ராகம் தானம் பல்லவி – பாகம் 2

Standard

முதல் பாகக் கட்டுரையில் எனக்குத் தெரிந்தமட்டில் மூன்று பிழைகள் இருந்தன (திருத்திவிட்டேன்). எம்.எஸ்.ஷீலா கர்நாடகா. வாக்கியத்தில் ஆந்திரப்பாடகர்களுடன் சேர்த்துவிட்டேன். ஆனாலும் அவரும் அநேக கச்சேரிகளில் ரா.தா.ப. பாடுவார். 1965 கலாநிதி ஆலத்தூர் வெங்கடேச ஐயர் என்று குறிப்பிட்டுவிட்டேன். சரியானது ஆலத்தூர் சகோதரர்களே. அதைப்போல அரியக்குடி ஐம்பதுகளில் (1950) கொண்டுவந்த கச்சேரி பாணி என்று எழுதியிருந்தேன். 1930 40 களிலே அவர் அதைசெய்துவிட்டாராம். முன்னூறு வயது மதிக்கத்தக்க என் இசைநண்பர் குட்டுகிறார். மகிழ்ச்சி.

அடுத்து, ராகம் தானம் பல்லவி அங்கத்தில் பாடப்படும் ராக ஆலாபனை, கச்சேரியில் வேறு கீர்த்தனை முன் பாடப்படும் ஆலாபனையிலிருந்து வித்தியாசப்படுமா?

அடிப்படையாக வித்தியாசப்படாது. அதே ராகம் அதே ஆலாபனைதான். ஆனால் பாடும் முறையில் சிறு வித்தியாசம் இருக்கிறது. ஆலாபனை என்றால் ராக ஸ்வரங்களை ஸ, ரி, க என்று சொல்லாக்காமால், ஆ , உம், நும், என்பதுபோல சப்தங்களாக தொடராக கற்பனைத்திறனுக்கேற்ப படிப்படியாக பாடுவது. ஒவ்வொரு ராகத்திற்கும் சிறப்பு ஸ்வரக்கோர்வைகள் (பிடிகள்), கமகங்கள், கார்வைகள் இருக்கிறது. அவற்றையும் ஆலாபனையில் வெளிப்படுத்தவேண்டும். ஒரு உதாரணம் ஒலிக்கோப்பில்.

மேலே காம்போஜி ராகத்தில் டாக்டர் எஸ். ராமநாதன் தானத்திற்கு முன் ஆ லாபனை செய்கிறார். முதலில் வரும் ஸ்வரக்கோர்வை காம்போதியின் பிடி. பாடியவுடன் இது காம்போதி ராகம் என்று தெரிந்துவிடும்.

கீர்த்தனை முன் ஒரே டேக்கில் பாடகர் ராக ஆலாபனை, பின் வயலின் ஆலாபனை. ரா.தா.ப. ஆலாபனையில் இரண்டு மூன்று சுற்று பாடகரும் வயலின்காரரும் பரிமாறிக்கொள்வர். இதனால், முதல் சுற்றில் மெதுவாகவும், மிதவேகத்திலும் (மத்தியமகாலத்தில்), அடுத்த சுற்றுக்களில் வேகமாகவும் (துரிதகாலத்தில்) பாடலாம். விலம்பகாலத்திலேயே (மிகமெதுவாக) ஆலாபனை மொத்தத்தையும் செய்துமுடிக்கலாம். பாடகரை பொறுத்தது.

அடுத்ததாக தானம் எனும் அங்கத்தின் உபயோகம் என்ன? உதாரணமாக, வர்ணம் கச்சேரி முதலில் பாடுவது, தொண்டையைப் பதப்படுத்திக் கொள்வதற்கேற்ற வகையில் இருக்கும். இதுதான் அதன் தேவை  என்று ஒரு கருத்து உள்ளது. இதே போல் தானம் என்பதின் அவசியம் என்ன, எதற்கு இதை செய்துகட்டவேண்டும்?

