செவ்வாயில் உயிர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில், பெர்சிவால் லோவெல் கால்வாய்கள், ஹோக்லாண்ட் செவ்வாய் மனிதமுகம் இப்படி அனுமானங்களையும், போலி அறிவியல்களையும் கடந்து, அறிவியல் ரீதியாய் பரிசோதனைகள் செய்து, செவ்வாயில் நிஜமாகவே உயிர் இருக்கலாமோ என்று விஞ்ஞானிகளை உந்திவிட்ட விஷயம் முதலில் நம் பூமியிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
அது ALH84001.
ALH84001. ஆலன் ஹில்ஸ் 84001 இன் சுருக்கம். 84001 என்பது 1984ஆம் வருடத்திய முதல் எரிகல் என்பதின் சுருக்கம். அண்டார்ட்டிக்காவில் டிசெம்பர் 27, 1984இல் விஞ்ஞானிகள் கண்டெடுத்த எரிகல்லின் நாமகரணம். சுமார் 2 கிலோ எடை (பியூரிஸ்டுகளுக்கு 1.933 கிலோகிராம்கள்), ஆர்த்தோபைரோசீனைட் (கல்)ஜாதி, இரண்டு கைக்குள் அடங்கும் உருளைக்கிழங்கு பருமன். சாதா பாறைபோல தோற்றம்.
ஆனால், இது செவ்வாயிலிருந்து பெயர்ந்து, வளியில் எழுந்து, விண்வெளியில் பறந்து, வளியில் விழுந்து, பூமியில் தஞ்சமடைந்துள்ளது.
பண்ணையார் வீட்டு சிதிலத்தில் கேப் வெடிக்க சுத்தியலால் அப்படி சும்மா சொட்டேர் என்று தரையில் அடித்ததும் பெயர்ந்து, எழும்பி, நம் கண்ணில் விழும் காரை போல இல்லை இது. செவ்வாயில் இருந்து விடுபட பொருளுக்கு கிட்டத்தட்ட நொடிக்கு 12 கிலோமீட்டர் இறுதி-வேகம் வேண்டும். கால்பந்தாட்ட திடல் சைசில் ஒரு சுத்தியல் நொடிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தை காட்டிலும் பன்மடங்கு வேகத்தில் செவ்வாயின் பரப்பை தாக்கவேண்டும்.ஓரளவு பெரிய சைஸ் கல் பெயர்ந்து, செவ்வாயின் புவியீர்ப்பைவிட்டு விலக. செவ்வாயை பெயர்த்தெடுக்கும் இவ்வகை வீரியத்துடன் முன்காலத்தில் ஒரு தூமகேதுவோ, இல்லை பெரியதாக (வேறு) எரிகல்லோ செவ்வாயை தாக்கியிருக்கலாம் என்பது அனுமானம்.பெயர்ந்த சில செவ்வாய் அங்கங்கள் அஸ்டிராய்டுகளாக சுற்றியபடி இருக்க, ஒரு சிலவே எரிந்து சொச்சமாய் பூமிக்கு வந்துள்ளன.
இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள சுமார் 24000 எரிகற்களில் 34 செவ்வாயிலிருந்து வந்தவை என்று கருதப்படுகிறது. அதில் ஒன்று இந்த ALH84001.
ஏன் இதைப்பற்றி இப்போது. காரணம், 1996இல் இந்த கல்லை பரிசோதித்த விஞ்ஞானிகள் இதில் செவ்வாயில் மைக்ரொப்கள் தாண்டி அதனினும் சிறிதான நேனோபுகள் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரம் இருப்பதாக அறிவித்தார்கள்.
இடச்சொரு-கல்: 1984லிலேயே கண்டெடுக்கப்பட்ட கல்லை 1996ரில்தான் பரிசோதித்தார்களா, ஏன்? நாஸாவில் கற்களை ஆராய்வதற்கு பணமில்லை. அத்தியாவசியமான ஆராய்ச்சியில்லை என எரிகற்களை வருடங்கள் கிடப்பில்போட்டு வைத்திருந்தனராம். நிஜம்தான். கார்ல் சாகன் தன் புத்தகத்தில் கூறுகிறார். பிறகு ஏதோ ஒரு அதுவரை பெயர் தெரியாத மாணவர் தன் பி.எச்.டி.க்காக இந்த கற்களை பொறுக்கி ஆராய்ந்துள்ளார். கல்லிலே கலைவண்ணம் விட்டு, உயிர்-வண்ணம் கண்டார்.
