கமல்ஹாஸன் வாயிலாக அறிவியல்

Standard

கமல்ஹாசன் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர் கூறியதாக ஒரு பேட்டி ஹிந்து நாளிதழின் வெள்ளிக்கிழமை விருந்தாகிய உப இதழில் வெளியாகியிருந்தது. வழக்கம் போல மனிதர் தனக்கே உரிய உதாரணங்களுடன் அரசியல் சினிமா சார்ந்த சில கருத்துக்களை ஆணித்தரமாகவும் அழகாகவும் கூறியிருந்தார் (பழுதான ரோடுகளை மக்கள் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பதால் அவையே அவர்களுக்கு போதும், சீரான சாலைகளை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றாகிவிடுமா? அதுபோலத்தான் நல்ல படங்களின் தேவையும்). அவர் அறிவியல் பற்றியும் ஒரு பத்தி பேசியிருந்தார். அதன் ஆங்கில வடிவம் கீழ்வருமாறு.

தசாவதாரத்தை பற்றி பேசுகையில்,

It is a complex subject simply told. I haven’t used chaos theory as a solution. No theory could be a solution. The theory of relativity resulted in the atom bomb. Even Darwinism is being challenged. I have used chaos theory to explain the disorganised world we live in. Something seemingly innocuous may have unexpected larger consequences in the future. It has been used in the past in films such as The Butterfly Effect. Mine is a new interpretation.

எனக்கு தெரிந்த தமிழில் மொழிமாற்றம் செய்தால் இப்படி வரும் (ஏதாவது வார்த்தை சரிசெய்யவேண்டும் என்றால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும். இதன் தேவை கட்டுரையை படிக்கையில் புரியும்).

அது (தசாவதாரம்) ஒரு சிக்கலான விஷயத்தை எளிமையாக சொல்லப்பட்டது. கேயாஸ் தியரியை நான் ஒரு தீர்வாக உபயோகிக்கவில்லை. ஒரு (விஞ்ஞான) தத்துவமும் (இல்லை கோட்பாடும்) தீர்வாக கருதமுடியாது. சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவித்தது. டார்வினிஸமும் ஆட்சேபத்திற்குரியதாகிவிட்டது. நான் கேயாஸ் தியரியை நாம் வாழும் ஒழுங்கற்ற உலகினை விளக்குவதற்கு உபயோகித்துள்ளேன். தோற்றத்தில் தீங்கற்றதான ஒன்று எதிர்காலத்தில் எதிர்பார்க்கமுடியாத பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது முன்னரே பட்டர்ஃப்ளை எஃபெக்ட் போன்ற படங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. எனது, ஒரு புதிய விளக்கம்.

இனி அறிவியல்:

வாக்கியம் ஒன்று: சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவித்தது.

அறிவியல்: சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவிக்கவில்லை. நியூக்ளியர் ஃபிஷன் (nuclear fission) எனப்படும் அணுக்கரு இரண்டாக சிதைவுறுதல் பற்றி லைஸ் மயிட்னர், ஓட்டோ ஹான் மற்றும் ஃப்ரிட்ஸ் ஸ்ட்ராஸ்மன் (Lise Meitner, Otto Hahn and Fritz Strassmann) போன்றோரின் ஆராய்ச்சி புரிதலினாலும், பிறகு, சார்ந்த பொறியியல் விஷயங்களும் வேண்டிய பணமும் குண்டு தயாரிக்க வேண்டிய தேவையும் (உலகப்போர்) தான் அணுகுண்டை விளைவித்தது. நியூக்ளியர் ஃபிஷன் இல்லையெனில் அணுகுண்டு இல்லை.

கமல் சார் கூறிவிட்டாரே என்றில்லாமல் எப்படியாவது சார்பியல் தத்துவத்தை அணுகுண்டுடன் சேர்க்கவேண்டுமெனில் இவ்வாறு செய்யலாம்: ஐன்ஸ்டீனின் நிறை-ஆற்றல் சமணே (E = mc^2) என்ற கூற்றின்படி ஃபிஷன் நடக்கையில் அணுநிறை எவ்வளவு ஆற்றலாக மாறுகிறது என்று கணக்கிடலாம்.அதனால் நிறை-ஆற்றல் சமண்பாடு அணுகுண்டின் ஆற்றலை ( power of a nuclear bomb) நிர்ணயிக்க உதவுகிறது எனலாம். இந்த நிறை-ஆற்றல் சமண்பாடு சார்பியல் கோட்பாட்டின் அஸ்திவாரங்களான நிலையான ஒளி வேகம் மற்றும் இயற்பியல் விதிகள் எந்த மாட்டேற்றுச்சட்டதிலும் (ரெஃபரன்ஸ் ஃப்ரேம்) மாறாத்தன்மை உடையவை போன்ற கூற்றுகளின் விளைவு எனக் கூறலாம்.

