ஆடு பாம்பே

Standard

மாலையில் வாக்கிங் போகலாம் என்று வீட்டிலிருந்து இறங்குகையில் இல்லாள்தான் முதலில் பார்த்தாள் இந்த ஆடும் பாம்புகளை.

நிச்சயம் கடிபடாமல் வெற்றியுடன் புறமுதுகிட்டு ஓடிவந்துவிடலாம் என்கிற தூரத்தில் இருந்தபடி, கையில் செல்போனுடன் உயிரையும் பிடித்தபடி, சார் எடுத்த சாரைப்பாம்புகளின் பாலே வீடியோ கீழே.

வீடியோவின் ஆட்டம் கையினால் மட்டுமல்ல. வீடியோ நடுவில் கேட்கும் ஆடியோ ”செக்யூரிட்டிய கூப்டு” என்கிற அய்யாவின் தீரமான உறுமலே.

செக்யூரிட்டீக்கு போன் போட்டதும், எங்கம்மா பாம்பு, வீட்டுக்கு வெளீ…லதானே, அதுபாட்டுக்கு போயிடும். பயப்படாதீங்க, இப்ப நாங்க வந்து இன்னா பன்னப்போறோம்…

இல்லங்க பாலே டான்ஸெல்லாம் ஆடுது. ரெண்டு பாம்புங்க. கட்டிபிடிச்சுகினு…சண்டை மாதிரி தெர்லீங்கோ… மெல்லினப்புணர்ச்சி மாதிரி, ஊர்வனப்புணர்ச்சியோன்னு… ஒன்னுமில்லிங்க தமிழ்… அத்தவுடுங்க, செக்கூரிட்டி சிங்காரம் எங்கன்னு கேக்குதுங்க, ஆமாங்க…பேர் எப்படித்தெர்யும்னு தெர்லங்க…ஏங்க செக்கூரிட்டின்னு தெர்து, சிங்காரம்ன்னு தெர்யகுடாதா…ஆட்டம் முடிஞ்சு எந்தப்பக்கம் எகிறும்னு சொல்லமுடியாதுங்க… எதுக்கும் ஒரு தபா நீங்கதான் சிங்காரம்ங்கற மேட்டர பாம்புகிட்ட….

என்னது பாலேவா, பாம்பு பால்தான் குடிக்கும் பாலே ஆடுமா, இதோ வந்திட்டேன் என்றார் செக்கூரிட்டி ஒருவழியாக.

போய்டுச்சா… போன் போட்ட மனைவி. இல்ல, இருக்கு. வீடியோ எடுக்கறீங்களா? ஆமாம். வருமா? பாம்பா, வீடியோவா (இதை மனதினுள் நினைத்தபடி அவளிடம்)  தெர்லமா, சத்தமா பேசாத…

சொல்லி முடித்ததும் வீட்டினுள் அவள் அம்மாவினால் இழுத்துச்செல்லப்பட்ட செல்ல மகள் அலறினாள். அப்பா நீ மட்டும் பாக்கற, நா பாக்க வேனாமா; எனக்கு ஒன்னும் பயமில்ல; அம்மாக்குதான் பயம்…வீடியோ எடுத்துக்கொண்டே மனதிற்குள் இரைகிறேன், அய்யோ மகளே செத்தே மெதுவா பேசு; பாம்பு காதுல விழுந்துடபோறது. என்னால சட்டுன்னு ஓடமுடியுமான்னு தெரியல, அப்புறம் நான் செத்தேன்…

அதற்குள் செல்போனில் ட்ரிங் ட்ரிங். என்றுமே பதில் பேசாத வேலை நண்பர், நான் காலையில் போட்ட காலுக்காக இந்நேரம் பார்த்து பதில் கால் போடுகிறார்…. செல்போனில் எடுத்துக்கொண்டிருந்த வீடியோ வழியாகவே பாம்பை பார்த்துக்கொண்டிருக்கையில், சடாரென்று பாம்புகள் மறைந்து, ஸ்க்ரின் அழைப்பவரின் பெயர், நம்பர் சொல்ல… மனசுக்குள் ஒரு கிக்காப்பூ. ஐயோ, பாம்புகளை நான் பார்க்காத இந்நேரத்தில் அவை பாய்ந்து என் கால்களுக்கருகே வந்துவிட்டிருந்தால்…  தலையை தூக்கி பார்த்ததில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. பாம்புகள் ஆடியவண்ணம். செல்போன் பாடியவண்ணம்…

”டிட் யூ கால் இன் தெ மார்னிங், ஐம் சாரி டிடிண்ட் பிக் இட்” என்ற பெங்காலி நண்பரிடம் ”ஐ’ல் கால் யூ இன் தெ மார்னிங், ஐ ம் சாரி ஐ பிக்ட் இட் நௌ” என்று பதில்சொல்லி அவரை மேலும் குழப்பி…எங்கடா செக்யூரிட்டி என்று வீடியோவை ஷேக்கிக்கொண்டே நினைப்பதற்குள், பாம்புகள் பாலேயை நிறுத்தி, தரையில் பிரிந்து, சறுகுகளில் நெளிந்து, சரசரவென விடைபெற்றன.

சற்று நேரத்தில் புல்லட்டில் ஆரோகணித்தபடி துணையுடன் வந்தார் செக்யூரிட்டி.

எங்கங்க பாம்பு. போய்டுச்சா? ஆமாங்க, போய்ட்டது. அடடா, பிடிக்க கழி, ஆயுதம்லா கொண்டுவந்திருக்கோம்… அப்படியா, நா வீடியோவுல புடிச்சுருக்கேன் பாருங்களேன்… அட, ஆட்டம் நல்லாத்தான் இருக்கு. பெருசுங்க… நாலடியாவது இருக்குங்க. நல்ல பாம்புங்க. கோப்ரா இல்லங்க. நல்லதுங்க. விஷம். நம்மள ஒன்னு செய்யாது. இப்படித்தான் அடிக்கடி ஆட்டம்போடும். போய்டும். எந்த பக்கம் போச்சு? அதோ அந்த சருகெல்லாம் இருக்கே, அது மேல ஊறி அப்படியே போச்சு. சரி சரி, உங்க பேர் சொல்லுங்க… சொன்னேன். எந்த டிபார்ட்மெண்ட், மெக்கானிக்கல். என்னவாயிருக்கீங்க (ரொம்ப பயந்திருக்கேங்க) வேலையைச் சொன்னேன்.

சருகிடம் செக்யுரிட்டி சற்று நின்றனர். பிறகு என் முதுகில் தட்டிவிட்டு, இந்த புதரயெல்லாம் க்ளீன் பன்னச்சொல்லி இங்ஜினியரிங் யுனிட்கிட்ட சொல்லிடுங்க. செஞ்சுடுவாங்க. அப்புறம் வராது என்றபடி, புல்லட் ஏறி சென்றனர்.

சுற்றும் முற்றும் தரையை பார்த்தபடி, சத்தமாக பேசிக்கொண்டே வாக்கிங் சென்றோம்.

திரும்புகையில், மீண்டும் அவ்விடம் மரம் செடி கொடிகள் சூழ்ந்த எங்களது வீடானது.