வீடு வரை வந்து விண்ணப்பித்தனரே என்று நிறைய தயக்கங்ககுளுக்குப் பிறகு எழுதிக்கொடுக்கச் சம்மதித்து நாள்தோறும் செய்யாமல் தொகுப்பாய் அளிக்கிறேன் என்று சொல்லி மூன்று நான்கு அரைப்பக்கக் கட்டுரைகளுக்குச் சம்மதித்திருந்தேன்.
ஆயிரம் சொற்களுக்கு மிகாமல் என்பதால் 980 சொற்களில் வெள்ளி காலையே அனுப்பிவிட்டுத் திருத்தங்களோ விளக்கங்களோ சுருக்கங்களோ தேவையென்றால் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லியிருந்தேன். மதிபேசியில் எடுத்திருந்த படங்களையும் (9) அனுப்பியிருந்தேன்.
ஞாயிறு இதழ் வெளிவரும்வரையிலும் வந்த பின்னரும் எவரும் தொடர்பு கொள்ளவில்லை.
இன்று காலை ஆறு மணி கச்சேரி கேட்டு முடித்து வந்ததும் இணையத்திலும் அச்சுப் பதிவிலும் கவனித்தேன். வந்துவிட்டிருக்கிறது கட்டுரை.
ஐயகோ.
தொடக்கம் எனும் தழிழ்ச் சொல்லை ‘துவக்கம்’ என்று திருத்துவதில் தொடங்கிக் கண்ட இடங்களில் கண்டமேனிக்கு வெட்டியெறிந்து (பிரசன்னா வெங்கட்ராமனுக்கான) பாராட்டை எதிர் விமர்சனமாக்கி, (ஆதித்யாவிற்கான) விமர்சனத்தை சபாஷாக்கி… இப்படியே போய் ஒரு விமர்சனத்தைச் சுருக்கி அடுத்த விமர்சனத்தில் இருந்து வரிகளை இதனுடன் சேர்த்து… உட்கருத்துடனான என்னுடைய ‘ரிடாரிக்கல்’ வினாவிற்கு இவர்களே நான் கேட்காமல் தவறாக விடையளித்து… நான் எழுதிய வரிகளைக் குலைத்து நிராகரித்து நீக்கி… நான் எழுதாத வரிகளைச் சேர்த்து… நாகஸ்வரக் கச்சேரி நடந்தது பெருமாள் கோயிலில், ஆஞ்சநேயர் கோயிலில் இல்லை… (பைதிவே, கோயில் என்பதே தமிழ்ச் சொல் கோ+இல் = கோயில் அதாவது அரசனோ அதிபதியோ இருக்கும் இடம். கோவில் என்பது சரியான தமிழ்ச் சொல் இல்லை, ஆஞ்சநேயர் ‘கோவில்’ என்று நான் எழுதிக்கொடுத்திருக்கவில்லை), நாகஸ்வரக் கச்சேரிக்கு என்னுடன் வராத வெள்ளையர்களை வந்ததாகச் சொல்லி, ஆனால் என் துணைக்கு வந்த வெள்ளைக் காகத்தைக் கொலை செய்து கொத்து பரோட்டா போட்டு… இவர்கள் இவ்வளவு நகைச்சுவையுணர்வு அற்றவர்களுமா… எவ்வளவு தான் புலம்பலாம், இன்னொரு கட்டுரை நீளத்திற்கா?
தாண்டவமாடிவிட்டிருக்கின்றனர்.
*
அச்சு இதழில் என் பெயருடன் வந்து தொலைத்திருக்கும் வடிவத்தைக் கீழே அளித்துள்ளேன். தினமலர் இணைய இதழ் வடிவத்தை நல்லவேளை என் பெயருடன் பிரசுரிக்கவில்லை (நன்றி).
நான் அனுப்பியிருந்த கட்டுரையின் முழு வடிவத்தை இங்கு அளித்திருக்கிறேன். பொறுமையும் அவகாசமும் இருப்பவர்கள் என் கட்டுரையின் முழுவடிவத்தையும் தினமலர் கொத்து பரோட்டா வடிவத்தையும் வாசித்து ஒப்பிட்டு மாய்ந்துகொள்ளுங்கள்.
சம்பந்தப்பட்ட கலைஞர்களும் ரசிகர்களும் என் முழுக்கட்டுரையை மட்டும் வாசித்துவிட்டு அங்குள்ள பிழைகளுக்கும் விமர்சனத்திற்கும் என்னிடம் வழக்கம்போலச் சண்டை பிடிக்கலாம். விளக்கங்கள் அளிக்கிறேன்.
*
காலை நாலரை மணிக்கு எழுந்து ஆறுமணி முதல் இரவு ஒன்பதரை வரை ஆறு ஏழு கச்சேரிகள் கேட்டு ரசித்துக் குறிப்பெடுத்து வடிவமைத்து… செய்வனத் திருந்தச் செய் என்று இரவெல்லாம் திருத்திச் செதுக்கி… போங்கய்யா… ஐஐடி என்பதையே ஐடிஐ என்று தலைப்பில் வழங்கும் தினமலர் எடிட்டர்களிடம் வேறு எப்படி எதிர்பார்த்தேன்?
ஆங்கில நாளிதழ்களில் ஒரு வகை அலட்டல் என்றால் தமிழ் நாளிதழ்களில் இவ்வகை உதாசீனங்கள் ஓயவே இல்லை.
கைநீட்டி காசு வாட்டீல்ல… ஊது-ன்னா ஊத வேண்டியதுதானே என்கிறீர்களா… புத்தகங்கள் உட்பட இதுவரை எழுதிய எந்தத் தமிழ் எழுத்திற்கும் நான் காசு வாங்கியதில்லை.
இப்ப என்ன குடியா முழுகிப்போச்சு… நொடிக்கு நூறு பேர் உலகெங்கிலும் அநியாயமாக இறக்கின்றனர், இது ஒரு மேட்டரா என்கிறீர்களா… இல்லைதான். உங்கள் குழந்தை உங்கள் கண் முன்னால் இறந்து போகையில் இதையே சொல்லிக்கொள்ள முயலுங்கள் (காட்டமாகவே சொல்கிறேன். மன்னியுங்கள். வாசிக்கும் எவருக்கும் இந்நிலை வரவேண்டாம்.)
*
நன்றி
அருண் நரசிம்மன்
