செவ்வாயில் உயிர்

Standard

ஏலியன்களை ஏன் எங்கோ தேடவேண்டும். முதலில் அருகில் தேடிப்பார்க்கலாமே என்று நினைத்தால் தேடவேண்டிய இடங்கள் சில உள்ளன.

முதலில் நம் உலகம். அமேசான் காடு, ஆழ்கடல், இமாலயா, ஈஞ்சம்பாடி என பல இடங்களை, காத்து கருப்பு அடிச்சுருமேன்னு தேடாமல் விட்டுவைத்திருக்கிறோம். அவ்வப்போது பிரடேட்டர் (predator) போன்ற திரைப்படங்கள் எடுத்து இங்கெல்லாம் வேற்றுகிரக ஏலியன்ஸ் உலவலாம் என்று பூச்சாண்டி விடுகிறோம். ஆனாலும் அவகாசமிருக்கையில் ஈஞ்சம்பாடி போன்ற பகுதிகளில், அறிவியலார்த்தமான ஏலியன்ஸ், தொல்பொருள் ஆராய்ச்சி என தேடுதலுக்கு முன்னரே வேலிகட்டி பிளாட்டு போட்டு மனிதர்களை குடியேறிவிடுகிறோம்.

ஆனாலும் உலகில் தேடுவதற்கு வேரொரு முக்கிய காரணமும் இருக்கிறது. மாற்று உயிரினங்கள். இவை பற்றி தனியாக எழுதுவோம்.

நம் உலகை அடுத்து ஏலியன்ஸ்களை தேடவேண்டிய இடம் அருகில் இருக்கும் நிலா, வெள்ளி, செவ்வாய் கிரகங்கள், அப்படியே வெளியேறி பிரபஞ்சத்தில் தெக்கால வியாழனின் சந்திரன்கள் அயோ (அய்யோ இல்லை, Io) கானிமீட் (ganymede), தாண்டிப்போய் சனியின் சந்திரர்களான டைட்டன், என்சிலாடாஸ் (enceladaus) இப்படி ஒரு பட்டியல் இருக்கிறது.

எச்.ஜி.வெல்ஸில் தொடங்கி, ஆர்தர் கிளர்க், ரே பிராட்பரி என்று பலர் நம் சூரியமண்டல கிரகங்களில், அவற்றின் சந்திரன்களில் உயிர் சாத்தியத்தை வைத்து சென்ற நூற்றாண்டில் அருமையான விஞ்ஞான புனைகதைகள் எழுதியிருக்கிறார்கள். இன்றும் ஜூப்பிட்டர் ஃபைவ், மார்ஷியன் குரோனிகிள்ஸ் போன்ற சிறுகதைகள், தொகுப்புகள் பிரசித்தம்.

சூரியமண்டலத்து கிரகங்களில் இன்றைக்கு முதலாய், வசீகரமாய் தேறுவது செவ்வாய். சில வருடங்கள் முன் வீனஸ் எனப்படும் வெள்ளியில் நம்போன்ற உயிர் இருக்கலாமோ என்று எண்ணமிருந்தது. இப்போது இதற்கு சான்ஸே இல்லை என்று செவ்வாய்க்கு கவனத்தை திருப்பியுள்ளோம். செவ்வாய் பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் உள்ளது. விட்டு, ஏலியன்ஸ் சார்ந்த ஓரிரு விஷயங்களை பார்ப்போம்.

நாம் செவ்வாய் கிரகம் எனும் மார்ஸ், பரப்பில் மிதமிஞ்சிய இரும்பு ஆக்ஸைடினால் பூமியிலிருந்து பார்க்கும் கண்களுக்கு சிவப்பாய் தெரிகிறது. அதனால்தான் மார்ஸ் – கோபமான, உக்கிரமான, ரோமானிய யுத்தக்கடவுளின் பெயர். ஆனாலும் நம்முலகை போல் செவ்வாயில் பூகம்பங்கள் இன்று நிகழ்வதில்லையாம்.

