எனக்குப்புரிந்த கைமண் அளவு அறிவியலை என் குறை எழுத்தின் மூலமே இணையத்தில் மௌனமாகவும் உற்சாகமூட்டியபடியும் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கும், வேறு ஊடகங்களில் இடம்பெறச்செய்ய முற்படும் அபிமானிகளுக்கும், என் அறிவியல் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். வணக்கங்கள்.
கீழே இந்த ஆங்கிலப் புத்தாண்டிற்கான என் தமிழ் உறுதிமொழிகள் சில:
நம்மூரில் இருக்கும் ஒரே இலக்கியவாதியை, அவர் இலக்கிய நோபல் வாங்கும்வரை படிக்கப்போவதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.
நான்தானே அந்த ஒரே இலக்கியவாதி என்பவரிடம் ”ஆம் நீர்தான்”, ”இல்லை, நீர் இல்லை” என்ற எந்த என் பதிலும் சந்திக்கும் இருவரில் யாரோ ஒருவருக்கு சங்கடமேற்படுத்துமென்பதால், தமிழ் எழுத்தாளர் என்று கூறும் எவரையும் இந்த வருடம் நேரில் சந்திக்காமல் இருப்பது என்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.
மின்னஞ்சலில் கணகாரியமாய் பலவரிகள் புகழ்ந்துவிட்டு, எழுத்துவேலை நிமித்தம் தொடர்புகொள்ள ஆர்வம், தொலைபேசி எண் கொடுத்தால் தொடர்புகொள்ள ஆவல் என்று கேட்டு, எண்ணைக் கொடுத்ததும், பதில் மின்னஞ்சல்கூட அனுப்பமுடியாமல் மாதங்கள் பிசியாக கம்மென்று இருப்போர்களின் பிசி-ஷ்கெட்யூலில், சும்மா வாழ்க்கை நேரத்தை விரயம் செய்துகொண்டிருக்கும் என் மூக்கை இந்த வருடம் நுழைப்பதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.
ஐம்பதற்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை தளத்தில் எழுதி வைத்திருந்தாலும், என்னைப்பற்றி பக்கத்தில் உங்களையே புகழ்ந்து கொள்கிறீர்களே என்பது போன்ற விஷயங்களுடன் (மட்டும்) மின்னஞல் அனுப்புவோரிடம், ”என்னைப்பற்றி” யில் என்னப்பத்தி எழுதாம உன்னப்பத்தியா எழுதுவாங்க என்று சண்டைக்குபோகாமல், என்க்கு டமில் அவ்ளொவா நாட் கமிங், ஸோ… யூ டூ சையன்ஸ் லைக்கிங்கா, ஸேம் ஸேம் லைக்கிங் யு நோ, bye, π , கைப்-பை, என்று சுருக்கமாக மின்னஞ்சல் அனுப்பியவர் மனம் நோகாமல் ஆங்கிலத்தில் பதில் அளித்து முடித்துக்கொள்வது என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.
பேச்சுமொழிக்கும் ஏட்டுமொழிக்கும் இடையிலுள்ள தமிழ்பற்று நிரம்பிய பிடிவாதப் பேராழியில் அறிவியல் உட்பட பல அறிவுத்துறைகள் கட்டிய புடவையோடு தொபுகடீர் என விழுந்து சுய-உயிர்-நீத்தம் (அதாங், ஸூஸைடு மா) செய்துகொண்டிருக்கையில், பேச்சுமொழியில் எழுதுவோரை படிக்கமாட்டேன் என்பவர்கள் என்னை (டூ விட்டுக்கொள்ள) சந்திக்கையில், அவர்களிடம் ஏட்டுமொழியிலேயே பேச உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன் (என்ன அய்யா, எதிர்படுகையில் ஒரு கண்ணை மட்டும் மூடித்திறக்கவைக்கும் தங்கள் கல்லூரி செல்லும் மகள் நலமா? (உண)வருந்திவிட்டீர்களா?)
சில மாதங்கள் முன்னரே (போன வருடமே) என் டுவிட்டர் அக்கௌண்டை (ommachi) டெலீட் செய்துவிட்டேன் என்பதால், என்னுடன் இதுவரை தொடர்ந்து அங்கு பேசிக்கொண்டிருப்பவர்களை, இனி டுவிட்டரில் இல்லாவிட்டாலும் அவர்கள் வீடுவரை நிச்சயம் ஃபாலோ செய்ய முயல்வேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.
(மேற்படி டெலீட்டை ஏன் சொல்லிவிட்டு செய்யவில்லை என்று கடுப்பில் டுவிட் செய்பவர்களுக்கு, Gaப்டன் ஸ்டைலில் ”சொல்லிட்டு செய்யறது உன் வழிடா, செஞ்சதயே சொல்லாதது என் மதி-டா” என்று நிச்சயம் பதில் டுவீட் அனுப்பமாட்டேன் என்பதும் போன உறுதிமொழியிலேயே அடக்கம்)
முக்கியமாக, என் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்களினால் புத்தகங்களாக ஆக்கமுடிகிறதோ இல்லையோ, நிச்சயம் இணையத்தில் எனக்குப் புரிந்த அறிவியலை தொடர்ந்து முடிந்தவரை எளிமையாக ஆங்கிலம் கலந்த தமிழ்நாட்டு பேச்சுமொழியில் மட்டுமே கட்டுரைகளாக எழுதியேத் தீருவது என்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.
இறுதியாக, மேற்கூறியவகை எழுத்தின் மூலம் புதுவருடம் முழுவதும் இலக்கியவாதிக்களுக்கு தமிழ் எது, தமிழ்நாட்டில் பேசும் மொழி எது என்று தொடர்ந்து அடையாளம் காட்டியபடியும், என் போன்ற இலக்கிய-மீதிக்களுக்கு அறிவியல் எது என்று கோடிகாட்டியபடியும் இருக்க தமிழ்க்கடவுளான ஸ்ரீவள்ளிதேவசேனாபதியை நட்டபைரவி ராகத்தில் இறைவணக்கம் செய்கிறேன்.
கொசுறாக, இனி இந்த வருடம் முழுவதும் இலக்கியவாதிகளை –- இதோ இவர்கள்தான் அவர்கள் என்று அடையாளம் தெரிந்தவுடன் — கிண்டல் செய்வதில்லை என்றும் உறுதிமொழி அளிக்கிறேன்.
***
(அடுத்து ஒரு கணிதக் கட்டுரை)