நாஸாவின் ஜான்ஸன் ஸ்பேஸ் செண்டரை சேர்ந்த விஞ்ஞானிகளான எவெரெட் கிப்ஸன், டேவிட் மெக்கே மற்றும் கேத்தி தாமஸ் கெப்ர்டா (Everett Gibson, David McKay, Cathy Thomas Keprta), 1996இல் இந்த கல்லை ஆராய்ந்து சயின்ஸ் சஞ்சிகையில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டனர். இவர்கள்தான் முதலில் எரிகல்லில் உயிர் உறவாடியிருப்பதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும், இதற்கு நான்கு அறிவியல் ரீதியான நிரூபணங்கள் தரமுடியும் என்றும், செவ்வாயில் இருந்து விழுந்திருக்கும் எரிகல்லில் என்றோ செவ்வாயின் நுன்னுயிர் ஜீவராசிகள் (மைக்ரோப்கள் போன்றவை) வாழ்ந்திருந்தால் ஏற்படக்கூடிய வேதியியல் மாற்றங்கள் கல்லின் பொதிந்திருப்பதாயும் கட்டுரையில் வாதிட்டனர்.
உதாரணமாக இக்கல்லில் கார்பொனேட் கனிமத்தின் பகுதிகளுக்குள் தென்படும் மேக்னடைட் பிரிவின் வேதியியல் கட்டமைப்பு பூமியில் இதேவகை கற்களில் நுன்னுயிர்கள் இரசாயன உறவாடினால் எவ்வாறு உருமாறுமோ அதுபோல மாற்றங்களினால் ஏற்பட்டதைப்போல் இருக்கிறதாம். ஆனால் இம்மாற்றங்கள் கல்லின் மேற்பரப்பில் இல்லாமல், உடைத்து உள்ளே சென்றால் தென்படும் கார்பொனேட்டின் உட்பரப்புகளில் தெரிகிறது. இதனால் இம்மாற்றங்கள் எரிகல் பூமியில் அண்டார்ட்டிக்காவில் விழுந்தபிறகு மேற்பரப்பில் பூமியை சார்ந்த நுன்னுயிர்களால் ஏற்பட்டதில்லை, செவ்வாயிலேயே மாற்றங்கள் ஏற்பட்டபின்னே எரிகல் இங்கு விழுந்துள்ளது என்பது ஒரு வாதம்.மொத்தமாக மறுப்பதிற்கில்லை.
மறுப்பதற்கு இன்னொரு குழு லாபிலேயே இந்தவகை மாக்னடைட் கனிமத்தையே செயற்கையாக, வேதியியல் முறைகளிலேயே, நுன்னுயிர்களின் குறுக்கீடுகள் இல்லாமலையே செய்துவிட்டோம் என்று 2002இல் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார்கள்.இதன்மூலம் ALH 84001 எரிகல் செவ்வாயில் உயிர் மேட்டரை சவப்பெட்டியிலிட்டு ஆணியடித்துவிட்டதாக மாநாட்டில் பறைசாற்றினர்.
ஜான்ஸன் ஸ்பேஸ் செண்டர் விஞ்ஞானிகள் தங்கள் பங்கிற்கு சளைக்காமல் 2008இல் இன்னொரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார்கள். மேற்படி 2002 கட்டுரையில் பரிந்துரைக்கப்படும் லேபிலேயே மேக்னடைட் செய்யும் முறையே தப்பு; கிடைப்பது செவ்வாயிலிருந்தோ ஏன் நம் பூமியிலிருந்தோ தோன்றியிருக்கக்கூடிய மேக்னடைட்டே இல்லை; சரியாக வேகவைக்கவில்லை; கம்பி பதத்திற்கு பாகு வரும்வரை மேற்படி விஞ்ஞானிகள் கிண்டவில்லை; அரைவேக்காட்டு ஆராய்ச்சி; கமாலக்கடி கிரிகிரி ஐஸலக்கடி கிரிகிரி; என்று அடித்து துவைத்து, அடுத்த மாநாட்டில் இந்தா உன்னுடைய சவப்பெட்டி ஆணிகள், உன் கட்டுரை சவத்தைக் கிடத்தவேண்டுமானால் வைத்துக்கொள் என்று திருப்பிக்கொடுத்தனர். இன்னமும் ALH 84001 செவ்வாயில் உயிர் இருப்பதைத்தான் சுட்டுகிறது என்று பதில் பறையை பலர் கன்னத்தில் அறைந்தனர்.
