலைப்பாட்டில் ஒன்றைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டிவரும். ஏன் என்று வரும் பகுதிகளில் விளக்கப்போகிறோம்.

இதில் நிச்சயம் எது என்றால், ஏலியன்ஸ் தேடலுக்கான வழிமுறைகள் அனைத்தும் அறிவியலுக்கு ஒப்புமையானதே. லேட்டஸ்ட் தொழில்நுட்ப உதவியுடன், தேடல்களை அமைத்துள்ளோம். ரேடியோ தொலைநோக்கி போன்ற சிலவற்றை விளக்கியிருக்கிறோம். மேலும் சிலவற்றை வரும் கட்டுரைகளில் சந்திப்போம்.

உளன் எனில் உலன் உளன் அலன் எனில் அலன் என்று நம்மாழ்வார் கடவுளுக்கு சொன்னது அப்படியே ஏலியன்ஸிற்கு பொருந்துகிறது.


[1] Extraordinary claims demand extraordinary evidence, Carl Sagan, Cosmos, pp. 339. (Random House Pub, NY, 2002)

[2] The sense of being stared at: And other aspects of the extended mind, Rupert Sheldrake, Crown, NY, 2003.