டைனசார் விஞ்ஞானி

Standard

CERN ஆராய்ச்சி மையத்தில் சமீபத்தில் விஞ்ஞானிகளை வரைந்து காட்டு என்று ஏழாவது படிக்கும் சிறுவர்களை கேட்டு, அவர்கள் மனதில் தோன்றியதை வைத்து வரைந்ததை வெளியிட்டிருக்கிறார்கள். கூடவே அதே சிறுவர்களை நேரடியாக விஞ்ஞானிகளை பார்க்கவைத்து மீண்டும் வரையச்செய்து அதையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த படங்களை பார்த்த எனக்கு உடனே மனதில் பட்டது, நிஜ விஞ்ஞானிகள் இப்போதெல்லாம் மாறுவேடத்தில் உலவுகிறார்கள்.

(மேலே படத்தில், ஆமி என்ற சிறுமி இயற்பியளாளரை பார்க்கும் முன் (இடம்) பின் (வலம்) வரைந்த படங்கள்)

சரி, ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையாய், நாமும் வீட்டளவில் இச்சோதனையை நடத்திப்பார்ப்பமே என்று என் ஆறு வயது மகளிடம் மேலே சுட்டியில் உள்ள படங்களை நேற்று காட்டி விஷயத்தை விளக்கினேன். பிறகு விட்டுப்பிடிப்போம் என்று இன்று, சற்று நேரம் முன்னர், நீ ஒரு விஞ்ஞானியை வரைந்துகாட்டு என்று கேட்டேன்.

மகள் வெள்ளைப் பலகையில் (வாத்தியார் வீட்டில் பலகை இல்லாமலா) போட்டாள் படம். கேட்டேன் விளக்கம். டைனசார் விஞ்ஞானியாம். அதாவது, டைனசாரைப் பற்றி ஆராயும் விஞ்ஞானி. குறிப்பாக, டைனசார் ஆய் (டூ பாத்ரூம்) பற்றி. (எங்கு படித்தாளோ…)

படத்தை பார்த்ததும் முதலில் கண்ணில் பட்டது விஞ்ஞானி ஒரு பெண். ஆஹா, சென்று வா மகளே, வென்று வா… அடுத்து, பெண் விஞ்ஞானிக்கும் மூக்குக்கண்ணாடியா, அடடா சொதப்பொட்டியே மகளே என்று நினைத்தேன். பின்னால் மூக்குடைபட்டேன், அது எதற்கு உங்களுக்கு இப்போதே…

கீழே ஆறு நிமிடம் வீடியோவில் அவள் வரைந்த டைனசார் விஞ்ஞானி பற்றி அறிய அவளிடம் நான் நடத்திய பேட்டி. மகளின் அனுமதியுடன் வெளியிடுகிறேன். வீடியோவில் அவள் முகம் இல்லை. அவள் விரல், குரல் மட்டுமே. ஏனென்றால் அதற்கு வாழ்க்கைபட்டவர்களைக்காட்டிலும், அறிவியலே பிரதானமானது. சரிதானே?

பேட்டி மொத்தமும் ஆங்கிலத்தில். ஆய் தவிர…

[பேட்டியின் சாராம்சம் இதுதான்: டைனசாரின் ஆய்-இல் (சேர்த்து எழுதினால் ஆயில் ஆகிவிடும்) அது சாப்பிடும் செடிகளின் மிச்சம் இருக்குமாம் (ஆமாம், சரிதான்). அதை வைத்து அந்த ஆய் டைனசாரினுடையது, ஆட்டினுடையது இல்லை, என்று அறிய (வீடியோவில் காட்டும்) மெஷின் இருக்கிறதாம். இந்த பெண் விஞ்ஞானியின் வேலை, தேடித் தினம் நித்தம் பல ஆய் சேர்த்து, அதை இவ்வகையில் மெஷினிட்டு, அது டைனசார் இட்ட ஆய், ஆடிட்ட ஆய் என்று பாகுபடுத்துவது.]

[Link]

மொத்த பேட்டியும் எழுதிவைத்து படிக்காமல், ஒத்திகை இன்றி, தன்னிச்சையாய், ஒரே டேக்கில் என் கை-கேமில் ஓகே ஆனது. மறுமுறை போட்டுப்பார்த்ததில், எனக்கே ஆச்சர்யம், நான் ஆங்கிலம் சொதப்பாமல் பேசுவதை கேட்டு.

எனக்கு நிஜமான ஆச்சர்யம், நான் என்னத்தான் பொறுமையை சோதித்து, அவள் சொல்வது எனக்குப்புரியவில்லை என்று விடாமல் கேள்வி கேட்டாலும், பொறுமையாய், தீவிரமாய் அக்கேள்விக்கு ஒப்புக்கொள்ளக்கூடிய பதில் கூறுவதில் அவள் காட்டிய மும்முரம். ஆராய்ச்சி மாணவர்களிடமே எளிதில் காணப்படாத – இல்லை, வயதுவந்தவுடன் விலகிவிடும் – குணம்.