செட்டி (SETI) என்றால் ஸெர்ச் ஃபார் எக்ஸ்ட்ரா டெரெஸ்டிரியல் இன்டெலிஜென்ஸ். இன்று மனிதனின் பலவிதமான ஏலியன்ஸ் தேடல்களை அவர்களிடம் தொடர்புகொள்ளும் முயற்சிகளை சேர்த்து விளிக்கும் ஒரே வார்த்தை செட்டி . வளி-அறிவு-ஜீவிகள் தேடல். [1 – எதற்கும் கீழே குறிப்பை ஒருமுறை பார்த்துவிட்டு தொடரவும்].
பனிப்போரின் உச்சத்தில் 1960களில் அமெரிக்க ருஷ்ய கைகுலுக்கல்களுடன் நாஸா ஆதரவுடன் ஏக சாத்தியங்களுடன் தொடங்கி, பயோநீர் பட்டயம், வாயேஜர் வட்டு, பீட்டில்ஸ் பாட்டு என்று 1970களில் உற்சாகமாக அங்குமிங்கும் சுற்றி சைக்ளாப்ஸ், மெட்டி என்று 1980களில் அலைபாய்ந்து, டகில்பாய்ந்து, இன்டிரவெலுக்கு பின் தற்போது அரசாங்க ஆதரவற்று அரசிபோ சமிஞ்சை, வீட்டில் செட்டி, என தனிமனிதர்களின் கருணையில் ஜெனரல் வார்ட்டில் பி-பாஸிட்டிவ் ரத்தம் ஏற்றி உயிருடன் இருத்திவைக்கப்பட்டுள்ள ஏலியன்ஸிற்கான நம் ஒரு தலை ராகம்.
டி.ராஜேந்தரின் அடுக்கு வசனங்கள் போல, செட்டி ரசிகர் மனதில் எஞ்சி நிற்பது ஸாகனின் காஸ்மாஸ் தொலைக்காட்சி தொடரும் புதிய-இனம் கான புதினம் படைக்க தாயுலகக்கட்டிலிருந்து விடுபட்டு தாவி நக்ஷத்திரங்களை சுவீகரிக்கும் அறிவியல் எழுச்சிப் பேச்சுகளும்தான்.
நாம் பார்க்கும் ஒளியைப்போல, ரேடியோவில் வாங்கி ஒலியாய் கேட்கும் ‘ரேடியோ அலைகளும்’ மின்காந்த கதிரியக்க நிறமாலையின் (எலக்ட்ரொமாக்னெட்டிக் ஸ்பெக்ட்ரம்) ஒரு பகுதியே. தந்தி, எஃப்.எம். ரேடியோ, யு.எச்.எஃப். டீவி நிகழ்ச்சி என்று நமக்கு பல அலைவரிசைகளில் பரிச்சயமானதுதான். பூமியின் வாயு-விளி மண்டலத்தை ஊடுருவி, ஒளியின் வேகத்தில் பலகாத தூரம் சிதையாமல் தகவல் தாங்கி செல்லக்கூடியது.
1959இல் குக்கோனி மாரிஸன் இருவரும் எழுதிய ஆராய்ச்சி கட்டுரைதான் முதலில் ரேடியோ அலைகளை வைத்து விளிமண்டலத்தில் இருப்பவரை தொடர்புகொள்வதற்கு அடிகோலியது. அவர்களே அயனோஸ்பியரை ஊடுருவி வரும் மைக்ரோ-அலைஅகலங்களையும் அலைவரிசைகளையும் பரிந்துரைத்தனர். பிரான்சிஸ் டிரேக் இந்நூலை 1960இல் கெட்டியாக பிடித்துக்கொண்டு, டிரேக் சமன்பாடு (சென்ற பாகத்தில் படிக்கவும்), செட்டி, பயோநீர் பட்டயம், அரசிபோ (ரேடியோ டெலஸ்கோப் – கீழே படத்தில்) சமிஞ்சை என்று இன்றுவரை தொடர்கிறார்.
