‘எட்டணாவில் உலக ஞானம்’ என்கிற தலைப்பில் என்னுடைய சிறுகதைகள் சிலவற்றைப் புத்தகமாக தமிழினி வெளியிட்டுள்ளது. விலை 200 ரூபாய். தமிழினியிடம் தொடர்பு கொண்டால் பெறலாம். அல்லது உங்கள் ஊரில் புத்தக விழா நடக்கையில் – தற்சமயம் சென்னையில் நடந்துவருகிறது – அங்கு தமிழினி விரிக்கும் கடையில் (கடை எண்: 212) கிடைக்கும். புத்தகக் கடைகளிலோ நூல்நிலையங்களிலோ தென்படாது.
*
சென்னை அண்ணா நூல் நிலைய அரங்கில் சனவரி 9ஆம் தேதி மாலை 6 மணி அளவில் தமிழினி நூல் வெளியீட்டு நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது. அதில் இப்புத்தகத்தையும் சேர்த்து மேலு சில சென்னை எழுத்தாள நண்பர்களின் புக்ககங்களும் வெளியிடப்படுகின்றன. ஆர்வமும் அவகாசமும் அமையும் சென்னை வாசகர்களை நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.
*
இப்புத்தகம் சார்ந்த சில தகவல்கள் பின்வருமாறு.
பின்னட்டையில் எழுதப்பட்டுள்ள வரிகள் (இவை புத்தகத்தை வரைவடிவில் வாசித்தப் புண்ணியவான் யாரோ மனமுவந்து பதிப்பாளர் வேண்டுகோளிற்கிணங்கி எழுதிக்கொடுத்தது போல அநேகமாகப் புத்தக ஆசிரியனே எழுதிக்கொள்வதுதான்): சிறுகதை என்பது சம்பவமோ வாழ்க்கை விள்ளலோ அனுபவப் பகிர்வோ நினைவோட்டமோ சார்ந்த நீதிகளோ மட்டும் அல்ல. நாவலைப் போலவே அவை முழுமையான அனுபவத்தை, அதிலிருந்து எழும் மேலதிகமானப் பொருளை உணர்வுகளை வழங்க முற்படவேண்டியது அவசியம். சிறுகதையாகச் சொல்லப்பட்டவை வேறு சிறு பெரு வடிவங்களில் திறம்பட அளிக்க முடியாதவை, அவசியமில்லாதவை.
இத்தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. போர்ச்சுகல் நாட்டில் இரண்டு நாட்களில் நடப்பவற்றை இருபது பக்கங்களில் சொல்லும் கதையில் தொடங்கி, அரங்கம் அமெரிக்கா என இருபதாண்டுகளில் நடப்பவற்றை இரண்டு மூன்று பக்கங்களில் சொல்லும் கதையில் முடிகிறது. கேட்காத இளையராஜா கச்சேரிப் பின்னனியில், கேட்கும் கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பின்னனியில், நகரத்தில், அரங்கத்தில் என்று வகைந்து, பிரெஞ்சு நாட்டு பாண்ட்-அவன் சிற்றூரில் 1888இல் ஓவியர் பவுல் கவ்கின் பெற்ற தரிசனமும் வரலாற்றுப் புனைவாக இத்தொகுப்பினுள் உள்ளன. நடுவில் பேயே வராத ஒரு பேய்க் கதையும் உண்டு.
கடந்த பத்து ஆண்டுகளில் நான் ஏதேதோ புத்தகங்கள் எழுதுவதாகக் கேள்விப்பட்டு அன்பர்கள் சிலர் இவற்றை நீ ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் உடனுக்குடன் வாசித்திருப்பேனே என்று அங்கலாய்த்துள்ளனர். வீ டோண்ட் ஸி டமில் பிக்சர்ஸ்… காதலிக்க நேரமில்லை காஞ்சனா கணக்காய். அவர்களின் விண்ணப்பம் நிறைவேறும் வகையில் Enlightened in Eight-Annas என்கிற தலைப்பில் இக்கதைகள் ஆங்கில வடிவத்திலும் வெளிவந்துள்ளன. இதற்கான தனி ஆங்கிலப்பக்கத்தில்/பதிவில் விபரங்களை அளிக்கிறேன்.
கதைகளை வாசித்த பிறகு வாசகக் கருத்துகளை என்னுடன் பகிர்ந்தால் மகிழ்வேன்.
*