யார் நல்ல இலக்கிய வாசகர்?

Standard

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்துவரும் சென்னை இலக்கியத் திருவிழா 2024 இல் நேற்று (28/02/2024) பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். அதற்காகத் தயார் செய்த உரையை கீழே அளித்துள்ளேன். அவகாசம் கருதிக் கூட்டத்தில் ஓரளவே பேச முடிந்தது. பின்னர் கேள்வி பதில் நேரம் நன்றாகப் போனதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் திரளாகப் பங்கெடுத்துக்கொண்ட நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பும் செயல்பாடும் பிரமாதம். இன்முகத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்பட்டிருந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அனைத்துப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
*

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் அருண் நரசிம்மன். அருண்-தான் என் பெயர். நரசிம்மன் என் தந்தையார். குடவாசலில் பிறந்தேன். ஶ்ரீரங்கத்தில் வளர்ந்தேன். அமெரிக்காவில் படித்தேன் முனைவர் பட்டம் பெற்றேன். இன்று சென்னை மாநகரவாசி. பொறியியலில் முனைவர் பட்டதாரி. கடந்த இருபது ஆண்டுகளாக இதோ இங்கிருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ஐஐடியில் இயந்திரவியல் துறையில் மெக்கானிக்கல் பேராசிரியனாக வேலை. அதனால் ஓரளவு வசதியுடன் வாழமுடிந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என என்னைக் கருதலாம். வேலையில் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன். பேசவேண்டும். தமிழில் இல்லை. இந்தியில் பேசுவதில்லை.

நானும் ஒரு புனைவெழுத்தாளன் என்பதற்கு அத்தாட்சியாகத் தமிழில் இதுவரை மூன்று நாவல்கள் வெளிவந்துள்ளன. சில அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளேன். தமிழினி வெளியிட்டுள்ளனர்.

கேள்வி: இந்த நாவல்களை வாசிக்கத் தேர்வு செய்கையில் அறிமுகத்திற்காக முன்னர் குறிப்பிட்ட என்னைப் பற்றிய சில தகவல்கள் உங்களுக்குப் பயன்படுமா? பயன்படுமா என்பதைவிட அவசியப்படுமா?

அருண் நரசிம்மனா… பெயரப் பாத்தா தெரியல… பிராமின். ஶ்ரீரங்கம்னா அய்யங்காராதான் இருக்கணும். ஐஐடில வேலைனாவே ஒரு மாதிரிதாங்க இருப்பாரு. தமிழ்லவே இப்பதான் எழுதிப்பழகிட்டிருப்பாரு. சென்னைல வசிக்காரு. வசதிபட்ட வாழ்க்கையாதான் இருக்கும். கார்ல தான் போவாரு. பிளைடுலதான் போவாரு. ரயில்ல பர்ஸ்ட் கிளாஸ்தான். பல்லவன் பஸ்ல ஏறிருப்பாரா மாட்டாரு. பாதசாரிப் பொதுசனத்தைப் பத்தி இன்னா தெரியும் இவுருக்கு. வெள்ல வந்து சர்தார் பட்டேல் ரோட்டை ஒருதபா நடந்து கிராஸ் பன்னிருப்பாரா ஆட்டோகாரங்கிட்ட வன்டாம்பார் சாவுக்கிராக்கி வூட்ல சொல்லிகினு வண்ட்டியா… இப்டி ஒருவாட்டியாச்சும் பேச்சு கேட்ருப்பாரு. லன்சுக்கு பீட்ஸா பர்கர்னு சாப்டுகிட்டு… இவுரெல்லாம் தமிழ்ல கதை எழுதி… இலக்கியம் அது இதுனு. ஆராச்சும் பேஸ்புக்ல சொல்வாங்கல்ல… அப்பால பாத்துப்பம்… வேற நல்ல புக்ஸா இல்ல.

என் நாவல் ஒன்றை கையிலெடுத்துப் படிக்கத் தொடங்கி சில மணி நேரங்களுக்குப் பிறகு படித்து முடித்தும் விடுகிறீர்கள். இந்தச் செயல்பாட்டை நீங்களாகவே தீர்மானித்துத் தொடங்கி நிகழ்த்துவதற்கு அந்த நாவலின் ஆசிரியனான நான் குடவாசலில் பிறந்திருப்பது முக்கியமானதா? ஶ்ரீரங்கத்தில் வளர்ந்திருப்பது முக்கியமானதா? குறிப்பிட்ட ஒரு குலத்தில் பிறந்திருப்பதும் அதன் சூழலில் வளர்ந்திருப்பதும் இந்த நாட்டின் சமூகத்தின் வளர்ச்சியில் வரலாற்றில் அதன் பங்களிப்பும் பற்றாக்குறையும்… ஆசிரியன் பிறந்திருப்பது குறிப்பிட்ட நாட்டிலும் மாநிலத்திலும் நகரத்திலும் இடத்திலும் வேலையிலும்… இவையெல்லாம் புனைவெழுத்தை வழங்கிய ஆசிரியனின் குணநலங்கள். இவற்றிற்கும் புனைவெழுத்திற்கும் தொடர்புள்ளதா? உங்கள் வாசிப்பை தீர்மானிக்கும் அளவிற்கு?

அழுக்கு பரிசாரகன் செய்யும் சமையலை சாப்பிடுவதில்லையா நீங்கள்? பிரமாதம் என்று கருதி…

உணவில் சரியாகச் செயல்படும் இந்தப் பிரித்தாளும் மனத்தை வாசிக்கும் இலக்கியத்தில் செயல்படுத்த மாட்டீர்களா என்ன? நல்ல இலக்கிய வாசகர் தானே நீங்கள்?

அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு: யார் நல்ல இலக்கிய வாசகர்?

ஒரு விடை உருவாகிவிட்டது போலிருக்கிறதே: வாசிக்க முனையும் புனைவை அதன் ஆசிரியனின் ஆளுமையை ஒதுக்கிவைத்துவிட்டு அணுக முனைவது நல்ல இலக்கிய வாசகனுக்கு அடையாளம்.
*

முன்னால நான் சொன்னவற்றினால் முகம் சுளிக்க வேண்டாம்.

ஒருவர் பெயரைக் கேட்டாலே கேட்ட மாத்திரத்தில் நமக்குள் அபிப்பிராயங்கள் உருவாகிவிடுகின்றன. அருண் நா ஒரு ஒப்பினியன் அருண் நரசிம்மன் நா ஒரு ஒப்பினியன். தமிழ் கதைல வர்ரா மாதிரிதான். செங்கமலம்னா நல்லவ ரீட்டா நா கெட்டவ. இப்டி…

மேலே நான் சொன்னதெல்லாம் எனக்கு நடந்தவையே.

தமிழினி பதிப்பாசிரியரே என்னைப் பற்றி இப்ப நான் சொன்ன அபிப்பிராயங்களைதான் முன்முடிவுகளா எழுப்பி வெச்சுருந்தாரு. ஆனால் மறந்துவிடக்கூடாது. அவர்தான் என் எழுத்தைப் பதிப்பித்தார். இந்த முன்முடிவுகளை அவராகவே தகர்த்துக்கொண்டு இல்லை ஒதுக்கிவெச்சுட்டு என்னோட சில எழுத்துக்களை வாசித்துப் பார்த்துவிட்டு…

நல்லா ஞாபகம் இருக்கு… ஶ்ரீரங்கத்துக்கு டிரெய்ன்ல போய்ட்டிருந்தேன். செகண்ட் கிளாஸ் சேர்கார்ல. நல்ல வெயில். கீழே பலாப்பழக்கூடைல முட்டி இடிச்சு ஒக்காந்துருந்தேன். இவுரு போன்ல கூப்டாரு. பட்டன் மொபைல் தான் வெச்சுருந்தேன். மதிபேசி இல்லை. சார்… சொல்லுங்க சார். என்ன அருண்… எங்கிருக்கீங்க… கிளாஸ் இல்லயா… வீட்லயா. சார்… டிரெய்ன்ல போய்ட்ருக்கேன். கொஞ்சம் சத்தமா பேசுங்க சார்… ஒண்ணும் காதுல விழல. படிச்டேங்க… நீங்க கொடுத்ததலாம் படிச்டே… நீங்க எழுத்தாளர்தாங்க… சந்தேகமில்லாம… கவலைபடாம எழுதுங்க. சார்… என்ன சொல்றீங்க… கதை நல்லாலையா… பர்ஸ்ட் கிளாஸ்ல போய்ருந்தா ஏசி கூபேல வெளி ஓசை இல்லாம அவர் பேசினது மொதோ வாட்டியே கேட்ருக்கலாம்.

