எழுத்தாளன் ஆகிவிட்டபடியால்

Standard

பூர்வ பீடிகை: முதல் அறிவிப்பு ஒரேடியாக ‘அறிவிப்பாய்’ மட்டுமே முடிந்துவிட்டதே என்று சில நண்பர்களுக்கு (ஆக்சுவலா, எதிரிகள்; with such friends who needs enemies) ஏமாற்றம். அதனால், here goes…

நகைச்சுவை என்பதால் நான் இக்கட்டுரையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிட்டுள்ள நபர்கள் மட்டும் ‘மனம் புண்பட்டால்’ போதும். மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தே புண்கள் பட்டுக்கொள்ளுங்கள்.

*

ஏற்கெனவே சொன்னபடி என் மூன்று தமிழ் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவை

  1. ஏலியன்கள் இருக்கிறார்களா? (தமிழினி பதிப்பகம்)
  2. நேனோ ஓர் அறிமுகம் (தமிழினி பதிப்பகம்)
  3. டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது: அறிவியல் கட்டுரைகள் (அம்ருதா பதிப்பகம்)

<<இங்கு நகைச்சுவை துவங்குகிறது>>

இதனால், தமிழிலும் எழுத்தாளன் ஆகிவிட்டேன் (பதிப்பாளர்தான் முதலில் கவனித்துச் சொன்னார்; இருட்டுவதற்குள் வீடுபோய்ச் சேரவும் சொன்னார்).

முன்பக்க விளைவுகளாய் இனி எதை எழுதினாலும் வாசிக்கப்படும் நிலையை அடைந்துவிடுவேன். எழுத்துவெளியில் சொற்களுக்கிடையே இடைவெளிகளில் ‘கிரியா ஊக்கி’ கிளர்ந்தெழுந்து வியாபிப்பதும் இனி சகஜம். எதைப்பற்றியும் இனி கருத்துரைக்கும் சர்வக்ஞப் பிரகாசத்தையும், விடுபட்ட விவேகத்தையும் அடைந்திருப்பேன். தமிழில் யார் எங்கு எதை எழுதினாலும் அதை இனி தன்னிச்சையாகக் கூர்மையாக கவனித்து வருவேன். என் குவிந்த கவனத்தைக் கவராதவை எழுதப்படுகையிலேயே வாசிக்கத் தேவையற்றவை ஆகிவிடும்.

பின்பக்க விளைவாய் ரோட்டில் நடக்கையில் பின்னால் “மன்னே, மன்னே, நர்சி மன்னே” என்று சன்னமாய் பாடிக்கொண்டு கறுப்புக்கண்ணாடிகளில் நான்கு பேர்கள் என் மேல்துண்டைப் பிடித்தபடி தொடருவார்கள்.

பக்க விளைவுகளாய், “அன்பின் அ” எனத் தொடங்கும் மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெறுவேன். (அவற்றை அரவிந்தன் நீலகண்டனுக்கோ, அதிஷாவுக்கோ ‘ஃபார்வர்ட்’ செய்துவிடுவேன். அசோகமித்திரன் மின்னஞ்சல் பார்க்கமாட்டார்.) டுவிட்டரில் “ஹாஷ்-டாக்” இட்டுத் தொடர் வசைகளால் துலக்கப்படுவேன். முகநூலில் இருப்பது நானில்லை என்று அறிக்கை விடுவேன். கூகிள் வாசகர் குழுமங்களில் எதிர்வினைப்போலிகளைக் களையெடுக்க வாசகர் உயர்மட்டக் குழுவை நியமிப்பேன்.

இணைய இதழ் எடிட்டர்கள் குழு என்னிடம் எழுதக்கேட்டு வாங்கிய ஆக்கங்கள் “பரிசீலனையில் உள்ளன” என்று பதிலளிக்கமாட்டார்கள். ஓரிரு எழுத்துப்பிழைகளைத் திருத்திவிட்டு எழுதுவது எப்படி என்று முழநீள மடல்களில் அறிவுரைகளும் இனி வழங்கமாட்டார்கள். சில வலை மேய்ச்சலர்கள் அவர்களால் கண்டுபிடிக்கமுடிந்த எழுத்துப் பிழைகளை மட்டும் பட்டியலிட்டு வாசகர் உங்களிடம் என் எழுத்தை முழுவதுமாய் புறக்கணிக்கச் சொல்வார்கள்.

