ஒன்றுக்கொன்று ஸ்வர, லக்ஷண, ஜனக-ஜன்ய சம்பந்தம் உடைய இரண்டு ராகங்கள் கர்நாடக சங்கீதத்தில் அநேகம். இது இசையின் ஓசையின் குறையில்லை. இச்சங்கீதத்தினை வளர்த்த நம் முன்னோர்களின் நுனுக்கத்தின் நிறை. உதாரணமாக பூர்ணசந்திரிகா மற்றும் ஜனரஞ்சனியை எடுத்துக்கொள்வோம். இரண்டிற்கும் பல ஒற்றுமைகள். இன்றும் ஒன்றை பாடுகையில் ரசிகர்களுக்கு இன்னொன்றோ என்று தோன்றும்விதமாக பல கச்சேரிகளில் அமைந்துவிடும்.
பூர்ணசந்திரிகா ஆரோஹணம் அவரோஹணம்: ஸ ரி க ம ப த ப ஸா, ஸா நி ப ம ரி க ம ரி ஸ
ஜனரஞ்சனி ஆரோஹணம் அவரோஹணம்: ஸ ரி க ம ப த (ப) நி ஸா, ஸா த ப ம ரி ஸ
இரண்டும் தீரசங்கராபரணம் என்ற 29ஆவது மேள ஜன்ய ராகங்கள்.
சங்கீத ரத்னாகரத்தில் (~ கி.பி. 1250) பூர்ணசந்திரிகாவோ, ஜனரஞ்ஜனியோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் சதுர்தண்டிபிரகாசிகையில் (~ கி.பி. 1635) தீரசங்கராபரணத்தின் ஜன்யமாய் ஒரு பூர்ணசந்திரிகா வருகிறது. ஜனரஞ்ஜனியை காணோம். பிறகு துலஜா தருவிய சங்கீத சாராம்ரிதா விலும் சங்கராபரணத்தின் ஜன்யமாக பூர்ணசந்திரிகா வருகிறது. மீண்டும் ஜனரஞ்ஜனியை காணோம். புரபசர் சாம்பமூர்த்தி தன் புத்தகத்தில் கொடுத்துள்ள ராக மூலங்களை பார்க்கையில் (சவுத் இண்டியன் மியூசிக், ஆறாம் பாகம், சாப்டர் XV மற்றும் XVI) இவை தெரிகிறது. இதைக்கொண்டு ஜனரஞ்ஜனி தியாகராஜர் (1767 – 1847) செய்த புது ராகமாக இருக்கும் என்று கூறலாம்.
கர்நாடக சங்கீதத்தின் கலா ஆச்சாரியர்களில் ஒருவரான எஸ். ஆர். ஜானகிராமன் மேலும் ஆராய்ந்து ஒரு எஜுகேடட் யூகமாக பூர்ணாசந்திரிகா, ஜனரஞ்ஜனி இரண்டும் தற்போது இருக்கும் வடிவத்தை தியாகராஜர் அவர் காலத்திற்கு முன் இருந்த ஒரிஜினல் பூர்ணசந்திரிகாவில் இருந்து மருவி படைத்தார் என்று கூறுகிறார். இருக்கவேண்டும்.
பூர்வீகம் எப்படியோ, இப்போது இருக்கும் வடிவத்தில் பூர்ணாசந்திரிகாவில் தெலிசி ராம சிந்தனதோ என்ற மறக்கமுடியாத ஒரு கீர்தனையை தியாகராஜர் செய்துள்ளார். அர்த்தத்துடன் கேட்பவர்க்கு சிலிர்த்துவிடும். இதற்கு மூன்று சரணம் கிருதி மணிமாலையில் ரங்கராமானுஜ ஐயங்கார் குறிப்பிட்டுள்ளார். எனக்கு தெரிந்து கச்சேரிகளில் ஒரு சரணமே பாடுவர் (ராமா யன சபலாக்ஷுல பேரு…). சில வருடம் முன்னர் (2004 என்று நினைக்கிறேன்) இரண்டு சரணம் மண்டா சுதாராணி பாடினார். கச்சேரி முடிந்ததும் மூன்றாவதை ஏன் பாடவில்லை என்றாதற்கு, சட்டென்று மறந்துவிட்டது, கவனிக்க மாட்டீர் என்று நினைத்தேன். இல்லை, இரண்டாவதை கேட்ட சந்தோஷத்தில் கேட்டுவிட்டேன், எனக்கும் மூன்றாவதை தெரியாது, மன்னித்துக்கொள்ளுங்கள்…
உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் மாணுட சேவை துரோகமா கலைவாணி நீயே சொல் என்று மேடையில் சிலிர்ப்புடன் உதயமூர்த்தி (கமல்) கேரக்டர் பாடுவது, இளையராஜா மெட்டமைத்த, சுத்தமான பூர்ணசந்திரிகாவில்.
ஜனரஞ்சனியில் சினிமா பாட்டு வந்ததாக எனக்கு தெரியவில்லை.
ஆனால் தியாகராஜர் செய்துள்ளார். ஸ்மரணே சுகமோ ராம நாம என்று. விடஜாலதுரா நா மனஸு வினரா மற்றொன்று.
இப்போது முக்கிய போன் ஆஃப் கன்டென்ஷன். ஸ்வரங்களின் இருப்புப்படி, இரண்டு ராகத்திலும் ரி க ம ரி ஸ என்ற பிரயோகம் உண்டு. ஆனால் பாடுகையில் வித்தியாசம் காட்டவேண்டும். இல்லை கேட்கும் ரசிகர்களுக்கு குழப்பம் வரும்.
