ஹால்ட்டிங் ஸ்டேட்

Standard

சார்லஸ் ஸ்ட்ராஸ் எழுதியுள்ள விஞ்ஞானப்புனைகதை ஹால்டிங் ஸ்டேட்டை படிக்கையில் உனக்குப் புரிகிறது இனி பேச்சுவழக்கு ஆங்கிலம் உனக்குப் புரியாது என்று. கீக்குகள் பேசும்மொழி, சற்று க்ரிப்ட்டோகிராஃபி, ஏன் எம் எம் ஓ ஆர் பி ஜி (MMORPG) காட்சி சாத்தியங்கள் கூட உனக்குப் புரியும். ஆனால் புரியாதது இப்புத்தகத்தில் வரும் ஆங்கிலத்தை தங்கள் ’அம்மா நாக்காக’ கொண்ட ஜீவன்கள் பேசும் மொழி.

போகட்டும் அது என்று உன்னை நீயே சமாதானப்படுத்திக்கொள்கிறாய் ஏனெனில், இக்கதையில் வரும் எதிர்காலத்தையும் அதன் வர்சுவல் ரியாலிட்டியில் புனையப்பட்டிருக்கும் கதையையும் ஒப்பிடுகையில் நீ வயதில் இன்னமும் சிறியவனே. இது சிறிய தடைதான் என்று தாண்டிச் செல்லநினைக்கையில் கதை மொத்தமும் இரண்டாம் நபர் (முன்)நிலையில் இருந்தே விவரித்திருப்பது, அதுவும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு ஒரு கதாபாத்திரத்தை இவ்வாறு முன்நிலையில் விளித்து, மூன்று முக்கிய பாத்திரங்களை மூன்று அதிகாரத்திற்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் விளித்து, இவர்கள் வாயிலாகவே கதையை விவரித்துக்கொண்டு செல்வது…மூடிவத்துவிடலாமா என்று பயமுறுத்துகிறதா, இல்லை பிரமிப்புதான் ஆயாசிக்கவைக்கிறதா…

பெரிய நாவலை மொத்தமும் முன்னிலையில் எழுதுவது என்னத்தான் கற்பனைத்திறன் வெளிப்பாடு என்றாலும், அத்தியாயம் நடுவில் உச்சாஅடிக்க எழுந்துசென்று வந்து தொடர்கையில் அத்தியாய பாத்திரம் யார் என்று மறந்து, முன்னிலையில் விளிக்கப்படுவது ஆணா பெண்ணா (கதையில் ஒரு ஆண் மைனர்-ஹீரோ,  இரண்ரு பெண் மேஜர் ஹீரோயின்கள், பல கொலைகாரர்கள், வீடியோ கேம்கள்) என்று திக்குமுக்காடுகையில் புத்தகத்தை விட்டெறிந்துவிடலாமா என்று ஒரு கோபம் உனக்கு ஏற்படுவது மனித இயல்பே. நல்லவேளை சார்லஸ் உனக்கு உபகாரமாக எந்த பாத்திரம் விளிக்கப்படுகிறதோ அதையே அந்த அத்தியாய தலைப்பாக வைத்து புரட்டிப்பார்த்து தொடர்ந்து படிக்க வைக்கிறார்.

சிறிது நேரத்திற்கு பிறகு எப்படி இந்த புத்தகத்தை பிடித்தாய் என்று ஆச்சரியப்படுகிறாய். பிறகு வெகுநாட்களாய் விஞ்ஞானக்கதை ஒன்றும் படிக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டு வலையில் எந்த கதாசிரியர் இப்போது தலைசிலுப்பிக்கொள்ளும் அளவுக்கு பிரபலம் என்று தேடியதை நினைவுகொள்கிறாய். பிறகு காஸ்மா, ஜெனிஃபர், விக்கிப்பீடியா என்று வலை நண்பர்கள் பக்கங்கள் என குறிப்புகளை பீராய்ந்து முடிவில் ஹுயுகோ பரிசில் தோற்றவர்களின் புத்தகத்தை படிக்கலாம் என்று தீர்மானித்தாய். வெற்றியிலிருந்து மயிரிழையில் தப்பித்தவர்களை உனக்கு என்றும் பிடிக்குமாதலால்.

அப்படித்தான் எடுத்தாய் கடையில் ஹால்டிங் ஸ்டேட் புத்தகத்தை; ஹுயுகோ 2008 பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்ட ஆனால் வெல்லாத புத்தகம். செலவழித்த காசை நியாயப்படுத்த படித்துமுடித்துவிடு. எப்படியும் புத்தகமும் சுவாரசியமாகத்தான் போகிறது…

முடித்தேவிட்டாய் படித்து, மறுதினத்திற்குள். சிவந்த கண்களுடன்.

