மரக்கலை மயக்கலை

Standard

கலை அரிசி கேள்விப்பட்டிருக்கிறோம். வியப்புற்றோம். நானோ கலை கேள்விப்பட்டோம். விசனப்பட்டோம். இன்று மெகா மரக்கலை. அறிவியலை வைத்து மற்றொரு கலையுலக குழப்படி?

பண்டைய நாகரீகங்களை அதன் ஆயகலைகளின் தேர்ச்சி, அக்கலைச்சின்னங்கள் வைத்து கொண்டாடுவோம். இசைக்கலை அடிப்படை உணர்வுகளுடன் உரையாடுவது. எளிதில் அனைவராலும் அணுகக்கூடியது. ஓவியக்கலை என்றால், உதாரணத்திற்கு, காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவர் சித்திரங்கள் பற்றிப் பார்த்தோம். அதைப்போல தமிழகத்தில் மரத்தில் செதுக்கும் கலை தொன்றுதொட்டு இருக்கிறது. பலவகை கோபுர சிற்பங்களிலும், கட்டடக்கலையை சார்ந்து உருவாகும் மரவேலைப்பாடுகளிலும் இக்கலையின் பிரமிக்கவைக்கும் கற்பனைத்திறனும், நுணுக்கங்களும் நமக்கு ஓரளவு புரியும்.

ஏன் ஒரு மரக்கலைப் பழகும் சிற்பியின் கற்பனைத்திறன் மரப்பாச்சி பொம்மைகளிலும் பட்டவர்த்தனம்.

நிற்க. அறிவியலை வைத்துச் செய்யும் குழப்படி கலைகளில் இப்போது இவ்வகை மரக்கலையும் சேர்ந்திருக்கிறது. இங்கு இல்லை. ஆஸ்திரேலியாவில்.

பூமி, சூரியமண்டலம், ராசிகள், கோள்கள், வளி, ஆகாச கங்கை, வானியல் ஆராய்ச்சி, அண்டம், அகண்டம், வின்வெளிக்கப்பல்கள், ஏலியன்ஸ், நாஸா, வாயேஜர், ஹப்பிள் டெலஸ்கோப்… கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆஸ்திரேலியாவில் பீட்டர் ஹென்னெஸ்ஸெ என்ற ஒரு மரக்கலைஞர் சமீப சில வருடங்களாக அறிவியலாளர்கள் வடிவமைத்த வின்வெளி விஷயங்களை மரத்தில் செதுக்கி மறுஒலிபரப்பு செய்துகொண்டிருக்கிறார். நிறைய பணம் பொருள் செலவழித்து, ஆஸ்திரேலியாவில் 17th Biennale of Sydney காட்சியகம் உட்பட உலகெங்கும் பல ஆர்ட் காலரிகளை ஆக்கிரமித்து.

படத்தில் இருப்பது லேசர் வைத்து மரத்தை அறுத்து, பிருமாண்ட பொருட்செலவில் இவர் செதுக்கியுள்ள வாயேஜர் வினூர்த்தியின் பிரதி. பெயர் My Voyager.

இம்மாதிரி வானியல் (அறிவியல்) சார்ந்த பொருட்களைக் கேள்விப்பட்டிருப்போம், படங்களில் பார்த்திருப்போம். அருகில் சென்று தொட்டுப்பார்பதற்காக நான் செய்திருக்கிறேன் என்கிறார் பீட்டர் ஹென்னெஸ்ஸெ. வாயேஜர் மட்டுமின்றி  சந்திரன் சென்ற அப்பல்லோ, ஹப்பிள் டெலஸ்கோப் என்று பலதை அதனதன் உண்மையான உருவில் செதுக்கியுள்ளார். மரத்தில். எதற்காம்? அவர் வலைதளத்தில் கூறுகிறார்.

By ‘re-enacting’ space traveling, scientific and military objects in plywood, galvanized steel and canvas, the artist creates ‘stand-ins’ that allow the viewer to contemplate their physical, symbolic and historical resonances as well as the political processes that they represent.

இப்படித்தானா பொதுமக்களாகிய நாம் சிந்திப்போமாம், இந்த மரத்தாலான வாயேஜரை வெறுமனே பார்த்தால்?

நிஜத்தை ஒட்டி இவர் செய்த மரத்தாலான ஹப்பிள் டெலஸ்கோப். “Biennale of sydney 2010 காலரியில் இடம்பெற்றிருக்கிறதாம்.

