லைட் ரீடிங் மட்டும் செய்யும் (இன்றைக்கு) வயதுவந்த அன்பர்களுக்கு குளைச்சல் ஜார்ஜ் ஞாபகம் இருக்கும் (ஞாபகம் வரவில்லையென்றால் எனக்கு மறுவினையுங்கள்). அவர் பாணியில் ஏலியன்ஸ் பற்றி வலையில் பீராய்ந்த விஷயங்களை வைத்து ஒரு சிறு இடைச்சொருகல் செய்வோம். அறிவியலை கட்டுரைகளாகவே எப்போதும் எழுதுவது/படிப்பதிலிருந்து ஒரு மாற்று.
கீழுள்ள ஒவ்வொரு புல்லட்டிலுள்ள வாக்கியத்தை படிக்கும்முன்பு ”உங்களுக்கு தெரியுமா?” என்று வினவிக்கொள்ளுங்கள். (வாக்கியத்தை படித்ததும், மேட்டர் ஏற்கனவே தெரியும் என்றால், ”போடாங்க…” என்றும் சொல்லிக்கொள்ளலாம்)
- டாக்டர் அலன் ஹைனக் (Allen Hynek) ஏலியன்ஸ்களுடன் மனிதர்கள் தொடர்புகொள்வதை மூன்று வகையாக்கினார். முதல் வகை சந்திப்பு, ஏலியன்ஸ்கள் உபயோகித்த பொருட்களை – பறக்கும்தட்டுக்கள் போல – மட்டும் காண்பது. இரண்டாவது வகை சந்திப்பில் ஏலியன்ஸ்களின் பொருட்களை சாட்சியமாக கொண்டுவருவது. மூன்றாவது வகையில், ஏலியன்ஸ்களுடன் கைகுலுக்கி, கெட்டகாரியம் வரை செய்வது.
- மேல் துணுக்கிலுள்ள கருத்தினால்தான் ஸ்பீல்பெர்க், பூமிக்கு பறக்கும்தட்டில் வரும் ஏலியன்ஸ்களுடன் மனிதர்கள் சந்திப்பதாக அமைத்த தன் பட த்திற்கு குளோஸ் என்கௌண்டெர்ஸ் ஆஃப் தெ தேர்ட் கைண்ட் என்று பெயரிட்டார். அலன் ஹைனக்கும் இதில் சிறு பாத்திரத்தில் நடித்தார். க்ளமாக்ஸில் தொடுதூரத்தில் (அதாவது அருகில்) ஏலியன்ஸ்கள் இருந்தாலும், இரவாகி, கெட்டகாரியங்கள் செய்வதற்குள் படம் முடிந்துவிட்டது.
- 1967இலேயே ஏலியன்ஸ் என்று பெயரிடப்பட்ட ஹாலிவுட்-பாலிவுட் கூட்டுமுயற்சியான திரைப்படத்தை, பீட்டர் செல்லர்ஸ்சும் மர்லன் பிராண்டோவும் நடிக்க, நம்ம சத்தியஜித்ரே இயக்குவதாக இருந்தது. கதை 1962இல் சத்தியஜித்ரே சந்தேஷ் என்ற பெங்காலி பத்திரிகைக்காக எழுதிய பாங்குபாபூர் பந்து (பாங்கு பாபுவின் நண்பன்) என்ற சிறுகதை. மார்லன் பிராண்டோ விலகிக்கொண்டதால், ரே கடுப்பாகி ஹாலிவுட்டிலிருந்து கல்கத்தாவிற்கே திரும்பிவிட்டாராம்.
