திசை கண்டேன் டக்ளஸ் ஆடம்ஸ் கண்டேன்

Standard

சற்று தீவிர சண்டமாருத வாத்தியார் பக்தர்களோ இருதயம் பலஹீனமானவர்களோ இதற்குமேல் இதை படிக்கவேண்டாம். வாத்தியார் என்றால் சுஜாதாவா என்று டவுட் கேட்பவர்கள் நிச்சயம் படிக்கவேண்டாம். மற்றபடி கேளிக்கை இலக்கியங்களைப் பற்றி தமிழாங்கில மொழிச்சிதைவுகளினால்  அனுபவக்கருத்துப்பரிமாறமுனையும் ஜாலி கட்டுரையே. பொதுஜன வாசிப்பிற்கு உகந்தது.

சில மாதங்களுக்கு முன் பதிப்பக நண்பர் வாத்தியாரின் திசை கண்டேன் வான் கண்டேன் (இனி தி.க.வா.க.) விஞ்ஞானபுனைவை தங்கள் பதிப்பகம் மறுபதிப்பித்துள்ளதாகவும், அதில் வரும் ரோபோ (கதையின் 121 விண்வெளிக்கப்பல் உலகில் பாதுகாப்பாக இயங்க, வேண்டிய மனித உருவெடுத்துவிடும்) செய்யும் அட்டகாசங்களைத்தான் அரசியல்சரியாக எந்திரப்படத்தில் கொடுத்துள்ளார்கள்; ”வாத்தியார் வாத்தியார்தான்” என்று என்னுடன் ரசித்துக்கொண்டிருந்தார்.

என்னிடம் இருக்கும் தி.க.வா.க. திறந்தாலே 1993 வருட தூசியில் தும்மவைக்கும் ஒரிஜினல் விசா பதிப்பித்தது . ஆமாம் ஜாலி கதைதான். வாத்தியாரின் நடையும் கற்பனையும் அஸுஷுவல் பிரமாதம். ஆனால் நல்ல விஞ்ஞானப்புனைவு என்று சொல்லமாட்டேன். அதில் வரும் பல ஐடியாக்கள் சாதா அறிவியல்படியே ஓட்டை. அத்தோட முக்கியமா அக்கதையில் வரும் மெயின் ஹீரோ, கதை களம் போன்றவை ஆங்கில கதையின் மெல்லிய தழுவல் என்றதும், பதிப்பக நண்பர், டேய், வழக்கம்போல கலாய்க்றயா, நெஜமா?

நெஜம்தான், ஆங்கில மூலம் டக்ளஸ் ஆடம்ஸ் எழுதிய பிரசித்திபெற்ற ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைடு டு தி காலக்ஸி . சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஹாஸ்யம் என்ற கலவையில் ”ய ட்ரைலஜி  இன் ஃபைவ் பார்ட்ஸ்” என்று குறிப்பிட்டு ஐந்து பாகத்தில் முதலில் வந்த ஸைஃபை-ஹியூமர்-மெகா பெஸ்ட்ஸெல்லர்  நாவல் (பிறகு டெர்ரி பிராட்ச்செட் போன்றோர் இந்த ஜானரில் வந்தனர்). 1977இல் பிபிசி ரேடியோ தொடராக  தொடங்கி, 1979இல் இருந்து தனித் தனி புத்தகங்களாக ஐந்து பாகங்களில் டக்ளஸ் ஆடம்ஸ் எழுதியதில் முதல் பாகத்தின் மெல்லிய தழுவலே நம் தி.க.வா.க. அட்லீஸ்ட் முக்கியமான கதைக்கரு இடங்களில்.

தலையைத்திறந்து அவ்வளவுதான் ஞாபகம் வந்ததால் நிறுத்திக்கொண்டேன்.

சட்டை மேல்பட்டனின்றி எதிரிருக்கையிலிருப்பவர் ஆனா பெண்ணா எனும் அவஸ்தையொத்த எண்ணங்களை பிரதிபலிக்கும் சிரிப்பில் பதிப்பக நண்பர் வேறு டாப்பிக்கிற்கு போய்விட்டார்.

