[ இந்தக் கட்டுரையை எழுதிக்கொடுத்த என்னுடைய பெயரின்றி (நல்ல வேளையாக?) தினமலர் கொத்துபரோட்டா வடிவத்திலும் வாசிக்க நேரலாம்.
நாத இன்பத்தில் முனைவர் நந்திதா ரவி ரூபக தாளத்தில் வழங்கிய சாரங்கா ராக வர்ணத்தில் நமது மார்கழி இசை விழாவின் ரசிகானுபவம் தொடங்கியது. வேறு கச்சேரிகளில் பழகிய கல்யாணி (வனஜாக்ஷி) பைரவி (விரிபோணி) ராக வர்ணங்கள் கேட்டாலும் பார்த்தசாரதி ஸ்வாமி சபா பிற்பகல் கச்சேரியில் விவேக் மூழிக்குலம் வழங்கிய வீணை குப்பய்யரின் பெஹாக் ராக வர்ணம் இன்னொரு அரிதான தேர்வு.
வர்ணம் தவிர்த்து மாலா சந்திரசேகர் குழலிசையில் ‘ஶ்ரீமன்நாராயண’ என்று பௌளி ராகத்திலும், பந்துலராமா ‘யோசனா கமலலோசனா’ என்று தர்பார் ராகக் கிருதியிலும், திருமெஞ்ஞானம் ராமநாதன் (உடன் பாண்டமங்கலம் யுவராஜ்) நாகஸ்வரத்தில் கௌளையில் தீக்ஷதரின் ‘ஶ்ரீ மஹா கணபதி ரவதுமா’ என்றும் ஆதித்யநாராயணன் கௌளிபந்துவில் தியாகையரின் ‘தரதியகராதா’ என்றும் தங்கள் கச்சேரிகளைத் தொடங்கிக் கொண்டனர்.
அகடெமியில் பிற்பகல் கச்சேரி செய்த ஆதித்யநாராயணன் விரைவில் முன்னனியில் ஒரு சுற்று வரப்போகிறார். தோடியும் காம்போதியும் அமர்க்களமாக ஆலாபனை செய்தார். தியாகையரின் ‘எந்துகு தயராத’ (ரூபகம்) கிருதியையும் ‘ஆனந்த நடனம் ஆடினார் ததிமி ததிமி என கனகசபையில்’ என்கிற பல்லவியை திஸ்ர திரிபுடை தாளம் நாலு களை சவுக்கத்திலும் இரு மொழிகளின் உச்சரிப்பு நேர்த்தியோடு செம்மையாகப் பாடினார். பல்லவியில் அனுலோமம் திரிகாலம் செய்து நிரவலுக்கும் ராகமாலிகை ஸ்வரங்களுக்கும் (பௌளி குந்தலவராளி ராகங்களில்) அவகாசம் வைத்து நேரத்திற்குத் தனி-ஆவர்த்தனம் விட்டுக் கச்சேரியை நன்கு நிர்வகித்தார்.
குரல் கார்வைகள் விறுவிறு நிரவல் கட்டமைப்பின் விதம் தனக்கு அடுத்து வயலினை அமர்த்திக்கொள்வது கைகளை அபிநயித்து ஆட்டுவது என்று போய் குறித்த இடத்தில் சபாஷ் சொல்வது வரை ஆதித்யநாராயணன் பத்தாண்டுகளுக்கு முன்னரான டி.எம். கிருஷ்ணாவை அப்படியே நகல் எடுத்துள்ளார். வெற்றிகரமாக. இக்கச்சேரியின் கஞ்சீரா இளைஞன் சுநாத் அரூருக்கு இரட்டை சபாஷ்.
