‘எட்டணாவில் உலக ஞானம்‘ என்கிற சிறுகதைகள் புத்தகத்தை வாசித்ததில் எழுந்த சில கருத்துகள்.
பிட்ரேயல் லெட் டௌன் சரியான தமிழ்ச்சொல் தெரியவில்லை. கைவிடப்படல்/கைவிடப்பட்ட நிலை என்று வைத்துக் கொள்வோம். அது செயலாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ஒரு பார்வையில், உடல்மொழியில், சொல்லில், ஒரு பிரச்சனையை நேர்மையற்று எதிர்கொள்வதில் இருக்கும் சிறுமையில் வெளிப்படலாம். அதை செய்வது நாம் மிகவும் நம்பும், நம் ஆதர்சமாக நினைக்கும், வாழ்வில் இணைந்து வரும் ஒருவர் என்றால் அப்போது தொண்டையில் எஞ்சுமே ஒரு கசப்பு அதைத் துப்பிவிட்டு அப்படி எதுவும் நடவாதது போல் மேலே செல்வது எளிதல்ல.
வெகு இயல்பான அன்றாடங்களோடு எந்த ஒரு அபத்திரமான சூழலும் ஏற்பட வாய்ப்பில்லாத வாழ்க்கை. அதை வாழும் இயல்பான கதாபாத்திரங்கள். ஆனால் கைவிடப்படலின் கசப்பை விலகலை கேசவம், ஹம்சா, ராமா நீ சமான மெவரு கதை சொல்லி என்று அனைவரும் வேறு வேறு விதமாக எதிர்கொள்கிறார்கள். எதிர்கொள்ளும் நேரம் நிலைகுலைந்து பின் சில நியாயங்களைத் தர்க்கங்களைத் தங்களுக்குள்ளாகவே பேசி கடந்து செல்ல முயல்கிறார்கள். ஆனால் கசப்பின் வண்டல் முற்றிலும் போய்விடுமா என்பது உறுதியில்லை. நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு கசப்பு ஏற்படும் எனில், அது அளிப்பது நெருங்கியவர்கள் என்று நினைப்பவர்களிடமிருந்து கூட ஒரு விலகலை. அப்படியான அனுபவத்துக்குப் பின், சந்திக்கும் ஒவ்வொருவரையும் கவனமாக எடை போட தொடங்கி விடுவோம். அது பெருஞ்சுமை. அதன் பின்னர் அனைத்து உறவுகளும் ட்ரான்சாக்ஷனலாகப் போகும். ஆனால் சக மனிதர்களின் சிறுமைகளை கடந்து செல்ல முடிந்தவர்கள் உண்மையாகவே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
மேடலைன் பெர்னாட் வேறு ரகம். மேடலைனுக்கு பால் கவ்கினைப் பிடித்து இருக்கிறது. என்றாலும் தான் விரும்பும் ஒருவன் தன்னுடைய ஏற்பையோ மறுப்பையோ அறிய முற்படாமல் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த முனைந்தால் அவள் அவன் மேல் வைத்திருக்கும் மதிப்பு அகன்று அருவருப்புதான் வரும்.
ஆனால் மேடலைனுக்கு பால் கவ்கினிடம் வருவது பரிதாபமும், கருணையும். அப்படி ஒரு பரிவையும் கருணையையும் காட்டுவது எல்லாருக்கும் இயன்றதல்ல. அவன் அதை உணரும் நொடி அவனுக்கான தரிசனம் கிடைத்து விடுகிறது.
“அமைந்த சந்தர்பத்தில் அறிமுகமற்ற நபருடன் நிகழ்ந்து விடும் இனிமையான உடலுறவு பெண்களுக்கு அதிகக் கிளர்ச்சியை அளிக்கலாம்.” அப்படியா? இது யாருடைய அவதானம்?
Male gaze – பெண்ணுடல் சதா நோக்கப்படுவதாக வரும் சித்தரிப்புகள் சலிப்பூட்டுகின்றன. சொல்லப் போனால் கதையின் வேகத்தையும் சுவையையும் குறைக்கின்றன. அதே போல் மொழி விளையாட்டும்.
வேலையில் ஒரு தான் விரும்பும் இடத்தை அடைய தங்களையே பகிரும் பெண்கள் அரதப்பழசான ஒன்றில்லையா? குருநிந்தனை கூடாது என்ற தத்துவ தரிசனத்தை வேறு சம்பவங்களை வைத்து சொல்லியிருக்க முடியாதா? இல்லை இசையா இரவில் புரபசரை தவறிழைக்க வைத்து இதில் ஆண் பெண் பேதமில்லை என்று எழுதியிருப்பதாக எடுத்துக் கொள்வதா?