பின்னாளில் ஒரு நாவல் எழுதி முடிச்சு அப்பறமா பேச்சுவாக்குல சொன்னாரு… பிரமாதமான தமிழ் நடைங்க தன்னால வாச்சுருக்கு ஒங்குளுக்கு அடிச்சு வெளயாடுங்க அருண். அப்ப பொறுக்க முடியாம சொல்லிட்டேன்: ஞாபகமிருக்கா சார்… மொதோவாட்டி ஒங்க கடைல வந்து பேசினப்ப ஐஐடியா… தமிழ்ல இப்பதான் எழுதிப் பழகிட்டிருப்பிங்க… அப்டிதான… அப்டினு கேட்டீங்களே சார். சட்னு பேச்சு விட்டுபோச்சு. சிகரெட் புடிச்சுகிட்டே வந்தாரு. இதாங்க… இதுக்குதாங்க யாகாவாராயினும் நாகாக்க…னு சொல்லிவெச்சுருக்காரு… மெய்யாலுமே வருத்தப்பட்டார். எனக்கும் சங்கடமா போச்சு… சே சே… அப்டிலாம் இல்ல சார். இப்டிலாம் சொன்னாலும் நீங்கதானே அப்பறமும் படிச்சீங்க என்னோட புக்சலாம் போட்டீங்க… ரெண்டு வருஷம் டைம் வேஸ்ட் பன்னிருக்க வேண்டாம்ல… எதுக்கும் ஒரு வேளை வரனுமில்ல.

சரி. நிற்க. யார் நல்ல இலக்கிய வாசகர்? எங்க சுத்தினாலும் டாப்பிக்கு வந்துடனும். எங்கு சுற்றியும் ரெங்கனைச் சேர்… ஶ்ரீரங்கத்தில் சொல்வார்கள்.
*

விளாடிமிர் நபகாவ் என்றொரு எழுத்தாளர் இருந்தார். லொலீதா எழுதியவர் என்றால் தெரியும். தமிழின் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரை பாதித்தவர். லொலீதா-வால் உந்தப்பட்டு லாசரா அபிதா என்று எழுதினார். சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் வாசித்திருப்பீர்கள். இதன் மூலம் அல்லது உந்துதல் நபகாவ் எழுதிய ரியல் லைப் ஆப் செபாஸ்டியன் நைட். இரண்டையும் வாசித்துப்பாருங்கள் புரியும்… சரி. நபகாவ் வருமானத்திற்காக சில சமயம் கல்லூரிகளில் இலக்கியம் பற்றி வகுப்பெடுத்திருக்கிறார். இவற்றின் சாரங்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இவர் வகுப்புகளில் தொடக்கத்தில் முன்வைக்கும் கேள்வி: யார் நல்ல வாசகர்? அதாவது இலக்கியத்தைப் பொறுத்தவரையில், யார் நல்ல வாசகர்?

இவரே சில அவசர பதில்களையும் வழங்கிச சோதிக்கிறார். எடுத்துக்காட்டாக: நல்ல இலக்கிய / புனைவு வாசகன் என்பவன்…

வாசிக்கும் கதையின் நாயகன் நாயகியுடன் ஒன்றுபட்டிருக்க வேண்டும். மனத்தால் ஒத்திசையும் கதாபாத்திரம் ஒன்றை கண்டுகொள்ள முடியவேண்டும்.
உரையாடல் சம்பவங்கள் நிரம்பப்பெற்ற புனைவுகளையே ஒப்பீட்டளவில் மேலதிகமாக விரும்ப வேண்டும்.
ஏதாவது புத்தகம் வாழிக்கும் விவாதிக்கும் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
சமூகவியல் பொருளாதாரம் இவற்றைப் பற்றிய அறிவுடன் வாசிக்க வேண்டும்.
கற்பனை வளம் கொண்டவனாக இருக்க வேண்டும்.
அவனுமே வளரும் கதாசிரியனாக எழுத்தாளனாக இருக்க வேண்டும்.
கதையை திரைப்படத்தில் கண்டிருக்க வேண்டும்.
நினைவாற்றல் கொண்டிருக்க வேண்டும்.
மொழியகராதி வைத்திருக்க வேண்டும்.
கலையம்சம் கவித்துவம் பற்றி உணர முடிய வேண்டும்.

இப்படிப் பொதுவாக நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் இலக்கிய வாசகனைப் பற்றிய பல முன்முடிபுகளை பதில்களாக வீசுகிறார். இவற்றில் எவை நல்ல இலக்கிய வாசகனுக்குப் பொருந்தும்? பல வகுப்புகளில் பல நாவல்களின் விரிவான பரிசீலனைகள் எடுத்துக்காட்டுக்களுடன் தன்னுடைய விடைகளை வழங்குகிறார்.

நாம் அரை மணிக்குள் செய்யப் பார்ப்போம். நான் யோசித்துக் கண்டடைந்த அல்லது தக்க காரணங்களால் ஏற்றுக்கொண்ட விடைகளையே முன்வைக்கிறேன். உங்களுக்கு அவற்றுடன் வேறுபாடுகள் இருக்கலாம். இருக்க வேண்டும். என் சிந்தனைகளை முன்வைத்து உங்களைச் சிந்திக்கவைப்பதே நோக்கம். பேச்சிற்கான பயன் அதற்கடுத்து அது ஏற்படுத்தும் மௌனமே.
*

முதலில் ஒன்றைச் சொல்லிவிட்டோம். ஆக்கத்தை வாசிப்பதில் ஆசிரியனின் ஆளுமையை குறுக்கிட விடக்கூடாது பழகிக்கொள்ள வேண்டும். இது நல்ல இலக்கிய வாசகனுக்கு அவசியமான அடையாளம்.

அடுத்து புத்தக விரும்பி — இவனை நல்ல வாசகன் என்பதற்கில்லை. நிறைய புத்தகம் சேர்த்திருப்பவன், அவற்றை வாசித்திருப்பவனும் என்பதற்கில்லை. அப்புத்தகங்கள் கஞ்சனின் வைப்புநிதி போல… பூதம் காத்த புதையலென அவற்றை வைத்திருப்பதே… புத்தகங்களைச் சேர்த்தவனுக்கு மகிழ்ச்சி. வாசித்திருப்பதில் இல்லை. கஞ்சனின் வைப்புநிதி பேரறிவாளன் திரு ஆகா. நிறைய வாசிக்க வேண்டுமென்பதில் குறியில்லை. நிறைவாக வாசிப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.