நம் உலகில் படிகற்களினுள் பொதிந்த புராதான படிமங்களை வைத்து கடந்தகாலத்தில் இருந்த உயிரினங்களை ஓரளவு அறிகிறோம். இவ்வகை ஃபாஸில்களை பூமியில் பாதுகாப்பாக எங்கெங்கு எவ்வகை சூழ்நிலைகளில் கண்டெடுக்கிறோம் என்பதைவைத்து, செவ்வாயிலும் வரண்டுவிட்ட கால்வாய் திட்டுக்கள், வற்றிவிட்ட புராதான ஆறுகளின் வழித்தடம் என்று இடங்களை தேர்ந்தெடுத்து படம்பிடிக்க சாம்பிள் கற்கள் கொண்டுவர வின்கலன்களை அனுப்புகிறோம்.

1965இல் ரோந்து வின்கலன் மாரினர் 4, பெர்சிவால் லொவெல் முதலானோர் இருப்பதாய் வலியுறுத்திய (ஏலியபுராணம் கட்டுரையை பார்க்கவும்) கால்வாய்களை இதன் பரப்பில் காணவில்லை. 1971இல் மாரினர் 9 முதன்முதலில் வேற்று கிரகத்தை சுற்றிய செயற்கைகோளானது. பிறகு 1975இல் நாஸா அனுப்பிய வைக்கிங் 1 மற்றும் 2, 1976இல செவ்வாயில் முதன்முதலில் தரையிறங்கிய வின்கலன்கள். செவ்வாயில் உயிர் இருக்கிறதா என்ற நான்கு பரிசோதனைகளை செய்தவையும் இவ்வின்கலன்களே. பார்க்கப்போனால் இதுவரை வேற்றுகிரகத்தில் உயிர் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அறிய செய்யப்பட்ட வெற்றிகரமான பரிசோதனை இது மட்டுமே. மற்ற மார்ஸ்-மிஷன்களெல்லாம் நேரடியாக இக்கேள்விக்கு பதில்கண்டுபிடிக்காத மீடியா திரிபு. இந்த சோதனைகள், முடிவுகள், சச்சரவுகள், பற்றி பின்னர் (அடுத்த பாகத்தில்) விவரிப்போம்.

1992இல் சற்று தடுமாறி, பிறகு 1996இல் நாஸா மார்ஸ் கிளோபல் சர்வேயர் வெற்றிகரமாக செவ்வாய்க்கு அனுப்பியது. 2001இல் கைவிடப்படும் வரை இந்த சர்வேயர் செவ்வாயின் பரப்பை துல்லியமாக மேப் போட்டது. பிறகு 1997இல் அனுப்பிய பாத்ஃபைண்டர் ஸொயோனர் என்கிற ரொபோவை வெற்றிகரமாக தரையிறக்கி படம்பிடித்தது. சமீபத்தில் செவ்வாயில் தரையிறங்கிய ஃபீனிக்ஸ், ஜூலை 31, 2008 என்று ஐஸ்கட்டியை கண்டது. ஆனாலும், பெர்சிவால் லொவெலின் கால்வாய்களை காணவில்லை.

பூமியிலிருந்து அனுப்பிய மார்ஸ் ஒடிஸி, மார்ஸ் எக்ஸ்பிரஸ், மார்ஸ் ரெகொனெய்ஸென்ஸ் ஆர்பிட்டர் மூன்று செயற்கைகோள்கள் (வின்கலன்கள்) இன்னமும் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி, தகவலனுப்பியபடி. ஸ்பிரிட் மற்றும் ஆப்பர்சுனிட்டி என்ற இரண்டு ரோவர்கள், சக்கரவண்டிகள், செவ்வாய் தரையில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. படிக்கும் இத்தருணத்தில் இவை செவ்வாயில் எங்கு உலவுகிறது என்று அறியவேண்டுமா, நாஸவின் http://marsrovers.jpl.nasa.gov/mission/traverse_maps.html வலைதளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

செவ்வாய் கிரகத்தை பொறுத்தவரை அமேரிக்க வானியல் ஆராய்ச்சி நிறுவனமான நாஸா-வின் குறிக்கோள் நான்கு: 1) இதுவரை உயிர் செவ்வாயில் தோன்றியதற்கான ஆதாரம், சாத்தியம், தட்டுப்படுகிறதா 2) செவ்வாயின் சீதோஷ்ணம் எப்படி, ஏன் தோன்றியுள்ளது 3) செவ்வாயின் நிலப்பரப்பின் தன்மைகலை அறிதல் 4) மனிதனை செவ்வாயில் தரையிரக்குவதற்கான சாத்தியங்கள், ஏற்பாடுகள். இதுவரை, இனி, நாஸா செவ்வாய் கிரகத்தில் என்ன செய்தது என்ற அறிவியல், ஆராய்ச்சி, தகவல்கள் http://mars.jpl.nasa.gov என்ற வலைதளத்தில் போதும் போதும் என்கிற அளவிற்கு இருக்கிறது. புரட்டிப்பாருங்கள்.

