பேயோனுக்கு அஞ்சல்

Standard

[பேயோன் எழுத்தும் அவரின் ஆளுமையும் அறிமுகமாகாதவர்களுக்கு இந்த அஞ்சலில் ஓரிரு உள்நகை மட்டும் நிச்சயமாய் புரியாது. மற்றதெல்லாம் வழக்கம் போலத்தான்.]

அன்பின் பே,

எவ்விதக் குறிகளினாலும் எழுதப்பட்ட தமிழ் எழுத்தை வாசித்து வழிக்குகொண்டுவருவதில் உம்மிடம் வெளிப்படும் பேரார்வத்தைக் கண்டு சில வாரங்கள் முன்னர் உங்கள் முகவரியை ரொம்ப ஈஸியாக கேட்டுவிட்டேன். நம்வீட்டு உதவாக்கரை ஒன்றை அனுப்பிவைத்தால் உம்பார்வையில் முன்னுக்கு வரலாமே என்று.

இதுவரை பதிலில்லை என்றவுடன் தான் என் வினா உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் உளைச்சல்களை ஒருவாறு ஊகித்தேன். இது என்ன பத்து ரூபாய் கைமாற்றா, கேட்டவுடன் இல்லை என்று சொல்வதற்கு. இல்லை, உங்கள் புத்தகமா, இரவல் கேட்பதற்கு. போயா போ, அதை வைத்து நீ என்ன செய்துவிடுவாய் காதிலா மாட்டிக்கொள்வாய் என்று நீங்கள் மறுப்பதற்கு.

இவ்வளவு ஏன், என் வினாவை வீட்டிற்கு ஆட்டோ அனுப்புவதற்கு கேட்டதுபோல் நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கலாம். நியாயம்தானே. இதுவரை நீர் எழுதியதாக வெளியிட்டதை வாசித்து வளர்ந்தவனாக சொல்லிக்கொள்பவன் செய்யத்துணியும் செயல்தானே அது.

மேலும், உங்கள் பார்வைக்கென ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்று கூண்டினுள் வைத்திருந்த புத்தகம் வேறு ‘என்னை வெளியே விடு, நான் ஏதோ விலைக்கு போய்கொள்கிறேன்’ என்று தினமும் கண்கள் முன்னால் பக்கங்களை புரட்டிக்கொண்டு படபடக்கிறது. வயதுவந்த பிறகு நாலு எழுத்து படிக்கத் தெரிந்துவிட்ட எந்தப் புத்தகம் நம் பேச்சைக்கேட்கும் சொல்லுங்கள். மேலும், அப்படி எதிர்பார்ப்பதற்கு இது நம்ம காலம் மாதிரி இல்லீங்களே.

இக்கால புத்தகங்களை கணிப்பது கடினம். தினத்திற்கு அவர்கள் தரிக்கும் அட்டைகளும், காட்டும் பின் நவீனத்துவ ஸ்டைலும், அடிக்கும் மாய எதார்த்த ஜல்லிகளும், காந்திய மிதவாந்திகளான நம் போன்றோருக்கே கோபம்வந்துவிடும். வீட்டிலேயே நம் பார்வையில் வளர்த்தாலும், நம் கைக்கடங்காமல் கிடுகிடுவென ஆயிரம் பக்கங்களுக்கேனும் தலையெடுத்துவிடுகின்றன. சின்ன வயசா லட்சணமா நாலு பேரு படிக்கறா மாதிரி கைக்கடக்கமா இருக்கவேண்டாமா, இப்படி குதிர் மாதிரி வளர்ந்தால் உன்னை எவன் இனி இங்கு கையிலெடுத்து வாசிப்பான் என்று ஏதாவது சொல்லிவிட்டால் போதும் உடனே கோபித்துக்கொண்டு நான்கைந்து டுவீட்டுகளாய் சுருங்கிவிடுகின்றன. என்ன செய்வது சொல்லுங்கள். எல்லாம் அப்பன் பணத்தை திண்று கொழுக்கும் போக்கு. போதாததற்கு இப்பொவெல்லாம் வீட்டுக்கு வீடு ஒரு பெட்டி வந்துருக்கு பாருங்க, க்ஷண காலம் நாம் கண் அசந்தால் போதும், நன்றாக வந்திருக்க வேண்டிய புத்தகங்கள் பலதும் அதனுள் முகநூல் முத்தாய்ப்புகளாய் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் ரெண்டும்கெட்டான்களாய் தறிகெட்டுப்போய்விடுகின்றன.

ஏதோ நம் பேர் சொல்ல என்று நான்கைந்து புத்தகங்களை பெற்றெடுத்து அவர்கள் வழியில் அனுப்பிவிடவே முயன்றோம். இந்த ரிடையர் ஆன காலத்தில் அவர்கள் நம் பேரை கெடுக்காமல் இருந்தால் சரி என்று மட்டும்தான் சொல்லத்தோன்றுகிறது.

ஐம்பதிற்கும் மேற்பட்ட பிரமிப்பான புத்தகத் தலைப்புகளை மனத்தில் ஆசை ஆசையாய் வளர்த்தெடுத்துவிட்டு, அந்நிலையிலும் நம் சமுதாயப்பொறுப்புணர்ந்து, அவைகளுக்கான புத்தகங்களை வெளிக்கொண்டுவராத தியாகியான உம்மிடம் இதைச் சொல்லாமல், சமுதாயப்பொறுப்பற்று வதவதவென வருடத்திற்கு மூன்றாய் ஊர்பேர் தெரியாத புத்தகங்களையே பெற்றுத்தள்ளுபவர்களிடமா போய் சொல்லமுடியும்.

அவரவர் கஷ்கம் அவரவருக்கு என்றாலும் அதை அடுத்தவரும் நுகர வகைசெய்கையில்தானே தமிழ்மனம் மணக்கும். ‘ஏதிலார் கஷ்கம் போல் தம் கஷ்கம் காண்கிற்பின்…’ என்றுகூட சவரம் செய்யாத நம்ம ஆள் ஒருத்தர் சொல்லியிருப்பாரே. உமக்குத் தெரியாததா.

இந்த அஞ்சல் மூலம் என் கஷ்கம் உமக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அதனால் மறு வேண்டுகோளை உங்களுக்குச் சாதகமாய் மாற்றி விடுகிறேன்:

சென்னையில் உமக்கு அணுக்கமான குப்பைத்தொட்டி எங்கு உள்ளது என்று தெரிவித்தால், கூண்டைத் திறந்து வீட்டில் படபடக்கும் புத்தகத்தை அதில் கொண்டு விட்டு திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்துவிடுகிறேன். இன்ஸ்பெக்டர் குமாரை குப்பையில் மாணிக்கம் திருடும் பணியாளராய் நீங்கள் வேண்டியபோது அனுப்பி எடுத்துக்கொள்ளலாம்.

அதற்கு முன்னர் குப்பையை தினமும் திருடுபவர் எவரும் புத்தகத்தை அபேஸ் செய்யமாட்டார்கள்.

அது குப்பை அல்லவே. அதனால்தான் சொல்கிறேன்.

அன்புடன்
அருண்