லென்ஸ் மட்டும் கிடையாது. இதன் வழியாக பிரபஞ்சத்தை பார்க்க வேண்டுமென்றால், அதற்கு வழி செய்கிறார் பீட்டர். மக்களே ஏதாவது பிரபஞ்சத்தை வரைந்துகொடுத்தால் அதை மேலே லென்ஸ் இருக்கும் இடத்தில் ஒட்டிவிடுவாராம். அவர்களுக்கான பிரத்தியேக பிரபஞ்சம் ரெடி.

கலை கற்பனைத்திறனின் வெளிப்பாடு. கிரியேட்டிவிட்டி. பிரமிக்கும், மெலிதாக யோசிக்கவைக்கும், மூச்சை உள்ளிழுக்கும் கற்பனையை மரத்தில் செதுக்கிக் கொண்டுவரமுடியுமே. நம் கோயில்களில், திருமலை நாயக்கர் மகாலில், கிராமிய வீட்டு அலங்காரக் கதவுகளில் பார்த்திருக்கிறோம் (இவை இப்போது சிதிலம்).

ஆனால், மேலே உள்ள பீட்டரின் ‘அறிவியல் சார்ந்த’ மரக்கலைகளில் கற்பனைத்திறன் வெளிப்பாடு, கிரியேட்டிவிட்டி எங்கிருக்கிறது? மர ஹப்பிள் டெலஸ்கோப்பில் இவர் தத்ரூபமாக செதுக்கும் நட்டிலும் போல்டிலுமா? இதில் தனி உருவாக்கம் என்று எதுவும் இல்லை. வாயேஜர் எற்கெனவே இருக்கிறது. அதை மரத்தில் காப்பி அடிப்பதால் கலையாகிவிடுமா? இதில் அறிவியல் எங்கு வருகிறது? அறிவியல் கலை என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கும் குழப்படி.

இப்படித்தான் நினைத்தேன் நான். ஆனால் பீட்டர் கற்பனைத்திறன் பற்றிய என் அறியாமையை போக்குகிறார்.

வாயேஜரை மரத்தால் செதுக்கியுள்ளதை பற்றிக் கூறுகையில் இவ்வாறு சொல்கிறார் (சாம்பிள்தான்; சுட்டி காட்டும் பக்கத்தில் பல பத்திகள் இதே ரீதியில் இருக்கிறது)

To a certain degree my desire to physically reconstruct Voyager came from a craving to actually find out how big it was. My Voyager is pieced together from the various, often contradictory, images that I could find in books or on the web. I don’t think it is going to fool anyone, and it is probably not very accurate, but then again it is not supposed to be Voyager. It is intended to stand in for Voyager, to represent it much in the same way that Voyager represents us to the aliens.

தமிழாக்கினால்

ஒரு வரையரையில் வாயேஜரை அப்படியே மறு உருப்பெறச்செய்யும் என் ஆசையெல்லாம் அது உண்மையில் எவ்வளவு பெரியது என்பதை அறியும் தாகத்திலிருந்தே வந்தது. My Voyager சிற்பத்தை,  புத்தகங்களிலும் வலையிலும் கிடைத்த பலவகையான, பல சமயம் முரண்பாடான, படங்களிலிருந்து சேர்த்தமைத்துள்ளேன். இச்சிற்பம் யாரையும் முட்டாளாக்காது என்றே கருதுகிறேன். மேலும் அது அவ்வளவு சரியானதும் இல்லை. ஆனாலென்ன, அதை வாயேஜராக எண்ணிக்கொள்ளமுடியாதுதான். அச்சிற்பம் வாயேஜருக்கு பதிலாக நிற்பதற்காக உத்தேசித்ததே. எப்படி வாயேஜர் நம்மை ஏலியன்ஸிடம் பிரதிநிதித்து உள்ளதோ அதைப்போல.

சற்று முயன்று, மேலே இவர் கூறியதை புரிந்துகொண்டால், இப்படிச்சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

மரத்தில் நான் வாயேஜரை அப்படியே மரத்தில் செதுக்கவில்லை. அப்படியே செய்ய நினைக்கவுமில்லை. ஆனால் வாயேஜர்தான் செய்திருக்கிறேன். பிழைகளுடன். அப்பிழைகளே என் கற்பனைத்திறன் வெளிப்பாடு. ஏனெனில் நான் செதுக்கியுள்ளது வாயேஜர் இல்லை. அதைப்போல ஒன்று…

இதைவிடச் சாமர்த்தியமான ஒரு தப்பியோடும் தர்க்கத்தைச் சமீபத்தில் நான் கேட்டதில்லை.

இதற்கு வேளச்சேரி ரோட்டோரம் இழப்புளியை வைத்து மர நாற்காலி செய்யும், லேசர் பற்றி கேள்விப்பட்டிராத, மரக்கலைஞர் மேல். அவரிடம் பேரம் பேசாமல் நாற்காலி வாங்கிப் பழகவேண்டும்.