என்ன கதை என்று எழுத எத்தனிக்கிறாய். இவ்விமர்சனத்திற்கு அது தேவையில்லை என்று தோன்றுகிறது. வலையில் ஆங்கில விமர்சனத்திற்கு சுட்டி கொடுத்தால் போதுமே. ஆனாலும் உனக்கு தெரியும். இதை இங்கு படிப்பவர்களில் மிகச்சிலரே சுட்டியை உபயோகித்து அங்கும் சென்று படிப்பர் என்று. அதனால் நீயே கதைச்சுருக்கம் கொடுக்கிறாய்.

அருகாமையிலுள்ள எதிர்காலத்தில் ஒரு வங்கி கொள்ளையடிக்கப்படுகிறது. வீடியோ கேமினுள். கொள்ளையடிக்கப்பட்டவை என்ன என்று சரியாகத்தெரியவில்லை. அந்த வங்கிதான் கேமினுள் சீரான பொருளாதாரம் நிலவுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் கேம் விளையாடுபவர்களுக்கு ஜாலியாக இருக்கும். நிஜத்தில் அந்த கேம் வங்கியை (கணினி வழியே) பார்த்துக்கொள்ளும் கம்பெனியிலிருந்து பயந்துபோய் ஒருவர் நிஜ போலீஸை அழைக்கிறார், திருட்டை கண்டுபிடிக்க. அதற்குள் அந்த கம்பெனியில் இருந்து ஒரு கம்ப்யூட்டர் கீக் காணாமல் போய்விடுகிறார். பிறகு புரிகிறது அந்த கம்பெனி ஒரு முகப்புதான். பல க்ரிப்ட்டோகிராபி வேலைகளை செய்துகொண்டிருக்கிறது. மூன்று கதாபாத்திரங்கள், ஒரு போலீஸ், ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், ஒரு கீக், இக்கதையை தங்களுக்குள் புரிந்துகொள்ள முயன்று படிக்கும் உனக்கும் விளக்குகிறார்கள். தனியாக தொடங்கும் இம்மூவரின் வாழ்க்கை ஓடைகளும் நடுவில் கைகோர்த்து, சில MMORPG சினேரியோக்கள் (வீடியோ கேம் ஜல்லியடி வார்த்தை), இரு நிஜக்கொலை (வீடியோ கேமினுள் பல கொலைகள்), சில திருப்பங்களுடன் முடிச்சுகளை அவிழ்த்து, அக்கா, குழந்தை செண்டிமென்ட் தொட்டு, திருட்டை கண்டுபிடித்து, இரு கதாபாத்திரங்களின் ஆடை அவிழாத, கதைக்குள் கெட்டகாரியங்கள் செய்யாத காதலுடன் சுபமாய் முடிகிறது.

MMORPG என்றால் மாஸிவ்லீ மல்ட்டி பிளேயர் ஆன்லைன் ரோல் பிளேயிங் கேம். வீடியோ கேம்கள் ஒரு கணினியில் ஒருவர் மட்டும் தனித்து கணினியுடனோ, தான் மட்டுமோ விளையாடுவது போய், வலையின் துணையுடன் உலகெங்கிலும் பலர் கலந்துகொண்டு விளையாடும் ராட்சஸ கேளிக்கை அரங்கமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. இதன் பிருமாண்ட வர்த்தகமயமாக்கலின் விளிம்புதான் இந்தியாவில் இப்போதைக்கு தெரிகிறது. ஆன்லைனாக வீடியோ கேம் விளையாடுவது முக்கிய பொழுதுபோக்காய், சர்வசாதாரணமாய் நடந்துகொண்டிருக்கும் அமேரிக்காவிற்கே இக்கதை புதுசு. அவ்வீடியோ கேம்களின் வர்த்தகமயமாக்கலின் எதிர்கால் விபரீத சாத்தியங்களை சார்லஸ் தன் கதையில் அலசுகிறார்.

கிட்டத்தட்ட நிஜமாகிவிடலாம் என்கிற சாத்தியம் விஞ்ஞானப்புனைக்கதைகளில் ஒரு முக்கிய கிக். விஞ்ஞானம் மொத்தமும் சரியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்போது நாம் உபயோகிக்கும் ஒரு தொழில்நுட்பத்தை சார்ந்தே அதன் எதிர்கால நீட்சியை கற்பனைசெய்திருப்பதால் இக்கதையில் விஞ்ஞானமும் சரியாகவே அமைந்துள்ளது உனக்குப் புரிகிறது. இது கதையின் வெற்றிக்கு ஒரு காரணம். கதாபாத்திரங்கள் சாதாரணர்கள். சூப்பர்மேன் வுமன் வேலைகள் எதுவும் செய்யாமல் நிஜத் துப்பாக்கி கண்டு பயப்படுகிறார்கள், துன்பத்தில் நிஜமாகவே அழுகிறார்கள். ஹீரோ சாதாரண கணினி கூலியாள்.