இதற்கு அவசியங்கள் என்றால்…

கவனத்துடன் வாசிப்பவன், மொழியை அறிந்து வாசிப்பவன், நினைவாற்றல் அதிகமுள்ளவன், கலையம்சம் கவித்துவம் பற்றி சிறிதளவேனும் புரிந்தவன்… இவ்வாறெல்லாம் வகுக்கலாம்.
*

புனைவாக்கத்தை முழுமையாக உள்வாங்கிப் பரிசீலித்து அனுபவங்களை தொகுத்துக்கொள்வதற்கு நினைவாற்றல் பொறுமை நிதானம் மூன்று கூறுகளையும் வளர்த்துக்கொள்பவன் நல்ல இலக்கிய வாசகன்.

முன்னாடி நூறு பக்கத்துல படிச்சது கடைசில மறந்துவிட்டா கிளமாக்ஸ்ல செத்தது யாரு குத்தினது யாருன்னே தெரியாம… எழுத்தாளன் வழங்கிய கதையைவிட வாசகனால் உருவாக்கிக்கொள்ளப்பட்ட கதை சுவாரஸ்யமாய் இருக்கலாம். இதுதான் மாய எதார்த்தமோ… என்றெல்லாம் சங்கடமாகிவிடும். ஒண்ணுமில்லை. நினைவாற்றல் கம்மி. முன்னாடி படிச்சது மறந்து போச்சு. நல்ல வாசகனுக்கு நினைவாற்றல் அவசியமே. அது மட்டுமில்லை. நிதானம் பொறுமை. நேரத்தை வழங்க முடிந்த பொறுமை. கவனக் கலைப்புகளுடன் கத்தி பேசிக்கொண்டு… ரேஷன் கடைல கியூல நிற்கும் வகை பொறுமையோ நிதானமோ இல்லை. ஒருமுகமான நிதானம் பொறுமை. கவனத்துடனான நிதானம். பொறுமை.

ஏனென்றால்.

ஓவியத்தை ரசிப்பது போலில்லை இலக்கியம். உடனடியாக முழுக் காட்சியும் ஓவியமும் கண் வழியே மனத்தினுள் சென்று தாக்கி பாதித்து உணர்வுகளை எழுப்பிவிடும். நாவல் புனைவாக்கம் இவ்வாறில்லை. ஒரு அவகாசம் வேண்டும் இதை வாசித்து முடித்து அதன்பிறகே அதன் முழுமையான பாதிப்பை உணர்வதற்கு. வாசிக்கையில் ஒரு தொடர் அனுபவம் என்றாலும் புனைவாக்கத்தை ரசிப்பதற்கு முழுமையாக ஆனந்தம் பெறுவதற்கு மனத்தினுள் முன்னால் நடந்தவை பின்னால் நடந்தவை இரண்டிற்குமான இணைப்பு தொடர்ச்சி ஆசிரியன் விட்ட இடைவெளிகளைத் தங்கள் கற்பனையால் வாசகன் நிரப்பிக்கொள்வது அதனால் கிடைத்த ஒரு முழுமையான கலையாக்கம் என்ன அளித்தது எதைப் பெற்றோம்… இவ்வாறு அசை போடும் மனவொழுங்கே புனைவாக்கத்தை ரசிப்பதற்கான செயல்பாடு. தேவை. அவசியம்.

கவிதையை மூன்று விதமாக அடையாளப்படுத்துவார்கள். திராட்சா பாகம் நாரிகேல பாகம் பலசபாகம் என்று. திராட்சா ருசி… வாயில்போட்டவுடன் டேஸ்ட். நாரிகேல பாகம் தேங்காய்… மட்டையை உரித்து அடித்து உடைத்து திருவி சக்கரை சேர்த்து வாயில் போட்டா டேஸ்ட்… பலச பாகம். பலாப்பழம். பறிப்பதற்கே பிராணவஸ்தை… கொண்டுவந்து வீட்ல கொல்லைல வெச்சு குத்தி நெம்பி உரிச்சு…. கை காலெல்லாம் கோந்து ஒட்டிக்கொண்டு… விளக்கெண்ணெய் தடவி கை வழுக்கிச் சுளை சுளையா உரிச்சு பிச்சு… கொட்டை எடுத்து… தேன்ல கலந்து வாய்ல போட்டா அதி ருசி…

ஓவியக்கலை ஒருவகையில் திராட்சா பாகம் எனலாம். கண்டவுடன் ஆனந்தம். அம்பாள் தரிசனம் போல. நாவல்கள் புனைவிலக்கியம் இவ்வாறில்லை. இதற்கான அவகாசத்தை வழங்கியபிறகே இதன் சுவை மனத்தினுள் தெளிவடையும். பலாப்பழம் போல…

ஒரு வகையில் புனைவு வாசிப்பாளன் என்று ஒருவனுமில்லை. நல்ல இலக்கிய வாசகர்கள் அனைவருமே புனைவு மறுவாசிப்பாளர்களே. இந்த அடையாளத்தை வளர்த்துக்கொள்பவன் நல்ல இலக்கிய வாசகன்.

சமையல் பதார்த்தத்துடனும் ஒப்பிடலாம் புனைவாக்கத்தை. (இதுக்குதான் லன்ச் டைத்துல 12 மணிக்குப் பேசக் கூப்பிடக்கூடாது. சாப்பாடே குறியா எடுத்துக்காட்டுகள் வருகின்றன. செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும்… அவுரு சொல்லுவாரு… பசி வயித்த கிள்ளுது… இப்ப போயி… வயிற்றுக்கு உணவு பிறகே செவி கவி எல்லாம்…)

சமையல் பதார்த்தம் வாயில் போட்டவுடம் சுவை தெரிந்துபோகும். தொடர்ந்து சாப்பிடலாமா என்பதையும் முடிவு செய்துவிடும். ஆனால் சுவை உங்களுக்கு வேண்டிய அளவுகளில் இல்லை என்றாலும் தொடர்ந்து சாப்பிட்டு முடித்தால் பசி ஆறியிருக்கும். அதே போலவே புனைவும். முழுவதும் வாசித்த பிறகு பெறும் அனுபவப்பயன் வேறுவிதமாக அமையலாம். திருப்தியளிக்கலாம். ஆனந்தம் வழங்கலாம்.

ரெண்டு பக்கத்துல பிடிக்கலைனு தூக்கிக் கடாசாம… கொஞ்சம் பொறுமை வளர்த்துக்கொண்டால்… பிறகு சுவை கூடிவரலாம். சில ஏமாற்றியும் விடலாம். இந்தச் சோதனையை செய்துபார்க்கும் பக்குவம் வேண்டும்.

இவற்றைப் புரிந்துகொள்பவன் நல்ல இலக்கிய வாசகன்.

*

அடுத்து சில கோளாறுகளை குறிப்பிடுவோம்.

புனைவாளனை வரலாற்றாசிரியனாகக் கொள்வது. அல்லது சமூகவியலாளன் என்று. அல்லது புரட்சியாளன் அரசியல் வழிநடத்தி தத்துவ ஞானி… இப்படியெல்லாம் காண்பது. இதெல்லாம் வாசகப் பேதமைகள். நல்ல இலக்கியங்களை வாசிப்பதற்கான இடையூறுகள். குழப்படிகள். மனப் பிராந்திகள்.

Fiction in general should never become analytic. As a matter of fact, the writer of fiction should not even try to dabble in psychology and its various isms. Genuine literature informs while it entertains. It manages to be both clear and profound. It has the magical power of merging causality with purpose, doubt with faith, the passions of the flesh with the yearnings of the soul. It is unique and general, national and universal, realistic and mystical. While it tolerates commentary by others, it should never try to explain itself. These obvious truths must be emphasized, because false criticism and pseudo-originality have created a state of literary amnesia in our generation. The zeal for messages has made many writers forget that storytelling is the raison d’être of artistic prose.

இவ்வாறு கூறுவது சிங்கர். இலக்கிய நோபல் வென்ற ஐசக் பாஷிவிஸ் சிங்கர்.

வரலாற்றை மட்டும் எடுத்துக்காட்டுகிறேன்.

சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்களில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தை அறிந்துகொண்டுவிட முடியுமா? அதாவது அந்நாட்டின் வாழ்வியலை சமூகவியலை வரலாற்றை… முடியாது.

கல்கியின் சிவகாமியின் சபதம். அதிலிருந்து பல்லவர்களின் வரலாற்றையும் ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் வாழ்வியலையும் சமூகவியலையும் அறிந்துகொண்டுவிட முடியுமா? ஓரிரு செய்திகளும் தகவல்களும் தெரியவரலாம். அவையே முழுமையான வரலாறு என்று சொல்வதற்கில்லை. சொல்லப்போனால் தகவல்களோ பெயர்களோ செய்திகளோ நாட்களோ தவறாகக்கூட இருக்கலாம். சில சரியாகவும் இருக்கலாம். ஆனால் அவை உறுதியான முழுமையான வரலாறில்லை. வாழ்வியலில்லை. அவசியமில்லை. அவை கல்கி பல்லவர் ஆட்சிகாலப் பின்புலத்தில் உருவாக்கியிருக்கும் புனைவின் அம்சங்கள். கூறுகள். சிவகாமியின் சபதம் எனும் புனைவில் அவ்வாறு வரலாற்றைத் தேடுவது கல்கி எனும் புனைவாளனுக்கு வாசகன் செய்யும் நீதியா?

சாண்டில்யன் புனைவுகளில் இருந்து சோழர்களின் வாழ்வியலை அறிவது போலத்தான். சொல்லப்போனால் சாண்டில்யனில் இருந்து சோழர்களின் சல்லாபங்களைக்கூட நம்மால் வரலாற்றுக் கூற்றுகளாக அறியமுடியாது. சரியாக இருக்காது.

அந்தக்கால இங்கிலாந்தைப் பற்றித் தெரிந்துகொள்ள சார்ல்ஸ் டிக்கன்சையும் அந்தக்கால பிரான்சை தெரிந்துகொள்ள விக்டர் ஹியூகோவையும் வாசிப்பவர்களை தேர்ந்த இலக்கிய வாசிப்பாளர்கள் என்றே கருத இயலாது. நாடுகளைப் புத்தகங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள வல்லுநர்கள் எழுதிவைக்கும் வரலாற்று பூகோள ஆக்கங்களை வாசிக்கலாம். நாடு அல்லது இனம் அல்லது ஒரு பகுதியின் மக்களைத் தொகுத்து தெரிந்துகொள்ளத் துறை வல்லுனர்கள் எழுதிவைத்திருக்கும் எத்னோகிராபி சமூகவியல் புத்தகங்கள் இப்படி. புனைவாசிரியன் சமூகவியளாலன் இல்லை (அவ்வாறு தங்களைத் தவறாகக் கருதிக்கொள்ளும் புனைவெழுத்தாளர்கள் உண்டு; இன்னும் டேஞ்சராகத் தங்களைப் புனைவாசிரியனாகக் கருதிக்கொள்ளும் சமூகவியலாளர்களும் உண்டு). புனைவாசிரியன் தத்துவ ஞானி இல்லை (தொல்ஸ்தோயை இவ்வாறு கருதினால் அவரது ஆக்கங்கள் நம்மைக் குழப்பியே விடும்). சைகாலஜிஸ்டும் இல்லை.

எழுத்தாளன் கட்டுரைகள் எழுதலாம். வரலாற்றுப் புத்தகமோ விஞ்ஞானப் புத்தகமோ எழுதலாம். ஆனால் புனைவாசிரியனாகச் செயல்படுகையில் அவன் கதைசொல்லியே. கதை எனும் சொல்லே சொல்வது நிஜமல்ல என்பதைக் குறிப்பிட உருவாக்கப்பட்டதுதானே. புனைவு எனும் கலை வழியே எழுத்தாளன் உணர்வுகளையே தன்னிடமிருந்து ஆக்கம் வழியாக வாசகனுக்குக் கடத்த முயல்கிறான். அதனால் ஒருவகையில் அப்புனைவுலகில் நிகழும் புறவயமான காட்சிகளுமே அகவயமான எழுச்சிகள் கொண்டவை. அகம் தீண்டிய புறமே புனைவின் இலக்கணம். கன்னி நாவலில் (கவிஞர் பிரான்சிஸ் கிருபா எழுதி தமிழினி வெளியிட்டது) முதல் சில பக்கங்களில் வரும் மழைக் காட்சியை வாசித்துப் பாருங்கள்; அகம் தீண்டிய புறம்.
*

அடுத்து…

புனைவில் எழுத்தாளனைக் காண்பது. அதாவது எழுதப்பட்டிருக்கும் புனைவு அனைத்துமே எழுத்தாளனின் ‘உண்மைக் கதை’… என்று கருதுவது. மிகப் பெரிய ஊறு.

இந்த மனப்போக்கின் நீட்சி என்றால்…

பார்ப்பதை கேட்பதை… உள்ளதை உள்ளபடியே… எழுதிவைத்திருக்கும் எழுத்து என்று தேடுவது. அல்லது வாசிக்கப்படுவத்து அவ்வாறான ஆக்கமா என்று கேட்பது. இல்லை கற்பனைதான் என்றால் ஏதோ வகையில் மட்டம் என்று கருதுவது. உண்மைக் கதை என்று சொன்னால் சுவாரசியம் கூடுவதாகக் கருதுவது.

உள்ளதை உள்ளபடியே அப்படியே எழுதிவைக்க எழுத்தாளன் எதற்கு? புனைவாளன் எதற்கு? கலைஞன் எதற்கு? பத்திரிகை நிருபர் போதுமே. அல்லது சுய சரித்திரம் என்று எழுதிக்கொள்ளலாம். அவை புனைவல்லவே. கலையல்லவே.

எடுத்துக்காட்டு என்னை வைத்தே வழங்குகிறேன். விளம்பரம் என்று கருதாதீர்கள். மன்னித்துக்கொள்ளுங்கள். உரையைத் தொடர்வோம்.

அமெரிக்க தேசி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அமெரிக்காவில் படித்த நாட்களின் அனுபவத்தில் உருவானது. வழக்கமாக வரும் கேள்வி இந்த நாவல் உங்கள் சுய சரிதையா. நாம் இல்லை என்று மறுக்க மறுக்க அது ஆமாம் ஆமாம் அதுமட்டுமேதான் என்றே கேட்பவரின் காதுகளில் ஒலிக்கும். சைபிரியாவில் எத்தனை குளிர் என்றால் வாட்டர் என்று டைப் அடித்தால் ஐஸ் என்றுதான் திரையில் விழுமாம்.

உண்மையில் இந்த நாவலில் வழங்கப்பட்டிருக்கும் அரங்கத்தின் பகுதிகள்கூட என்னுடைய பள்ளிப்பருவ வாழ்க்கை கிடையாது. பள்ளி நண்பர்களுக்குத் தெரியும். நான் அரங்கத்தின் பிரசித்தமான வீதிகளில் வாழ்ந்தவன் இல்லை. காவிரிக்கரையோரம் ஒதுங்கியே வசித்தவன். நாவலின் நாயகன் போல குறும்பானவனோ துடுக்கானவனோ தன்னம்பிக்கையாளனோ காஸனோவாவோ இல்லை. அவை அனைத்துமே என் மனப்புருடனின் குணங்கள். நாவலின் அமெரிக்க பல்கலைக்கழகப் பகுதிகளும் சம்பவங்களும் இவ்வாறே. அங்குள்ள நண்பர்கள் தமிழில் வாசிக்க முடிந்தால் அறிவார்கள் நாவலின் சம்பவங்கள் நேரடியாக என்னுடைய அமெரிக்க வாழ்க்கை இல்லை என்பதை. பலருடைய அனுபவவெளியில் தோய்ந்து செய்த மாயக்கலவை.