பிறகு வாழ்வு குறுக்கிட, மாதங்களில் மறந்துவிட்டேன் தி.க.வா.க.வை.

நேற்று ஊரில் வாத்தியாரின் தீவிர பக்தரான வேறு நண்பருடன், வாத்தியாரின் எழுத்தின் கல்யாணகுணங்களை விவரித்து விவாதித்துக்கொண்டே உலவிக்கொண்டிருந்தேன்.  சாம்பிள்: மாலை வெண்ணை போல என்று ரோட்டை எந்த கதையில் சொல்வார்? மேற்கே ஒரு குற்றத்தில்; மவனே, நம்ம ஊர்ல அப்டி ஒரு ரோடு இருக்கா, இருந்தாலும் அதுமேல மாட்டுவண்டிபோய் சாணியாய்டும்; அத்த விடு ஆனாலும் கேயாஸ் தியரி பத்தி மேம்போக்கா சொதப்பிட்டார்… அது சரி என்ன அவசரத்துல எழுதினாரோ; இப்படி…

பேசியபடி உலாவி, வாத்தியாரின் ஒரிஜினல் வீடுவரை சென்று  வாசலில் எங்களுக்கு மட்டும் தெரியும் தீபாராதனை தட்டை தொட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு மனைவி கடையில் வாங்கிக்கொண்டு வரச்சொன்ன பொருட்களை மறந்து, மீண்டும் ஊரெல்லாம் ரோட்டை தேய்த்து வீடு சேர்ந்து,  சே, இன்னும் கொஞ்ச வருஷம் இருந்திருக்கலாம்டா என்று காபியின் இடையில் பெருமூச்சிவிட்டு, தமன்னாவின் இடுப்பு வளைவுகளை கடந்து ஐபில் மாட்ச் பார்க்க மனதைத்திருப்புகையில்…

மீண்டும் திசை கண்டேன் வான் கண்டேன்.

எதிர்சையாக நண்பர் தமன்னாவிடமிருந்து கதையின் செங்கமலத்திற்கு தாவ (எப்படி என்ற கணக்‌ஷன்கள் உங்கள் கற்பனைக்கு), பிடித்தது வாதம். மீண்டும் நான் டக்ளஸ் ஆடம்ஸின் ஹிட்ச்ஹைக்கர்ஸ் பற்றி கூற, நிரூபி என்றார் நண்பர். அவர் வீட்டிலிருந்து கிளம்பி கணகார்யமாய் எங்க ஊட்டுக்கு வந்து மாடி ஏறி, பூட்டை கழட்டி, புத்தக அலமாரியெல்லாம் தும்மலுடன் துழாவி, சே…ஊரில் டக்லஸ் ஆடம்ஸ் புத்தகம் காப்பி இல்லை. ஒரு செராக்ஸ் காப்பியையும் (சிறுவயதில் எம்மிடம் சில்லறை கம்மி) சேர்த்து மூன்று காப்பிகள் இருக்கிறது என்னிடம்; மூன்றும் சென்னையில்.

ஊர் நண்பர், அதானே பார்த்தேன், வாத்தியாராவது உங்கிட்ட மாட்றதாவது என்று பைக் ஏறி தன் வீட்டினார்.

சென்னை திரும்பியதும் இந்த இரு நண்பர்களுக்காவது ருசுவாக்கிவிடவேண்டும் என்று அலமாரியை அலங்கோலித்து ஆங்கே கண்டேன் என் திசை கண்டேன் வான் கண்டேன் காப்பியை. கூடவே டக்ளஸ் ஆடம்ஸ் புத்தகமும் தாள்களில் பழுப்பு முகவடுக்களுடன்.

ஆகையால், இப்போது பிரித்தெழுதும் படலம்.