தானம் பற்றி விளக்கம் கூறுவதற்கு முன் வர்ணம் பற்றி நிலவும் கருத்திற்கு ஒரு சிறிய ம்ஹூஹும். டி.ஆர்.சுப்பிரமணியன் நல்ல குரலில் கச்சேரி முதல் பாட்டாய் மங்களமும், இறுதியாய் வர்ண மும் பாடியுள்ளார். இப்படி குரல் பதப்படுத்தல் சமாச்சாரங்களை உடைத்தெறியவே. சமீப கச்சேரிகளில் டி.எம். கிருஷ்ணா கணீரென்று வர்ணத்தை மூன்றாவதாயும், கச்சேரியின் பிரதான உருப்படியாகவும் (2006 என்று நினைக்கிறேன், மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், கானடா வர்ணம்), ரா.தா.ப. வாகவும் (2008 மியூசிக் அகதெமி – விரிபோணி பைரவி ராக வர்ணம்) பாடியுள்ளார். வர்ணம் = கச்சேரி முதல் பாட்டு = குரல் பதப்படுத்துதல் என்பதெல்லாம் ஒரளவே சரி. சங்கீத சட்டமில்லை.

தானம் என்பதும் ஒருவகையில் குரல் சரிசெய்தல், அல்லது விருத்திசெய்யும் பயிற்சியாகவே இருந்திருக்கிறது. சரளிவரிசை, ஜண்டைவரிசை, வர்ணம், பிறகு தானம் என்று கொள்ள லாம். ஆலாபனையில் ஆ  என்று சப்தம் தொடர்சியாய் வருவது போல் ராக ஸ்வரங்களை ராக லக்‌ஷணத்திற்கு (இலக்கணம்) ஏற்ப கோர்த்து பாடுவார்கள். இதை மொத்தமாக கீதம், மெலடி, என்று புரிதலுக்காக வைத்துக்கொண்டால், தானத்தில் இவ்வாறு இல்லை. ஸ்வரமும் (கீதமும்) லயமும், மெலடியும் ரிதமும் சேருகிற இடம் தானம். சொல்லற்ற இசைவடிவிலிருந்து ராகத்தை சொற்களோடு உறவாட வைக்க எத்தனிக்கும் கருவி தானம்.

அதனால் ராக ஸ்வரங்களை தானத்தில் வேறுவிதமாய் சற்று சந்தம் வருவதுபோல பாடவேண்டும். ஆங்கிலத்தில் ஸ்டக்காட்டொ (staccato) என்பார்கள். ஸ்வரங்களை 3, 4, 5, என்று (ராகம் அனுமதித்தால்) சிறு சிறு ஸ்வரக்கோர்வையாய் உடைத்து உடைத்து பாடுவது. இப்படி பாடுகையில் அனந்தம் என்ற சொல்லையும் அதற்கேற்றவாறு உடைத்து பொருத்தி பாடவேண்டும். முடிவில் வழுக்கி இழுத்து ராக ஸ்வரூபம் தெரியுமாறு முடிக்கவேண்டும். ஆ …னந்தத்…..தா…னம்…தந்த… ஆஅஆஅ        ஆ   அ  ஆ  அ   ந ந்   த   த் தக  அ  அ  த க அ  அ  இப்படிப் போகும்.

கீழே கமலமனோஹரி ராகத்தில் சேஷகோபாலன் தானம் ஒலிக்கோப்பை கேட்டுப்பாருங்கள். தீக்‌ஷதரின் கஞ்சதலாயதாக்‌ஷி கீர்த்தனையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

மிருதங்கத்திற்கு தத்தகாரம் போல கீர்த்தனைக்கு தானம். எங்கெங்கு பல்லவியில் வார்த்தைகளை ஒதுக்கி அமைக்கவேண்டும் என்பதற்கு தான ஸ்வரக்கோர்வைகளை உபயோகித்துதான் வகுப்பார்கள்.

