புத்தகம் – உலகே உன் உருவம் என்ன?

Standard

ulagam-s

இணையத்தில் எழுதிய பதினைந்து அறிவியல் கட்டுரைகளை ‘உலகே உன் உருவம் என்ன?’ என்கிற தலைப்பில் தமிழினி புத்தகமாய் வெளியிட்டுள்ளது. ஜனவரி 9 தொடங்கும் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கும். விலை, ரூபாய் 100. ஆன்லைனில் வாங்க: உடுமலை தளம் | என்.எச்.எம். ஷாப்

அறிவியல் சார்ந்த விஷயங்களைத் தீவிரம் குறையாமல் சற்றே நகைச்சுவையுடன், சாய்வுநாற்காலியில் உங்களைப் புரட்ட வைப்பதே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம்.

இப்புத்தகத்தை முன்வைத்து வெளியீட்டு விழாவில் பத்ரி பேசியதை விரைவில் கானொளியாய் இணைக்கிறேன்.

‘என் சிதைக்கு விறகுகளைத் தேடாதீர்கள், வெளிவராத என் அறிவியல் கட்டுரைகளையே உபயோகித்துக்கொள்ளுங்கள்’ என்ற பெ. நா. அப்புசுவாமி வாழ்ந்த நம் தமிழ்ச் சூழலில், வைத்த முற்றுப் புள்ளிகளெல்லாம் ஒருவனது அறிவியல் கட்டுரைத் தேகங்களெங்கும் மச்சங்களாகிச் சொந்தச் செலவின்றி இவ்வாறு நேர்தியான புத்தகமாகும் அதிநிகழ்வு நேர்வது, பீச் காற்றில் வேட்டியில் சிக்கிக்கொண்ட லாட்டரி சீட்டிற்கு இன்னும் ஏன் வாங்கிக்கொள்ள வரவில்லை என்று அதட்டிப் பரிசைக் கையில் கொண்டு கொடுத்துவிட்டுப் போவதைப் போன்றது; பரிசுத் தொகை எவ்வளவு என்பதை இத்தருணத்தில் ஆராய்வது அறிவு ஜீவி என்று தமிழ்ச் சூழல் நினைக்கவைத்துவிடும் என்பதும் சமகால கற்பிதமே.

(மேற்படி வாக்கியவகையில் மர்ஸெல் பூஸ்ட் ஃப்ரெஞ்சில் கதை எழுதினால் அதை ஆங்கில மொழியாக்கத்தில் வாசித்து இந்திரலோக இலக்கியவகை என்று சிலிர்ப்பவர்கள், தமிழில் அதையே மூனேமுக்கால் வாக்கியமாய்ப் பிரித்து எழுதினால்தான் தமிழனுக்குப் புரியும் என்று மேல் பெர்த்திலிருந்து பீட்டர் விடுவதும் த. சூ. அ.ஜீ.வனத்துவமே)

இவ்வகைப் புத்தகங்களை பதிப்பிப்பவர் சற்றேனும் பித்தா-கோரஸாய் இருக்கவேண்டும்.

பாரதி சொல்லிவிட்டானே என்றே உலகம் அழியாமலிருக்க இன்றும் மூன்று வேளையும் வயிறார உண்டுவிடும் தமிழ் மக்களின் அறிவியல் அறிவை எவ்வாறெல்லாம் வளர்ப்பது என்று தாங்கள் உண்ட மயக்கம் தெளியும்வரை முக்கிலிருந்து முகநூல்வரைக் கூடிக் கூடி விவாதிக்கும் அறிவார்வலர்கள், மாநிலத்தில் நிகழும் ஏதோ ஒரு புத்தகக் காட்சியில் வருடம் ஒருமுறையேனும் சந்தித்து இவ்வகைப் புத்தகப் பதிப்பாளர்களிடம் ‘நன்றி’ என்று ஒரே ஒருமுறைக் கூறிச் செல்வதும் அதற்கான ஒரு வழியே என்று ஏற்றுக்கொள்வார்கள்தான்; அறிவியல் சார்ந்த விஷயங்களை சில வருடங்களாய் எழுதிவரும் என்னைப்போன்றோர் அந்த யோசனையை வழங்கிவிடாத வரையில்.

வாசகர்கள் வாங்கி வாசித்தால் போதுமானது. நீ யார் அவர்களை வாங்கச் சொல்வதற்கு என்று உங்கள் மனம் வெகுண்டால், தணிப்பதற்கு ஒரு ‘அவ்வப்போது’ வை முன் வாக்கியத்தில் எச்சொல்லிற்கு முன்னாலும் இணைத்துக்கொள்ளுங்கள்.