இப்படி செவ்வாயை அறிய பலமுறை படையெடுத்துள்ளோம். இன்னமும் எடுப்பதற்கான ஆயத்தங்கள் செய்கிறோம்.

ஆனாலும் ஏலியன்ஸ், உயிரினங்கள், மாற்று உயிர், என்று எதுவும் திட்டவட்டமாய் தெரியவில்லை.

நிற்க.

செவ்வாய் இன்று தொலைநோக்கியிலோ விண்கலன்களில் நேரில் சென்றோ பார்ப்பதற்கு குளிர்ந்த, தரிசலான  பாலைவனமாக இருக்கிறது. ஆனால் சில லட்சம் வருடங்களுக்கு முன்னர் தண்ணீர் ஏரிகளும் ஏன் கடல்களும் இருந்திருக்கவேண்டும். நம் சந்திரனின் பள்ளத்தாக்குகளின் வயதையும், அங்கிருந்து அப்பல்லோ 11 அஸ்ட்ரநாட்டுகள் கொண்டுவந்த கற்களின் மூலப்பொருளின் கதிரியக்க தேதியாக்க முறைக்கு (radioactive dating) உட்படுத்தி சந்திரனின் வயதை நிர்ணயித்துள்ளோம்.

கதிரியக்க தேதியாக்கம் பற்றி ஏற்கனவே தேவையான அளவு விவரித்திருக்கிறோம். சந்தேகத்துக்கு சாம்பாராய் ஒருமுறை கவனத்தில் ஓட்டிக்கொள்ளுங்கள்.

அதே தேதியாக்க முறையில், செவ்வாயின் பள்ளத்தாக்குகளின் வயதையும் நிர்ணயித்துள்ளோம். செவ்வாய் தோன்றியது 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னராம்.

அவ்வாறே கதிரியக்க தேதியாக்க முறைகொண்டு, நம் உலகும் அதன் ஜீவராசிகளும் தோன்றியது முறையே 4.5 பில்லியன், 4 பில்லியன் வருடங்கள் முன்னரே என்றும் அறிகிறோம்.

அதாவது நாம் வாழும் இவ்வுலகும், செவ்வாயும், நம் சந்திரனும் சூரியமண்டலத்தில் சமகாலத்தோற்றம்.

இதை ஒத்துக்கொண்டவுடன் அறிவுசார் பொதுஜனமான நம் அனைவருக்கும் வரவேண்டிய கேள்விகளுள் ஒன்று, பின் ஏன் இவ்வுலகில் மட்டும் நாம் இருக்கிறோம், அந்த இரண்டு உருளைகளிலும் ஒருவரையும் காணோம்?

சரி நிலாவில் காற்று இல்லை. தெரிந்துகொண்டோம். நம்மைப்போல் உயிருமில்லை. ஓகே.

செவ்வாயில் ஏலியன்ஸ் இருக்கிறார்களா? செவ்வாயில் உயிர் இருக்கிறதா?

மர்மக்கதையின் கடைசிபக்கத்தை இப்போதே சொல்லிவிடுகிறேன். செவ்வாயில் தற்போது நம்மைபோன்ற உயிர் இருப்பதற்கான நிரூபணம் இல்லை.

ஆனால் நிச்சயமாக இதுதான் மர்மக்கதையின் நிஜமான கடைசிபக்கமா என்று தெரியாது.