போறாக்குறைக்கு இவ்வருடத்திலிருந்து நேரிலும் திரையிலும், நண்பர்கள் சிரித்தபடியும், வாசகர்கள் சீரியஸாகவும் “உங்கள் பத்து வருட திட்டம் என்ன?” என்பார்கள். ”என்னுடையது இருபது வருடத் திட்டம். வாரம் ஒன்றாய், ஆயிரம் அறிவியல் கட்டுரைகள்.” என்று பதிலளித்தால் நண்பர்கள் சீரியஸாகியும், வாசகர்கள் சிரித்துவிட்டும் போவார்கள்.

நேற்றுவரை வாசிக்காமல் இணையத்தில் ஓரங்கட்டி வைத்திருந்தவனை, இவ்வாறு நிலைமை மாறிப்போனதும், அச்சில், அசலில், எவ்வாறு எதிர்கொள்வது என்று உங்களுக்கு எரிச்சல் அதிகமாயிருக்கும். தனிக்க நானே என் புத்தகங்களையும் அவை விற்கப்படும் புத்தகக்காட்சியையும் முன்வைத்து சில பொது நி(ப)ந்தனைகளை இங்கு அளிக்கிறேன். கவனம் செய்துகொள்ளுங்கள்.

*

முதலில், புத்தக வெளியீட்டு விழா.

நான் அழைத்துப் பேசச் சொல்வதாய் இருந்த அனைவருமே தங்கள் புத்தகங்கள், வெளியீட்டு விழாக்கள் என்று பிஸியாக இருக்கிறார்கள். வாசகர்களும், தங்கள் பங்கிற்கு எந்த விழா எங்கே கூட்டம் என்று அட்டவணை-சரியாக அலைகிழிகிறார்கள். மேலும் நம் பதிப்பாளர்கள், ஆடம்பரங்களைத் தவிர்ப்பவர்கள். தி.நகர் பள்ளிக்கூட இருண்ட அறைகளுக்கு விளக்குவைத்த பிறகு வரமாட்டார்கள். அதனால், என் வெளியீட்டு விழாக்களை, புத்தகங்களை விற்ற காசில்தான் ஏற்பாடு செய்வதாக உத்தேசம்.

அவசரமென்றால், நீங்களே வெளியீட்டு விழாக்களை உங்கள் இடங்களில் இப்போதே ஏற்பாடு செய்துகொள்ளலாம். மழை வராமல் இருந்தால், ஓரிரண்டிற்கு வருகிறேன்.

*

அடுத்ததாக, விமர்சனங்கள்.

தாமாகவே முன்வந்து என் புத்தகங்களை விமர்சனம் செய்ய இருப்போருக்கு: ஏற்கெனவே, முதல் (ஆங்கிலப்) புத்தகத்திற்கு சொன்னதை நினைவுறுத்துகிறேன் (ஞாபகம் வைத்திருப்பவர்கள் இப்பகுதியை வாசிக்காமலும் கடக்கலாம்).

விமர்சனம் என்று வருகையில், அவர்கள் காசுகொடுத்து வாங்கிய புத்தகங்களில் எழுத்துப்பிழைகளைக் கண்டுபிடிப்பவர்களை வரவேற்கிறேன். அவர்கள் காப்பியில் உள்ள அச்சுப்பிழைகள் அக்காப்பியில் மட்டுமே என்பதைச் சொல்லிக்கொள்கிறேன். சந்தேகமென்றால் இன்னொன்று வாங்கிப் பார்க்கவும்.

மேலும், அவர்கள் காப்பியில் உள்ள அப்பிழைகளை என் கைப்படத் திருத்திக்கொடுத்து, பிழை நீங்கிய உத்திரவாதத்திற்கு என் கையெழுத்தையும் அவ்விடத்தில் இட்டுத் தருவதாய் உள்ளேன்.

வாங்கிய புத்தகங்களில் என் எழுத்தையும் தாண்டிய பிழைகளைக் கண்டுபிடிப்பவர்களைச் சந்திக்கையில் நெஞ்செரிய, சே, நெஞ்சாரத் தழுவுவேன். இறுக்கி அணைத்தால் சிலருக்கு மூச்சுமுட்டுமாமே…

மற்ற வகை விமர்சனங்களை, அவற்றை எதிர்கொள்ள உலகெங்கிலும் மூத்த எழுத்தாளர்கள் வகுத்துள்ள நீதிவழுவா நெறிமுறையில் (திட்டார் பெரியோர், திட்டுவார் இழிகுலத்தோர், பட்டாங்கில் உள்ளபடி), புறவயமான மனநிலையில், மரியாதையாக ஏற்பேன். இதற்கென்றே பிரத்யேகமாய் டின்டின் காமிக்ஸ் புகழ் “காப்டன் ஹடாக்”கிடமிருந்து எபிஸிசிடேரியன், அனகொலுத்தான் என்று A-யில் தொடங்கி பல கோர்வையான வசைபத்திகள், திட்டுரைகள் எழுதிவைத்துள்ளேன். கூடுதலாக, வரும் விமர்சனத் தகுதிக்கேற்ப “புக் ஆஃப் இன்ஸல்ட்ஸ்” போன்ற புத்தகங்களையும் கலந்தாலோசிப்பேன். நம் விமர்சன ஏற்புரையிலும் மொழிச்செறிவு முக்கியம் என்பதை நானறிவேன்.

