அதிகாரமளிக்கும் ஹைஹீல்ஸ்

Standard

சுமார் நான்கு இன்ச் இல்லை அதற்கு மேல் குதிகால் பகுதியில் குளம்பு உயரம் உள்ள செருப்புகளை நாகரீக பாதுகாவலர்கள் ஹை ஹீல்ஸ் என்கிறார்கள். உயர் குதிகுளம்பு பாதுகை. இரண்டு இன்ச்சிற்கும் குறைவாக இருந்தால் லோ ஹீல்ஸ். ரோட்டில் காலைப்பிடித்து நிறுத்தி அளக்கையில், உயரம் இரண்டிலிருந்து நான்குவரை என்று தெரிந்தால், நீ அணிந்துள்ளது மிட்ஹீல்ஸ் என்று உணர்.

வருடங்களுக்கு முன், அது நாகரீகம் என்று வந்த புதிதில், எங்கள் வீட்டில் சில பெண்கள் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவர். இவர்களுடன் வெளியே கிளம்புகையில் என் தந்தை நேரமாச்சு பாரு, கிளம்பலாம் வா, உன் ஸ்டூல்ல சீக்கிரம் ஏறி நின்னுக்கோ என்கிற ரீதியில் ஏதாவது சொல்வார். வீட்டில் நாரீமணிகள் உயர் குதிகுளம்பு அணிவது வழக்கொழிந்தது.

சிறுவயதில் சென்னையில் விடுமுறைக்காக பெரியப்பா வீட்டில் பேப்பரை கசக்கி ரப்பர்பேண்டால் கட்டிய பந்தில் பெரியப்பா மகன்கள் என்னை போடச்சொல்லி மொட்டை மாடியில் கிரிக்கெட் காஜி ஆடிக்கொண்டிருக்கையில், பக்கத்து வீட்டில் திரைப்படம் சுட்டார்கள். சினிமா ஷீட்டிங். தமிழ் படம்தான் என்றார்கள். வசனமே பேசவில்லை. கேட்டின் இந்தப்புறம் நாயகன். அந்தப்புரம் நாயகி (அப்படித்தானே இருக்கனும்). நாயகி கையை பிடித்து நாயகன் இழுக்கவேண்டும். அவரும் என் வளையல்களை உடைத்துவிட்டாயே என்பது போல் கத்த வேண்டும் (வளையல் உடையாமல் கையை பிடித்து இழுத்திருக்க வேண்டுமாம்). கேட்டை தாண்டி நாயகியின் கை எட்டவில்லை குள்ள நாயகனுக்கு. அன்று கண்டேன் ஆண் ஹை ஹீல்ஸ் அணிந்ததை. என் தந்தை சொன்னது போல் நிஜ ஸ்டூல் ஒன்றின் மீது ஏறி நின்று நாயகியின் கையை பிடித்து இழுத்தார்.

இதற்கு பிறகு நான் மிக அருகில் ஹைஹீல்ஸ்ஸைப் பார்த்தது அனு ஹாஸன் காலில். சமீபத்தில், புத்தகக்கடை ஒன்றில். நிற்கையில் கூட நடந்துகொண்டிருக்கிறாரோ என்று தோன்றியது.

இடையே சில வருடங்கள் அமேரிக்காவில் சில பெண்கள் அணிந்துகொண்டு செல்வதை கவனிக்கமுடிந்ததில்லை. அவர்களை பார்க்கும் மும்முரத்தில்.

ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், ஹைஹீல்ஸை, ஸ்டிக்கர் பொட்டு, டப் கம்மல், வாய்-மை தாண்டிய மேனாமினிக்கி மேட்டர். அதை அணிபவர்கள் வாழ்க்கைப் பயணத்தில் நிச்சயம் நொடித்துப் போவார்கள். இப்படி ஹைஹீல்ஸை பல வருடங்களாக ஒருவித எள்ளலுடனே பார்த்துள்ளேன். ஆனால் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விஷயம் அது என்பது புலனாகவில்லை.

