பெங்களூரு விஜயம்

Standard

சில மாதங்கள் முன்பு, ஒரு மாதம் பெங்களூரூ இன்ஸ்டிட்யூட்டில் [1] ஆராய்ச்சி நிமித்தம் அவ்வப்போது வசித்து, வீக்கெண்டெல்லாம் சென்னையில் வீட்டை விசிட்டிக்கொண்டிருந்தேன். அனுபவத்தில் சிலதை அப்போதைக்கு இப்போதாவது சொல்லிவைக்கிறேன். சென்னைமாநகருளார்களில் படிக்கும் சிலர் பிழைத்துகொள்ளலாம்.

பெங்களூர் சாம்பார் இனிப்பு. சட்னியும் இனிப்பு. மடியில் சிந்தி, மடினியும் இனிப்பு. ஒரு மாதம் பெங்களூரில் பல உணவகங்களில் சாப்பிட்டவுடன், வீட்டில் புறங்கையை நக்கினாலே அசட்டுதித்திப்பாய் இருந்தது. தோஷம் விலக ஆந்திரா கொங்கூராவில் ஒரு நாள் வலதுகையை முக்கிவைத்திருந்தேன்.

ஷதாப்தியில் பக்கத்தில் மூக்குபொடி ஏழுமலை அவ்வப்போது என்புறம் திரும்பி சர் என்று பொடியை இழுத்து எதிர்புறம் திரும்பி தும்மிக்கொண்டு வந்தார். அவர் பொடி, கண், படாமலிருக்க என் மேலாக்கை சரி செய்துகொண்டேன். பொடிபோடாதீங்கோ என்று சொல்ல தயக்கம். பொடியை அப்புறமும் தும்மலை இப்புறமும் செய்வாரோ என்று பயம்.

கொண்டுவந்த இரண்டு பெங்களூர் பொங்கலை கட்டுகட்டிவிட்டு பொருத்தியிருந்த கண்ணாடி ஜன்னலை திற, இலையை வெளியே போடவேண்டும் என்றார். அடுத்தமுறை மைசூர் பாகும் கொண்டுவாருங்கள், உபயோகித்து திறந்துபார்ப்போம் என்று சொல்ல தைரியம் வரவில்லை.

[மேலே, பெங்களூரு ரோட்டோர சுவர்சித்திரம்: அவதார் படத்திற்கு இன்ஸ்பிரேஷனாமே?]

ஆட்டோகாரரிலிருந்து கௌபாய் தொப்பி வைத்த ரயில்நிலைய ஊழியர் வரை அனைவரும் தமிழில் கேட்டவுடன் வழிசொல்கிறர்கள். அநேகமாக சரியாக இருக்கிறது. வழி.

பெங்களூரில் அனைத்து ஆட்டோவும் மீட்டர்போட்டே ஓட்டுவார்கள் என்று சொல்லியனுப்பினார்கள். போகையில் மீட்டர் போடவில்லை. வருகையில் வேறு ஆட்டோகாரர் போட்டார். இருவருக்கும் அதே தொகையை கொடுக்கமுடிந்தது.

இன்ஸ்டிட்யூட்டில் புதிய விருந்தினர் மாளிகையில் உறைவிடம். இதற்கு அனைத்து ஆட்டோகாரர்களுக்கும் பரிச்சயமான நேர்வழியாக செல்லாமல், நியூ BEL ரோட்டில் இருக்கும் D கேட் வாசல் வழியாக சென்றால் பக்கம். தலையை சுற்றி மூக்கைத் தொடவேண்டும். முதல் சில வாரங்களுக்கு ரோட்டின் பெயர் தெரியாமல், பக்கத்தில் இருக்கும் ராமையா காலேஜை, ராமையா ஹாஸ்பிட்டல் என்று தவறாக வழி சொல்லி, பட்டா, செம ஜாலி, மகா.

பெங்களூரு என்று பெயர் மாற்றிக்கொண்டாலும், இ ன்ஸ்டிட்யூட் பெயர்ப்பலகையில் ஆங்கிலத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்று எழுதியிருப்பதை மொழிமாற்றாமல், மொழிப்பிரதிப்பாக்கம் செய்தே கன்னடத்திலும் ஹிந்தியிலும் எழுதியிருக்கிறார்கள். சென்னையில் இவ்வகை பலகைகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இரு மாதிரிகளில், எது வீம்பு என்று தெரிந்ததும் அதற்கு ஒரு சப்பைகட்டு வெளியிடுகிறேன்.

இன்ஸ்டிட்யூட்டில் அநேகமாக அ னைத்தும் கருங்கல் கட்டிடங்கள். பல வெளியிலிருந்து பார்ப்பதற்கு சமாதி போல் இருக்கிறது. உள்ளேயும் சில அவ்வாறே என்கிறார் அங்குபடித்த ஒருவர்.

இன்ஸ்டிட்யூட்டின் வானுயர்ந்த சோலையிலே நான் நடந்த பாதையெல்லாம் யார் இருந்து வாடுவார்களோ, தெரியவில்லை. நான் நடப்பதை பார்த்து, கால் மனம் வலித்து, தன் சைக்கிளை கொடுத்தார் ஒரு பேராசிரியர். இரண்டாவது நாள் பஞ்சர். சிகரெட் பிடிக்கும் மாணவரிடம் வழிகேட்டு, இருமி, சைக்கிள்கடையை கண்டு, பஞ்சரெல்லாம் போடமுடியாதுங்க, டயரயே மாத்தனும் என்று உபதேசிக்கப்பட்டு, நூறு ரூபாய் பெறுமான இரும்பிற்கு, இரடு நூறு ரூபாய் டயர் டியூப் பொருத்தினேன். வருகையில் காற்றில் குபால்டு என்று கேட்டதாக ஞாபகம்.