அறிவியல் புத்தகங்களாதலால், வரும் கொதிப்புரைகள், சே, மதிப்புரைகளுக்கான எனது விமர்சன ஏற்புரையின் மொழிநடைக்கு சில அறிவியலாளர்களையும் கலந்துகொண்டுள்ளேன் (சாம்பிள்: நீ என்ன பெரிய ஸ்குரில் கேஜ் மோட்டாரா? ஃபுகுஷிமாலப் பொறந்தவனே. போடா, டோ-டெக்கேன் பென்ஸின் சல்ஃபோனிக் ஆசிட்).

சிலகாலம் யாருமே எதுவுமே சொல்லவில்லையென்றால், நானே எனக்கு ‘வரும்’மின்னஞ்சல்களை வெளியிட்டு அவ்விமர்சனங்களுக்கு மரியாதையுடன் பதிலளிப்பேன்.

*

அடுத்து, புத்தக்காட்சியில் நடந்துகொள்ளவேண்டிய விதம்.

முதலில், வாசகவட்டங்கள் கவனத்திற்கு: புத்தகக்காட்சியின் பிரதான வாயிலுக்கருகில் கட்-அவுட்டில் ‘ஜீன்ஸ் பேண்ட்’ போட்டுக்கொண்ட ‘போஸ்’தான் வைக்கவேண்டும். போஸ்டர்களிலும், நோட்டீஸ்களிலும் தாவங்கட்டையை கையால் ஏந்தியபடியிருக்கும் படம்தான் போடவேண்டும். வாயில் சிங்கப் பற்கள், பிடரியில் சிங்கமுடியோடு. நானும் நரசிம்மன்தான், ஞாபகம் இருக்கட்டும்.

மடியில் எந்த இலக்கிய இரண்யகசிபுவையும் இருத்தலாம்.

*

அடுத்து, நேர்முகம் பொழுது.

புத்தகக் காட்சியில் காலியாகும் சேர்கள் ஒன்றிரண்டை ஆக்கிரமித்திருப்பேன். சில சமயம் கேண்டீனில், சில சமயம் டிக்கெட் கௌண்டர்களில். அடையாளம் கண்டு அணுகி, வாங்கிய புத்தகங்களில் அங்கேயே சந்தேகங்கள் கேட்கக்கூடாது.

கட்டாயமாக ஸ்டாலில் வாங்கியதை என்னிடம் திருப்பக்கூடாது. வேண்டுமானால் “நீங்கதான் வேற பெயரில் எழுதுறீங்கன்னு டுவிட்டர்ல கிளப்பிவிட்டத நம்பி வாங்கிட்டேன் சார், ரிட்டர்ன் எடுத்துப்பீங்களா” என்று பேயோனிடம் கொண்டுபோங்கள். ஆனால் அவரைச் சந்திப்பதற்கு “கட்டண சேவை” கியூ.

என் கையொப்பம் வேண்டுவோர், கட்டாயம் என் புத்தகத்தில்தான் வாங்கிக்கொள்ளவேண்டும். வெற்றுத்தாள்களிலோ, ‘இனி இப்படிச் செய்யமாட்டேன்’ போன்ற வாசகங்கள் உள்ள தாள்களையோ நீட்டக்கூடாது.

சிவப்பு மசியில் அம்பு துளைத்த ஹாட்டீன் வரைந்த ரூபாய் நோட்டுகளில் பெண்களுக்குக் கட்டாயம் கையொப்பமிட்டுத் தரமாட்டேன்.

ஆண்களுக்கும்தான்; உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஞாபகமிருக்கட்டும்.

ஒரு புத்தகத்திற்கு ஒரு கையெழுத்துதான். புத்தகம் என்னுடைய மூன்றில் ஒன்றாக இருந்தால், கையொப்பம் இலவசம்.

*

புத்தகக்காட்சியில், கடைகளின் வாசல்களில் அமர்ந்திருக்கையில், அருகில் வந்து தொட்டுப் பார்க்கக் கூடாது. தூரத்தில் இருந்து நோட்டீஸ்களை சுருட்டி பேந்தா அடிக்கக்கூடாது. எப்போதும்போல் கூட்டத்தில் காலை மிதித்தபடி, இடித்துக்கொண்டு செல்லலாம்.

