அம்ருதா இதழில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக என்னால் அறிவியலை எழுதமுடிவது கலியுகம் செய்த நல்லூழ்.
தமிழ் புத்தாண்டு இதழில் ‘அறிவியல்’ இதன் அட்டைப்படத்தை அலங்கரிப்பது எனக்குமே ஆச்சர்யம்.
என்னத்தான் நிதியும் மதியும் ஒத்துழைத்தாலும், ஆரவாரங்களின்றி கலை இலக்கிய அறிவுத்துறை விஷயங்களை தொடர்ந்து பிரசுரித்துவருவதற்கும் ஒரு காதல் வேண்டும்.
நான் இதுவரை எழுதியிருந்த கட்டுரைகளில் ஒரு தொகுப்பை புத்தகமாக்கினார்கள். முன்பதிவு, லைப்ரரி ஆர்டர் போன்றவை ஓய்ந்து இம்மாதம்தான் இப்புத்தகம் கடைக்கு வந்துள்ளது. அம்ருதா பதிப்பகம் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் புத்தகம் கைக்கு வரவில்லை. வந்ததும் வாசகர்களுக்குத் தெரிவிக்கிறேன். இங்கும் விசாரித்துக்கொள்ளுங்கள் http://amruthamagazine.com/contacts.html
[இந்தப் புத்தகத்தை (pdfஇல்) வாசித்துவிட்டு உடனடியாக அதைப் பற்றி குறிப்பிடுவதாய் தானாகவே முன்வந்து, பொங்கலுக்குப் பிறகு ‘ஃபேஸ்புக்’ தவிர வேறு எதையும் உபயோகிக்கவிடாமல் கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிவிட்டதால், அவ்வாறு முடியாமல் போன நண்பர்களுக்கு: அதான் ஏற்கெனவே சொன்னேனே. நண்பர்கள் தொடர்ந்து நண்பர்களாகவே இருக்கலாம்; சாதகமாய் எழுதச்சொல்லி (நட்பை) படுத்தமாட்டேன் என்று.
எங்கிருந்தோ இங்கு வந்ததும் அதனால்தான். இனியும் என் எழுத்து வேண்டிய இடங்களுக்கு என்னை இட்டுச்செல்லும். நன்றி.]
சென்ற ஆண்டு குறிப்பிட்டதற்கு பிறகு, அம்ருதா வலைதளத்தை ஓரளவு சீர் செய்துள்ளனர். ஓரளவுதான்.
இதையும் ஏற்கெனவே குறிப்பிட்டேன்: நகரங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் உட்பிரதேசங்களையும் அம்ருதா இதழ் சென்றுசேரவேண்டியதின் அவசியத்தை. சேந்துச்சோ சேரலியோ, தெரியலை. ஸ்ரீரங்கம் செல்வா கடையில், நான் எழுதத்தொடங்கிய தினம்தொட்டு வாங்குவதை நிறுத்திவிட்டார்.
“செல்லப்பா, இதுக்குபோய் கோச்சுப்பாங்களா, மத்த பக்கங்களில் நல்ல மேட்டர்லாம் வருதப்பா. பிரபு திலக் இந்தவாட்டி எல்லாரையும் ஓட்டு போடச்சொல்லி ஞாபகமூட்டிருக்கார், கடைசி பக்கம், மாசத்துக்கு ரசிக்கறா மாதிரி அழகியசிங்கர் எதையாவது சொல்லிட்டே இருக்காரு, நம்மூர் ஜீயர் இல்லப்பா, சதாய்கிற பத்தியா, இவரு எழுத்தாளர்… இ.பா. பக்கம், உலக சினிமா, ஓவியம், சிறுகதைன்னு உனக்கு வேண்டிய தினுசில என்னைய மட்டுமே கோச்சுகாத மாறி நிறைய மேட்டர் இருக்கு… நீ சொன்னியேன்னு, அதே விளம்பரத்துல அனுஷ்காவுக்கு பதிலா வேற புது அணங்கை அதே புடவையை உடுத்துது…”
ஊர்பக்கம் செல்கையில் பரிந்துரைக்கவுள்ளேன்.
*