ஆதித்யா பல்லவிக்கு முன் செய்ததை விட அடுத்த நாள் நாத இன்பத்தில் மாலைக் கச்சேரியில் பிரசன்னா வெங்கட்ராமன் தியாகையரின் ‘எவரிமாட்ட’ கிருதிக்கு முன் செய்த காம்போதி ஆலாபனை பிரமாதம். செவ்வியல் தன்மையும் பாவமும் நிதானமான கட்டமைப்பும் கற்பனையும் இளகிய வளமான குரலோடு கூட்டி பிராச்சீன ராகத்திற்கு நியாயம் செய்தார். ஆனால் இவர் கச்சேரியின் உயரொளி என்றால் போகிற போக்கில் பாடிய சரசாங்கி ராக ‘ஜெயஜெய பத்பநாப’ கிருதியும் வீரவசந்தம் ராகத்தில் ‘ஏமனி பொகடுதுகுரா’ தியாகையர் கிருதியும் அவற்றிற்கான மதுரைமணிப் பாங்கான விறுவிறுப்பான ஸ்வரகல்பனைகளுமே.
இவ்வகை உயரிசை விருந்து சராசரி சீசன் கூட்டத்தினரின் குவிப்புலத்திற்கு வெளியே இலவசமாக வழங்கப்பட்டு உதாசினமாகிச் செல்வது மார்கழி விழாவின் தவிர்க்கவியலாத் துயரம்.
‘சேடஶ்ரீபாலகிருஷ்ண’ கிருதிக்கு முன் வந்த பிரசன்னாவின் ஆலாபனையை விட அகடெமி காலைக் கச்சேரியில் ராமநாதன் நாகஸ்வரத்தில் வாசித்த துவிஜாவந்தி ஆலாபனை அபாரம். சத்தான சாறு பிழிந்து பருகக் கொடுத்து சௌககாலத்தில் ‘அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்’ என்று கிருதியை இரட்டை நாயனங்களும் இணைந்து தொடங்குகையில் நொடிப்பொழுது மனத்திலெழும் ஆன்மீகச் சிலிர்ப்பு ஒரு கொடை. அதன் தாக்கம் கேண்டினில் ‘இளநீர் இட்லி’யைச் சுவைக்கும் வரை நீடித்தது.
*
முதல் வாரம் முடியும் முன்னரே மூன்று நான்கு கல்யாணி ஆலாபனைகள் ஆயிற்று (கல்யாணியில்தான் எத்தனை பரிமாணங்கள்!) தோடி காம்போதி-களும் முடித்து சங்கராபரணம் எங்கே என்கையில் மோஹனமும் கரஹரப்பிரியாவும் விஸ்தாரமான ஆலாபனைகளாகக் கேட்கக் கிடைத்தது ராக சுதா அரங்கில் எம்.ஏ. சுந்தரேசன் எம்.ஏ. அனந்தகிருஷ்ணன் இணைந்து வழங்கிய ‘பரூர் பாணி’ இரட்டை வயலின் கச்சேரியில். இலவசமாய் இவ்வகை ‘சக்கனி ராஜ மார்க’ங்கள் அழைக்கையில் சாக்கடைச் சந்துகளுக்குள் ஏன் ரசிகர்களாய் நாம் திண்டாடவேண்டும். மெயின் உருப்படி கிருதியில் தியாகையரும் அன்றே அங்கலாய்த்திருக்கிறார்.
வயலினில் சுந்தரேசன் ஆகட்டும் மற்றொரு நாள் வேரொரு அரங்கில் குழலிசையில் சிக்கில் மாலா சந்திரசேகர் ஆகட்டும் முந்தைய தலைமுறையினருக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட கச்சேரி நேரத்திற்குள் எடுத்துக்கொண்ட அனைத்து ராகங்களையும் கோடிகாட்டும் ஆலாபனைகளுக்கும் ஓரிரண்டில் கிருதி வரிகளில் விஸ்தாரமாக நிரவல் செய்வதற்கும் ஸ்வரகல்பனைக்கும் நிறைய அவகாசம் கிடைப்பது எப்படி.
