வசதி என்பது ஓய்வைப் பெருக்கிக்கொள்ளும் வழிவகையே. அவ்வோய்வைக் கிளரொளி களிப்புகள் எவற்றில் வீணடிக்கிறோம் அல்லது அவ்வோய்விலும் அதிகப்படியாக உழைத்துக்கொண்டிருக்கிறோமா என்பது அவரவர் கைகளில். பொதுவில் வசதியாய் இருப்பது என்பதன் இன்றளவிலான மத்யமர் மதிப்பீடு அன்றாட இல்லறப் பணிகளில் எத்தனையை ஒட்டுமொத்தமாக அவுட்சோர்ஸ் செய்ய முடியும் என்பதில் குவிகிறது அடங்குகிறது.
அன்றாட வீட்டுப் பணிகளைச் செய்ய ஆட்களைத் தற்காலிகமாக அமர்த்திக்கொள்ள வழிசெய்யும் ‘ஆப்’புகள் மதிபேசியில் உள்ளன. வீட்டிற்கு வெளியே செய்யவேண்டிய மாதாந்திர வருடாந்திர நுகர்பொருள் கொள்முதல் சந்தா கட்டண கவனிப்புகள் இவற்றிற்குத் தனி ஆப்பு சார்ந்த ‘படிக்கத் தெரிந்த’ ஆட்கள். வீட்டினுள் தானியங்கி வேக்குவம் உதவியோடு பெருக்கித் துடைக்க, காஸ் அடுப்பிலிருந்து கழிப்பறை வரை சுத்தம் செய்ய, டீப்-கிளீனிங் எனும் தூசி தும்மட்டைகளைக் கூரையில் சுழலும் மின்விசிறி இறக்கை மேற்புறம் வரை கைநீட்டித் துடைக்க, பாத்திரங்கள் தேய்த்துக் கழுவ, சப்பாத்தி மட்டும் போட (சப்ஜியும் செய்யத் தனி சார்ஜ்), இப்படி அனைத்திற்கும் ‘கர்ரா’ இந்தி பேசும் பீஹாரி அல்லது ஒடிஷா அடிப்பொடியுடன் தமிழாங்கிலயிந்தி பேசும் பணி ஆட்கள் தயார்.
வீடுகளில் துணி துவைப்பதைக் கைகளினால் மட்டுமே செய்யும் ஆட்கள் இன்றில்லை.
மேற்படி பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் வசதி படைத்த வர்க்கத்தினர் வீடுகளில் இன்று நிச்சயம் வாஷிங் மெஷின் உள்ளது.
துவைத்தவற்றை ‘அயர்ன்’ செய்யும் தெருமுனை இஸ்திரிக்காரரை மட்டும் எந்த ஆப்பும் விழுங்கவில்லை; அவரது கரி இஸ்திரிப் பெட்டிக் கன்னத்தில் மட்டும் ஜிபே க்யூஆர் ஸ்டிக்கர் பொட்டு இன்றளவில் திருஷ்டி கழியக் கூடியுள்ளது.
சலவைத் தொழில் இந்தியப் பகுதியில் நெடுங்காலமாக இருந்துள்ளது. அங்கவை சங்கவை காலந்தொட்டே இந்த வெள்ளாவிப் பொங்கவைப்பு இருந்திருக்கலாம். பெரும்பாலும் ஆண்களே செய்து வந்துள்ளனர். பொண்டாட்டி ஜாக்கெட்டைத் துவைக்கும் கணவன் ஜோக்குகள் சமீப நூற்றாண்டு சஞ்சிகைகளின் ஆணாதிக்கக் குழப்படி. நாடெங்கிலும் ஒரு காலத்தில் ‘தோபி’க்களும் அவர்களது ‘தோபி காட்’டுகளும் முழங்கியிருந்தன. இன்றைய டில்லியில் எஞ்சும் சிலவற்றில் ஒன்றான ‘தோபி காட்’ பகுதியை சென்ற ஆண்டு போயிருக்கையில் பார்வையிட்டேன். சில குடும்பங்கள் மட்டும் நடத்திவரும் இத்தொழில் அடித்துத் துவைப்பதற்குப் பாறாங்கற்களும் சவுக்குக் கட்டைகளும் சலவை வெள்ளாவியும் தகரக் கூரை வேய்ந்த திறந்தவெளிக் கட்டங்களில் மிகமிகச் சொற்ப ஜீவனத்துடன் இன்றும் செய்யப்படுகிறது என்று உடைந்த இந்தியில் விசாரித்துக் கேட்டு அறிந்தேன்.