தானத்தின் மூலம் கீர்த்தனை எப்படி தோன்றும் என்பதற்கு திரையிசையில் ஒரு கிட்டத்தட்ட உதாரணம் எம்.எஸ்.வீ./கண்ணதாசனின் சிப்பியிருக்குது முத்துமிருக்குது (வறுமையின் நிறம் சிவப்பு படப்) பாடல்.

இப்பாட்டிலிருந்து சிறு உதாரணம். மெட்டையே தனனா தனனா தானா என்கையில் மூன்று, மூன்று, இரண்டு ஸ்வரங்களாய் பிரிப்பது புரியும் என்று வைத்துக்கொள்கிறேன். இத ற்கு கவிஞர் (வேறு யார் செய்வர்?) உடனே மழையும் வெயிலும் என்ன என்று வார்த்தைகள் தருகிறார். ம-ழை-யும் வெ-யி-லும் என்-ன  என்று 3, 3, 2 ஸ்வரங்களுக்கு பொருந்துமாறு வார்த்தைகளின் அக்‌ஷரங்கள் வருகிறது பாருங்கள்.இசையா, சாஹித்தியமா, இசையமைப்பாளரா கவிஞரா யார் முந்தி? சொல்வது கடினம்.

இதையே தியாகையர் ஒருவரே செய்கையில் வெளிப்படுவது பஞ்சரத்ன கீர்த்தனைகள், ரத்தினங்கள், அபாரங்கள். வார்த்தைகள் தமிழா தெலுங்கா, இசை ஸ்வரம் என்ன ராகம், ரகம், என்றெல்லாம் கவலையின்றி திளைக்கவைக்கும் ஸ்வர-சாஹித்திய (இசை-வரி) பெர்ஃபெக்ட் மாட்ச். இவ்வகையில் அஜ, , கஜ , மயூர என்று ஏற்கனவே குறிப்பிட்ட பல வகை தான வகைகளை அடக்கியுள்ளது தியாகைய்யரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள். சுருதியும் லயமும் பிரிக்கமுடியாதவகையில் ஒருங்கே அமையப்பெற்ற ஸ்வர-ராக-லய -சாஹித்திய இசை கற்பனைவெளிப்பாட்டின் உன்னதம். ஒரு சாம்பிள் கீழே.

திரையிசையில் தானத்தை கொண்டே இசையமைத்தவர்களையும் கூடவே ஏற்ற வார்த்தைகளை பாட்டாய் பொருத்தியவர்களையும் பாட்டைவைத்தே சுலபமாக கண்டுகொள்ளமுடியும். இன்னொரு காம்பினேஷனில் சட்டென்று ஞாபகம் வரும் இன்னொரு உதாரணம் சிந்துபைரவி திரைப்படத்தில் தானமாகவே தொடங்கி, வரிகளை தானம்-த என்று தானமாகவே உடைத்து, வார்த்தைகளை மோ-க—ம் என்–னும் என்று ஒதுக்கி ஒதுக்கி பாடப்பட்டு உச்சியை அடைகையில் அகாரமாகிவிடும் மோகம் என்னும் தீயில் என்மனம் வெந்து வெந்து உருகும் என்ற பாடல். விடியோவில் கேட்டுப்பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=rd8_rwlUWCE

எனக்குத் தெரிந்து கனகாங்கி ராகத்தில் வந்துள்ள முதல் (கடைசியுமான?) திரைப்படப்பாடல் இது. வெங்கடமஹி வகுத்த மேளகர்த்தா வரிசையில் கனகாங்கி முதல் ராகம். ஸ, ரி1, கா1, ம1, ப, த1, நி1, ஸ  என்று ராக ஸ்வரங்கள். ஸ  ரி1 க1 அனைத்தும் அருகருகே ஸ்வர ஸ்தானங்கள் (ஒலிகள்) கொண்டது. அதேபோல ப த1 நி1 அருகருகே ஒலிப்பவை. சேர்த்து பாடுகையில் காதால் பாகுபடுத்தி கேட்க முடிந்தாலும், மனதில் சற்று நாராசமாய் ஒலிக்கும். இதைப்போல் ஸ்வரக்கூட்டல்கள் உள்ள ராகங்களை விவாதி ராகம் என்பார்கள். விவாதியில் பாடுவது கடினம். பாலமுரளிகிருஷ்ணா, தஞ்சாவூர் கலியாணராமன் போன்ற சிலரே கச்சேரி மேடைகளில் திறம்பட செய்திருக்கிறார்கள். வேரொருசமயம் விரிவாய் பார்ப்போம்.