(வாத்தியாரின் தீவிர பக்தர்களுக்கு லாஸ்ட் வார்னிங். இதற்குமேலாவது படிக்காதீர்கள்.)

***

முதலில் புதியவாசகர்களுக்கு இரண்டு கதையின் சுருக்கங்கள்…

டக்ளஸ் ஆடம்ஸ் 1977 வாக்கில் எழுதிய ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைடு டு தி காலக்ஸி அசல். இதன் முதல் பாக கதைச்சுருக்கம் மட்டும்: உலகம் அழியப்போகிறது; பீட்டல்ஜியூஸிற்கு அருகிலிருக்கும் கிரகத்திலிருப்பவர்கள் உருவாக்கும் இண்டர்காலக்ஸி ஹைப்பர்ஸ்பேஸ் ராஜபாட்டைக்கு குறுக்கே வருவதால்.  வேற்றுகிரகவாசியான ஃபோர்ட் ப்ரிஃபெக்ட் என்பவன் பூமியில் பலகாலம் தங்கி தன் பிரயாண வழிகாட்டி புத்தகத்திற்கு (அதுதான் கதையின் ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைடு டு தி காலக்ஸி) தகவல் சேகரித்துவருகிறான். பூமி அழியப்போவது தெரிந்ததும் (தன் ஸென்ஸ்சோமாடிக் கருவியில் கண்டுகொள்கிறான்) அதிலிருந்து இங்கிலாந்தைச்சேர்ந்த ”எவனோ ஒருவன்” ஆர்தர் டெண்ட் (கதையின் சோப்ளாங்கி ஹீரோ) என்பவனுடன் அழிக்கவரும் விண்வெளிக்கப்பலைப்பிடித்துக்கொண்டு தப்பிக்கிறான். மீண்டும் அவர்களிடமிருந்து தப்பித்து, இருவரும் ஹார்ட் ஆஃப் கோல்ட் எனும் அண்டத்திலேயே அதிநவீன விண்வெளிக்கப்பலில் ஸப்பாட் பீபிள்ப்ராக்ஸ் (காலக்ஸிகளுக்கெல்லாம் ஊதாரி தலைவன்) மற்றும் அவன் நண்பி ட்ரில்லியன் (மனித தாய்குலம்), சதா நொந்துகொள்ளும் மார்வின் என்கிற ரோபோ போன்றொருடன் அண்டத்தில் பல இடங்களுக்கு செல்கிறார்கள், தலைகால் புரியாமல். ஏன் என்று புரிகையில்… போதும், படித்துப்பாருங்கள்.

வாத்தியார் 1982 வாக்கில் எழுதிய திசை கண்டேன் வான் கண்டேன் கதையில் வேற்றுகிரகவாசி பாரி, அதே காரணத்திற்காக, ஹைப்பீரியான்கதிர்களால் உலகை அழிக்க அதில்  லொக்கேட்டர் பொருத்த வருகிறான். கூடவே, ரிப்போர்ட் கொடுப்பதற்காக உலகைப்பற்றி தகவல் சேகரிக்கவும். உலகில் பாரியின் சாகஸங்கள், அவன் வரும் 121 என்கிற விண்வெளிக்கப்பல் உருமாறி தமிழ்நாட்டு மாந்தர்களான மணி, சரவணன், செங்கமலம் ஆகியோருடன் அடிக்கும் கூத்துகள் என கதை போகிறது. கடைசியில் ஜூஜூவுக்காக அலையும் 121 பாரியை எதிர்த்து நின்று தோற்க, பாரி ஐ.நா., அமேரிக்கா, ஆயுதங்கள் அனைத்திற்கும் பெப்பே காட்டி லொக்கேட்டரை பொருத்திவிட்டு வெளியேற… போதும், படித்துப்பாருங்கள்.