இப்படிச் சொன்னதும் இரண்டு ஆண்டுகள் முன்னால் அவர் உழைத்த துறையில் கரைகண்டவர் (இது உண்மையே) மெத்த படித்தவர் மேதாவிலாசி என எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் என்னிடம் ‘அப்டின்னா இங்க ஒங்காந்தே அடிச்சுவுட்டதுன்னு சொல்லுங்க…’ என்றார். என்னே இலக்கிய வாசிப்பு முதிர்ச்சி. ஒன்று சுயசரிதை வரலாற்று அல்லது டைரி குறிப்பு அல்லது பார்த்ததை அப்படியே எழுதிவைக்கும் நிருபர் வேலையாக இருக்கவேண்டும் இல்லை அந்நாட்டிற்கே போகாமல் இங்கிருந்தே அடித்துவிட்டதாக இருக்க வேண்டுமாம். இவ்விரண்டிற்கும் வேறான புனைவுவெளி எனும் நிஜத்திற்கு அருகிலேயே இயங்கும் கற்பனைப் படைப்பூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் (புனைவெழுத்துக்)கலை என்பதையே புரிந்துகொள்ளாதவர். இவர்கள் புனைவெழுத்தின் விமர்சகர்களாகத் தங்களைக் கருதிக்கொள்வதில் பிரச்சனையில்லை அக்கருத்துக்களை புனைவாசிரியர் பொருட்படுத்திக் கருத்தில் கொண்டு தன்னுடைய எழுத்தைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் கருதுவதே வேடிக்கை.

புனைவின் நிகழ்வுகள் நீட்சிகள் வாழ்க்கையின் அனுபவங்களில் தொடங்கப்பட்டுள்ளன அல்லது முடிக்கப்பட்டுள்ளன அல்லது பிரதிபலிக்கப்பட்டுள்ளன. கலையாக்கத்தில் கடத்தப்பட வேண்டிய உணர்வுகளை முன்வைத்து இவை ஆசிரியனால் விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுக் கையாளப்படுகின்றன. இந்த அளவிற்கே நாவல்கள் ஆசிரியர்களுடைய வாழ்க்கை சுய சரிதை என்றாகும். மறுபக்கத்தில் முழுவதும் கற்பனையான கதை என்று ஒன்றுமில்லை இருந்தாலும் சுவைக்காது மனிதர்களுக்குப் பயன்படாது. ஒன்றுதான் சொல்லமுடியும். நான் அமெரிக்கா சென்றிருக்கவில்லை என்றால் இந்நாவலை எழுதியிருக்க முடியாது. அதற்கு மேல் புனைவையும் நிஜத்தையும் குழப்பிக்கொள்வது சிலருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு என்பதை ஒருவராலும் தடுக்க முடியாது.

என்னுடைய அமெரிக்க தேசி நாவலில் வரும் அமெரிக்காவும் ஶ்ரீரங்கமும் நிஜமல்ல. அதாவது நிஜம் மட்டுமல்ல. சம்பவங்களும் அவ்வாறே. என் கற்பனை தீண்டிய நிஜங்கள். இப்புனைவு மெமாயர் இல்லை. அமெரிக்க வாழ் இந்தியர்கள் வரலாறு இல்லை. அமெரிக்கர்களின் சோஷியாலஜி இல்லை. ஐந்து நாடுகளில் ஐம்பது நாள் சுற்றுப்பயணம் என்கிற பயணக் குறிப்புகள் இல்லை. உங்கள் பயணத்தில் இந்நாவலில் வரும் ஒரு சம்பவமுமே உங்களுக்கு நிகழாமலும் போகலாம். சில பல சமூக அவதானிப்புகளும் தகவல்களும் விரவியிருக்கலாம். ஆனால் இவை நிஜங்களின் கற்பனை வடிகட்டல். ஏதோ சில பொது (யுனிவர்சல்) உணர்வுகளை வாசிப்பவரிடம் எழுப்ப முயல்வதற்கான என் பொய்’மை’யில் தோய்ந்த வாய்மை.

சுயசரித்திரத்தையே புனைவாக வழங்குமளவு நான் அவ்வளவு திறனற்ற எழுத்தாளன் இல்லை.

ஆக…

நல்ல இலக்கிய வாசகன் செய்யவேண்டியது புனைவையும் படைப்பாளியின் வாழ்க்கையையும் குழப்பிக்கொள்ளாமல் அந்த ஒப்பீடு புனைவை ரசிப்பதற்கான அளவீடோ அடையாளமோ இல்லை… ஒரு பொருட்டே இல்லை என்று உணர்ந்து… இவ்வகை மனப்போக்குகளில் மாட்டிக்கொள்ளமல் தொடர்ந்து ஆக்கத்தின் வாசிப்பை நிகழ்த்த முயல்வது.

*

அடுத்து செய்நேர்த்தி…

தகவல் பிழைகளைக் கண்டுகொண்டுவிட்டதாகக் கருதிக்கொள்வது… சென்னை என்கிற ஊரில் நடக்கும் கதை என்கையில் நேரில் நாம் பார்க்கும் சென்னையாகவே அது இருக்க வேண்டும் என்று கருதுவது. இல்லை. முதலில் முக்கியமாக அவசியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது அது கதை. பொய். புனைவு. அந்தச் சென்னை அந்தக் கதைக்கான சென்னை. அதில் வரும் சென்னையில் அடையாறு பாலத்திற்கு அடியே நதி ஓடலாம் அதில் படகுகளும் இருக்கலாம். அடுத்தபடியாக ஓரத்தில் மலை இருக்கலாம். இல்லங்க… செந்தாமஸ் மௌண்ட் கொஞ்சம் தள்ளிதான் இருக்கு என்று சொல்லக்கூடாது. எழுத்தாளன் அவன் புனைவை வழங்குவதற்காக எடுத்துக்கொள்ளும் உரிமை அது. என்ன சொல்லலாம் என்றால் ஒரே கதையில் ஒரு பக்கத்தில் அடையாறு ஆறுக்கு அடுத்து மலை இருப்பதாகவும் அடுத்த அத்தியாயத்தில் அதற்கு அடுத்து மடு இருப்பதாகவும் எழுதிவைத்தாலேயே சொதப்பலான எழுத்து. மற்றபடி புனைவுலகம் விவரிக்கும் நிஜவுலகக் கூற்றுகளும் கற்பனை சார்ந்தவையே. பொய்’மை’யில் தோய்ந்த வாய்மை.

டெவில் இஸ் இன் தி டீடெய்ல்ஸ் என்பார்கள். தகவல்களையும் தளை மீறிய எழுத்தையுமே உற்று நோக்கிக்கொண்டிருந்தால் காவியங்களிலும் சாத்தான் மட்டுமே தென்பட்டுக்கொண்டிருக்கும். நாவல் எனும் புனைகளம் வானத்தில் திருவிக்ரம கால் வரையும் தூரிகை வீச்சு. ஜெட் விமானப் புகை காட்டும் வான்வரைவு (ஸ்கை ரைட்டிங்). நாவல் புறத்திலிட்ட வானளாவிய வளைகோடே வாசகன் அகத்தில் பதியவேண்டிய மனக்கீறல். அதன் நிறங்களோ வர்ணக்குழைவுகளின் விகிதங்களோ வளைகோட்டின் அத்தியாய அங்கங்களோ முக்கியமில்லை. அனைத்துமே புகையாகி வாசக மனவெளியில் வீசும் காற்றில் சிலநாட்களுக்குள் கரைந்துபோயிருக்கும். புனைவை அதனருகில் இருந்து மட்டுமே கண்டு தோய்ந்து வாசித்து ரசித்து மறவாமல் விலகிக்கொள். பிறகான வாழ்க்கையில் அடிமனத்தில் தேங்கியிருக்கும் அதன் கசண்டே அந்நாவல் உனக்கு வழங்கிய உலகப்புரிதல். பண்பாடு என்பதே கற்றவை முழுவதும் மறந்தும் மனத்தில் மிஞ்சுவதுதானே.
*

நல்ல இலக்கியங்களை வாசிப்பவன் நல்ல இலக்கிய வாசகன் எனலாமா.