மேலே பாடலை கவனித்தால் இளையராஜா ஒரே இசை வாக்கியத்தில் (மெலடியில்) அனைத்து ஸ்வரங்களையும் ஒன்றுசேர்த்து வடிக்காமல், ஸ  ரி1 க1 ம இவற்றில் சில ஸ்வரக்கோர்வைகளையும், பின் தாண்டிபோய், ப த1, நி1 ஸ  என்றும் அமைத்திருப்பார். கேட்கவும் நாராசமாய் தோன்றாது. சிலிர்ப்பாய் இருக்கும். பாட்டின் முடிவில்தான் ஒரே மூச்சில் ஒரே வரியில் ராக ஸ்வரங்கள் மொத்தத்தையும் பாடி மேல்ஸ்தாயிவரை சென்று பஞ்சமம் தொட்டு, பளிச் என்று தந்தி அறுந்துவிடும். யேசுதாஸின் அபார அகார பயிற்சி வெளிப்படும் பாடல்.

(எம்.எஸ்.வி., ராஜா, என்று ரஹ்மானை விட்டுவிட்டீரே என்று சண்டைக்குவராதீர். வேறு விஷயத்தில் வேறு இடத்தில் குறிப்பிடுகிறேன்)

அருணகிரிநாதரின் திருப்புகழ் அநேகமாக அனைத்துமே சந்தத்தாளங்கள். இன்றைய கச்சேரிகளில் இறுதியில் மங்களத்திற்கு முன் திருப்புகழ் பாடுவார்கள். வார்த்தைகளை நீக்கி ஸ்வரங்களாக நினைத்துப்பார்த்தால், தானம் பாடுவது போலவே இருக்கும்.

திருப்புகழ் பாடப்படுகையில் இன்று நாம் அநேகமாக சீட்டின் நுனியில், கையில் பை, குடை, பிடித்தபடி, எப்படா ’பெருமாளே’ வரும் என்று எழுந்துசெல்ல காத்திருக்கிறோம்.

இப்போது ஆர்வமிருப்பவர்களுக்கு சற்று ஆராய்ச்சி விஷயங்கள் கூறி, சில ஒலிக்கோப்பு உதாரணங்களுடன் இப்பாகத்தை முடிக்கிறேன்.

தானம் என்றால் அனந்தம். முடிவில்லாதது. பரதமுனிவர் தானத்தை ஒரு வகை மூர்ச்சனையாகத்தான் (ஸ்வரக்கோர்வை) கருதியுள்ளதாக தெரிகிறது. ஆனால் பின்னால் சாரங்கதேவர் தன்யந்தே விஸ்தார்யந்தே இதி தானஹ எனும்போது தானம் என்பது விஸ்தாரமாக, விவரமாக செய்யப்படவேண்டியது என்று புரிகிறது. டாக்டர் வேதவல்லி தானத்தை பற்றி பலவிஷயங்களை தன் Ragam Thanam Pallavi – their evolution, structure and exposition (1995) புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆலாதிகளில், கட்டாலாதி தா அ  அ  ந அ  அ  தத் தத் தா அ  அ  நம் தத் தா அ  அ  என்று சிறு ஸ்வரக்கோர்வைகளாக ஒலிக்கையில், இன்று இருக்கும் தானம் வடிவத்திற்கு ஒப்பானது என்று குறிப்பிடுகிறார்.