உயர் குளம்பு செருப்பு உனக்கு ஒருவித உடல் மொழியைத் தருகிறது. உன் பின்புறம் மேலும் வளைகிறது. கொஞ்சம் மனோநிலையை திணிக்கிறது. உடம்பை பற்றி மேலும் உணர வைக்கிறது. பெண்ணாய் உணர வைக்கிறது. மிக மிக உயர குளம்பு செருப்பு பெண்ணை நொடிந்துவிடுமாறும் செக்ஸியாகவும் ஆக்குகிறது. அவ்வகை செருப்பில் உன்னால் தனியாக நிற்கமுடியாது. கிட்டத்தட்ட பிடிமானம் தேவை.

இதே ரீதியில் ஒரு கட்டுரையை நிரப்பும் அளவு இன்று ஹிந்து நாளிதழின் மெட்ரோ-ப்ளஸ் உப-இதழில் ஒரு பேட்டி வந்திருக்கிறது. (மேல்பத்தியின் கருத்துகளுடன்) பேட்டி கொடுத்தவர் கிறிஸ்டியன் லோபௌட்டின் என்ற பிரெஞ்சு ஹைஹீல்ஸ் வடிவமைப்பாளர். பேட்டி எடுத்தவர் பெண், ஷோனாலி முதலாளி. ஹைஹீல்ஸ் அணிகிறாரா, இனிமேல் அணிவாரா என்று தெரியவில்லை.

பெண்களுக்கு “அதிகாரமளிக்கும்” லோபௌட்டின்னின் உயர் குளம்பு செருப்புகள் ஒரு ஜதை இருபதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை. மும்பாய் சென்னை போன்ற காஸ்மோபாலிட்டன் நகரங்களில், திரைத்துறை பிரபலங்களிடையே இவர் செருப்புகள் பிரபலமாம். நம் ஹீரோக்கள் ஸ்டூலுக்கு பதில் இப்போது லோபௌட்டிந்தானோ? (ஹீரோயின்கள் ஓவல்டின்னிற்கு பதில்).

இவ்வளவு ஏன், லோபௌட்டின்னை ஜெனிபர் லோபஸே பரிந்துரைக்கிறாராம், அவர் பாட்டொன்றில்:

என் லோபௌட்டின்களை மேலிட்டுக்கொள்கிறேன்; இந்த சிவப்பு கீழ்புறங்களை பார்; என் ஜீன்ஸின் பின்புறத்தையும்தான்; நான் கடந்துசெல்வதை பார் கொயந்தே…

இப்படி போகிறது ஜெனிபரின் பாட்டு. (கொயந்தே என்றால் ஆங்கிலத்தில் பேபி…)

அடுத்த பத்தியில் லோபௌட்டின்னே முத்தாய்ப்பாய் இப்படி கூறுகிறார்.

லொபௌட்டின்களை அணிவதால் பெண்கள் ஆண்களின் பார்வை அளவிற்கு உயர்த்தப்படுகிறார்கள். இதனால் அவர்களுடைய ஆண்-துணைகளுடன் உள்ள பந்தம் மாறுபடுவதாக பெண்கள் என்னிடம் கூறியுள்ளார்கள். ஏன், (வேலையில்)அவர்கள் பாஸ்களுடன் உள்ள உறவும் மாறுகிறது. நானே இதை பார்க்கிறேன். என் உயருமுள்ள பெண்களை நான் வேறுவிதமாய் பார்க்கிறேன். பெண்களை குனிந்து பார்க்கையில் அவர்களை துச்சமாக்குவது போலாகிறது.

வேறு இடங்களில் பெண் அடிமைத்தளைகளை களைந்தெறிய கோபத்துடன் கொப்பளிக்கும் பேட்டியெடுத்த ஷோனாலி முதலாளி ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு தோன்றுவது, இதற்கு மேல் பெண்களை அவர்கள் விரும்பி அணியும் ஹைஹீல்ஸ் செருப்பால் அடிக்கமுடியாது.