- 1970, 80 களில் பலமுறை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் ரேயின் ஏலியன்ஸை படமாக்க ஆர்வம் காட்டியபடியே இருந்ததாம். ஆனால் தகையவில்லை. 1982இல் ஸ்பீல்பெர்கின் ஈ.டி. படம் வந்ததும், விஞ்ஞான புனைவு கதை மன்னன் ஆர்தர் க்ளெர்க் உட்பட பலர் ஈ.டி. படக்கதை, ரேயின் ஏலியன்ஸ் கதை போலவே உள்ளது என்று குறிப்பிட்டனர். 1980இல் ஹாலிவுட்டில் கொடுத்த பேட்டியில் ரே, தன் ஏலியன்ஸ் திரைக்கதையின் காப்பி ஹாலிவுட் முழுக்க பிரிண்ட் போடப்பட்டு 1960களில் சுற்றிக்கொண்டிராவிடில், ஸ்பீல்பெர்கின் ஈ.டி. படம் தோன்றியிருக்க சாத்தியமில்லை என்றார். ஸ்பீல்பெர்க் பதிலுக்கு, தான் 1965இல் பள்ளியில் இருந்ததாக அறிவித்தார். மற்றொருவர் இது பொய், ஸ்பீல்பெர்க் 1969இல் படமெடுக்கத்தொடங்கிவிட்டார் என்று நிரூபித்தார். ஸ்பீல்பெர்க் பதிலுக்கு அப்ப நான் 1977இலேயே ”குளொஸ் என்கௌண்டர்ஸ் ஆஃப் தெ தேர்ட் கைண்ட்” படத்தை ஏலியன்ஸ் கருத்தை வைத்து எடுத்திருக்கேனே என்றார். மற்றொருவர் இ ப்படமும் ரேயின் ஏலியன்ஸிலிருந்து காப்பி என்றார். பதிலுக்கு… ஸ்பீல்பெர்க் கோடீஸ்வரரானார். ரே செத்துப்போனார்.
- சந்திரனுக்கு 1967இல் அனுப்பிய சர்வேயர் 3 என்ற உளவுகலனில் காமிரா பொருத்துகையில் நாஸாவில் தும்மியதில், காமிராவுடன் சந்திரன் சென்ற ஸ்டெரெப்டோகாகஸ் மைடஸ் என்ற நுண்னுயிர் கிருமி(கள்) அடுத்தமுறை 1971இல் அப்பல்லோ 12இல் (ஆம்ஸ்ட்ராங் சென்றதிற்கு அடுத்த விண்கலன்) மனிதர்கள் சந்திரனில் தரையிறங்கி சர்வேயர் 3 ஐ காணும்வரை உயிருடன் இருந்ததாம். நாமே சந்திரனில் ஏலியன்ஸாய் கண்ட நமது பூமி நுண்னுயிர். இதிலிருந்து நாஸாவில் பொடியன்கள் (அதாங்க பொடிபோடுபவர்கள்) யாரையும் வேலைக்கு எடுப்பதில்லையாம்.
- பிரபஞ்சத்தில் ஒரு நட்சத்திரம் சுமார் மூன்று கோடி வருட வயதுடனாவதும், இரும்பு போன்ற உலோகங்களினாலாகியும் இருக்கவேண்டுமாம். அதன் கிரகம் உயிரை தோற்றுவிக்கும் நம் பூமிபோல் வடிவமைப்புடன் உண்டாவதற்கு.
- வானியலாளர்களான மார்கரெட் டர்ன்புல், ஜில் டார்ட்டர் இருவரும் நம் சூரியமண்டலத்திற்கருகிலுள்ள சுமார் 17,129 நட்சத்திரங்களை, இவற்றின் கிரகங்கள் உயிர் நிலைபெறுவதற்கான சாத்தியங்கள் கொண்டது என்று பட்டியலிட்டிருகிறார்கள். நம் ஆகாச கங்கை காலக்ஸியில் நம்மிடமிருந்து சுமார் 11.8 ஒளிவருடம் தொலைவில் இருக்கும் எப்ஸிலன் இண்டி ஏ (epsilon indi A) என்ற கிரகம்தான் உயிர் இருக்கலாம் என்பதில் முன்னாடி நிற்கிறதாம். இதை அறிந்தபிறகே மேற்கத்திய வானியலாளர்கள் இந்தியாவில் உயிரைத் தேடவேண்டியதின் அவசியத்தை உணர்ந்தனர்.
- 1964இல் ருஷ்ய வானியலாளர் நிக்கோலாய் கர்டஷவ், ”கர்டஷவ் அளவை” (Kardashev Scale) என்று வளர்ந்த நாகரீகத்தின் தொழில்நுட்ப முதிர்ச்சியை மதிப்பிட அளவுகோலை நிறுவினார். ஒரு நாகரீகத்தின் கட்டுப்பாட்டில் எவ்வளவு உபயோகிக்கமுடிந்த ஆற்றல் (useful energy) இருக்கிறது என்பதை வைத்து, பிரபஞ்சத்தின் எந்த நாகரீகத்தையும், கர்டஷவ் அளவை வகை 1, 2, 3 என்று பிரிக்கலாம். மனித இனம் வகை ஒன்றிற்கு கீழே உள்ளது.