இவரின் நண்பரும் அறிவியலாளருமான கார்ல் ஸாகன் செட்டிக்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல முயற்சிகள் எடுத்தார். அறிவியல்தான் பனிப்போரைத்தாண்டி உலகமக்களை ஒன்றுசேர்க்கவல்லது என்பதற்கு அடையாளமாய் ருஷ்ய வானியலாளர் மற்றும் எக்ஸொபயாலஜிஸ்ட் இயோஸிஃப் இஷ்க்லோவிஸ்கி உடன் சேர்ந்து ஸாகன் எழுதிய இன்டெலிஜென்ட் லைஃப் இன் தெ யுனிவெர்ஸ் (1966) என்ற புத்தகம் ஏலியன்ஸ் தேடலில் முக்கிய ஆவனம். ஸாகன் ஒரு இருபது வருடம் செட்டியின் உபயோகத்தை, பணிகளை பொதுமக்களுக்கும், அரசாங்கத்திற்கும் புரியும்படி விளக்கி, ஆர்வமேற்படுத்தி, விளி-அறிவு-ஜீவிகள் தேடலை நிரந்தரமாக்கினார், தீவிரப்படுத்தினார். ஸாகன் உருவாக்கிய காஸ்மாஸ் தொலைகாட்சி தொடர் என்பதுகளில் அறிவியல் நோக்கையும் அதன்மூலம் கிடைத்த இயற்கையின் புரிதல்களை மட்டுமே நம்பி கண்களில் நீர் வரவழைத்த ஒரே மெகா சீரியல்.
இப்படி ரேடியோ அலைகளை அனுமானித்த ஒலியளவுகளில், அலைவரிசைகளில், சத்தில், அனுப்பியும், அண்டத்திலிருந்து வாங்கியும் ஏலியன்ஸுடன் தொடர்புகொள்ள இன்னமும் முயல்கிறோம். SETI, Project Ozma, Project Cyclops, Project Phoenix (SETI), SERENDIP மற்றும் Allen Telescope Array பல முயற்சிகள் நடந்துவருகிறது.
1971இல் டிரேக் பரிந்துரைத்த 1500 டிஷ் ஆண்டெனாக்களை கொண்ட தொடர் ரேடியோ டெலஸ்கோப் சைக்லோப்ஸ் (இச்சுவையான அக்ரொநேம் பெயர்காரணத்தை யோசித்துப்பாருங்கள்) இன்றுவரை கட்டப்படவில்லை. பட்ஜெட் பற்றாக்குறையினால் (தேவையான செலவு அப்போதே 10 பில்லியன் டாலர்கள்).
ஆனால் 1974இல் முடிந்ததை செய்வோம் என்று போர்ட்டோ ரீக்கோவில் அரசிபோ வானியல் ஆராய்ச்சி மையம் செட்டிக்கு உதவ ஏற்பாடானது.
[அரசிபோ டெலஸ்கோப் படம்]
டிஷ் ஆன்டெனா ரிசீவரின் பரப்பளவு எவ்வளவு பெரிதாக உள்ளதோ அதற்கேற்ப குறைவான சத்துடன் விளியிலிருந்து வரும் சமிஞ்சையயும் பிரித்துணர்ந்து உள்வாங்கலாம். அதேபோல் பல லைட்டியர்கள் தூரம் சமிஞ்சை சத்து (சிக்னல் ஸ்ட்ரென்த்) குறையாமல் விளியில் நம் தகவலை அனுப்பலாம். வீட்டில் சொந்தமாய் டிஷ்-டிவி வைத்து டிஸ்கவரி-சேனல் மட்டும் பார்ப்பவர்களுக்கு இவ்விஷயம் உடனே புரியும்.
அரசிபோவில்தான் உலகிலேயே பெரிய தனி ரேடியோ டெலஸ்கோப் (டிஷ் ஆன்டெனா – மேலே படத்தில்) உள்ளது. விட்டம் 306 மீட்டர். கால் கிலோமீட்டருக்கும் சற்று அதிகம். நடுவில் குவிமைய பீடத்தில் பிள்ளையார் இல்லாவிட்டாலும், தினம் இருமுறை டிஷ்ஷை பிரதட்சனம் செய்தாலே நோயற்ற வாழ்வு.