சில வருடம் முன்னர் இதை முன்வைத்து விதுஷகி சௌம்யாவிற்கும் விமர்சகர் சுப்பிரமணியனுக்கும் தர்க்கம் நடந்தது. சௌம்யா விரிவாக எழுதியுள்ளார். அந்தப்பக்கத்தில் ஆடியோ இப்போது வேலைசெய்யவில்லை. இருந்தாலும் தர்க்கத்தின் சாராம்சம் புரியும். நிச்சயம் படித்துப்பாருங்கள். கர்நாடக இசையில் உள்ள உன்னத நுனுக்கங்களும், அப்ஜெக்டிவாக இருக்க முயன்றால் சங்கீதம், சங்கேதம், இவற்றில் ஏற்படும் சங்கடங்களும் புரியும்.
சௌம்யா அவரின் விளக்கத்தில் சொல்வது போல் இரண்டு ராகத்தின் வித்தியாசங்களை ப முதல் ஸா வரை உள்ள வெவ்வேறு உத்திராங்கங்களில் காட்டுவது சரியே. குழப்பம் வராது. ஆனால், ரி க ம ரி ஸ விலேயே காட்டிவிடலாம் என்பது என் எண்ணம். நான் ஒன்றும் ஒரிஜினலாக விளக்கி, வியாக்கியானம் கொடுக்கப்போவதில்லை. எனக்கு சங்கீதம் கற்றுகொடுத்துகொண்டிருப்பவரும் வழிவழியாக தான் தன் குருவிடம் கற்றதை வைத்து இவ்வாறே விளக்குகிறார் (இவரின் பெயர் போட்டு அதன் பின்னால் நான் குளிர்காய இவருக்கு தியாகைய்யர்-வழிவந்த அதாரிடியெல்லாம் கிடையாது; சமுதாயத்தின் பொதுச்சொத்தான சங்கீதத்தில் யார் ஒருவர் தான் குரு?)
ரிகமரிஸ மேட்டரில் என் கேள்வி அறிவிற்கு மட்டும் புரிந்ததை (எனக்கு பாடத்தெரியாது, வராது) கூறுகிறேன். ஜனரஞ்ஜனி, பூர்ணசந்திரிகா இரண்டு ராகத்திலும் பிரயோகம் உண்டு. மறுப்பதிற்கில்லை. கீர்த்தனைகள் பலதில் வந்துள்ளது. தெலிசிராமசிந்தனத்தோவிலும் (பூர்ணாசந்திரிகா), ஸ்மரணே சுகமோவிலும் (ஜனரஞ்ஜனி) இந்த பிரயோகம் வருகிறது. ஆனால் விடஜாலதுராவில் (ஜனரஞ்ஜனி) என் காதிற்கு பட்டவரை, கிருதி மணிமாலையின் ஸ்வர குறிப்புப்படியும் ரிகமரிஸ பிரயோகம் வரவில்லை.
ரிகமரிஸ வை ஜனரஞ்ஜனியாக பாடுகையில் ரி யை சற்று மொட்டையாக பாடுவர். பூர்ணசந்திரிக்காவில் ரி கமகத்துடன் வரும். தெலிசிராம சின்தனதோ வில் சிட்டைசுவரத்தில் ரி என்று சொல்கையிலேயே கேட்டால் தெரியும். ஜனரஞ்ஜனியின் சற்றே ’மொட்டை’ ரி ராம்நாட் கிருஷ்ணன் பாடி எச்செம்வீ காஸெட்டில் உள்ள ஸ்மரணே சுகமோ கீர்த்தனையின் ஆலாபனையிலும் கீர்த்தனை வடிவத்திலும் தெரியும்.
ஆபோகியில் தா வைப்போல, பூர்ணசந்திரிகாவில் ரி யை வீசிப்பிடிடா என்பர். அதாவது ரி யை காவில் இருந்தும் அதற்குமேலும் மா வில் இருந்தும் இறக்கிக்கொண்டுவந்து சொல்வது. இந்த வகை கமகத்தை நொக்கு கம்பிதம் என்பதுபோல் வித்வான்கள் வருணிப்பர் என்று நினைக்கிறேன். மேலும் தெரிந்தவர் சரிசெய்யலாம். ஜனரஞ்ஜனியில் ரி லக்ஷணம் இவ்வாறு இல்லை. சற்று மொட்டையானது (ஃபிளாட்டானது).
இங்கு சாம்பமூர்த்தி தன் ராக லக்ஷண விளக்கத்தில் பூர்ணசந்திரிகாவைப்பற்றி எழுதியுள்ளதை கொடுக்கிறேன் (சவுத் இண்டியன் மியூசிக், பாகம் 4, பக்கம் 387):
Ri is sounded with kampita. Almost a kampa viheena raga. In p m R, the rishabha svara is negotiated with a descending glide.
மேலும் சஞ்சாரத்தில் ஸநிபரிஸரீ ஸரிகமபபமரீ மற்றும் ஸநிபமரீ யும் ஸாரிகமபமரீ யும் ரஞ்சக பிரயோகங்கள் என்கிறார்.
மற்றபடி ஸ்வரம் போடுகையில் இரண்டு ராகத்திலும் ரிகமரிஸ பாடுபவரின் கற்பனைக்கேற்ப வந்து போகும்தான். ஜனரஞ்சனியை விரட்டாமல் பாடினால் அங்கும் இந்த கமக வித்தியாசத்தை காட்டிவிடலாம். ராம்நாட் கிருஷ்ணன் முதலானோர் (ஒரே காசெட்டில் இரண்டு ராகத்தையும் பாடிக்) காட்டியுள்ளனர்.
இப்போதைக்கு இத்துடன் நிறுத்துவோம்.