போனமுறை, இல்புறம் முடிக்க 108 நாட்கள் எடுத்தும், என் வாழ்த்துக்களைச் சொல்ல மறந்த பாவத்திற்குப் பிராயச்சித்தமாய் சிறுகதை புத்தகத்தை ஒரே நாளில் படித்துமுடித்து, மீண்டு, களைப்பாறி, இப்போது என் பிரமிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிக்கைகளின் 1100 வார்த்தைத் தலையணையில் திணிக்கும் கட்டாயம் இல்லாமல் சுதந்திரமாய், சாவகாசமாய் கதையைச் சொல்லியிருப்பது, உன்னுடைய எழுதும் பாணிக்கு வசதியாக இருக்கிறது. (எங்கள் தலைமுறைதான் முற்றத்தில் பாட்டியின் விசாலமான கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள் என்று நினைத்தேன்!)
உனக்கென்ற தனி பாணி நிச்சயமாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்டாய், (சுஜாதாவின் வாசனை முத்தம்மாவின் வாசனையைப்போல் பரவலாக வியாபித்திருந்த போதிலும்…) ‘வெந்த உருளைக்கிழங்கு’ ஶ்ரீரங்கத்துக் கதைகளில் படித்தால், இடைச் செருகல் என்ற உணர்வு, சுஜாதாவிற்குக்கூடத் தோன்ற வாய்ப்பில்லை.
ஒரு காட்சியின் முப்பரிமாணங்களையும் ஒரேவரியில் கொண்டுவரக்கூடிய அபாரத் திறமை, உப நதிகளும், கிளை நதிகளும் சேர்ந்து, பிரிந்து ஓடும் பெருநதியைப் போல், சிறுகதையைக்கூட நடாத்திச் செல்லும் சாகசம், சிந்திக்க வைக்கும் சிறப்பான கருத்துகள், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், தவறாமல் கஜுராஹோவிற்கு இடம் (சில சமயம் குத்தகை), ஆங்காங்கே வெளிப்படும், பரந்த அறிவின் ஒளிக்கீற்றுகள், இழையோடும் ஹாஸ்ய ஏளனம் – இவை எல்லாம் உன் தனித்துவமான பாணியின் அம்சங்கள்.
அழகான, நேர்த்தியான தமிழ். பட்டப்பா கல்யாணத் தளிகையில், பாயா கரி வாசனை போல் திடுக்கிட வைக்கும் சில சொற்றடர்கள். (மல்டிக்யுஸீன் அனுபவஸ்த்தர்களுக்கு நிச்சயமாக ரசிக்கும்.)
இந்த தொகுப்பின் சிறப்பு வெரெய்ட்டி. குறுநாவல், நாடகம், ப்ரெஞ்ச் மொழியிலிருந்து தமிழாக்கப்பட்ட சிறுகதை (தரிசனம் அப்படித்தான் தோன்றுகிறது- மசாலா பீட்ஸா மாதிரி),கொஞ்சம் தத்துவம், பேய்க்கதை- எல்லாமே தனிச்சுவை. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் படித்திருந்தால், சில பகுதிகளை இன்னும் ரசித்திருப்பேன். ரகசியமாக.
இலக்கிய அரங்கத்தில், மேடையில், உனக்கு நாற்காலி போடப்படுகிறது.
*