ஆனால், சிஸ்கோ கேசவத்திடம் சொல்லும் இந்தச் சொற்களிலும் உண்மை இல்லாமல் இல்லை.
“ஏன் அதையே கேட்கிறாய். யோசி. திருமணமாகி இருபது ஆண்டுகள். குழந்தைகள் கல்லூரிச் செலவு முடியப் போகிறது. வங்கியில் சேமிப்பு. வாழும் சிற்றூரில் ஜீனியஸ் ஸோல்டனின் மனைவி என்கிற மரியாதை … ஏன் இவற்றை மேரி இழக்கப் போகிறாள். மேரி கண்டுகொள்ளப் போவதில்லை. ஸோல்டனுக்கும் தெரியும்.”
குடும்பம் என்ற அமைப்பு இன்னும் பெரிதாக ஆட்டம் காணாமலிருக்க இவ்வகை கணக்குகளும் காரணம் தான். மேரி போன்ற பெண்களுக்கு, உபயோகப்படுத்தப்படும் சக பெண்கள் மீதும் மதிப்பில்லை. தங்கள் மீதும் மதிப்பில்லை.
முத்தம்மா தனி வகை. எல்லாருக்கும் இதம் தரும் ராம்கிகள் தான் எல்லாவற்றையும் இனிமையாக்குகிறார்கள். ஆனால் ராம்கியாய் இருப்பது சிரமம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பாட்டி தந்த பரிசில் நடப்பது போல் நடக்கும் என்றே நான் நம்புகிறேன்.
ஏன் நகரெங்கும் ஜீரியாட்ரிக் கேர் சென்டர்கள் முளைத்திருக்கின்றன என்பதற்கான விடையை எட்டணாவில் உலக ஞானம் சொல்கிறது.
மங்கை.
*
அன்புள்ள வாசகி மங்கை அவர்களுக்கு
சிறுகதைகளின் வாசிப்பிற்கு நன்றி. கோர்வையான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்ததற்கும் நன்றி. ஒரு நூலை அறிமுகம் செய்து பேசுவதற்கு அடுத்த தருணத்தில் உங்களை அழைக்கலாம் என்பது வாசிப்பிலும் பரிசீலித்து வழங்கும் கருத்துகளிலும் தெரிகிறது. உங்களைப் போன்றோர் என் எழுத்தின் வாசகர்கள் என்பது என் நல்லூழ்.
உங்களுடைய முதல் இரண்டு பத்திகளின் கருத்துகளை கவனிக்கையில் ஆச்சரியமே அடைந்தேன். என் உளம் சார்ந்த உட்தெளிவு ஒன்றை – நான் பல ஆண்டுகள் சிந்தித்துக் கண்டடைந்த என்னைப் பற்றிய புரிதலை – என் சில கதைகளின் வாசிப்பு வாயிலாகவே நீங்கள் கண்டு சொல்லிவிட்டீர்கள். இரண்டு சிந்தனைகள் எழுகின்றன. முதலாவது என்னைப் பாதித்த அனுபவங்களை கற்பனை கூட்டி இச்சிறுகதைகளாக உருவாக்கி வழங்கினாலும் ஆழ்மனத்தின் வெளிப்பாட்டுடனேயே எழுதியிருக்கிறேன்; என் மெய்யான உலகப் பார்வையைப் புனைவு எனும் கலைவடிவம் வழியாக வெளிப்படுத்த முயல்வதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேன். இரண்டாவது கவனமான நல்ல வாசகியிடம் புனைவு அதன் details எவ்வாறு இருப்பினும் on the whole எழுதியவனின் நோக்கத்தையும் உணர்வுகளையும் சரியாகவே கடத்திவிட்டிருக்கும். தொல்ஸ்தோய் சொல்லும் உணர்வுகளைக் கடத்தும் கருவி எனும் கலையின் ஆதாரச் செயல்பாடு என் குறையெழுத்தின் வழியாகவும் நம்மிடையே சரியாக நிகழ்வதில் ஆச்சரியமே.
பல வாசகக் கருத்துகளுக்கான ஏற்புரையை இத்துடன் நிறுத்திக்கொள்வேன். இலக்கியத்தின் மீது உங்களுக்கு மெய்யாலுமே விருப்பமும் குவிந்த ரசனையும் உண்டு என்பதால் author response என்கிற வகையில் குறிப்பிட்ட உங்கள் சில கருத்துகளுக்கு மட்டும் என்னுடைய பதில் கருத்துகளையும் வழங்குகிறேன்.
“அமைந்த சந்தர்பத்தில் அறிமுகமற்ற நபருடன் நிகழ்ந்துவிடும் இனிமையான உடலுறவு பெண்களுக்கு அதிகக் கிளர்ச்சியை அளிக்கலாம்.” அப்படியா? இது யாருடைய அவதானம்?