அப்ப எவை நல்ல இலக்கியங்கள்? நாம் ஒவ்வொருவருமே நான் வாசித்த அனைத்துமே நல்ல இலக்கியங்களே… என்று கூறலாம். அப்ப வேறு யாரோ வரையறுப்பவற்றை சாவதற்குள் வாசிக்க வேண்டிய 100 நாவல்கள். இதுவரை வெளிவந்தவற்றில் தவறவிடக்கூடாத 1000 நாவல்கள். பில் கேட்ஸ் வழங்கும் புத்தகப் பரிந்துரைப் பட்டியல். இப்படி நல்ல இலக்கியங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியுமா…

பில் கேட்ஸ் காலேஜ் டிகிரியே முடித்திராதவர். தனது கணினித் துறை வர்த்தக முன்னெடுப்புகளில் அபாரமாக உழைத்து மிகப் பெரிய வெற்றி கண்டவர். இதனால் இவர் நல்ல இலக்கிய வாசகன் என்றாகிவிடுமா? கமல்ஹாசன் ரசித்த திரைப்படங்கள் பட்டியலில் நல்ல திரைப்படங்கள் இருக்கலாம். உங்களுக்கும் அவை பிடித்துமிருக்கலாம். இவ்வகைப் பரிந்துரையில் ஓரளவு நியாயம் உள்ளது. சுனில் காவாஸ்கர் கிரிக்கெட் கமென்டரி சொல்வது போல. துறையில் சாதித்தவர்கள் அத்துறையில் பரிந்துரைகள் வழங்கினால் பரிசீலிக்கலாம். ஏற்கலாம். குறைந்த பட்சம் பொருட்படுத்தலாம். பில்கேட்ஸ் வழங்கும் இலக்கியப் புத்தகப் பரிந்துரையும் நான் வழங்கும் இலக்கியப் புத்தகப் பரிந்துரையும் நிறைய தயக்கத்துடனேயே அணுகவேண்டும் ஏற்க வேண்டும். அது நல்ல வாசகனுக்கான அடையாளம்.

எதை வாசிக்கலாம் எதை ஒதுக்கலாம் என்பது உங்கள் உரிமை. என்றுமே அடுத்தவரை உம்முடைய ரசனையைத் தீர்மானிக்க விடக்கூடாது. உரிமையிழப்பு. ஆனால் கவனம். ஓரேடியாக முரண்டு பிடிக்கக்கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால் ஒரேடியாக நீ சொன்னால் கிடையாது என் வழி தனீ… வழி… என்று உரிமை என்கிற பெயரில் சிலவற்றை வளர்த்துக்கொண்டுவிடுவோம். நல்ல வாசிப்பிற்கே முட்டுக்கட்டைகளாகிவிடலாம்.

நீயாநானா நிகழ்ச்சியில் ஒருமுறை விருந்தினராகப் போயிருந்தேன். உடனிருந்த நண்பர் கவிஞர் மகுடேசுவரன் என்னை அவரது வாசகர் ஒருவரிடம் அறிமுகப்படுத்தினார். ஏதோ நல்லது செய்வதாக நினைத்துதான் செய்தார். ‘இவரை தெரியுமா… இவரும் எழுத்தாளர்தான். சொம்பு கொடை மலை இப்டி கதையெல்லாம் எழுதிருக்காரு… நாவல்கள் எழுதியுள்ளார். நீங்கதான் நிறைய கதையெல்லாம் படிப்பீங்களே… இவரை படிச்சிருக்கீங்களா…’ அவர் ‘இல்லை’ என்று சொல்லி நிறுத்தியிருக்கலாம். அவர் ‘நான் உயிரோடு இருக்கும் எழுத்தாளர்களை வாசிப்பதில்லை… என்று குறிக்கோள் வைத்திருக்கிறேன்.’ என்றார். மகுடேசுவரனுக்கு சங்கடமாகிவிட்டது. ‘நானும் உயிரோடு இருக்கும் வாசகர்களுக்கு எழுதுபவனில்லை. வருங்காலத்திற்கே எழுதுகிறேன்…’ என்று சொல்லிவைத்தேன். இவர் நல்ல வாசகரா என்றால்… தன்னுடைய முன்முடிபுகளால்… அதற்கு ஏதோ காரணங்கள் இருக்கலாம்… ஆனால் அவ்வாறான முன்முடிவு ஒன்றால் சிலபல நல்ல புத்தகங்களை புனைவுகளை வாசிக்கும் அனுபவத்தை இழந்துவிடுகிறார். உரிமை என்பதற்காகச் சமகாலப் பங்களிப்பையே மறுத்துக்கொள்வது சால்பல்ல.

அடுத்தவரின் ஆலோசனைகளை நமக்கான தேர்வுதானா என்று பரிசீலிக்கலாம். அந்த அளவு வெளிக்காற்றும் சிந்தையும் ஆலோசனைகளும் பரிந்துரைகளும் தன்னால் வந்துபோவதற்கு மனக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைத்திருக்க வேண்டும்.

இவை நல்ல வாசகனுக்கு அடையாளங்கள்.
*

அடுத்து அதிமுக்கியமான ஒன்று:

ஆனந்தம் பெறுவதற்கே இலக்கியம் வாசிக்கிறோம்.

At its best, art can be nothing more than a means of forgetting the human disaster for a while. சிங்கர் சொல்கிறார். I am still working hard to make this “while” worthwhile. என்றும் எழுதிவைக்கிறார்.

உத்திகளிலும் செய்நேர்த்திகளிலும் பரிசோதனை முயற்சிகளிலும் சிக்கிக்கொண்டு இந்த ஆனந்தத்தை இழந்துவிடக்கூடாது. இலக்கியத்தின் முக்கியமான இழை எளிமையானது. மனிதனுக்கு அவன் உணர்வுகளுக்கு நேரடியாகப் பயனளிப்பது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களின் நிறமாலைகளே இலக்கியத்தின் ஊற்றுக்கண்கள். இதில் புகுந்து புறப்பட்டிருக்கும் உணர்வுகளைப் பெறுவதிலேயே ஆனந்தமும் கைகூடுகிறது.

இதை இழந்துவிடக் கூடாது. மறந்துவிடக் கூடாது. ஆனந்தம் பலவகை தராதரங்களில். வாசிக்கும் ஆக்கத்தில் எத்தரத்தில் ஆனந்தம் அமைந்திருக்கிறது என்பதில் தெளிவு வேண்டும். பலவகை ஆனந்தமும் புனைவிலக்கியத்தில் இருந்து வாசகனால் பெற முடிந்தவையே.