டில்லியின் இந்த தோபி-காட் அருகில் உள்ள முகலாய காலத்திற்கு முற்பட்ட அக்ரசேன் கி பாவ்லி படிக்கிணறு பிரபலம். கட்டிடக்கலை பிரசித்தி ஒருபுறம் என்றால் இன்றைய டில்லி இளையோரின் ‘டேட்டிங் ஸ்பாட்’ இந்தப் படித்துறை. ஜோடிகளின் தற்படத் தாண்டவம். தோபி காட்டின் வெள்ளாவியில் தலைமுடி வெளுத்த நான் அக்ரசேன் கி பாவ்லி டேட்டிங் தளத்திற்கே லாயக்கற்றவன்; என் தற்படத்தில் துணைவியுமே அருகில் நிற்காமல் எஸ்கேப்.
இத்தனைக்கும் என்னுடன் கைகோர்த்து அமெரிக்காவில் ‘கமிட்மெண்ட் கூடை’யாக எங்கள் அழுக்குத் துணிதூக்கி ஒரு காலத்தில் காயின் லாண்டிரி பயன்படுத்தியிருக்கிறாள். போகட்டும். நிற்க.
அடுக்கக வளாகத்தில் தனியறையில் அணிவரிசையில் துவைப்பதற்கும் உலரவைப்பதற்கும் வைக்கப்பட்டிருக்கும் இந்த காயின் லாண்டிரி சமாச்சாரத்தைப் பயன்படுத்த சரியான சில்லறை வேண்டும். டாலர் நோட்டிற்கு கமிஷன் எடுத்துக்கொண்டு சரியான சில்லறை வழங்க அறைக்கு வெளியே ஏடிஎம் போலத் தனிக் கருவி இருந்தது.
துவைப்பறை அடுக்கக வளாகத்தின் அம்சமான பெண்களை சைட் அடிப்பதற்குத் தோதான இரண்டாவது பொது இடம். முதலாவது நீச்சல் குளம்.
இப்படி ஏற்படும் லாண்டிரிச் சந்திப்புகள் பிக்கப்பாகி டேட்டிங் சென்று ஜோடிகள் சில மாதங்களில் ஒரே வீட்டிற்குள் ஜாகை மாறி இருவர் துணிகளையும் ஒருவரே காயின் லாண்டிரியில் கொண்டுவந்து துவைப்பர். இந்திய ஜோடி என்றால் ஆண் வீட்டில் டிவி-விடியோவில் பழைய நாகேஷ் படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பான்.
தஞ்சை ஜில்லா தாத்தாவின் வசிப்பிட கிராமத்தில் வண்ணான் வீட்டிற்கு வருவது வாடிக்கை. தாத்தாவின் (துணி அனைத்தும் கதர் வெள்ளை நிறமே) ஐந்து முழம் வேட்டி (நாலோ எட்டோ அல்ல; ஐந்து முழம்), அணிகையிலேயே மூன்று தங்கப் பித்தான்கள் பொருத்த வேண்டிய (பட்டன் பட்டிகளில் இருபுறமும் துளைகளோடு இருக்கும்) தலையால் அணியும் ஜிப்பா போன்ற நீண்ட முழுக்கை சட்டை, உள்ளே உடம்பு தெரியும் மெலிசு துணி கைவைத்த பனியன், இவற்றை எண்ணி அவனுடைய அழுக்கு வெள்ளை தடி ஜமுக்காளத்தில் மடித்து அடுக்கிக் கட்டித் தலைமேல் வைத்துக்கொண்டு போவான். கணக்கு நோட்டைத் தவிர அவனிடம் வேறு உத்தரவாதம் எதுவுமில்லை; நம்பிக்கையே அன்றைய ரேட்டிங் முறை.
ஊரின் ஒருபுறம் ஓடும் குடமுருட்டி ஆற்றருகே வண்ணானின் அலுவல். வெள்ளாவியில் வைத்து சற்றே நீலமிட்டு வெளுத்து மொடமொடக் கஞ்சி சலவையில் அடுத்த வாரம் கொண்டுவருவான். கழுதை மேல் பொதியாக வைத்துச் சென்றதில்லை. பொதி கழுதைகளை பால்யத்தில் அரங்கத்தில் கொள்ளிடம் ஆற்று வண்ணான்கள் பயன்படுத்துவதை ‘வசந்த நகர்’ போகையில் கவனித்திருக்கிறேன்.