இன்ஸ்டிட்யூட்டின் (மேடு பள்ளம் இல்லாத) பெரிய இறக்க ஏற்றங்களுடன் கூடிய தார் ரோடுகள் அழகு. போகையில் இறக்கத்தில் மிதிக்காமலே காலை பெடலிலிருந்து பிரித்துகொண்டு சைக்கிளில் பயணிப்பது இளவயது உற்சாகம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே. வருகையில் மேட்டில் வயது ஞாபகம் மூட்டுதே (மூட்டும் வலிக்குதே).

இதுவரை நேரில் சந்தித்திராத இணைய நண்பர்கள் பலர் பெங்களூரில் தொலைபேசியில் சந்தித்தார்கள். அடுத்தமுறை கட்டாயம் நேரிலும் சந்தித்துக்கொள்வதாய் இருக்கிறோம். ஆனால் வரமாட்டார் என்று நினைத்த புதிய சிநேகிதர் அ.செ.வுடன் சட்டென்று ஒட்டிக்கொண்டு நெடுநேரம் பார்ரூம் பாண்டராடியதில் ஒரு பழமை நேசமிருந்தது. ஞாபகமாக இவரிடம் ஒரு புத்தகம் ஓசி வாங்கிவந்தேன் (ஆக்ஸிடெண்டல் யுனிவர்ஸ், பால் டேவிஸ்). படித்ததும் கட்டாயம் திருப்பிக்கொடுக்கவேண்டும்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மிதவை கூட்டமாக வந்துபோகும் ஐய்யப்ப பக்தர்கள் போல இன்ஸ்டிட்யூட்டில் பல தேச, மாநில ஆராய்ச்சியாளர்கள் வந்துபோகிறர்கள். இன்ஸ்டிட்யூட்டில் உரிமையோடு புழங்குபவர்கள் இவர்களை சற்று விரோதமாய் பார்வையிட்டு கடந்து செல்கிறார்கள்.

என் நிறுவனத்திலேயே நேரில் பார்த்து பேசி பலவருடங்களாகிவிட்ட சகாக்கள் அட்லீஸ்ட் ஆறு பேரை இன்ஸ்டிட்யூட்டில் சந்தித்தேன். சென்னை வெயிலை புறக்கணிக்க இங்கு தஞ்சம் புகுகிறார்களாம்.

பெங்களூர் வாசம் எனக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பால்கோவாவை ருசிக்க அதனுடன் கடையைவிட்டு பய ணித்து வீட்டு பிரிட்ஜில் மாட்டிக்கொண்ட எறும்புபோல இருந்தது.

வேலை என்னவோ ஜோராகத்தான் நடந்தது. ஆனாலும் எனக்கு பெங்களூர் குளிர் ஒவ்வவில்லை. மாலையில் மனதும் மந்தமாகியது.

சென்னை செண்ட்ரலில் இறங்கி, என்ன சார் ஆட்டோவா, அடையாரா, கரீட் ரேட் இருநூறுருவா சார், நைட்டியூட்டி சார், திரும்பசொல்ல சவாரி எங்கிக்கீது, இப்ப இன்னாங்கர நீ, எம்புட்டு தருவ, எலுவது ரூவா கட்டாது, சரி, சரி, உல்லூர்தா நீ தெர்தே, குந்து, அப்டியே நூர்ருவா கொத்துரு, கைல யின்னா ஐபாடா…

மன சுக்குள் மத்தாப்பு…

கொசுறாக: ஒரு மாதத்திற்குள் பத்து முறை ரயில் பிரயாணித்ததில், க்ரிபயா தியான் தீஜியே, ட்ரெய்ன் நம்பர் 2008, மைசூரிலிருந்து புறப்பட்டு சென்னை வரை செல்லும் மைசூர் ஷதாப்தி விரைவுவண்டி வில் சம்க்‌ஷேபவாகி ஆகமிஸு இங்கே என்று தேசிய ஒருமைப்பாட்டு கலவையாய் ஒரு வாரம் கனவில் நான்கு மொழிகளில் ஒலிபெருக்கிக்கொண்டிருந்தது.

ஆராய்ச்சி பற்றி ஒன்றும் சொல்லவில்லையே: ஷதாப்தியில் அடிக்கடி மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் அமர்ந்தவாக்கில் பின்புறமாய் செல்வது தேகவளர்ச்சியை பாதித்து இளமையை திருப்புமா என்பதை ஆராயலாம் என்றிருக்கிறேன் (ஜோக்ஸ் அஸைட், இன்ஸ்டிட்யூட் வாத்தியார்களுடன் உறவாடியதில் சில புதிய ஆராய்ச்சி திசைகள், இழைகள் கிடைத்தன).

****

[1] இன்ஸ்டிட்யூட் அல்லது டாடா இன்ஸ்டிட்யூட் என்றால் Indian Institute of Science, Bangalore.

[2] தலைப்பு, துப்பறியும் சாம்புவிடமிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.