வாங்கும் புத்தகத்திற்கான பணத்தை என்னிடம் ஒப்படைக்கலாம். பில் போடச்சொல்லக் கூடாது.

துண்டுச் சீட்டில் எழுதியிருக்கும் புத்தகம் எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேட்கக்கூடாது. மீறிக் கேட்போருக்கு நிச்சயம் வழி சொல்வேன்.

*

நேர்முகமாய் வேறு என்ன செய்யலாம் என்றால், எழுத்தாளன் ஆகிவிட்டபடியால் இனி என் அலைபேசி எண்ணை மறக்காமல் கேளுங்கள். கொடுக்கும் எண்ணை அங்கேயே சரிபார்ப்பது தமிழ்வாசகப் பண்பாடன்று.

அறிமுகத்திற்கு “எனக்கு தஞ்சாவூர் ஜில்லாவில் கீழவிடையல் சொந்த ஊர்” என்றோ “எப்போ ஸ்ரீரங்கத்துல பாக்கலாம்?” என்றோ துவங்கினால் கவரப்படுவேன். ஆனால் என்னைப் பாரட்டுவதாய் நினைத்து “எப்படி சுஜாதா மாதிரியே எழுதறீங்க…” என்று டிராக் ஓட்டினால், எங்கள் இருவரையும் வெவ்வேறு காரணங்களுக்காக அவமானப்படுத்துகிறீர்கள், நினைவிருக்கட்டும்.

“என்னை ஞாபகம் இருக்கா” போன்ற கேள்விகளைத் தவிர்க்கவும். புத்தகக்காட்சியில் வேறு யாரிடம் கேட்டாலும் விடை கிடைக்கக்கூடிய கேள்விகளை என்னிடமும் எதற்குக் கேட்கவேண்டும். மேலும், வயதாகிவிட்டாலும், பதில்களில் எனக்குச் சில வேளைகளில் உண்மை கலந்துவிடுகிறது.

“நீங்க எழுதினது எதுவும் எனக்கு பிடிக்காது” அல்லது “உங்க அபரிமிதமான கற்பனையை கொஞ்சம் குறைச்சுகிட்டீங்கன்னா டிஸ்ட்ராக்ட் ஆகாம இருக்கும்” போன்று எதிர்மறையாகப் பேசி நான் உங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுமாறு செய்வதற்கு முனையாதீர்கள். நீளமாக விவாதித்து உங்கள் மனத்தை மாற்றுவதைவிட சட்டென்று உங்களிடம் கோபித்துக்கொண்டு போய்விடுவது எனக்கு எளிது; நேரம், மெமரி மிச்சம்.

மையமாகப் புன்னகைத்து உங்களைப் பற்றி நான் விசாரித்தால் ”போஸ்டன்ல வீட்டுக்கு சாப்பிட வரேன்னுட்டு, வரவேயில்லயே” எனத் துவங்கி மெனக்கெட்டு நீட்டிமுழக்கி பதில் அளிக்காதீர்கள். புத்தகக்காட்சியின் சத்தத்தில் ஒன்றும் காதில் விழாது. மேலும், ஜுஜுபி உங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு எனக்கு என்ன ஆகப்போகிறது?

துணுக்குறாதீர்கள். இதெல்லாம் காலேஜ் ராகிங் போல. சீனியர் நமக்குச் செய்ததை நாம் ஜூனியரிடம்தானே காட்டுவோம். மூத்தவர்கள் எனக்குச் செய்ததை இன்று என்னிடமிருந்து பெறுவதற்கான தகுதியை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.

*

மறப்பதற்கு முன்: நண்பர்கள் தொடர்ந்து நண்பர்களாகவே இருக்கலாம். இணையத்தில், ஊடகங்களில், சாதகமான ’விமர்சனம்’ எழுதச்சொல்லி வற்புறுத்தமாட்டேன். எதற்கும் போனில் அழைத்தால் எடுத்துப் பேசுங்கள்.

<<நகைச்சுவை இங்கு முடிகிறது>>

அப்புறம் ஒரு விஷயம். வீட்டில் எழுதிக்கொண்டிருக்கையில் விவரம் கேட்ட உதவியாளியிடம், புத்தகம் வந்ததும் அவளுக்கும் பிரதிகள் தருவதாகவும், வாசித்துப்பார்க்குமாறும் சொன்னேன்.

கலகலவென கண்கள்வரைச் சிரித்தாள். “ஏம்மா, தமிழ்தானே…” என்று நான் துவங்குவதற்குள்…

“அய, யனக்கெதுக்கு யிதெல்லாம். என்கு படிக்கவே தெர்யாது.”