தானத்தை மத்தியமகாலத்தில்தான், மிதமான வேகத்தில்தான் பாடவேண்டும் என்று ஒரு நியதி இருக்கிறது. அப்பொழுதுதான் கேட்க நன்றாக சுகமாக இருக்கும் என்று. இல்லை, பல  காலப்பிரமாணங்களில் பாடலாம் என்றும் ஒரு கட்சி இருக்கிறது. அட்லீஸ்ட் மூன்று வேகங்களில் (த்ரிகாலத்தில்) பாடமுடியும். மெதுவாக பாடுவதற்கு ராக ஞானம் சூட்சமங்கள் வேண்டும். வேகமாக பாடுவதற்கு அப்பியாசம் தேவை.

மேலே சிந்து பைரவி பாட்டு கூட அநேகமாக மத்தியமகாலத்தில்தான் இருக்கும். கேரளத்தில் ஸ்வாதித்திருநாள் குடும்பத்தவரின் நவராத்திரி உற்சவத்தில் தானம் தாளத்துடன் மத்தியமகாலத்தில் பாடப்படும். சிலசமய ம் மிருதங்கம் துணையுடன். கீழே டாக்டர் எஸ்.ராமநாதன் பாடியுள்ள காம்போஜி ராக தானத்தின் தொடக்கம். மத்தியமகாலத்தில் மிருதங்க பக்கத்துடன் (வயலின் வாசிக்கையில் மிருதங்கம் நன்றாக கேட்கும்).

முன்னர் குறிப்பிட்டபடி வேதவல்லி மத்தியமகால தானத்தில் நிரம்ப அப்பியாசம் பெற்று தேர்ந்தவர், சிறந்தவர். கேட்கையில் நம்மை அறியாமல் கண்ணைமூடியபடி எழுந்து ஆடவைத்துவிடுவார்.

சேஷகோபாலன் போன்றோர் பல  காலப்பிரமாணங்களில் தானம் செய்து உலுக்கிவிடுவர். கேட்கும் நமக்கும் வியர்த்துகொட்டிவிடும். இதோ ஒரு சேஷு ஸ்பெஷல்.

அதேபோல ராகங்களுக்கு ஏற்றவாறு தானத்தின் வெளிப்பாடு சற்று மாறும். நாட்டை ராகத்தை உடைத்து உடைத்து ஸ்வரத்துண்டுகளாய் தானம் பாடுவது நன்று. எளிது. ஆனால் வராளியை இழுத்து இழுத்துதான் பாடவேண்டும். இதற்குமேல் வார்த்தையில் இதை விளக்கமுடியாது. வீணையில் மைசூர் துரைசுவாமி ஐயங்கார் வாசிப்பதை கேட்டுப்பாருங்கள்.

1) நாட்டை

2) வராளி

தானம் பாடுவதின் அடிப்படை தான வர்ணங்களில் உள்ளது என்று கொள்ளலாம்.இவ்வர்ணங்களில் வரும் சாஹித்திய வார்த்தைகளை நீக்கி தானக்‌ஷர  அனந்தம் வார்த்தையை உடைத்து பொறுத்தி பாடினால் தானம் போலவே இருக்கும். இவ்வகையில் பச்சிமிரியம் ஆதியப்பா இயற்றிய பைரவி ராக விரிபோணி வர்ணம், தான வர்ணம்.இதை ராகம் (ஆலபனை), தானம் செய்து பிறகு பிரதானமாக டி.எம்.கிருஷ்ணா 2008 அகதெமி கச்சேரியில் பாடியது பொருத்தமே. பிரதான அங்கத்திற்கான அனைத்து விஷயங்களூம் கொண்டது இப்பைரவி ராக வர்ணம். என் போன்ற விமர்சன அல்லக்கைகளை விட்டு, விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள். ஏன் வர்ணத்தை பிரதான உருப்பிடியாக பாடுகிறார் என்று, சபையில் ரசிகர்களாய் நாம் விஷயம் பிடிபடாத ஆச்சர்யத்தில் புருவத்தை உயர்த்தலாம். முகத்தை சுளிப்பது, அறியாமை கலந்த ஒருவகை அடாவடித்தனம்.

*****