ஞாபகம் வருதே 2.0

Standard

சமீபத்தில் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாட்டு போட்டு அலுமினி(ய) பாத்திரங்களை அழைத்து நான் என்றோ (ஓரளவு) படித்த பொறியியல் கல்லூரி தன் பவள விழாவை ஒரு வாரம் கொண்டாடியது. அநேகமாக வயதுவந்தவர், பெண்கள் என்று அனைவருக்கும் ஈமெயிலித்து, அதில் பலர் வருவதாய் பதில் மின்னஞ்சல் சத்தியம் செய்து, சாண்டா கிளாராவில் சரியான கணக்டிங் ஃப்ளைட் கிடைக்காததால் மெயிலிடப்படாத சிலர் மட்டும் ஓசி கார் மொஃபஸல் பஸ் ஏறிவந்திருந்தோம்.

பெண்கள் அனைவரும் வயதாகி பொறுப்பான நாரீமணிகளாய் கைகுட்டை வைத்திருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் படிப்பு பற்றி கவலையுடன் பேசுகிறார்கள் (டீ, உனக்கு இவ்வளவு பெரிய பையனா? படிக்கரச்செயே லௌஸ் தெரியும். அதுக்குனு…). சிலர் படிக்கையில் ஒண்டியிருந்த மரங்களை தொட்டுப்பார்த்துவிட்டு வந்தார்கள்.

மேலே சொன்ன நாரீமணிகளை தோழிகளாய் பெற்ற ஆண்கள் அனைவரும் வயதானதை மறந்து, படிக்கையில் இருந்ததைப்போலவே எதையும் சாதித்துவிடுவோம் ஆனாலும் உலக நலன் கருதி பொறுப்பற்று திரிகிறோம் என்று பந்தா காட்டிக்கொண்டோம். மனைவிகளை கூட்டிவரவில்லை என்ற உதாரில்.

சிலர், மகள் பள்ளிசேர்கையில், அடுத்த வருடம் அமேரிக்காவில் இருந்து திரும்பிவருவதாய் இருக்கிறோம்.

படிக்கையில் இருந்த ஆசிரியர்கள் சிலர் கல்லூரியில் இன்னமும் இருந்தனர். அவர்களில் சிலருக்கு எங்களில் பலரை ஞாபகம் இருந்தது.

சுத்தி சுவரேயில்லாமல், கேம்பஸே இல்ல. அப்புறம் எப்படி கேம்பஸ் இண்டெர்வியுவுக்கெல்லாம் கம்பெனி வரும் என்று படிக்கிற காலத்தில் கிண்டல் செய்ததை நல்லவேளை யாரும் சீரியஸாய் எடுத்துக்கொள்ளவில்லை. கல்லூரி வளாகத்தில் இன்னமும் சுற்றுச்சுவர் என்று ஒன்றும் இல்லை. ஆனால் எதிர் டீக்கடை (ஹைவேஸ்), புளியமரம், மரத்தடி பஸ்டாப், பக்கத்து பாலிடெக்னிக், சுடுகாடு(?), பொட்டல், ரெயில்வே கிராஸிங், முகப்பில் வழிநெடுக கலர் கொடிகள், காலேஜ் பஸ்கள் (பெயிண்ட், டிரைவர், பஸ் தவிர்த்து) எதுவும் மாறாவில்லை.

லைப்ரரியை தனி கட்டிடத்திற்கு மாற்றியுள்ளார்கள். (பூட்டியிருந்ததோ? உள்ளே இருப்பவர்களை வெளியேறிவிடாமலிருக்கவோ?) கூட வந்த தோழி நாங்கள் (பெண்கள்) படிக்கையில் இருந்த ரெஸ்ட்ரூம் இப்போ அதே இடத்துல இருக்கிறதா வா பார்ப்போம் என்றார். அமேரிக்கா போய் மொழிகெட்டு, யோசித்து, சுதாரித்து, ஓ, இளைபாறும் அறையா என்று நான் கேட்க, இல்லடா, ரெஸ்ட்ரூம். இதோ பார், இதுதான். Labனு போட்டிருக்கே… இருபது வருடங்கள் முன்னர் இருந்த அதே வெகுளித்தனத்தை இடைப்பட்ட வாழ்க்கையில் தொலைத்துவிடாமால் இன்னமும் தேக்கி வைத்திருக்கிறார்.

இன்றைய பாஷனான ப்ளீட் இல்லாத பிளெயின் முன்பக்கம் பாண்ட்டில் பட்டை பெல்ட் அனிந்து, சூர்யா அணியும் ஜிகினா சட்டையை மடித்து முன்பக்கம் டக்-இன் செய்து, பிருஷ்டத்தை போர்த்தியபடி வெளியேவிட்டு, பாத்ரூம் ஸ்லிப்பர் அணிந்து, தலையை கவனமாய் கலைத்துக்கொண்டு, பெண்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி, எதையும் நேரிடையாக பேசாமல், தோளில் கைபோட்டபடி செல்லும் மாணவர்களை பார்க்கையில், இருபது வருடம் முன்னால் இவர்களைப்போலிருந்த எங்களை நம்பி பொறுத்துக்கொண்ட ஆசிரியர்களும், பெற்றோர்களும், இயலாதவார்கள் இல்லை. ஆச்சர்யமானவர்கள்.

பவளவிழா விழாத்தலைவர் இன்று திரைத்துறையில் ஓரளவு பிரபலமாயிருக்கும் ஒருவர். என்னைப்போல் கல்லூரியின் அலுமினிய பாத்திரங்களில் ஒருவர்.

