புதிதாக எழுதுவதற்கு அமர்கிறேன்.

எதற்கு இதைச் செய்ய வேண்டும்?

தமிழில் என்றில்லை வடமொழியிலும் ஆங்கிலத்திலுமே எழுதப் பிடிக்கவில்லை. ஏன் என்று புரியவில்லை. எவ்வளவு ஆழமாய் சிந்தித்தாலும்… நேர விரயமே. சில மாதங்களாய்… பெரிதாக எழுதிக் குவிக்கவில்லை. பல கதைகள் கருத்துகள் மனத்தினுள் ஊறிக்கொண்டிருக்கின்றன. வெளிவரவேண்டிய உந்துதலை அளிக்க மறுக்கின்றன.

ரைட்டர்ஸ் பிளாக் என்பார்களே… அதற்கு முதலில் ரைட்டர் என்றிருக்க வேண்டுமே. அதுவே சரியா என்பதுமே புரியாதிருப்பதாலும் எழுதப் பிடிக்கவில்லையோ என்னவோ.

உலகின் மீது பரிவோ. பிழைத்தப் போ, என் எழுத்தை வாசிக்கும் அபாக்கியத்திலிருந்து என்று.

ஆழமாய் சிந்திக்காதே. தோன்றியதை எழுது என்று சொல்லிக்கொள்கிறேன். செய்யத் தொடங்குகிறேன்.

பரிணாமம், AI இவற்றின் இன்றைய நிலை என்ன என்று வாசிக்க வைத்திருக்கும் புத்தகங்களை அலசலாமா என்றால் வெளியில் மழையோசையினூடே பறவையொலிகள். தையல் பறவையும் மைனாவும் பழுப்பு வால் காக்கையும்… ஆ அது என்ன… காட்டுக்குயில். இன்னொன்று மீன்கொத்தி. கெக்கெலித்துச் சிரிக்கிறது. எழுந்து போய் நோட்டமிடுகிறேன். கரும்பச்சைக் காடு ஈரம்சொட்ட வெளிச்சப்படுகிறது. பறவைகள் ஒளிந்திருந்து ஒலிக்கின்றின. எங்கே… கண்டுபிடி பார்ப்போம். உற்று நோக்கினால்…

தலைப்பு முடிவிலா சுற்றில் ஜியென்பி பாட்டில் ஒன்று ஒலிக்கையில் எழுதியது. ஜயதி ஜயதி பாரத மாதா உதகீதா… இதை முடிக்கையில் சரஸசாமதானபேததண்டசதுர… என்று போய் இன்னொரு மணியின் தனி ஓடிக்கொண்டிருக்கிறது.

மனைவி காபி கேட்கிறாள். அவ்வளவே. பிறகு எழுதுவேன். கோர்வையாய் கோபமாய் கவனிப்பவர் கருதும் விதமாய்.

ஜயதி.