பெயர் படு(த்து)ம் பாடு

Standard

தெய்வங்களுக்கு கோவிலில் ஆரத்தி எடுக்கையில் அப்பெயர் வரக் காரணம் கூறி அர்ச்சகர்கள் சிலாகிப்பார்கள். நாம் உச் கொட்டிக்கொண்டு மேலும் இரண்டு முறை கன்னத்தில் போட்டுக்கொண்டு வருவோம். அவ்வகையில் என் பெயர் காரணம் பற்றி பலர் எனக்குப் பற்றிக்கொள்ளும் அளவிற்கு ஊகித்து படுத்தி இருக்கிறார்கள். கன்னத்தில் போடவேண்டும் என்றுதான் தோன்றும். அவர்கள் கன்னத்தில்.

கேட்கும் அனைவரையும் அப்படிச் செய்யமுடியாது என்பதாலும் (காரணம் கடைசிவரியில்), இனிமேலும் இவ்வகையில் வேறுசிலர் படுத்துவார்கள் என்பதாலும், நானே ஒரு சுய பெயர் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று இதை எழுதிவைக்கிறேன்.

என் இயற்பெயர் ஒம்மாச்சி. இப்பூவுலகத்திற்காக அஃதை அருண் என்று என் தந்தையார் சுருக்கி விட்டார்.

அருணன் சூரியனின் சாரதி. கருடனின் சகோதரன் (இவ்வகை என் ‘புராண அறிவை’ வைத்தே ஒரு வேலை-இண்டர்வ்யூவை வெற்றிகரமாய் ஒப்பேற்றியுள்ளேன்; ரிடையர் ஆன பிறகு பழங்கதையாய் பகிர்கிறேன்). அருண்-இல் உள்ள ‘ண’ சமஸ்கிருதத்தில் இரண்டாவது ‘ண’. அருண என்பது கிருஷ்ண என்பதுபோல தேவநாகிரியில் எழுதவேண்டும். நரசிம்மன் என்பதில் உள்ள (தேவநாகிரியில் வீட்டுத் தண்ணீர் குழாய் வடிவில் உள்ள ந) ந-வைக் காட்டிலும் அழுத்தமான ண அருண-வில். இதை உலகிற்கு உணர்த்தி சீர்திருத்துவதற்காக என் தந்தையார் செய்ததாக எங்கள் வீட்டில் உள்ள சுவர்கோழிகளிடம் ஒரு ஊகம் உச் உச் என்று உலவுகிறது.

சரியோ தவறோ, என் தந்தையின் இச்செயலால், நெல்லில் பெயர் வரைகையில், சமட்கிருதத்தில் சரியாகவும், தமிழில் மூண்று சுழியும் சுழிக்கப்பெற்றேன். பிறப்புச் சான்றிதழிலும் (உ)பத்திரமாய் இந்த லாஜிக் ஆங்கிலத்திலும் வழிமொழியப்பட்டது. மேற்கூறிய தேவநாகிரியின் ‘ண’ களின் பாகுபாட்டு சூக்ஷமத்தினால், என் பெயர் Arunn நாட் Arun.

ஆங்கில எழுத்திற்கு மட்டும் எளிதாய் பொருந்திவரும் தமிழ் நியூமராலஜி என்கிற மகாசாஸ்திரம் பற்றி கேள்விப்படா வயதிலிருந்தே Arunn என்று எழுதி, அதற்கு மேற்படி மூன்று சுழி விளக்கத்தையும், கவனிப்போரிடம் தேவநாகிரி பற்றி உபரியாகவும் விளக்கம் கொடுத்துவந்தேன். நியூமராலஜி பற்றித் தெரிந்திருந்தால், இரண்டு N மட்டுமா, அன்றே RJXTZ என்றெல்லாமும் சேர்த்திருந்திருப்பேனே.

இப்பொழுதும் முதல் முறை ஆங்கிலத்தில் என் பெயரை வாசிப்பவர்கள் கேட்கும் முதல் கேள்வி “என்ன சார் நியூமராலஜியா?”. என் விஞ்ஞான சிந்தனை நிலையையே அயோக்கியப்படுத்துகிறதே என்று உள்ளுக்குள் கடுப்பானாலும் வெளியே சீரியஸாய் முகத்தை வைத்துக்கொண்டு, “இல்லங்க, ரெண்டு n ஆனா ஒரு ‘n’ ஸைலெண்ட்” என்கிறேன்.

உடனே கேள்விகேட்டவர்கள் முறுவலில் இருந்து மோகனப் புன்னகை, நகை, சிரிப்பாணி, என் எஸ். கேயின் சங்கீதச் சிரிப்பு வழியே வெடிச்சிரிப்புவரை ஏதாவது ஒன்றை வெளிப்படுத்துவர். கூடவே பேச்சும் என் (இல்லாத) நகைச்சுவை உணர்வைப்பற்றி விவாதிக்கத் திரும்பிவிடும்.

இதனாலும் எப்போதும் நன்மை என்பதிற்கில்லை. கடைசியாக மேற்படி “இரட்டை n” கேள்வியைக் கேட்ட அழகான பெண்மணி இப்போது என் இல்லறக்கிழத்தி.