*
விவிஎஸ் பௌண்டேஷன் சாமா ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் ஒன்றரை மணிநேர ‘ஏகாந்த வரிசை’க் கச்சேரிகள் காலை ஆறு மணிக்கு மைலாபூர் சுந்தரேசன் தெருவில் நடைபெறுகிறது. ஆட்டோ பிடித்து சென்னைச் சாலைகள் இவ்வளவு அகலமானவையா என வியந்தவாறு ஆஞ்சநேயர்-ராகவேந்திரர் கோயிலடைந்து உள்ளே அம்புக்குறியிடப்பட்ட தரையில் வலமாக நடந்து சுவரோரம் அமர்கிறேன். அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் மைக் ஸ்பீக்கர் மேடைகள் இன்றி மிருதங்கம் முகர்சிங் பக்கவாத்தியங்களுடன் இரட்டை வீணைக் கச்சேரி நேரத்திற்குத் தொடங்கிவிட்டது.
நாட்டை ராக ‘மஹாகணபதிம்’ கிருதிக்கு அடுத்து ஆபோகி ராகத்தில் ஆலாபனை. தும்மல் இருமல்கள் கார்வைகளை அமிழ்த்திவிடும் அபாய அமைதியினூடே இரண்டு வீணைகளிலும் ராகம் நன்றாகவே வடிவமைந்து ஒலித்தது. ஐயர் சகோதரர்கள் ஆஸ்திரேலிய மெல்போர்ன் வாசிகள். சீசனுக்குத் தவறாமல் வந்து வாசித்துச் செல்கின்றனர். மெயின் உருப்படி கல்யாணி ராகத்தில். முகர்சிங்கும் வீணையும் இரட்டைத் தந்தி வாத்தியங்கள் போல ஸ்ருதியும் லயமும் இணைந்து வழங்கிய கிருதி வடிவம் இவ்வகை ‘சேம்பர்’ இசையரங்கிலேயே கேட்கச் சாத்தியம்.
சுற்றம் அதிகாலை அரையிருட்டிலிருக்கையில் மனத்தினுள் கலைத்தெய்வம் மட்டும் பிரகாசமாய் வியாபிக்க வாய்ப்பதிகம். வெளிச்சம் ஏறியதும் அறையின் குறுக்காய்த் தரையில் பாயும் மின்சார ஒயரும் ராகவேந்திரர் படத்தின் கோணலும் மனத்தின் லௌகீக விமர்சனப்புலத்தை வியாபிக்கத் தொடங்க விடைபெற்றேன்.
இதே ஆர்கனைசர்கள் ‘மங்கல இசை விழா வரிசை’ என அருகிலேயே கேசவ பெருமாள் கோயில் தெருவில் பத்து நாட்களுக்குக் காலை ஏழரை மணிமுதல் நாகஸ்வரக் கச்சேரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். காலணி அகற்றிக் கால்கள் கழுவிக் கால்சிராய் ஈரம் கலையாமல் ஜமக்காளத்தில் சம்மனமிடுகையில் மாம்பலம் துரையும் சைதை வெங்கடேசனும் வர்ணம் முடிந்து துடுக்குகல என்று தியாகையரின் பஞ்சரத்ன கௌளை ராகக் கிருதியைத் தொடங்கிவிட்டிருந்தனர்.
இயல்பில் ஓங்கியொலிக்கும் நாகஸ்வர செட்டிற்குத் திறந்தவெளித் திடலே சரி. கோயில் வளாகம் வேண்டிய ஆன்மீகப் பின்புலத்தை அளிக்கிறது. ஆஞ்சநேயர் கோயிலில் என்னோடு ரசிப்பதற்கு முட்டி மடக்கிச் சம்மனமிட முடியாத நான்கைந்து வெள்ளைக்காரர்களும் சில வெள்ளைத் தலை மைலாப்பூர் வாசிகளும் இருந்தனர். இங்கு என் துணைக்கு ஒரு வெள்ளைக் காகம் மட்டும்.