- ஒரு ஏலியன் நாகரீகத்தை மதிப்பீட, கர்டஷவ் அளவையை சார்ந்து டைஸன் உருளை (Dyson Sphere), அஸ்ட்ரோ இன்ஜினியரிங், தொழில்நுட்ப ஒற்றைப்புள்ளி (Technological Singularity) என்று பல சித்தாந்தங்கள், கருத்துக்கள் உள்ளது. இத்ததளத்தை தொடர்ந்து வாசிக்கும் வலையுலவிகளுக்கு இவற்றின் த்ருஷ்டாந்தங்கள் அவ்வப்போது பகறப்பட்டுள்ளது.
- 1957இல் தான் முதன்முதலில் அண்டோனியோ வில்லாஸ் போஸ் (Antonio Villas Boas) என்ற பிரேஸில் விவசாயி, நாய்போல் குலைக்கும் ஏலியன்ஸ்கள் தன்னை கடத்திச்சென்றுபோய் மேலே கூழ்போல எதையோ கொட்டிக் கற்பழித்துவிட்டதாய் அறிவித்தார். எதற்கு கூழ் என்பதற்கான அறிவியலாளர்கள் செய்த ஆராய்ச்சியில்தான் ”மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதலே அல்ல” என்ற பதம் தோன்றியது.
- ஏலியன்ஸிடம் கற்பிழப்பதில் பிரேஸில் விவசாயிதான் முன்னோடி. இதன் பிறகு ஹார்வர்ட் பல்கலைகழகத்தால் 2003இல் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்சிக்கட்டுரைபடி, 1957இல் இருந்து 2003வரை தான் ஏலியன்ஸால் கடத்தப்பட்டதாக தெரிவித்தவர்களை ஹிப்னோடைஸ் செய்து கேட்டதில், பத்தில் ஏழுபேர் கற்பிழந்துள்ளதாக அல்லது அவ்வகை பரிசோதனைகளுக்கு (?) உட்படுத்தப்பட்டதாக அறிவித்தனர். இதிலிருந்துதான் ஹிப்னோடிஸத்திற்கு கலியாணமானவர்களையே உட்படுத்தும் பழக்கம் வலுப்பெற்றது.
- இப்போதெல்லாம் ஏலியன்ஸ்களால் கடத்தப்படுவதே பூலோகவாசிகள் அவர்களுடன் வரம்பற்ற கெட்டகாரியம் செய்யத்தான் என்று ஸைகாலஜிஸ்டுகள் கருதுகிறார்கள். மிலிந்த் நைட் ஷியாமளனின் செக்ஸ் காட்சிகளற்ற, PG ரேட்டிங்குடனான சமீபத்திய ஸைன்ஸ் (signs) படம் ஏன் தோல்வியடைந்தது என்பதற்கான பரப்பியல் சார்ந்த உளவியல் காரணங்களை ஆராய்கையில் இவர்கள் இதை கண்டுபிடித்தனராம்.
[என்னை வாசிக்கும் சொற்ப வலை-தமிழ்-பொதுஜனத்தின் புத்திசாலித்தனத்தில் சந்தேகமின்றி, இத்தோடு முடித்துவிடலாம் என்றுதான் எண்ணினேன். ஆனால் இது போதாதகாலம். வாசகர்கள் வலையில் பலர் எழுதுவதையெல்லாம் படித்துவிட்டு, தன் பிடறியை தானே பார்த்துகொள்ளும் அளவு பெண்ட் நிமிர்ந்திருக்கிறார்கள். எதுக்கு ரிஸ்க், என்று தோன்றுவதால், சொல்லிவிடுகிறேன்:
1) துணுக்கு 7 இல், கடைசி வரி, ”indi A” வை இந்தியா என்று படிப்பதால் உதிக்கும் ஜோக்.
2) கடைசி துணுக்கு மொத்தமும் சத்தியமாய் என் உட்டாலக்கடி. ஷியாமளன் சைக்காலஜிஸ்டுகளின் காரணங்களின்றியே தோல்விப்படம் எடுக்கமுடிந்தவர்.
3) மற்றெதெல்லாம் சத்தியமான சத்தியம். என் நகைச்சுவை தவிர்த்து.]