இதோ சில இந்த வலைதளத்தைத்தாண்டி எங்கும் பயன்படாத என்னைப்பற்றிய சிறு தகவல்கள். வெங்கட் என்றோ எழுதிய தற்புகழ்ச்சி பதிவை வைத்து போட்டுக்கொண்ட புதிய சூடு. எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல், மருமத்தினெறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தாலென… இதை ஏற்கனவே கடுப்புடன் படித்து, படித்ததினால் மேலும் வெறியாகும் உங்களுக்கு என்னால் கூறமுடிந்த ஒரே பயன், என்னை இவ்வகையில் அறிவதால், நேரில் எதிர்படுகையில் ஓடிவிடலாம்.
- குழந்தையில் தரையில் நீந்தியதோடு சரி. தண்ணீரில் எனக்கு நீச்சல் தெரியாது.
- எனக்கு வீடியோ கேம்கள் என்றால் பிரியம். அப்படியே சாப்பிடுவேன். கட்டம்கட்டிய புதிர்கள், கிராபிக்ஸ் சாகஸங்கள் என்று பாகுபாடின்றி. மங்க்கி ஐலாண்ட் கேம்கள் என் ஃபேவரிட். ஏமாற்று கணினி-சங்கேத வார்த்தைகள் இன்றி மூன்றே நாளில் மொத்தத்தையும் முடித்திருக்கிறேன். வருடங்கள் முன்னர் ராப்பகல் தெரியாமல் விளையாடி, உடனிருந்த ஒன்றுவிட்ட சகோதரர்கள் பலர் தூக்கத்திலும் பச்சக் பச்சக் என்று கட்டைவிரலை அமுக்கி எதிரிகளை வீழ்த்தியபிறகே இந்த பற்று சற்று இற்றது. இப்போதும் முழு கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச்சை வீடியோ கேமாக விளையாடும் பொறுமை இருக்கிறது. நல்லவேளை, பொருந்தி வருமாறு நேரம் இருப்பதில்லை.
- பாலகாண்டத்தில் பள்ளிசெல்லும் பெரிய ரிக்ஷாவை (”ரிக்ஷாமேனின்” உதவியுடன்) ஓட்டிச்சென்று கணகாரியமாய் சுவற்றில் மோதியுள்ளேன்.
- பத்து வயதில் ஒருமுறை வாத்தியார் மண்டையில் அடித்துவிட்டதால் கவரிமானாகி காய்ச்சலில் மூன்று நாள் பள்ளிக்கு மட்டம்.
- சிறுவயதில் ஹாக்கி விளையாடுவதற்கு நிஜமான உருட்டுக்கட்டை ஒன்றை வைத்திருந்தேன் (அதுவும் “ஸ்டிக்” தானே என்று சால்ஜாப்பு வேறு); சக “வீரர்கள்” என்னிடமிருந்து சற்று தள்ளியே ஓடிவருவார்கள்.
- பத்து வருடங்கள் முன்னர் ஒரு மாலை இளவெயில் நேரம், வீட்டிலிருந்த டிவி மற்றும் வீடியோ காஸெட் பிளேயரை தூக்கிக்கொண்டு இரண்டு மாடி இறங்கிவந்து, எதிர் குப்பைத்தொட்டியில் அமர்த்திவிட்டு வந்தேன். அன்றுதான் என் வீட்டில் டீவியின் கடைசி தினம். மனைவி மக்களும் இன்றும் வீட்டை டீவி கரையின்றி வைத்திருப்பது என் பாக்கியம்.
- தன் எழுத்தினால் என்னையும் தமிழில் எழுதத் தூண்டும் “சுஜாதா”வைபோல் அவிழ்ந்துவிடுமோ என்று பயம் இல்லாமல், கால் தடுக்காமல், எனக்கு நன்றாக வேஷ்டி கட்டிக்கொள்ள வரும். ஆனால் எப்போதும் வீட்டில் “செந்தில் டிராயர்” தான்.
- பஸ்ஸில் ஓட்டுநர் இருக்கை உள்ள வலதுபுறத்திற்கு எதிர்ப்புறமே அமர விரும்புவேன். காற்றில் தலை வகிடு கலையாமல் இருக்க.
- நண்பர்களை வெறுப்பேற்ற “ஸெவன்-அப்”பில் மாவடு சாரை சேர்த்தும், ஃபேண்டாவை சுடவைத்தும் (ஹாட் டிரிங் குடிப்பதாக கூறி) குடித்துள்ளேன்.
- அவ்வப்போது சமயலறையில் “என்ன ரொம்ப பொங்கற? ஆஃப் பண்ணிடுவேன் ஜாக்கிரதை” என்று பொங்கும் பாலுடன் சம்சரிப்பது வழக்கம்.
- பேசமட்டும் முடிகிற பட்லர் இங்லீஷ் போல மாற்று பட்லர் ஹிந்தி எனக்கு வரும். எழுத படிக்க முடியும். பேச வராது. தமிழும் அப்படித்தானோ என்று அடிக்கடி தோன்றுகிறது.
- அனைத்து ஹெர்க்யுல் பாய்ரோ கதைகளையும் பலமுறை படித்திருக்கிறேன். அதே எழுத்தாளினி எழுதிய மிஸ் மார்ப்பில் ஒன்றைகூட இதுவரை படித்ததில்லை. என்னை எம்சீபி என்று நினைக்குமுன் அது ’எழுத்தாளினி’ என்பதும், ஞாபகமிருக்கட்டும்.
- ஒரு காலத்தில் சித்தார்த்த பசு நடத்துவாரே, அவ்வகை வினாடிவினா பித்து. அவ்வகையில் பல தொடர்பற்ற செய்திக் குப்பைகள் இன்றும் மனதை ஆகிரமிக்கிறது. உதாரணமாக மேலே எழுத்தாளினியின் முழுப்பெயர் டேம் அகதா மேரி கிளாரிஸா மில்லர் கிறிஸ்ட்டி மலொஅன். ஏன் ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை.
- சினிமா பார்க்கவேண்டுமென்றால், துணை கிடைக்கவில்லையெனின், தனியே சென்றுவிடுவேன். சுற்றி பலருக்கு இது சுயஇன்பம் அநுபவிப்பதற்கொப்பான உறுத்தும் விஷயம் என்று அறிகிறேன். அதனால் இப்போதெல்லாம் வீட்டிலேயே டிவிடி துணையுடன் பார்த்துவிடுகிறேன்.
- ஒரே மாதிரி இருப்பது எனக்கு ஒத்துவராது. ஆபிஸ் அறையை, மேஜை நாற்காலி முதல் கணினி வரை, அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பேன்.
- அனைத்து வகை நீல நிறங்களும் பிடிக்கும். அதனால் மாற்றிச்செய்யவேண்டி பச்சை கலரில் ஒரு கார் வாங்கினேன். அந்நிறத்திற்கு ஹீலிங் கிரீன், குணப்படுத்தும் பச்சை, என்று அறிகிறேன்.
இதுவரை தொடர்ந்திருந்தால், மேலே உள்ள பதினாறை பெற்றுள்ள நீர் என் அடுத்த பதிவுவரை பெறுவாழ்வு வாழ்வீர்.