தி.க.வா.க. ஒரு சில கதாபாத்திரங்கள், காரணங்கள், ஐடியாக்கள் என மெல்லிய தழுவலாய் ஹிட்ச்ஹைக்கர்ஸின் தாக்கத்தில் எழுதப்பட்டது. மற்றபடி அநேக சொந்த சரக்கும் உண்டுன். கதாபாத்திரங்களின் இயல்பும் எழுத்து நடையும், ஹாஸ்யமும், வாத்தியாரின் கற்பனையின் கலக்கலான அசல்களே.

ஹிட்ச்ஹைக்கர்ஸில் பாரி என்பவனுக்கு ஈக்குவலண்ட் பாத்திரம் ஃபோர்ட் ப்ரிஃபெக்ட். மாடல் டி ஃபோர்ட் கப்பெனி கார் ஃபோர்ட் பெர்ஃபெக்ட் என்பதை கிண்டல் செய்து காதில் சரியாக வாங்கிக்கொள்ளாமல் அதையே திரித்து ஃபோர்ட் ப்ரிஃபெக்ட் என்று தன் பெயராய் வைத்துக்கொள்கிறான். இப்படி வரிக்கு வரி கலாய்ச்சல்கள், பிரமிப்புகள், அதிரடி எண்ணப்புரட்டல்கள், திருப்பங்கள்,  ஹாஸ்ய தத்துவங்கள்.

ஸ்கூல் காலேஜ் ஆபிஸிற்கு (பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு) லீவு போட்டுவிட்டு (விடுப்பெடுத்து) மற்றவேலைகளை ஒதுக்கி (பிற பணிகளை புறந்தள்ளிவிட்டு), முதல் காரியமாய் (முதற்கண்) டக்லஸ் ஆடம்ஸை (டக்லசு ஆடம்சை) படித்துப்பாருங்கள் (ஓதுங்கள்).

(தமிழ்பேப்பரின் கவிதை-கிவிதை போல, மேல்பத்தி என் உரைநடை-நரைநடை  (அடைப்பினுள் இருப்பது) சாம்பிள். இருதரப்பிலிருந்தும் சண்டைக்கு வருமுன், இரண்டையும் என்னால் எழுதமுடியுமா என்று செக் செய்துகொண்டேன், சே, சரிபார்த்துக்கொண்டேன், அவ்வளவே. கட்டுரையை தொடர்வோம்.)

***

இரண்டு கதைகளுக்கும் இடையில் சில ஐடியா தாக்கங்களை அலசுவோம். முதலில் சில நேரடி ஒப்பீடுகள்…

தெரியும்! பால்வீதி காலக்ஸியின் மேற்கு மூலையில் கோடியில் இருக்கும் ஒரு சோதா; சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு சோதா ரகம் பூமி. அதை இடிக்க வேண்டியது – நம் சாம்ராஜ்யத்தின் ராஜபாட்டையின் குறுக்கே வருவதால் அதற்கான லொக்கேட்டரைப் பொருத்திவிட்டு ஒதுங்கி விட்டால், இங்கிருந்து ஹைப்பரையான் கதிர்களால் அழித்துவிடலாம்.

தி.க.வா.க. பக்கம் 9

Far out in the uncharted backwaters of the unfashionable end of the Western Spiral arm of the Galaxy lies a small unregarded yellow sun.

Hitchhiker’s Guide to the Galaxy by Douglas Adams, page 5, para 1

என் பெயர் பாரி. நான் நோரா கிரகத்து பிரஜை. தற்காலிகமாக பூமிக்கு வந்திருக்கிறேன். நாங்கள் இந்த பூமியை இடிக்கப் போகிறோம். இண்டர் காலக்டிக் பாட்டைக்காக. அதற்கு உங்களுக்கு ஐ.கா. விதி 324ஆ பிரிவு 9இன் படி நோட்டீஸ் கொடுக்க வேண்டும். உங்களுக்கு அதில் ஏதாவது ஆட்சேபணை இருக்குமெனில் இந்தக் கடிதம் கிடைத்த எட்டாவது பூமி நாளுக்குள் ஐக்கிய காலக்ஸி 26 ஆண்ட்ரமீடா கிளைத்தலைமையகத்துக்கு செய்தி அனுப்பி வைத்து ஸ்டே வாங்கிக்கொள்ளலாம். எட்டு நாட்களுக்குள் தகவல் எதுவும் கிடைக்கவில்லையெனில் நாங்கள் சம்மதம் பெற்றுவிட்டோம் என்று அர்த்தம். இப்படிக்கு பாரி.