கிட்டத்தட்ட அதே சமயத்தில் தோன்றிய இரண்டு கிரகங்களில் ஒன்றில்மட்டும் உயிர் தழைக்கிறது. மற்றொன்றில் ஒன்றையும் காணோம். ஏன்? ஒருவேளை இரண்டு கிரகங்களிலும் தோன்றி, ஒன்றில்மட்டும் மர்மமானமுறையில் அதன் சீதோஷணம் மாறியதால், உயிர் போய்விட்டதா? இல்லை ஒன்றில் மட்டும் தோன்றிய உயிர் மற்றொன்றிற்கு புலம்பெயர்ந்துவிட்டதா? செவ்வாயிலிருந்து பூமிக்கு. ஏன் ஒருக்கால் தோன்றித்தழைத்த உயிர் செவ்வாயில் தற்போது மறைந்துவிட்டது? ஏன் செவ்வாய் ஒரு விடுபடமுடியாத ஐஸ் ஏஜில் மாட்டிக்கொண்டுள்ளது?

இப்படி பல ஏன்கள். விடைகள் நிரூபணத்துடன் இல்லை. இக்கேள்விகளுக்கு பதில் கண்டறிவது முக்கியம். உதாரணமாய், கடைசி கேள்விக்கான பதில், விளைவுகளை அணுமானிக்கமுடியாத சீதோஷணசிதைவுகளை தோற்றுவித்து வாழும் மனிதர்களடங்கிய, நம் உலகிற்கும் பொருந்தும்.

செவ்வாயில் உயிர் பற்றி சில நம்பத்தகுந்த சித்தாந்தங்கள் உள்ளன. சில புரட்டு சித்தாந்தங்களும் உள்ளன.

ஒரு உதாரணம் பார்ப்போம். செவ்வாயில் பொறிக்கப்படுள்ள மனித முகம்.

இது என்ன என்பதற்கு முன், இவ்வகை புரட்டுகள் உருவாகுவதற்கு ஏலியன்ஸ் பற்றிய நம் எண்ணங்களே காரணமாக அமைந்துவிடுவதை குறிப்பிடுவோம்.

ஏலியபுராணத்தில் மற்றொரு பக்கத்தை பின்னோக்கி சென்று புரட்டினால், சார்பியல், கருந்துளை, ஹப்பிள் விதி, ராக்கெட், நாஸா என்று எதுவும் தோன்றியிருக்காத 1802 வாக்கிலேயே செவ்வாயில் உயிரினங்கள் இருந்தால் அவற்றிற்கு நாம் இவ்வுலகில் இருக்கிறோம் என்று தகவலனுப்புவது பற்றி யோசித்திருக்கிறோம். யோசித்தவர் கார்ல் ஃபிரெடிரிச் கௌஸ். கணிதவியலை மேய்ந்தவர்கள் ஒப்புக்கொள்வர், மேதை என்பதற்கு அத்தாட்சி இவரைப்போன்ற சிலரே என்று. அதேபோல், படைப்பூக்கத்திற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை திட்டவட்டமாய் மெய்ப்பித்தவர். இவர் சொன்ன சமிஞ்சை வழி இது. சைபீரிய காடுகளை நடுவில் பெரிய அளவில் தரைமட்டமாக்கிவிட்டு, அவ்வெற்றிடத்தில் கோதுமை பயிரிடவேண்டியது. வானிலிருந்து (செவ்வாயிலிருந்து) பார்த்தால் செங்கோண முக்கோணவடிவில் தெரியவேண்டும். பித்தாகரஸின் பிரசித்திபெற்ற தேற்றத்தை நினைவுட்டும் வகையில். செட்டிக்கு (SETI) முன்னோடி இவ்வகை சமிஞ்சைகள்.

செவ்வாயில் கால்வாய்களை கண்ட, வரைந்த பெர்சிவால் லொவெல், கௌஸின் ஐடியாவை சார்ந்து, சஹாரா பாலைவனத்தில் செங்கோணமுக்கோண குழி தோண்டச்சொன்னார். இவற்றில் எண்ணை நிரப்பி, இரவில் பற்றவைத்தால், செவ்வாய்வரை தெரியுமாறு தீவட்டி. வடிவியல் சார்ந்து தொலைநோக்கி வடிவமைப்பாளர் ராபர்ட் வுட் உலகில் ஒரு இடத்தில் பெரிய கருப்பு துணிகொண்டு போர்த்திவிடவேண்டும், பிறகு சில நேரங்களில் சுருட்டி வைத்துவிடவேண்டும். செவ்வாயிலிருந்து பார்த்தால் உலகம் கண்ணடிப்பதுபோல் இருக்குமாம். சத்தியமாய் இப்படித்தான் world wink என்று சொல்லியிருக்கிறார்.