அந்தக் கதாபாத்திரத்தின் அவதானம். சரியா தவறா என்பதை அப்பாத்திரத்திடமே கேட்க வேண்டும். மேலும் அப்பாத்திரமே ‘அளிக்கலாம்’ என்று சந்தேகத்துடனேயே சொல்கிறது. அளிக்கும் என்று அவதானிக்கவில்லை.
நீங்கள் இலக்கியச் சூழலில் கல்வி பயின்றவர் இயங்குபவர் என்பதை வைத்து உங்களுக்குப் புரியும் என்பதால் ஒன்றைப் பகிர்கிறேன். அந்த ‘அவதான’ வாக்கியமே off tangent வழியில் கதையின் revealஐ வெளிப்படுத்தும் உத்தியே. அதற்காகவே கதையில் முன்னரே ‘அவதானம்’ போல உரையாடலில் இதே வாக்கியம் வைக்கப்பட்டு மீண்டும் கிளைமாக்சில் எடுத்தாளப்படுகிறது.
Male gaze – பெண்ணுடல் சதா நோக்கப்படுவதாக வரும் சித்தரிப்புகள் சலிப்பூட்டுகின்றன. சொல்லப் போனால் கதையின் வேகத்தையும் சுவையையும் குறைக்கின்றன. அதே போல் மொழி விளையாட்டும்.
இவை நியாயமான விமர்சனக் கருத்தே இல்லை. தொகுப்பாக வாசிக்கையில் உங்களுக்கு எழுந்த எண்ணம் என்றே தோன்றுகிறது. அதனால் எழுதிய ஆணைக் குறை சொல்வதற்கென நீங்கள் தேர்வு செய்துகொண்ட உங்களுக்கு வசதியான கருத்து என்பேன். I’ll defend my stance thusly.
ஒன்பது கதைகளில் நீங்கள் ஏற்கெனவே குறிப்பிட்ட மூன்று கதைகளில் (குரு நிந்தனை, ராம நீ சமான மெவரு, இசையா இரவு) இந்த ‘மேல் கேஸ்’ கதாபாத்திரம் வழியாக அதிகமாக வெளிப்பட்டிருக்கலாம். இந்த ‘மேல் கேஸ்’ அளிக்கும் பாதிப்பு இல்லையேல் இக்கதைகளே (இவற்றின் ஆதார சிக்கலே, எஞ்சும் கசப்புணர்வின் தீவிரமே) இல்லையே.
‘தரிசனம்’ எனும் பால் கவ்கின் கதையில் அவர் பார்வையில் இந்த ‘மேல் கேஸ்’ ஓரளவே இருக்கும். பால் கவ்கினின் (lady’s man ஆளுமையான) வாழ்க்கை வரலாற்றை கவனித்தால் நான் அளித்திருக்கும் கற்பனைப் பார்வையின் அவசியம் விளங்கும் (மேடலைனும் கவ்கினை வருணிக்கிறாளே. இந்த female gazeஐ விட்டுவிட்டீர்களே). விட்டால் காதலுக்குக் கண்ணில்லை என்பதை ‘லிடரலா’க மட்டுமே எடுத்துக்கொள்ளச் சொல்வீர்கள் போலிருக்கிறதே.
பாட்டி தந்த பரிசு கதையில் மூன்று பெண்கள்; ஒன்று பாட்டி அடுத்தது பத்மா அடுத்தது நர்ஸ். போகிற போக்கில் ஓரிரண்டு வரிகளில் அந்த நர்சைப் பற்றி மட்டுமே இந்த ‘மேல் கேஸ்’ இருக்கும். அதற்கான காரணம் அக்கதையிலேயே விவரிக்கப்படுகிறது. தமுக்கி எனும் பாத்திரத்தோடு (நாவாசை மட்டும் உள்ள யோக்கியன்) ஒப்பிட்டால் கதாநாயகப் பாத்திரத்திற்கு ஆணின் மிச்ச மூவாசையும் உண்டு என்பதை விளக்கவே சபலமும் (டாக்டர் நர்சுடன் சல்லாபிக்க முயலுவதில் இவனுக்குச் சபலம்) பார்வைவழி வருணனையும் ஓரிரண்டு வரிகளில் வருகின்றன.
மிச்சமுள்ள நாலு கதைகளில் (முத்தம்மா, கஸ்டமரே கடவுள், வெந்த உருளைக்கிழங்கு, எட்டணாவில் உலக ஞானம் ஆகிய கதைகளில்) இந்த ‘மேல் கேஸ்’ ஒன்று மிகச் சொற்பம் அல்லது அறவே கிடையாது.
அதே போல
‘மொழி விளையாட்டு(ம்) கதையின் வேகத்தையும் சுவையையும் குறைக்கின்றன’
என்று கருதுகிறீர்கள்.