தி.க.வா.க. பக்கம் 66

நான்தான் பாரி. நோரா கிரகத்திலிருந்து பூமிக்கு அனுப்பபட்டவன் நான். ஒரு மேம்பாலம் கட்டுவதற்காக பூமி என்னும் உங்கள் கிரகத்தை அழிப்பதற்காக ஐ.நா. விதிகளின்படி உங்கள் உலகத் தலைவருக்குகடிதம் எழுதிவிட்டு வந்தேன். குறிப்பிட்ட நேரக் கெடுவில் உங்கள் ஆள்களிடமிருந்து அதற்கான ஆட்சேபணைகள் ஏதும் வரவில்லை. அதனால் பூமியை அழிப்பதற்கு ஏற்பாடுகள் செய்துவிட்டோம்…

தி.க.வா.க. பக்கம் 152

“People of Earth, your attention please,”… “This is Prostetnic Vogon Jeltz of the Galactic Hyperspace Planning Council,” the voice continued. “As you will no doubt be aware, the plans for development of the outlying regions of the Galaxy require the building of a hyperspatial express route through your star system, and regrettably your planet is one of those scheduled for demolition. The process will take slightly less than two of your Earth minutes. Thank you”.

“There’s no point in acting all surprised about it. All the planning charts and demolition orders have been on display in your local planning department in Alpha Centauri for fifty of your Earth years, so you’ve had plenty of time to lodge any formal complaint and it’s far too late to start making a fuss about it now.”

ஹிட்ஹைக்கர்ஸ், புத்தகம் 1, அத்தியாயம் 3, பக்கம் 25, 26.

***

மேலும் சில தாக்கங்கள்…

”வரப்ப எனக்கு அதுமட்டும் ஒண்ணு எடுத்துட்டு வாங்க.”

“என்ன, என்ன?”

“வெள்ளையா ஒரு எலி. அதுக்கு கவிதை எழுத சொல்லிக் கொடுக்கணும்!”

தி.க.வா.க. பக்கம் 8

ஹிட்ச்ஹைக்கர்ஸிலும் எலி வரும். மனிதர்களைவிட புத்திசாலிகள். லாப் ராட், கினீ பிக் என்பார்களே, பரிசோதனை எலிகள், அவை வரும். ஆடம்ஸிற்கு நம்மூர் விஞ்ஞானிகள் இவ்வகையில் எலிகளை பரிசோதனைக்குட்படுத்துவதில் ஒருவித எக்காளம் இருந்தது. நீ ஏதோ எலியை சோதனைச்சாலையில் பரிசோதிப்பதாய் நினைத்துக்கொண்டு பிடித்துவைக்க, ஒருவேளை அவை நம்மைவிட புத்திசாலிகளாக, நம்மை சோதிப்பதற்காக அவ்வகையில் கட்டுண்டு வேடிக்கைகாட்டிக்கொண்டிருந்தால்… இப்படி போகிறது அவரது கற்பனை. முதல் சில அத்தியாயங்களில் பூமி அழியுமுன் அவைகளும் விண்வெளிக்கப்பல்லில் தப்பிவிடுகிறது. பின் கவிதை, பாட்டு எனப்போய் வேறு கிரகத்தை ஆளுகிறது. பூமியை சோதனைச்சாலையாக பாவிக்கிறதாம்.