மேலே எழுதியவையெல்லாம் சத்தியமாய் நடந்தேறியுள்ளது. மாநாடுகளில் கிட்டத்தட்ட இப்படி மரியாதையாக அடித்துக்கொண்டுதான் அறிவியலை வளர்க்கிறார்கள். (நானும் வாங்கியிருக்கிறேன்; கொடுத்துமிருக்கிறேன்)
இந்த ஒரு விஷயத்திலாவது மவுசற்ற அறிவியல் சூழலும் மாசற்ற இலக்கிய சூழலும் ஒன்றுபடுவதை கண்டு கண்கள் குளமாகின்றன. சே, க்ளிஷே.
ALH 84001 பற்றிய 1996 சயின்ஸ் சஞ்சிகையின் கட்டுரையின் முடிவுகள் சரியா தவறா என்று எக்ஸோபயாலஜிஸ்டுகள், ஃபாஸில் பயாலஜிஸ்டுகள், ஜியாலஜிஸ்டுகள் என ப் பல ஜிஸ்டுகளிடையே இன்னமும் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது.மேலும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளாக. நாஸா விஞ்ஞானிகளே, தங்கள் 1996 கட்டுரையின் முடிவுகளை மேலும் வலுப்படுத்தி, இதுவரை பத்து கட்டுரைகளும் ஐம்பது மாநாட்டு உரைகளும் வெளியிட்டுவிட்டனர்.
ஈதிப்படியாங்கிருக்க, 1996 எரிகல் ஆராய்ச்சி உலகெங்கிலும் கிணத்தில்போட்ட எரிகல்லையெல்லாம் மீண்டும் பரிசீலிக்கவைத்தது. அப்படி அடுத்த ஆராய்ச்சிப்பார்வை விழுந்தது 1911ஆம் வருடம் எகிப்தின் நாக்ளா என்ற ஊரின் அருகில் கண்டெடுத்த எரிகல்லின் மீது.
நாக்ளா கல்லும் செவ்வாயை உடைத்து பூமிக்கு யாரோ தூமகேது வீசியெறிந்ததுதான். 1911இல் வானிலிருந்து திடீரென்று பலகற்கள் தெருவில் சென்றுகொண்டிருந்தோரின் கவனத்தையீர்த்து நாக்ளா ஊரின் அருகில் விழுந்ததாம். சுற்றிக்கொண்டிருந்த ஒரு நாயையும் பதம்பார்த்ததாம். எரிகல்லடிபட்ட நாய் உடனே பஸ்பம். ஹலோ, நிஜம்தான் சார். சிரிக்காதேங்கோ. அலி எஃபென்டி ஹக்கீம் என்ற விவசாயி நேரில் இந்நிகழ்வை பார்த்ததாக சாட்சி கூறியிருக்கிறார். நாயின் மிச்சம் எதுவும் கிடைக்கவில்லையாதலால் (சாம்பல் கூடவா கிடைக்கவில்லை?) இன்றுவரை விஞ்ஞானிகள் இதை நம்ப மறுக்கிறார்கள் [நாஸா தகவல் பக்கம்]. செவ்வாய்கிரககல்லினால் அடிபட்ட ஒரே தெருநாய் என்ற புகழ் வெளிச்சம் படாமலே முக்தியடைந்த நாக்ளா நாய்க்காக ஒரு நிமிடம் சிரிப்பை அடக்கி மௌனமாய் இருந்துவிட்டு கட்டுரையை தொடருங்கள்.
1996 ஆராய்ச்சிக்கு பிறகு, ஜான்ஸன் ஸ்பேஸ் செண்டரின் விஞ்ஞானிகள் 1999இல் இந்த நாக்ளா எரிகல்லை குடைந்தார்கள். ஆப்டிக்கல் மைக்ராஸ்கோப் மற்றும் ஸ்கேனிங்க் டனலிங்க் மைக்ராஸ்கோப் என்ற கருவிகளினால் பல மடங்கு கல்லின் பகுதிகளை பெரிதாக்கி கூர்மையாக கவனித்து படங்கள் பிடித்தார்கள்.