ஓரிரண்டைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தால் (specific instances) அவை எழுத்தாளன் தன் எழுத்தைத் தளைகள் நீக்கிக் கூர்தீட்டிக்கொள்ளப் பொருட்படுத்தப்படவேண்டியவையா என்பது தெளிவாகியிருக்கும்.
கிட்டத்தட்ட நூறு எழுதிய பின்னரும் இன்றும் என் ஆய்வுக் கட்டுரைகளின் peer review விமர்சனங்களில் எனக்கு (அதாவது இந்தியர்களுக்கே) ஆங்கிலம் சரியாக எழுத வரவில்லை என்று பொதுப்படையாக ஒரு வரி இருந்தே தீரும். கட்டுரையை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட பின்னரும். தமிழில் எழுதுகையில் எனக்கு ‘தமிழ் மொழி ஓவராய் விளையாடுகிறது’ என்பதே விமர்சனமாக வழங்கப்படுகிறது.
மொழியில் விளையாடாதவன் எழுத்தாளனே இல்லை. எழுத்தை ஆள முயல்பவனே எழுத்தாளன். இப்படியெல்லாம் தமிழில் மட்டும் புரிந்துகொண்டு தொலைத்துவிட்டேன். போகட்டும் விடுங்கள்.
வேலையில் தான் விரும்பும் இடத்தை அடைய தங்களையே பகிரும் பெண்கள் அரதப்பழசான ஒன்றில்லையா? குருநிந்தனை கூடாது என்ற தத்துவ தரிசனத்தை வேறு சம்பவங்களை வைத்து சொல்லியிருக்க முடியாதா? இல்லை இசையா இரவில் புரபசரை தவறிழைக்க வைத்து இதில் ஆண் பெண் பேதமில்லை என்று எழுதியிருப்பதாக எடுத்துக் கொள்வதா?
இலக்கை அடையத் தங்களையே பகிரும் பெண்கள் அரதப்பழசான ஒன்றே. இன்றும் அப்பகிர்வை விரும்பும் ஆண்கள் எத்துறையின் வேலையிலும் நிர்வாக வரிசைகளிலும் இயங்குவதும் அரதப்பழசே. மனிதர்கள் இருக்கும் வரையில் இவ்வகை அரதப்பழசான வடிவங்கள் இலக்கியத்தில் வந்துபோய்க்கொண்டே இருக்கும்.
முக்கியமாக ‘குரு நிந்தனை’ கதையின் மையமும் திரண்டு வரவேண்டிய பொருளும் அந்தத் தத்துவ தரிசனத்தின் உண்மைப் பொருள் சார்ந்ததே இல்லை. மீண்டும் வாசிக்கையில் நீங்களே ஏற்கலாம். ஏனெனில் நீங்களே எழுதிச் சொல்வது போல தத்துவ தரிசனம் என்பதெல்லாம் அந்தக் கதாநாயகன் தான் நம்பியவர் ஏமாற்றுகையில் சறுக்குகையில் தன் மனத்தைத் தேற்றிக்கொள்ள எழுப்பிக்கொள்ளும் ஒரு சமாதான வழிவகையே. அதே வகை தவறை அவனும் செய்கையில் அதே தத்துவ தரிசன அரணைத் தற்காப்புச் சமாதானமாக முன்வைக்க முயலுகிறான்.
‘குரு நிந்தனை’யையும் ‘இசையா இரவை’யும் ஒப்பிட்டு ஆச்சரியப்படுத்துகிறீர்கள். முதலாவதில் பெண் சம்மதத்துடன் செய்கிறாள். இரண்டாவதில் அவ்வாறில்லை. புரபசர் பாத்திரம் ஒருவகையில் ஒரு trope மட்டுமே. அக்கதையின் மையம் ஹம்சாவின் ஏமாற்றம் சார்ந்ததே இல்லை என்பேன். பார்க்கப்போனால் ஏற்கெனவே கணவனிடமும் ஹம்சா ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளாள். அந்தக் கதையின் மையம் மன்னிக்கும் மனங்களைச் சுற்றி இயங்குகிறது என்றே கருதுவேன். யார் யாரை எதற்காக எச்சூழலில் மன்னித்தார்கள் என்பதே யோசனைக்குரிய விஷயம். மறுவாசிப்பில் நீங்களும் இவ்வாறு யோசிக்கலாம்.
மீண்டும் உங்கள் விரைவான ஆழமான வாசிப்பிற்கும் அருமையான கருத்துகளுக்கும் நன்றி.
என் பதில்களில் தேவைக்கதிகமாக ஓங்கியடித்திருந்தால் அப்பிழை பொறுக்கவும்.
வாசிப்பு தொடரட்டும். மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்
அருண்
*