மேலும் சில ஐடியாக்களின் ஒப்பீடுகள்…

தி.க.வா.க.னில் 121 கவிதை பாடும். இதுவும் ஹார்ட் ஆஃப் கோல்ட் (ஹிட்ச்ஹைக்கர்ஸின் விண்வெளிக்கப்பல்) செய்வதே. இது சம்பந்தமாக பாரி எரிச்சல்கொள்வது, பாடாமல் வண்டியோட்டச்சொல்வது போன்ற சம்பாஷணைகள் ஹிட்ச்ஹைக்கர்ஸிலும் இடம்பெற்றுள்ளது.

மணி, செங்கமலம், அவளிடம் உடலுறவுக்காக (ஜுஜுவுக்காக) அலையும் மனித உருவ 121 போன்ற ஜல்ஸா உபகதையெல்லாம் வாத்தியாருடைய ஒரிஜினல். ஹிட்ச்ஹைக்கர்ஸ்  கதைகளில் கிட்டத்தட்ட ஐந்திலும் செக்ஸெ கிடையாது. பெண்கள் உண்டு. ஆண்களை விட புத்திசாலிகள். விந்தை பிராணிகளும் உண்டு. ஆனாலும் நோ கெட்டகார்யம்.

போனால் போகட்டும் என்று டக்லஸ் ஆடம்ஸ் (கதைக்களம் தந்த ஆயாசத்திலும்) மோஸ்ட்லி ஹார்ம்லெஸ் என்ற ஹிட்ச்ஹைக்கர்ஸின் ஐந்தாம் பாகத்தில் ஆர்தர் டெண்ட் உறவுகொள்வதாய்  எழுதியிருப்பார். அதுவும், ஏய்யா நாலு பாகமா இவ்ளோ விஷயம் சொல்லிட்ட, டாமிட், இவங்க கெட்டகார்யம் பன்னுவாங்களா போன்ற உலகசாதாரண மேட்டர சொல்லமாட்டேங்கறயே என்று அங்கலாய்த்துவிட்டு சொல்லியிருப்பார்.

அதேபோல, பாரி, 121, தாங்கள் பூமியில் உயிர்வாழ ரிப்ரெஷ் என்று ஆர்கான் வாயுவை உறிஞ்சுவது, மார்ஃப் செய்து உருமாறுவது, உபகுப்தர் பாத்திரம் என பல கற்பனைகள் வாத்தியாருடையதே.

***

சில சாதா அறிவியல் ஓட்டைகள் பற்றி…

அறிவியல் புனைகதைகளில் அத்துனை அறிவியலும் அதன் நீட்சிகளும் சாத்தியங்களும் சரியாக இருக்கவேண்டியதில்லை. கற்பனை இல்லையேல் கதையில்லை. ஆனால் அறிவியல் கதை என்று சொல்கையில் சில அடிப்படை தேவைகள் இருக்கிறது. நமக்குத் தெரிந்த பரிச்சயமான அறிவியலை தவறாக சொல்லக்கூடாது. சொன்னால், காரணமும் வேண்டும். ஏதாவது சால்ஜாப்பில்.

அதேசமயம் அறிவியல் கதைகளில், போகிறபோக்கில் இயல்பாய் நடக்கும் பல விஷயங்களில் அதன் அறிவியலை அதன் மாற்றை, விந்தையை காட்டி பிரமிக்கவைக்கமுடியும். இப்படி கைதேர்ந்த பலரில் ஆர்தர் கிளெர்க் முக்கியமானவர்.  உதாரணமாக, இவரின் பிரசித்திபெற்ற ”ராந்திவு வித் ராமா” (ராமருடன் சந்திப்பு) என்ற நாவலைப் படித்துபாருங்கள். உலகலவில் நமக்கு நடக்கும் பல நிகழ்வுகளை, சில கிலோமீட்டர் நீள அகலமுள்ள ஒரு சிலிண்டர் உலகத்தில் நடத்தினால் எப்படி இருக்கும் என்பதின் அறிவியல் துல்லியத்தை போகிறபோக்கில் விவரித்திருப்பார். கடல், அதன் அலைகள், சீதோஷணம் போன்ற இயற்கை செயல்பாடுகள் சிலிண்டரின் சுழற்சியினால் உருவாவது எப்படி என்பதுவரை. ஆனால் முக்கியமாக, கதை இந்த அறிவியலைப்பற்றியல்ல. இந்த சிலிண்டர் எங்கிருந்து ஏன் சூரியமண்டலத்திற்கு வந்தது, எங்கு போகிறது என்பது பற்றியது (இதை தனிக்கட்டுரையில் எழுதுவோம்). மெயின் டிராக் இதைப்பற்றி ஓடிக்கொண்டிருக்கையிலும், பக்கத்திற்கு பக்கம் சாதா அறிவியல் நிகழ்வுகளின் விந்தையை விளக்கிக்கொண்டே செல்வார்.