நல்லவேளை, பொய்கையாழ்வார் சொன்னதுபோல் வையம் தகளியாய் வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காய் யோசித்து, செவ்வாய்வாசிகள் உணர, திருமாலுக்கு நேந்துகொண்டு ஒருவரும் உலகையே கொளுத்தவில்லை. இதுவரை.

ஆனால் விபரீதமாக, இவ்வகை அறிவியல் எண்ணங்களின் நீட்சியாய், வேறு புரட்டுகள் உதித்தன.

உதாரணமாய், சென்ற நூற்றாண்டில் நாஸ்கா கோடுகள் (Nazca lines) பிரசித்தம், கேள்விப்பட்டிருக்கலாம். தென் அமேரிக்காவில் பெருவில், நாஸ்கா பாலாவனத்தில் வானிலிருந்து பார்த்தால் உருவங்கள் தெரியுமாறு நிலத்தில் கோடுகள் இருக்கிறது. இவை ஆறாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வசித்த நாஸ்கா நாகரீகத்தவரின் செயல் என்று நம்பப்படுகிறது. அறிஞர்கள் இவற்றை இந்நாகரீதத்தின் மத, வழிபாட்டு தேவைகளுக்கான சாமக்கிரியைகளாய் பார்க்கிறர்கள். ஆனால் எரிக் வான் டனிக்கன் எழுத்தாளர் தன் சாரியட்ஸ் ஆஃப் தெ காட்ஸ் என்ற புத்தகத்தில் இக்கோடுகள் விமானதளத்தை சுட்டிக்காட்டும் இடம். இங்குதான் அந்நாளில் (ஆறாம் நூற்றாண்டில்) வேற்றுகிரகத்தினர் (ஏலியன்ஸ்) நாஸ்கா இனத்தவரை சந்திக்க தங்கள் வின்கலத்தில் வந்து தரையிறங்கினர் என்கிறார்.

இது பரவாயில்லை, நாஸ்கா கோடுகள் பிரபலமானதும், பறக்கும் தட்டுகள் பற்றி 1960, 70 களில் உலகெங்கும் ஒரு கலந்துரையாடல் நடந்துகொண்டிருக்கையில், அமேரிக்க, இங்கிலாந்து என்று திடீரென்று இரவோடிரவாக பயிர்களை சமன்படுத்தி, வானிலிருந்து பார்த்தால் தெரியுமாறு வயல்களில் கிலோமீட்டர் விட்டத்தில் பெரிதாக வட்டங்கள் தோன்றின. ஏலியன்ஸ்கள்தான் நமக்கு இவ்வாறு சமிஞ்சையாய் செய்கிறர்கள் என்று ஊடக செய்திகள்  அனுமானித்ததை திட்டவட்டமாக மறுக்கமுடியவில்லை. மேலும் சில இடங்களிலும் இவ்வகையில் மர்மமாக வட்டங்களும் வேறு கணித உருவங்களும் தோன்றின. சில வருடங்கள் கழித்து சில காரணகர்த்தாக்கள் டிராக்டரும் கையுமாக இரவில் பிடிபட்டனர். சிலர் அவர்களாகவே பல வருடங்கள் கழித்து போரடித்துபோய் உண்மையை, தாங்கள்தான் அவ்வட்டங்களை வயல்களில் வரைந்ததாக, ஒப்புக்கொண்டனர். இன்னமும் ஓரிரு இடங்களில் யாரும் பொறுப்பேற்காத இவ்வகை வரைபடங்கள் இருக்க்கிறது. ஏற்கனவே விளங்கிய பேத்துமாத்தினால் இவற்றை தற்போது விஞ்ஞான உலகம் சீரியஸாய் எடுத்துக்கொள்வதில்லை.

ஏலியன்ஸுக்கான, ஏலியன்ஸ்களால், என்று பலவருடங்களாய் இவ்வகையில் தோற்றுவித்த, தோன்றிய, சமிஞ்சைகளில் ஒரு எதிர்சாரி கூக்ளிதான் செவ்வாயில் மனித முகம். உலகில் தோன்றாமல், சமிஞ்சை செவ்வாயில் தோன்றியது. கண்டுபிடித்தது 1976இல் செவ்வாயை ரோந்துசுற்ற அனுப்பப்பட்ட நாஸாவின் வைக்கிங் வின்கலன்.