நாகஸ்வரம் கண்கள் மூடிக் கன்னம் புடைக்க கானமூர்த்தி ஆலாபனையில் ஆழ்ந்திருந்தார். தொடர்ந்து கானமூர்த்தி என்று வேணுகான மூர்த்தியை விவரித்து தியாகையரின் ஆதி தாளக் கிருதி.
அன்று அகடெமியில் ராமநாதன்-யுவராஜ் நாகஸ்வரத்தில் வழங்கிய ஜெயந்தசேனா நாட்டைகுறிஞ்சி (பல்லவிக்கு முன்னர் செய்த) ராக ஆலாபனைகளும் இங்கு வழங்கப்பட்ட கானமூர்த்தி கௌரிமனோஹரி (மெயின் உருப்படி) ராக ஆலாபனைகளும் சீசன் முழுவதும் காத்திருந்தாலும் மீண்டும் அமைவது அரிது. வடபழனி வடிவேலும் வேதாரண்யம் ரமேஷும் செய்த இரட்டைத் தவில் தனி ஆவர்த்தனம், ரூபக தாளத்தில் இரண்டு நாட்களுக்குள் நான் கேட்டதில் மூன்றாவது. பக்தர்களும் இன்றி ஆலய வளாகமே வெறிச்சோடியிருக்க அந்தக்கால அரசனைப் போல அமர்ந்து (திண்டு மிஸ்ஸிங்) ரசித்தேன்.
*
அடுத்த சுற்றில் காதில் விழும் சாவேரி தன்யாசி வசந்தா போன்ற ராக ஆலாபனைகளைக் கடந்து மாலா சந்திரசேகர் குழலிசையில் வழங்கிய மலையமாருதம், எம்.ஏ.சுந்தரேசன் வயலினில் வழங்கிய குமுதக்கிரியா (கிருதி அர்த்தநாரீஸ்வரம்), விவேக் மூழிக்குலம் வழங்கிய கன்னடா (கிருதி ஶ்ரீ மாத்ருபூதம்) போன்ற ராக ஆலபனைகளைத் தரமான வெளிப்பாடுகளெனக் குறிப்பிடலாம்.
சேர்த்தலை முனைவர் ரங்கநாத சர்மா பா.சா. ஸ்வாமி சபாவில் மாலைக் கச்சேரியில் அரிய எழுபத்தியொன்றாவது மேளகர்த்தா கோசலம் ராகத்தில் (கோடீஸ்வரின் கிருதி காகுகா) வழங்கிய ஆலாபனை நல்ல முயற்சி. இந்தச் சம்பூர்ண ராகத்தினுடைய ஸ்வரங்களை ‘ரிமதநி, பதபகஸ’ என்று பிரித்து விரிக்கையில் வேறு ஜன்ய ராகங்கள் ஒலிப்பது பரவாயில்லை, கோசலத்தின் உருவம் என்னவென்றே புரியாமல் போவது தோல்வி.
இம்முயற்சியுடன் ஒப்பிட்டால் இதே சபாவில் மறுநாள் மாலைக் கச்சேரியில் முனைவர் பந்துல ராமாவின் அரிய ‘சௌவீரம்’ ராக (சுவர்நாங்கி என்றும் சொல்வர்) ஆலாபனை நேர்த்தியானது. நாற்பத்தியேழாவது மேளகர்த்தாவின் வடிவத்தைக் குலைக்காமல் ‘சரஸசௌவீர’ எனும் தீக்ஷதர் கிருதியின் சிட்டைஸ்வரங்களின் அமைப்பிலிருந்தே ராக ஆலாபனையை வடிவமைத்து விரித்தது இவரது செவ்வியல் பாண்டித்தியத்தின் சான்று. வசந்தா சுத்ததன்யாசி பேகடா என்று கச்சேரியில் அனைத்து ராக ஆலாபனைகளும் தரமாக அமைந்தன. பேகடாவில் கண்டஜாதி திரிபுடையில் கண்ட நடையில் அம்பாள் மேலான பல்லவியை (அமைத்தது வயலின் வாசித்த எச்.எஸ்.என். மூர்த்தி, பலே) நிரவல் அனுலோமம் திரிகாலம் என்று விரித்து, சஹானா ஹிந்தோளம் வராளி என ராகமாலிகை செய்து முடித்தார்.