இரண்டு கொலைகளைச் செய்துவிட்டுக் கொலையாளி தப்பி ஓடிவிடுகிறான். நகரத்தில் சமுதாயத்தில் மறைந்து கொள்கிறான். போலிஸ் துரத்துகிறது. சில அத்தியாயங்கள் சில உச்சகட்ட துரத்தல்கள் விரட்டல்கள் சண்டை காட்சிகள் பிறகு… மாட்டிக்கொள்கிறான். சிறை. சுபம். இல்லை போலிசால் சுடப்பட்டு மாள்கிறான் வீழ்கிறான். தப்பு செஞ்சா தண்டனைதாங்க என்கிற நீதி முன்வைக்கப்படுகிறது. சுபம். ரெண்டு மணிநேரத்தில் வாசித்துவிடலாம். வாசிப்பதில் ஒருவகையான ஆனந்தம். மறுப்பதற்கில்லை. சூப்பர் சேஸ் மாப்ளே… சான்ஸே இல்ல… கதைன்னா இப்டி விறுவிறுனு போகணும்பா… ‘ஏய்… நாம் பாத்தா சைலண்டு பாஞ்சா வயலண்டு…’ போலிஸ் சூப்பர் வசனம் ஒன்று நினைவில் தங்கலாம். களிப்பே உவப்பே. ஒரு மட்டத்தில் நின்றுவிடும் ஆனந்தம்.

இதே கதைக் களம் இன்னொரு நாவலில் வழங்கப்படுகிறது. எவ்வாறு. முதல் சில அத்தியயங்களில் பொறுமையாகக் கொலையாளியின் ஆளுமை விவரிக்கப்படுகிறது. பரிதாபமான ஏழை மாணவன். கடனாளி. குடும்பத்தை விட்டுப் பிரிந்தவன். அக்கா விபச்சாரியோ என்று சந்தேகப்பட்டவள். அந்நாட்டின் மிகச் சாதாரண மற்றுமொரு குடிமகன் அன்னாடங்காச்சி சமூகப் பிரதிநிதி.

இவன் காரணங்களே முன்வைக்கப்படாமல் திடீரென்று இரண்டு கொலைகள் செய்துவிடுகிறான். ஒரு கொலை தான் வேடிக்கை பார்க்கும் கந்துவட்டிக்காரரை. ஓரளவு திட்டமிட்டு. ஆனால் ஏன் என்று அவனுக்கே புரியாமல். அடுத்த கொலை சற்றும் திட்டமிடாமல் ஒரு முன்விரோதமும் இல்லாமல் அந்தக் கொலையைப் பார்த்துவிட்ட சிறு பெண்ணை.

ஓடுகிறான். சமூகத்தினுள் ஒளிகிறான். அன்றாடத்தினுள் அமிழ்கிறான். அலைகிழிகிறான்.

மனத்தினுள் போராட்டம். சாப்பாடு பிடிக்கவில்லை. தூக்கமில்லை. தூங்கினால் பயங்கரக் கனவுகள். குடும்பம் உறவு எவரிடமும் நாட்டமில்லை. பேசப் பிடிக்கவில்லை.

நாயகன் கொலைகளுக்கான தத்துவ விசாரங்கள் நிகழ்த்திக்கொள்கிறான். பார்ப்பவரிடமெல்லாம் முன்வைக்கிறான். தான் செய்த கொலைகளை நியாயப்படுத்த நெப்போலியன் வரை தன் கட்சிக்கு சார்பாகப் பேசுவதற்கு அழைக்கிறான். வாசகனிடம் முன்னிறுத்துகிறான். கூடவே சிறுபெண்ணைக் காரணமில்லாமல் கொன்றுவிட்ட அநியாயத்தை நியாயப்படுத்த முடியாமல் தவிக்கிறான். போலிஸ்காரனுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டதோ தான்தான் கொலைகாரன் என்று… ஏன் இன்னும் பிடிக்காமல் விட்டு வைத்திருக்கிறான்…

அடுத்த இருநூறு பக்கங்களுக்கு இந்தப் மனப் போராட்டமே அவன் செயல்பாடுகளாகவும் சிந்தனையாகவும் சுற்றிலும் காணும் புறமாகவும்… அனைத்துமே இந்த மனப் போராட்டம் வழியாகவே வாசகனுக்குக் காட்சிப்படுத்தப்படுகிறது. குற்ற உணர்வின் பரிதவிப்பில் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறான். நாயகனைப் போலவே வாசகனுக்கும் தொண்டை வற்றுகிறது.

சம்பவம் முன்னர் சொன்ன திரில்லர் கதையின் அதே சம்பவமே. முடிவும் அஃதே. ஆனால் முக்கியமாகக் கூடவே சம்பவங்களுக்கு முன்னும் பின்னுமான கதாபாத்திரங்களின் மனப் போராட்டம் விரித்துவைக்கப்படுகிறது. ஆடு புலி ஆட்டம். சதுரங்கக் காய் நகர்த்தல்கள்… அனைத்திலும் இந்த மனப்போராட்டம் ஊடுருவிப்போகிறது.

இலக்கியச் சுவை என்றால்… போலிஸ் கொலைகாரனுக்கு இடையில் நடந்துவரும் இந்தச் சதுரங்கக் காய்நகர்த்தல்களில் இடையில் திடீரென்று ஒரு பிச்சைக்காரன் தானே முன்வந்து நாந்தாங்க அந்தக் கொலைகளைச் செய்தேன் என்கிறான். போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு பயங்கரக் கடுப்பு. போடா மவனே…

இலக்கியச் சறுக்கல் என்றால்… பிறகு மனத்தளவில் உத்தமியான விபச்சாரி ஒருவள் வந்து கொலைகாரனைத் திருத்துகிறாள்… அல்லது அவளுக்காக இவன் மாட்டிக்கொள்கிறான். சிறையில் வருந்துகிறான். மோட்சம் பெறுகிறான்.

இவனுக்கு ராஸ்கல் நிகாவ் என்று பெயர்.

என்ன தலைப்பு யார் எழுதியது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

இந்த நாவலை வாசிக்கையிலும் ஆனந்தமே. ஆனால் தீவிரமான ஆனந்தம். சத்தானது. பல தளங்களில் அளிக்கப்படும் வகையில் பல்முனை பல்சுவை ஆனந்தம். சாதா திரில்லரில் கிடைப்பதைவிட மேலானது அல்லது தீவிரமானது. திரட்சியானது. வீரியமானது. இரண்டு வகை ஆனந்தத்தைப் பெறுவதிலும் தவறொன்றுமில்லை.

நல்ல இலக்கிய வாசகனால் இரண்டு வகைகளையும் பெறும் பக்குவத்துடன் வாசிப்பை நிகழ்த்த முடியவேண்டும். பிறகு நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் எந்தவகை ஆனந்தம் எந்த நேரத்தில் எவ்வளவு வேண்டும் என்பது வாசிப்பவனின் உரிமை. அவரவர் தமத தறிவறி வகைகளில்… அனைத்துப் புனைவு வாசிப்புமே நிஜங்களின் அவலங்களை மறந்துவிட்டு ஓரளவேணும் ஆனந்தமாக இளைபாறுவதற்கே.
*

தொகுத்துக்கொள்வோம். யார் நல்ல இலக்கிய வாசகர்?

ஆக்கத்தையும் ஆசிரியனையும் பிரித்து வைத்துக் கொண்டு ஆக்கத்தை அதன் பலங்களுக்காக ரசிப்பவன் அனுபவிப்பன் நல்ல இலக்கிய வாசகன்.

ஆனந்தம் பெறுவதற்கே வாசிக்கிறோம். இதை இழந்துவிடக் கூடாது. மறந்துவிடக் கூடாது. ஆனந்தம் பலவகை தராதரங்களில். வாசிக்கும் ஆக்கத்தில் எத்தரத்தில் ஆனந்தம் அமைந்திருக்கிறது என்பதில் தெளிவு வேண்டும். பலவகை ஆனந்தமும் புனைவிலக்கியத்தில் இருந்து வாசகனால் பெற முடிந்தவையே. அனைத்து புனைவு வாசிப்புமே நிஜங்களின் அவலங்களை மறந்துவிட்டு ஓரளவேணும் ஆனந்தமாக இளைபாறுவதற்கே.