கதையில் எதிர்காலம் ஆரவாரமில்லாமல் ஆழமான கற்பனையுடன் இருக்கிறது. போலீஸ் பொதுமக்களை ஹைடெக் கொண்டு பாதுகாக்கிறது, முட்டை அவித்து சாப்பிடுகிறார்கள், ரோட்டில் நடக்கிறர்கள், வீட்டினுள்தான் கெட்டகாரியம் செய்கிறார்கள், அழுகிறார்கள். என்னத்தான் விஞ்ஞானபுனைக்கதைகளில் கற்பனை குதிரை விளியில் பறக்கும் என்றாலும், இக்கதையில் சார்லஸ் விரிக்கும் எதிர்காலம் உனக்கு ஏற்புடையதே. ஏன், பிடிக்கவும் கூடியதே. ஏனெனின் கதாசிரியருக்கு (சார்லஸிற்கு) அவர் (இங்கிலாந்தில்) வாழும் நிகழ்காலம் பிடித்திருக்கிறது. அதன் சாத்தியங்களில் கசப்புகள் ஏமாற்றங்கள் இல்லை. அதனால் மொத்தமாக அதை மாற்றியமைத்து ஒரு எதிர்காலத்தை படைக்கவில்லை. நிகழ்காலத்திலிருந்தே நீட்சியான எதிர்காலத்தையே உனக்குத்தருகிறார். ஆனால் இது உன் யூகம்தான் என்று உனக்குத்தெரியும். கதாசிரியருக்கு இதைப்பற்றி கவலையில்லை. கதைக்கு இது தெரியாது.

மொத்தமாக கணினிமயமாக்கலின் கேடுகள் கதையின் போக்கில் உணர்த்தப்படுகிறது. ஒரு தேசமே எவ்வாறு கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிலரின் ஊடுருவல் மூலம், தகவல் தொடர்பு கணினிகளின் கோளாறுகளினால், கட்டுப்படுத்தப்படுகிறது என்று நினைக்கையில் பயமாய் இருக்கிறது. ஹால்டிங் ஸ்டேட் என்ற கதையின் தலைப்பும் இவ்வாறான ஒரு (கணினி) செயலிழந்ததன்மையையே குறிக்கிறது. கணினியின் செயலிழப்பில் உலகமே ஹால்டிங் ஸ்டேட் அடைகிறது.

கதையில் எதிர்பாப்பதைபோல், சிறிசும் பெரிசுமாய் பல வீடியோ கேம்கள். ஒரு காலத்தில் வீடியோ கேம் பைத்தியமாய் இருந்ததை நினைவுகொள்கிறாய். உன்னுடன் விளையாடிய ஒன்றுவிட்டதம்பிக்கள் சிலர் வீட்டில் தூங்குகையில் பச்சக் பச்சக் என்று கட்டைவிரல்களை அமுக்கி எதிரிகளை கனவுலகில் கொன்றுபோட்டபின்தான், அதன் பின்விளைவுகளில்தான், உன் பயித்தியம் சற்று தெளிந்தது. உனக்கு அன்றே புரிந்துவிட்டது பழக்கத்திற்கும் கெட்டப்பழக்கத்திற்கும் வித்தியாசம். அதனால் உனக்கு ஆயாசமாய் இருக்கிறது கதாநாயகன் வீடியோ கேம்களை சிலாகிக்கையில். எப்படி அதுவும். மூளையிலேயே சிப் வைத்து நிற்கையில், நடக்கையில், வீடியோ கேம்கள் விளையாட ஏதுவாக்கிவிடுவார்களாம். ஓர் இடத்தில் அமர்ந்தபடியே ஈரேழுபதினான்கு லோகங்களையும் சஞ்சரித்து விளையாடலாம். எதிரிகளை அழிக்கலாம். விளையாடிக்கொண்டிருக்கையிலேயே தானாக ஆகாரம், நீர் யாராவது உன் உடம்பாகிய மாமிசபிண்டத்திற்கு வேன்டிய காலங்களில் தருவதற்கு ஏற்பாடாம். நீ விளையாட்டை நிறுத்தவேண்டாம்.

காயமே இது பொய்யடா. கேம் விளையாடும் பைய்யடா.

பல பிக்சல்களை சிலகாலம் ஏமாற்றலாம், சில பிக்சல்களை பலகாலம் ஏமாற்றலாம், அனைத்து பிக்சல்களையும் என்றைக்கும் ஏமாற்றிக்கொண்டிருக்கமுடியாது. இது ஒரு சாம்பிள் வாக்கியம்.

திடீரென்று உனக்குப்புரிகிறது. இக்கதையை சொல்வதற்கு மூன்றில் இரண்டு கதாபாத்திரம் தேவையில்லையே என்று. ஆனால் அதற்குள் படித்துமுடித்துவிடுகிறாய்.

உன் இரண்டாம் நபருக்கு கதை பிடித்திருந்ததையும் உணருகிறாய்.