படத்தில் மேலே வலதுபுறமாக மனிதமுகம் போல ஒரு வஸ்து தெரிகிறது பாருங்கள். இதைவைத்து, செவ்வாயின் இந்த இடம் (முகம்) ஏலியன்ஸ் செவ்வாயிலிருந்து நமக்கு அனுப்பியுள்ள செய்தி என்று புரட்டு கிளம்பியது. படம் வாய்மையே. முகம்தான் பொய்மை. என்ன, அதைவைத்து அமேரிக்காவில் காசுபார்த்த கயமையையும் நடந்தது.

ரிச்சர்ட் ஹோக்லாண்ட் (Richard Hoagland) என்பவர் மேலே உள்ள படம் செவ்வாயில் ஏலியன்ஸ்கள் உலகினர்கள் பார்ப்பதற்காக மலைகளை குடைந்து செதுக்கியது என்று பரப்பினார். அமேரிக்காவில் இக்கரையில் இருந்து அக்கரை வரை வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சத்தியம் செய்தார். நாஸா பொய் சொல்கிறது. ஏலியன்ஸ்கள் செவ்வாயில் இருப்பதை அது சுயநலத்திற்காக மறைக்கிறது, ஏலியன்ஸ்களிடம் தொடர்பு செய்து ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த மனித மூஞ்சியைகூட பொய் என்கின்றனர். இப்படி சென்றது அவர் வாதங்கள்.

உண்மையில் படத்தில் புலப்படுவதாக உள்ள மனித முகம், சைடொனியா (cydonia) எனப்பெயரிடப்பட்டு, செவ்வாயில் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள். மாரினர் வின்கலன் 1976இல் செவ்வாயில் தரையிறங்குவதற்குள் அனுப்பிய வேறு ஆங்கிள்களில் இதே இடத்தை எடுக்கப்பட்ட படங்கள் இக்கூற்றை நிரூபணம்செய்தது.

மார்ஸ் ரெக்கொனெய்ஸென்ஸ் ஆர்பிட்டர் வின்கலன் சமீபத்தில் 2005இல் எடுத்த படங்கள் விஷயத்தை மீண்டும் தெளிவாக்கிவிட்டது. மனித முகம் வெறும் மலைப்பிரதேசம். சாதாரண பகுத்தலில், ஒரு கோணத்தில், வைக்கிங் புகைப்படங்கள் மனிதமுகம் போல திரித்து காட்டியுள்ளது. படத்தில் பாருங்கள் [இன்னமும் பெரிய படம்].

பொட்டலில் உலவுகையில், சட்டென வானத்தை நோக்குகையில் மேகங்கள் ஒரு மனித அல்லது மிருகத்தின் உருவத்தையோ முகத்தைப்போலவோ தெரியுமே, அதுபோல. சற்று விலகிசென்றோ அல்லது சிறிது நேரம் கழித்து நோக்குகையில் மேகத்தின் பேட்டர்ன் மாறிவிடும். ஹோக்லாண்ட் இப்போது வேறு கன்ஸ்பிரஸி தியரிக்கு தாவிவிட்டதாக கேள்வி.

இதைப்போலத்தான் பெர்சிவால் லொவெல் இங்கிருந்தபடியே நம்பிய செவ்வாயின் நீரோட்ட கால்வாய்கள். ஹப்பிள் தொலைநோக்கி செவ்வாய் பரப்பை பல பாகங்களாய் புகைப்படமெடுத்ததை ஒட்டி சேர்த்துப்பார்த்தால் கால்வாய்கள் தென்படவில்லை.

பெர்சிவால் லொவெல் கால்வாய்கள், ஹோக்லாண்ட் செவ்வாய் மனிதமுகம் இதையெல்லாம் கடந்து, அறிவியல் ரீதியாய் பரிசோதனைகள் செய்து, செவ்வாயில் நிஜமாகவே உயிர் இருக்கலாமோ என்று விஞ்ஞானிகளை உந்திவிட்ட விஷயம் முதலில் நம் பூமியிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

அது ALH84001.

அடுத்த பாகத்தில்.