படத்தில் கல்லின் பரப்பில் தெரியும் சிறு சிறு குழிகள் நம் உலகில் சாதாரணமாய் கல்லில் பாக்டீரியாக்களினால் ஏற்படுவதுபோல் இருக்கிறதாம். ஆனால் நாக்ளா எரிகல்லோ பூமியயின் கற்களைவிட வயதானதாம் [தேதியாக்கமுறை கட்டுரையை படித்துக்கொள்ளுங்கள்]. 2006இல் இந்த எரிகல்லின் மற்றொரு சாம்பிளை குடைந்து உட்பரப்பிலும் இதுபோல குறுக்குநெடுக்காக கத்திபோல இருக்கும் தோற்றங்களை வெளிக்கொணர்ந்தார்கள். இந்த வடிவங்கள் பாக்டீரியாக்கள் கல்லுடன் உறவாடியிருப்பதினால்தான் என்று அனுமானிக்கிறார்கள்.
ஆனால் இதை செவ்வாயில் உயிர் இருந்ததற்கான ருஜுவாக மறுக்கும் கோஷ்டி கல்லின் உள்ளே கார்பன் நுன்துகள்கள் இருப்பதெல்லாம் சகஜம். பிரபஞ்சத்தில் விரவியிருக்கும் மூலக்கூறு கார்பன். இது பிரபஞ்சத்தில் அநேக கற்களில் தோற்றத்திலிருந்தே ஒட்டிக்கொண்டிருப்பது இயல்பே. கார்பன் மேட்டர் எரிகல்லிலும் இருப்பதினால் மட்டும் அவை பாக்டீரியாக்கள் உறவாடி உயிரியல் மாற்றங்களினால் தோற்றுவித்தவை என்று சொல்லமுடியாது. சாதாரண வேதியியல் மாற்றமே போதும் என்கிறார்கள்.
ALH84001 எரிகல், நாக்ளா எரிகல் தவிர ஷெர்காட்டி எரிகல்லும் செவ்வாயில்-உயிர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஷெர்காட்டி ஊர் நாம்ம பீஹாரில், கயா மாவட்டத்தில் உள்ளது. ஆமாம், இங்குதான் 1865இல் விழுந்த 5 கிலோ கல்லை உடனே சேதாரமின்றி எடுத்து பாதுகாத்திருக்கிறார்கள். நாய் ஏதும் செத்ததா என்று தெரியவில்லை.
ஆராய்ச்சி விளைவு? மேலும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகள், இப்படி அப்படி என்றில்லாத தர்க்கங்கள்.
ஆயாசமடையத்தேவையில்லை. இதுதான் அறிவியல். தடுக்கி தடுக்கித்தான் முன்னேறும்.
இந்த தர்க்கங்களினால் அறிவியல் துறைகளும், ஏலியன்ஸைபற்றி நாம் கொண்டுள்ள கருத்துகளும் வளர்ந்ததென்னவோ உண்மை. எக்ஸோபயாலஜி என்ற துறையே ஒரு எரிகல்லினால் புத்துயிர் பெற்றது எனலாம். 1990களுக்கு பிறகு பூமியிலிருந்து அனுப்பிய மார்ஸ் ஒடிஸி, மார்ஸ் எக்ஸ்பிரஸ், மார்ஸ் ரெகொனெய்ஸென்ஸ் ஆர்பிட்டர் மூன்று செயற்கைகோள்கள் (விண்கலன்கள்) இன்னமும் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி, தகவலனுப்பியபடி உள்ளது. ஸ்பிரிட் மற்றும் ஆப்பர்சுனிட்டி என்ற இரண்டு ரோவர்கள், சக்கரவண்டிகள், செவ்வாய் தரையில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. 2008இல் மார்ஸ் ஃபீனிக்ஸ் தரையிறங்கியுள்ளது. இன்னமும் பல மிஷன்கள் அனுப்பப்போகிறார்கள். செவ்வாயில் மனிதனை தரையிரக்கமுடியுமா என்று பரிசீலித்துவருகிறார்கள்.
இந்நிலையில் பொதுவாக எரிகல்லின் மூலம் தொடங்கிய ஆராய்ச்சி வழியாக நாம் எதையெல்லாம் நம்பலாம்?
முதலில் எரிகல் நிச்சயம் நம் உலகத்திலுள்ள கற்களையெல்லாம்விட வயதானது. இதை அடித்துக்கொள்ளும் அனைத்து விஞ்ஞானிகளுமே ஒருமனதாய் ஒப்புக்கொள்கிறார்கள். இதில் நுன்னுயிர், மைக்ரோபுகள் நேனோபுகள், இருந்ததா இல்லையா என்பதில்தான் கருத்துவேறுபாடு.