அதேபோல சிறப்பு சார்பியல் கோட்பாட்டை வைத்து சார்பியல் வேகத்தில் பயணிக்கையில் அடிப்படை துகள்களின் அரைவாழ்வில் (half life) ஏற்படும் சிறு மாற்றங்களை கணக்கிடலாம் (நியூட்டனின் விதிகளை மட்டும் வைத்து வேகத்தை கணக்கிட்டு, ஆற்றலாக்கி, அரை வாழ்வை கணக்கிட உபயோகித்தால் தவறாக வரும்). இப்படிப்பட்ட கதிரியக்க துகள்களின் வாழ்வை பற்றி தெரிந்துகொள்வதால் ரேடியேஷன் ஷீல்ட் எனப்படும் கதிரியக்கம் வெளிவராமல் பாதுகாக்கும் மூடிகள் எவ்வளவு தடிமனாக இருக்கவேண்டும் என்பதை கணக்கிட உபயோகமாகும். ஆனால் இந்த சார்பியல் கோட்பாடு தரும் உபயோகம் இல்லாமலே அணுகுண்டு தயாரிக்க முடியும்.

வாக்கியம் இரண்டு: டார்வினிஸமும் ஆட்சேபத்திற்குரியதாகிவிட்டது.

அறிவியல்: டார்வினிசம் ஆட்சேபத்திற்குரியதாகிவிட்டதா? யாருக்கு? அதைபற்றி புரியாமல் ஆனால் பொதுஜனங்களிடம் நிறைய செல்வாக்குள்ளவர்களுக்கா?

இதுநாள்வரை டார்வினிஸத்திற்கு மாற்றாக வேறு ஒரு இஸமும் இருக்கும் உண்மைகளை (facts) டார்வினிஸத்தை காட்டிலும் திறம்பட, அறிவியல் முறைப்படி மொத்தமாக விவரிக்கவில்லை.

டார்வினிஸத்தின் அருமையை பெருமையை புட்டு புட்டு வைக்க எக்கச்சக்க நல்ல எளிமையான புத்தகங்கள் இருக்கிறது, ஆங்கிலத்தில். பேராசிரியர் எர்னஸ்ட் மெயர் எழுதிய வாட்  எவல்யூஷன் இஸ் ( What Evolution Is by Prof. Ernst Mayr) என்ற வெகுஜனாறிவியல் புத்தகத்தில் இருந்து தற்போது வேண்டிய பதிலை மட்டும் தமிழாக்குகிறேன்:

எவல்யூஷன் (பரிணாம வளர்ச்சி) உண்மையா?

எவல்யூஷன் வெறும் எண்ணமோ, கருத்தோ, பொதுக்கொள்கையோ இல்லை. அது ஒரு இயற்கையின் ஒழுங்கு, முறை. அந்த முறையின் தோற்றத்தை சரிபார்க்க, நிருபிக்க ஒருவராலும் தவறு என்று அருதியிடமுடியாத மலையளவு உண்மைகள், சான்றுகள் உள்ளன. நூத்திநாற்பது வருடங்களாக சேகரித்த இவ்வுண்மைகளின் நிறையை வைத்துப்பார்க்கையில், எவல்யூஷனை வெறும் விஞ்ஞான தத்துவ விளக்கமாகவும், சரிபார்க்க இயலாத கூற்றாகவும் இனியும் பார்க்க நினைப்பது உண்மையிலிருந்து திசைதிருப்பும் செயல். எவல்யூஷன் வெறும் விஞ்ஞான தத்துவம் இல்லை. உண்மை.

டார்வினின் தியரி என்றால் என்ன?

இது தவறான கேள்வி. ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் என்ற அவர் புத்தகத்திலும் மற்ற வெளியீடுகளிலும் டார்வின் பல தியரிக்களை முன்வைத்தார். அவற்றில் ஐந்து முக்கியமானவை. இவ்வைந்தில் பரிணாம வளர்ச்சியும் (எவல்யூஷன்), பொதுபரம்பரை தத்துவமும் (theory of common descent) முன்வைத்த, ஆரிஜின் புத்தகம் வெளிவந்த (1859), சில வருடங்களில், இயற்கை விஞ்ஞானிகளினால் (பயாலஜிஸ்ட்) ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இதுதான் டார்வினின் முதல் புரட்சி. ஐந்தில் மற்ற மூன்றான கிராஜுஏஷன் (graduation) , ஸ்பீசியேஷன் (speciation) மற்றும் நேச்சுரல் செலக்‌ஷன் (natural selection) பிற்பாடுதான் 1940களில் எவல்யூஷன் சிந்தஸிஸ் ஏற்பட்டபின் ஒத்துக்கொள்ளப்பட்டது. இது டார்வினின் இரண்டாம் புரட்சி.

(புரிகிறமாதிரி தமிழாக்கம் மேலே சில வார்த்தைகளுக்கு எனக்கு தெரியவில்லை. பின்னூட்டத்தில் ஏதுவாக இருப்பதை எழுதினால் மாற்றிவிடுகிறேன்)

இத்துடன் விட்டு மூன்றாவது வாக்கியத்திற்கு செல்வோம்

வாக்கியம் மூன்று: நான் கேயாஸ் தியரியை நாம் வாழும் ஒழுங்கற்ற உலகினை விளக்குவதற்கு உபயோகித்துள்ளேன். (பின்னுள்ள வாக்கியங்களும் அடங்கும்)

கட்டுரை பெரிதாகிவிட்டதால், இதன் சரியான அறிவியலை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

டாக்டர் கமல்ஹாஸன் வாயிலாக அறிவியல் – பாகம் 2 – கேயாஸ் தியரியும் வண்ணத்திப்பூச்சி விளைவும்