அறிவியல் புனைக்கதை படிக்கிறோம் என்ற நங்கூரம்  பொதுவாக இவ்வகை அறிவியல் பிடிப்புகளில்தான் இருக்கிறது. ஏனெனில், கதையாசிரியர் பரிசீலிக்கும், அறிமுகப்படுத்தும் புதிய அறிவியல் கற்பனை நீட்சிகள் சரியாக வராமல் போகலாம். ஒருவேளை சரியாகிவிட்டால் என்பதை படிப்பவர் மனதில் நிலைநிறுத்த, ”மேக் பிலிவ்” உலகை சிருஷ்டிக்க, கூடவே அசல் அறிவியல் எதுவரை சரி என்பதையும் ஆசிரியர் பகிர்ந்துகொண்டே வரவேண்டும்.

தி.க.வா.க. இவ்வகையில் ஹார்ட் ஸைஃபை, தேர்ந்த அறிவியல் புனைக்கதை, இல்லை என்பேன். ஸாஃப்ட் ஸைஃபை வகையில், ஒரு ஜாலி கதை. டக்ளஸ் ஆடம்ஸ் கதையைப்போலவே.

தி.க.வா.க. பக்கம் 13: 121 – பாரி உபயோகிக்கும் விண்வெளிக்கப்பல்  – புறப்பட்டு மறைந்தது… இண்டர் காலக்ஸி இருட்டில் கறுப்பு வெல்வெட்டில் பூமி நோக்கி சீரான ஒலியுடன் அது செல்ல.

வெற்றுவெளியில் ஒலி கேட்காது. ஒலி எனும் அழுத்த அலைகள் தோன்றுவதற்கே காற்றோ, வாயுவோ, நீரோ வேண்டும். இல்லையேல், உற்பத்தியாகும் ஆற்றல் உஷ்ணமாகவோ (மின்காந்தகதிரியக்கமாக) வேறு அதிர்வுகளாகவோ வெளியேறும்.

இதே ஒலிக்கோளாறை மேலும் சில இடங்களில் செய்துள்ளார். இதைப்போல அடைத்திருக்கவேண்டிய சில சாதா அறிவியல் ஓட்டைகள் கதையில் ஆங்காங்கே இருக்கிறது.

அடுத்து டாக்கியான் இன்ஜின். டாக்கியான் என்பது ஒளியைவிட வேகமாக செல்லும், இயற்கையில் இல்லாத, கணித பொருள். சமன்பாட்டின் தீர்வுக்காக தேவைப்படும் ஒரு டெர்ம். கையளவு டாக்கியான்களை குடுவையில் எடுத்துக்கொள்வது போன்ற பரிசோதனை விஷயங்களுக்கு இவற்றை உட்படுத்தமுடியாது. டாக்கியான் எக்ஸ்சேன்ஜ் இன்ஜின் என்பது டாக்கியான்களை உற்பத்திசெய்து அல்லது உபயோகித்து அல்லது வெளியேற்றி செயல்படும் கருவி என்றால், அது பொருத்தப்பட்டிருக்கும் விண்வெளிக்கப்பலும், அந்த ஆற்றலுடன், விசையுடன் செல்கையில் டாக்கியான்களாகிவிடலாம்.