அதேபோல் நேரடி தகவல் சேகரிப்பில் சற்று நம்பும்படி தெரிவது, செவ்வாயில் மேற்பரப்பில் நம்மைப்போல் உயிர் இன்று வாழ்வதற்கான சாத்தியம் கிடையாது. ஒரு சில மைல்கள் நிலப்பரப்பிற்கு அடியே தோண்டிச் சென்றால் முடியலாம். நம் உலகிலேயே கடலுக்கடியில் உள்ள எரிமலைக்குள் பாக்டீரியாக்கள் சுகஜீவனம் செய்வதை குழந்தைகள்மட்டும் கண்டுகளிக்கும் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சிகளில் வீடியோவுடன் விஞ்ஞானிகள் ருசுவாக்கியுள்ளனர். செவ்வாயிலும் சாத்தியம். இன்னமும் கண்டெடுக்கவில்லை.
அடுத்ததாய் செவ்வாயில் நிச்சயம் நீர் உள்ளது. மேற்பரப்பிற்கருகிலேயே அடியில் பல மைல்களுக்கு திட்டுதிட்டாய் நீராலான ஐஸ் கட்டியாகவும் இருக்கலாம். நம் பூமியில் வரண்ட ஆறுகளின் பரப்பில் தென்படும் பாலிகன் போன்ற அமைப்புகளைப்போல் (வெப்பசலனத்தினால் நீர் உள்ளிழுக்கப்படுவதினால் ஏற்படும் வடிவங்கள்) செவ்வாயிலும் உள்ளது. மீத்தேன் உள்ளது.
ஆனால் இந்த வேதியியல் சமாச்சாரங்களை சார்ந்த உயிரியல் தட்டுப்படவில்லை. நீர், கார்பன், மீத்தேன் இருப்பதால், உயிர் இருந்தாகவேண்டிய ஆதாரங்கள் போதவில்லை. புரளி வேண்டுமானால் செய்யலாம். பல ஊடக செய்திகள் அடிக்கடி செய்கிறது.
ஆனால் இவைகளெல்லாம் ஏலியன்ஸ் இல்லை. நம்மைபோல அறிவு-ஜீவி-வாசிகள் இல்லை. செவ்வாயில் நன்றாக தேடினால் கிடைக்கலாம் என்பதே சிம்பிள் நுன்னுயிர்கள் மட்டுமே; மைக்ரோபுகள் இல்லை நேனோபுகள். எரிகல்லை வைத்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியபின்னரும் செவ்வாயில் இவ்வகை உயிர் இருக்கிறது, இல்லை இருந்தது, என்று திட்டவட்டமாய் கூறமுடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை.
கிடைத்த கேப்பில் சாதா கதாசிரியர்கள் புனைவுகள் செய்திருக்கின்றனர். நம்ம டாவின்சி கோடு புகழ்(?) டேன் பிரவுன் கூட ஒன்று எழுதியிருக்கிறார். டிஸெப்ஷன் பாயிண்ட் (2001) என்று ஆர்ட்டிக் பிரதேசத்தில் கண்டெடுத்த எரிகல் ஏலியன்ஸ்களை நிரூபிப்பதாகவும் அந்த விஷயத்தை பொதுமக்களிடமிருந்து மறைத்து ஒரு சதிக்கும்பல்… ஹாவ்… நான் படிப்பதாயில்லை.புத்தகம் பற்றி விக்கியிருக்கிறார்கள், படித்துகொள்ளுங்கள்.
சரி எரிகல்தான் திட்டவட்டமாய் கூறவில்லை. வைக்கிங் முதல் பல விண்கலங்களை 1970களிலிருந்து தரையிறக்கி ரோந்து சுற்றி செவ்வாயை நேரடியாக ஆராய்ந்திருக்கிறோமே. இப்படி நேரடியாக சேர்த்த விஷயங்களை வைத்து செவ்வாயில் உயிர் ஏதுவா லேதுவா பற்றி மறுபரிசீலனை செய்யலாமே என்றால், செய்திருக்கிறார்கள். பல ஆராய்ச்சி கட்டுரைகள், புரிதல்கள் சரடு சரடாய் நாம் படித்து வயதாவதற்காகவே ஒளித்துவைத்திருக்கிறார்கள்.
இதில் ஒரேயொரு அருமையான, இலக்கியதரமற்ற, சோக மர்மக்கதை அறிவியல் நூலை மட்டும் அடுத்து விளக்குவோம்.