இப்போதே சொல்லிவிடுகிறேன். திரைத்துறை பிரபலத்தின் மீது எனக்கு தனிப்பட்ட காழ்ப்பு எதுவும் இல்லை. அவர் பணியாற்றிய திரைப்படங்களையும் பார்த்துள்ளேன். அவரும் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதராகவே திகழ்கிறார். அவர் மேலும் அத்துறையில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

தலைமைதாங்க வந்தவர், மேடையில் அமர்ந்து, மினரல் வாட்டர் குடித்துவிட்டு, தலைமை தாங்கிவிட்டு, தலைமையை வாழ்த்திவிட்டு, கார் ஏறி சென்றிருக்கலாம். தான் படித்தபோது இருந்த வகுப்பினுள் சென்று அமரவேண்டும் என்று ஆசைபட்டார். செயலாக்கினார். படிக்கிறபோதுதான் செய்யவில்லை, இப்போதாவது செய்வோமே என்றாம். மேடையில் பேசுகையிலும், இக்கல்லூரியில் நான் படித்த காலத்தில் சரியாக படித்ததேயில்லை. இங்குமங்கும் சுற்றிக்கொண்டிருந்தேன். சினிமாத்தான் நாட்டம். பல நாள் நோ கிளாஸ். என்னை வாழ்க்கையில் நம்பிக்கை கொடுத்து, சினிமாவில் வெற்றிகொள்ளச்செய்தது இக்கல்லூரி நாட்களே. அதை நினைவுகூறுகிறேன். இந்த ரீதியில்…

இப்போதைய மாணவரிடையே கரகோஷம்.

பொறியியல் கல்லூரியின் பவளவிழாவிற்கு வெற்றிபெற்ற பழையமாணவர் என்ற தகுதியில் இவரை தலைமைத்தாங்க அழைத்ததில் எனக்கு ஒப்புமையில்லை. பவளவிழாவில் பொறியியல் கல்லூரி எதற்காக இருக்கிறது என்ன சாதித்துள்ளது என்பதற்கு அடையாளமாக காட்டவேண்டிய உதாரண பழைய மாணவர் இவர் இல்லை. இவர் நல்ல சினிமாக்காரராக இருக்கலாம். நல்ல பொறியியலாளர் இல்லவே இல்லை. இவரை பொறியியல் கல்லூரி உருவாக்கவேண்டியதில்லை.

கல்லூரியின் ஸ்தாபகர் விவரமானவர். யாரை தலைமை தாங்க அழைக்கலாம் என்று என்னை கேட்கவில்லை. ஆனால் மருமத்தினெறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தாலென நான் அன்று படித்த ஆசிரியர் (இன்று கல்லூரி இயக்குனர்) என்னிடம், என்னப்பா செய்யறது, எனக்கு இஷ்டமில்லை, ஆனாலும் பசங்கதான் இப்படி ஏற்பாடு செய்யறாங்க; ஒரு அறிவியல் கருத்தரங்கு நடத்தனும்னுதான் எனக்கு ஆசை; பார்ப்போம் வேற எப்பவாச்சும் நிச்சயம் நடத்திரலாம். இப்படி பேசிக்கொண்டே போகிறார்.

வெட்கக்கேடு.

அப்ப, பொறியியல் கல்லூரியில், பொறியியல் படிப்பதற்காகவே சேர்ந்து, அதைமட்டுமே சிரத்தையாக படித்து, வெளிவந்து, ஒரு பொறியியல்துறை வேலையில் பணியாற்றிவரும் ஓஜோசிகள் எல்லாம் வாழ்க்கையில் வெற்றிபெறவில்லையா? பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாகவும், கல்லூரியில் முதலாவதாகவும் பொறியியலில் தேர்ச்சிபெற்ற இன்றைய குடும்பத்தலைவிகள்?

கல்வி நிறுவனங்களில் கடலை கமழும் கலாச்சார நிகழ்ச்சிகள், ரகளை கிளம்பும் விவாத அரங்குகள், வினாடிவினா போன்ற படிப்ஸ் நிகழ்ச்சிகள், அறிவியல் தொழில்நுட்ப பருப்பு கோஷ்டி கருத்தரங்குகள், பாரம்பர்யமான பட்டமளிப்புவிழா, பவள விழா கொண்டாட்டம் இப்படி பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கெல்லாம் யார் யாரை தலைமை தாங்க அழைக்கலாம் அவர்கள் மாணாக்ககூட்டத்தினரிடம் என்ன பேசலாம் என்று தராதரம், புரோட்டோகால் எதுவும் இருக்கிறதா என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரவையில் கேட்கவேண்டும்.

விழா முடிந்து சில வாரங்களாகிறது. பழைய செட் நண்-பர்கள் -பிகள் என்று பலரை சந்தித்ததில் விழா பற்றி நல்ல நினைவுகளே அதிகம் என்று மனம் சமாதானமாகிறது.

(டேய், அருண்தானடா, மாறிப்போய்டியேடா, முடியெல்லாம் படிச்சே கொட்டிப்போச்சாடா? இல்லடா, திசை மாறி வளர்ரது. இப்ப உள்பக்கமா. இன்னர் குரோத்ம்பாங்க; அது சரி, அதே பேச்சுடா இன்னமும், மாறவேயில்லடா நீ…)

தோஸ்த்களை உஸ்தாதுகளை சந்தித்து, ஸ்தம்பித்து, சிந்தித்து, நிந்தித்து, வம்பித்து, அவசியம் போன் செய்வதாக கூறி மொபைல்களில் பரஸ்பரம் மிஸ்டு கால் விட்டுக்கொண்டு, கலைந்தோம்.

பிரிந்தோம் என்று எழுதலாமோ?