டக்ளஸ் ஆடம்ஸ் இதை சாமர்த்தியமாக தாண்டியிருப்பார். infinite improbability drive என்கிற சொந்த வேடிக்கை கற்பனையில்.

அடுத்து வேறுவகையான தடுமாற்றம்.

அது என்ன…ஐ…நா…

ஓ, அப்படியா! அந்தத் தலைவர் எல்லாம் வெத்து!

வெத்தோ கித்தோ! அந்தாளைப் பார்த்து எனக்கு எனக்கு ஒரு நிமிஷ வேலைதான்.

தி.க.வா.க. பக்கம் 58

மணியும் (லோக்கல் பார்ட்டி) பாரியும் (நோரா கிரகவாசி) பேசிக்கொள்வதாக வரும் இதில் பாரி, வெத்தோ கித்தோ என்று நாம் உபயோகிக்கும் மொழிஜாலத்தை உணர்ந்து உபயோகித்திருக்கமுடியாது.  பாரிக்கு தமிழ், வார்த்தைகளாக தெரிந்திருக்கலாம். ஆனாலும் அவற்றின் கலாச்சார அர்த்தங்கள்கூட தெரியாதவனாய், மேல் சம்பாஷணை நிகழ்வதற்கு முன் நிச்சயதார்த்தம் என்றால் என்ன என்று கேட்டு விளங்கிக்கொள்ளும் நிலையிலேயே இருக்கிறான். தமிழ் மொழி அகராதியிலிருந்து அனைத்து வார்த்தைகளும் அத்துபடியானாலும் ”வெத்தோ கித்தோ” உபயோகம் வேற்றுகிரகவாசியால் (வேற்று நாட்டவராயினும்) சடுதியில் செய்யமுடியாது.

இரு பரஸ்பர ஏலியன்ஸ்களிடையே உரையாடல்கள் நிகழ்கையில், கற்பனை என்றாலும்,  நிஜ விஞ்ஞானபுனைவில் சற்று ஜாக்கிரதையாக அமைக்கவேண்டும். கார்ல் ஸாகனின் ”கான்டாக்ட்” உதாரணம். தி.க.வா.க. ஜாலி கதை என்று எடுத்துக்கொண்டால் எனக்கும் ஓகே.

***

சரி போதும் முடித்துவிடுவோம்.

இக்கட்டுரை, அதான் ஐயா பூட்டாரே என்ற தில்லில் “இலக்கிய மதிப்பீடு” சாக்கில் தி.க.வா.க.வையோ வாத்தியாரையோ, இலக்கிய அலமாரியில் கீழ் ஓரத்தில் அடுக்க முனையும் என் விமர்சனமல்ல.

இவை ஜஸ்ட் என் எண்ணங்கள், கருத்துகள்.

கட்டுரையில் குறிப்பிட்டிருந்த என் இரு நண்பர்களையும் சேர்த்து என்னுடன் விவாதிக்கும், எண்ணங்களை ஆரோக்யமாக பகிர்ந்துகொள்ளும், என்னை இலக்கியமீதியாக, வணிக கேளிக்கை பரப்பிலக்கியமாக வாசிக்கும் பொதுஜனங்களுக்காக (மட்டும்) எழுதுபவை.

குறைகளுடன் அவரது ஆளுமையில் என்னையும் சேர்த்து கோடி ஜனங்களை ஐக்கியப்படுத்தியவர் வாத்தியார். வாழ்கையை மேல்நோக்கவைத்த கதைகளை கற்பனைகளை பொதுவில் புரிந்த மொழியில் விதத்தில் சொல்லிய மாமக்களையும் தாத்தாக்களையும், கட்டுண்டு கதைகேட்டவர்கள் விமர்சிப்பதில்லை. அவ்வகை விமர்சனங்கள் அச்சாதாரணர்களால் வெளிப்படுத்தமுடிந்த அகவயமான பிரமிப்பே.