எவரெவர் துணிமணி என்பது நுனியில் சேராங்கொட்டை மையினால் குறிப்பிடப்பட்டிருக்கும். சேராங்கொட்டை மை வெள்ளாவியிலும் அழியாது; அந்நாளைய நிரந்தர மார்க்கர், அனலாக் பார்கோடு; ஒரு வேட்டியும் காணாமல் போனதில்லை. தாத்தா பெயரின் தொடக்க R எழுத்தைப் பார்த்த (ஊரில் இவர் மட்டுமே இந்த இனிஷியலில் துணி போட்டது போலும்) நினைவு. ஏன் ஆங்கிலத்தில் எழுதினான் என்றால் படிப்பறிந்து செய்யவில்லை அவனுக்கு அது இன்னார் என்கிற குறியீடு மட்டுமே. எகிப்திய ஹீரோகிளிபிக்ஸ் எழுத்தும் சார்ந்த பொருளும் போல.
வண்ணான் கணக்கு அழுக்கு நாற்பது பக்கம் நோட்டு இருக்கும். என் சித்திதான் எழுதிக் கணக்கு போடுவாள். காலேஜ் வரை படித்தவள். அவர் மகன் (என் மாமா) கணக்கில் வீக் என்று தாத்தா சித்தியையே இந்தப் பணியில் நியமித்திருந்தார். நான் ஒப்புக்கு. பியுசி பாஸ் பண்ணாத மாமா சிபாரிசில் வங்கியில் சேர்ந்து பலருக்கும் கோடிகளில் கடன் கொடுத்து ‘ஸோனல் மானேஜர்’ வரை உயர்ந்து ஓய்வுபெற்று ஆசார்யன் திருவடி அடைந்து விட்டார். இன்றுவரை கணக்கு-புலி சித்தி அகமாக்கி.
இந்த வண்ணானுடன் வரும் வண்ணாத்தியும் ஜோடிகளை உருவாக்குவதில் பங்களித்திருக்கிறாள். பக்கத்து ஊரில் போன மாசம் ‘வெளுக்கப்’ போயிருக்கையில் அங்கு பார்த்த அட்வகேட் வீட்டுப் பெண் திருமணத்திற்குத் தயார் சித்தி செல்லும் அதே ‘கும்மோணம் காலேசுல’ தான் அவளும் படிக்கிறாளாம் என ‘லேட்டஸ்ட்’ தகவல்களைப் பரிமாறி ஜாதகப் பரிவர்த்தனைகளை வீட்டுப் பெண்கள் வழியாகவே நடத்தித் திருமணம் வரை கொண்டுசென்று விடுவாள். விளைச்சலில் சில படி நெல் தானியங்கள் கேட்பாள். காயின் லாண்டிரி சில்லறை கமிஷன் போல. சந்தா இல்லை, ஸ்வைப் இல்லை, ஃபில்டர் இல்லை; இன்றைய எந்த டேட்டிங் ஆப்பும் அவளது வெற்றி விகிதத்தை எட்டவில்லை. ஆதிகால ‘டேட்டிங் ஆப்’ அவளே.
வீட்டிலேயே வாஷிங் மெஷினில் துவைக்கும் இன்றைய வசதி இருந்தும் ஓய்வில்லாத ஜென்ஸி பூமராங் ஜெனரேஷன் இளையோருக்கு ‘ஸேம் ஸேம் பிளவர் லைக்கிங்கா’ என்று எழுதிக் கேட்டு ‘மீட்’ பண்ணி ஜோடி சேரத் தனி ‘டேட்டிங் ஆப்’ தயவு அவசியப்படுகிறது. அமைந்துவிட்டதும் டேட்டிங்கில் சந்திப்பதற்கு இருபாலருமே அநேகமாகச் சலவைத் துணிகளில் வருவதில்லை. என் மகளிடம் அழுத்திச் சொன்னால் டேட்டிங்கிற்கு எனப் புதுத்துணி வாங்கிக்கொள்கிறாள். ஏதோ குளித்துவிட்டுப் போனால் சரி.
புதுத்துணியை ஒருமுறை அணிந்து ஒதுக்கும் ஃபாஸ்ட் ஃபேஷன் யுகத்தில் வண்ணானே இன்று அநேகமாய் வழக்கொழிந்துவிட்டான். வசதிகள் அதிகப்படுத்திய ஓய்வுகாலத்தைப் பெரும்பாலும் மதிபேசி மின்திரையை வருடிக்கொண்டிருப்பதில் செலவழிக்கிறோம். பெருக்கிக்கூட்டவும் பொருத்தம் பார்க்கவும் அவசியப்படுவதாகக் கருதப்படும் மதிபேசி ஆப்புகள் ஒரு வகையில் வண்ணானும் வண்ணாத்தியும் காயின் லாண்டிரி வழியே கரியும் கரெண்டும் எரித்து நமக்கு வைத்த ஆப்புகளே.