புனைவாக்கத்தை முழுமையாக உள்வாங்கிப் பரிசீலித்து அனுபவங்களை தொகுத்துக்கொள்வதற்கு நினைவாற்றல் பொறுமை நிதானம் மூன்று கூறுகளும் வளர்த்துக்கொள்பவன்.

ஓவியத்தை ரசிப்பது போலில்லை இலக்கியம். அவகாசம் வேண்டும் முழுமையாக உள்வாங்கிப் பின்னர் அனுபவித்து ரசிப்பதற்கு. என்ன அளித்தது எதைப் பெற்றோம்… இவ்வாறு அசை போடும் மனவொழுங்கே புனைவாக்கத்தை ரசிப்பதற்கான செயல்பாடு. தேவை. அவசியம். நல்ல இலக்கிய வாசகர்கள் அனைவருமே புனைவு மறுவாசிப்பாளர்களே. இந்த அடையாளத்தை வளர்த்துக்கொள்பவன் நல்ல இலக்கிய வாசகன்.

புறவயமான மொழியறிவு வாக்கிய அமைப்பு சொல் நேர்த்தி நடை உடை பாவனைகள் உத்திகள் என்று எழுத்தின் செய்நேர்த்திக் கூறுகளை ரசிக்க முயல்வதோடு நிறுத்தாமல் ஓரளவேனும் அகவயமான கலையம்சம் கவித்துவம் போன்றவற்றை ரசிப்பதற்கான கற்பனை வளத்தையும் வளர்த்துக்கொள்ள முயல்பவன்.

வரலாற்றுப் புனைவுகளில் இருந்து வரலாறை கற்றுக்கொள்ள முடியுமா? அவை வரலாறு என்பதைவிட அவை புனைவுகள் என்பதே அங்கு முக்கியம்.

புனைவு ஆசிரியனின் சுய சரித்திரம் இல்லை என்கிற தெளிவு. அதே போல அவன் கேட்டதை பார்த்ததை அப்படியே எழுதிவைப்பவன் புனைவாசிரியனே இல்லை. பத்திரிகை நிருபர். அது நன்றாகவும் எழுதப்பட்டிருக்கலாம். உங்களுக்குப் பிடித்தும் இருக்கலாம். ஆனால் அது இலக்கியக் கலை இல்லை. புனைவு நிஜம் போலவே ஜோடிக்கப்பட்டிருக்கும் பொய். அந்தப் பொய்யின் வழியே ஆசிரியன் பேருண்மைகளைப் பரிசீலிக்கலாம் பகிரலாம். இந்தப் புரிதலுடன் ஆக்கத்தை வாசிக்க அணுகுபவன் நல்ல வாசகன்.

கடைபிடிக்கவேண்டிய வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரே முக்கியமான பழக்கம் என்றால்: முன்முடிபுகள் எதுவுமின்றி ஒரு ஆக்கத்தை வாசிக்க அணுக வேண்டிய செயல்பாடு.

தத்துவ ஞானிகள் நமக்கு ஞானம் பிறக்க நம் மனத்தை காலிப் பாத்திரமாக வைத்திருப்பது அவசியம் என்பார்கள். கேள்விப்பட்டிருக்கலாம். சற்றே பொதுப்படுத்திச் சொன்னால் எந்த கற்பிதத்தைப் எளிமையாகப் பெறுவதற்கும் அதற்கு முன்னே முன்புடிபுகளைக் களைந்துவிட்டு நிற்க வேண்டும். கற்பது எளிது.

புனைவாக்கப் புனலின் முன்னால் தன்னை காலிப் பாத்திரமாக நிறுத்திக்கொள்ள முடிபவன் நல்ல வாசகன். அப்புனைச் சுனையில் இருந்து எவ்வளவு பெறமுடியுமோ அது அளிக்கவல்ல அனைத்தையுமே மனத்தினுள் வாங்கிப் பருகி அனுபவிக்க முயல்பவன் நல்ல வாசகன்.

விளையாட்டில் திறமையானவர்களும் இவ்வாறுதான் செயல்படுவார்களாம். கீத் சேத்தி தெரியும். இந்தியாவின் சிறந்த பில்லியர்ட்ஸ் ஆட்டக்காரர்களில் ஒருவர். சுயசரித்திரமாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் வெற்றிக்கான குறிப்பிடுகிறார். முக்கியமான காரணம் ஒரு ஷாட் அடிக்க முனைகையில் பழசை எல்லாம் மறந்துவிட வேண்டும். ஒவ்வொரு ஷாட்டின் தொடக்கத்திலும். போன ஷாட் வெற்றியா தோல்வியா அது இந்த ஷாட்டை பாதிக்குமா… நினைவில் நிறுத்தி யோசித்தால் பாதிக்கும். மறந்துவிடு. மனசை நிச்சலனமா வெச்சுக்கோ. அதுவரை திரண்டிருக்கும் திறனால் மட்டுமே செயல்பாடு. நினைவுகளால் அல்ல. அங்கேயே கிரிக்கெட்டிலும் இப்படித்தான் என்று கீத் சேத்தி குறிப்பிடுகிறார். ராகுல் டிராவிடை குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஒவ்வொரு பந்தை யார் வீசினாலும்… எப்பந்து யார்யார்கை வீசப்பட்டாலும்… எதிர்கொள்கையில் பழசு முழுவதையும் மறந்துகொண்டு அந்த பந்திற்கான ஷட்டை மட்டுமே பயன்படுத்த முனைந்து… இப்டி… அதாவது மனசை காலில் பாத்திரமாக வைத்துக்கொண்டு செயலை அணுகினால் முழுவெற்றி எளிதாகக் கைகூடும்.

துரோணர் அர்சுனனுக்குச் சொன்னதும் இதுதானே… மரம் தெரிகிறதா… இல்லை குருவே. கிளை தெரிகிறதா… இல்லை குருவே. இலை தெரிகிறதா… இல்லை குருவே. சுற்றிலும் நாங்கள் இருப்பது… இல்லை குருவே. பட்சி தெரிகிறதா… இல்லை குருவே. அதன் கண்… தெரிகிறது குருவே. விடு பானத்தை… அர்ச்சுனன் சிறந்த வில்லாளி. வாசிக்கும் செயல்பாட்டில் மனத்தில் இந்த ஒருமுகம் வேண்டும். அமிழ்தல் வேண்டும். பிற அனைத்துமே கவனக் கலைப்புகள். நல்ல இலக்கிய வாசகனுக்கு வாசிக்க முனையும் இலக்கியம் மட்டுமே பொருட்டு.

ஶ்ரீநாரத நாதா… சரஸீருஹ ப்ருங்க சுபாங்கா… தியாகையர் தனது பிரசித்தமான கானடா ராகக் கீர்த்தனைப் பல்லவியில் நாரதரை இவ்வாறு வருணிக்கிறார். சங்கீதக் களஞ்சியமான தாமரைமலரின் மீது அச்சங்கீத அதிருசித்தேனைப் பருகியபடியே அமர்ந்திருக்கும் வண்டே என்று வருணிக்கிறார் நாரதரை. வண்டு ஆச்சார்ய ஸ்தானத்தை நிர்மாணம் செய்கிறது. ப்ரமனகீத நியாயத்தால். அந்த வண்டைப் போலவே வாசகன் இருக்க வேண்டும் என்கிறேன். துருவித் துருவி இலக்கியத் தாமரை வழங்கும் கலைத் தேனை உண்டுவிட முயலவேண்டும். உண்டு மயங்கி பரவசமடைந்துப் பயனுற வேண்டும். இந்தப் பரவசமே நல்வாசகனை அவனது வாழ்க்கையில் திடமாக வழிநடத்திச் செல்லும். இலக்கியத்தின் பயனும் அதுவே.

நன்றி.
*