சிறுவியல் என்பது சிறுவர் அறிவியல் சுருக்கம். சிறு அறிவியல் செய்திகள் என்றும் கொள்ளலாம்.
குளத்தில், குழம்பில், மீன் பார்த்து இருக்கிறோம். நீந்தும் மீன் ஜாலியாக இருக்குமா? தூண்டிலிட்டு நாம் பிடித்துவிட்டால் சோகமாகிவிடுமா? சாப்பிடும்முன் உணவுடன் நான் பேசுவதில்லை. அதனால் எனக்கு தெரியாது.
ஆனால் நிஜமாகவே கடலில் ஒரு சோக மீன் இருக்கிறது.
குழந்தை கையில் காலில் சிக்கி தோலுடன் பிதுக்கிய வாழைப்பழம் போல கொழகொழ என்று இருக்கும். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சோகமான மூஞ்சியுடன். Sad fish அல்லது Blob fish என்று ஆங்கிலத்தில் பெயர்.
சோக மீன் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா அருகில் ஆழமான கடலில் வசிக்கிறது. கொஞ்சமே தசைகள், எலும்புகள் கொண்டது. அதனால் மாம்பழ ஜெல்லோவை சேர்த்து செய்தது போல இருக்கும்.
கடல்நீரின் அடர்த்தியை விட இந்த சோக மீனின் உடம்பின் அடர்த்தி கம்மி. நூல்நூலாக இருக்கும் தாத்தா பூச்சி காற்றில் மிதக்கும் இல்லையா. அதுபோல சோக மீன் அடர்த்தி குறைவினால் கடலுக்கடியில், தரையில் படாமல், நீரில் தன்னாலேயே மிதக்கும். நீந்தவே வேண்டாம். மிதக்கையில் ஏதாவது சாப்பிட அகப்பட்டால் வாயை மட்டும் திறந்து, லபக்.
சோக மூஞ்சி, சுக வாழ்க்கை.
இன்று நாம் சோக மீனை தொடர்ந்து தூண்டில், தூர்வாரும் பாட்டம் டிராவ்லர் வகை வலை போட்டு நிறைய பிடித்துவிடுவதால், இந்த மீன் இனம் வேகமாக அருகி வருகிறதாம்.
சோக மீன், சோக வாழ்க்கை.