*
அகடெமியின் மார்கழி விழா தொடக்க நாள் இரவு வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை மிருதங்க வித்வான் அருண் பிரகாஷ் வழங்கினார். மேடையில் இரட்டைத் தம்பூராக்களோடு அரைவட்டமாகப் பலவர்ணப் பட்டாடைகளில் பதினாறு இளைய தலைமுறைக் கலைஞர்கள் வயலின் குழல் நாகஸ்வரம் வீணை சித்திரவீணை முகர்சிங் மிருதங்கம் கடம் என (தவில் காணுமே?) ஆண் பெண் பாடகர்களோடு இணைத்துப் பாட்டிசையும் இடையிசையும் தனித்தனியே அமைத்துப் பலவித வகைகளில் (சிறுபாட்டு, அபங், பல்லவி, தில்லானா போன்ற) இசைவடிவங்களை இடைத் தனி ஆவர்த்தனங்களோடு வழங்கினர். மேடை சட்டென திருவிளையாடல் ‘ஒரு நாள் போதுமா’ பாடல் காட்சியை நினைவூட்டியது. கேட்டு ரசிக்க ஓர் இரவு போதாது.
‘பின்னொரு இரவினேலே’ என்று தொடங்கிய பாரதியார் பாட்டும் ‘வாழ்வினில் அனைவருக்கும் பிரதானமானது மனிதநேயம்’ என்கிற கண்டஜாதி திரிபுடைத் தாளப் பல்லவியும் இந்நிகழ்ச்சியின் உயரொளி. பல்லவியில் ‘பிரதானமான’ என்பதற்குத் தமிழ்ச் சொல் பொருத்தியிருக்கலாம். பாடகர் ‘அனிவருக்கும்’ என்கிற உச்சரிப்பையும் தவிர்த்திருக்கலாம்.
கொண்ணக்கோல் சொல்லித் தனி-யையும் நிகழ்ச்சியையும் பிரமாணம் பிசகாமல் வழிநடத்திய அருண் பிரகாஷிடம் சிறந்த இசையமைப்பாளர் அகமலர்ந்துள்ளார். அன்று காலையே அனைவரும் ஒருசேர ஒத்திகை பார்க்க முடிந்ததாம். அவர் கூறிய தகவல் ஆச்சர்யப்படுத்தவில்லை. நமது செவ்வியல் இசை வடிவின் பலம் அதுதானே. முறையாகக் கற்றுக் கொண்ட எந்த இருவரும் அன்றே சந்தித்த மேடையில் இணைந்து இசைந்து பரிமாற முடியுமே. மார்கழி மேடைகளில் இளைய தலைமுறை அடுத்த கட்டத்திற்கும் காலங்களுக்கும் வேறு வடிவங்களில் அவ்விசையைச் செவ்வியல் பண்புகள் குறையாமல் எடுத்துச் செல்வது சால்பே. பலே.
அருண் நரசிம்மன்
*
இந்தக் கட்டுரையை எழுதிக்கொடுத்த என்னுடைய பெயரின்றி (நல்ல வேளையாக?) தினமலர் கொத்துபரோட்டா வடிவத்திலும் வாசிக்க நேரலாம்.
இப்பதிவில் மேலே முழு வடிவக் கட்டுரையிலுள்ள கருத்துகளுக்கும் தவறுகளுக்குமே நான் பொறுப்பு. விளக்கங்கள் வேண்டுமென்றால் வழக்கம் போல மின்னஞ்சலில் எழுதிக்கேளுங்கள்.
நன்றி.
அருண் நரசிம்மன்.
*
*