அரசிபோ சமிஞ்சை ஏலியன்ஸிற்கு நாம் தர நினைத்த செய்தி. 1974இல் அரசிபோ மையத்திலிருந்து M13 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு நக்ஷத்திர கூட்டுருளையை நோக்கி அனுப்பப்பட்டது. M13 என்றால் வானியல் பொருட்கள் பட்டியலாகிய மெஸ்ஸியர் கேட்டலாகில் 13வது பொருள். நக்ஷத்திர கூட்டுருளை கிலோபுலர் ஸ்டார் கிளஸ்டர் என்பதின் தமிழாக்கம்.
அரசிபோ செய்தி என்ன என்று இக்கட்டுரையின் அடுத்த கீழ் பிரிவில் பார்ப்போம்.
அரசிபோ போல் உலகில் பல இடங்களில் ரேடியோ டெலஸ்ககோப் வைத்து நாம் வாங்கிக்கொண்டிருக்கும் ரேடியோ சத்தங்களில், 1977இல் ஜெர்ரி எஹ்மான் ஏலியன்ஸிடமிருந்து செய்தியோ என்பதுபோன்ற ஒரு ரேடியோ சமிஞ்சை குறியை கண்டார். தினம் சுற்றி கேட்கும் அர்த்தமற்ற-சத்தங்களிலிருந்து (வைட்-நாய்ஸ்) மேம்பட்டு, தற்செயலான ஒரே ஒருமுறை வந்த இந்த சமிஞ்சை வடிவம் (பாட்டர்ன்) வவ் சிக்னல் (ஆ! சமிஞ்சை) என்று பெயரிடப்பட்டு இன்று செட்டி கிடங்கில் புதைக்கப்பட்டுவிட்டது. மறுபடியும் வரவில்லை.
1979இல் இருந்து செட்டியின் மறுவடிவம் செரென்டிப் என்று பெயரிடப்பட்டு பெர்க்கிலி பல்கலைகழகத்திலிருந்து சூரியமண்டலத்திற்கு அருகில் இருக்கும் நக்ஷத்திரங்களில் தேடிக்கொண்டிருக்கிரார்கள். 2009 இல் தொடங்கிய செரன்டிப் 5திற்கு அரசிபோ வானியல் ஆராய்சிமையம் தற்போது உதவுகிறது.
ஆலன் தொடர் ரேடியோ டெலஸ்கோப்கள் 350 சிறிய டிஷ் ஆன்டெனாக்களை கொண்டு வடக்கு கலிஃபோர்னியாவில் உருவாக்கப்பட்டுவருகிறது. முன்னர் சொன்னபடி ரேடியோ அலைகளை ரிசீவ்செய்யும் பரப்பளவை விரிதாக்கும் வழி. தொலைவில் இருந்தோ அல்லது சத்துகுறைவான சமிஞ்சைகளை கேட்கும் முயற்சி. இதுவரை 42 டிஷ்கள் ரெடி. நிறைய பொருளுதவி செய்தவர் பில்கேட்ஸுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டை நிறுவிய பால் ஆலன். தொடர்ந்து பட்ஜெட் தடுமாறாமல் மொத்தமும் கட்டமுடிந்தால் அரசிபோவைவிட பெரிய கூட்டு-டிஷ் ரேடியோ ஆன்டெனா கிடைக்கும்.
இப்படி ரேடியோ அலைவரிசை தேடல்களுடன் கூடவே சிறிய லெவலில் ஆப்டிகல் டெலஸ்கோப்பிலும் தேடுகிறார்கள். ஏலியன்ஸ் ஏதாவது லேசர்ஒளிக்கீற்றை அனுப்புகிறார்களா என்று.
இவ்வளவு வருடங்கள் ரேடியோ அலைவரிசைகளில் மின்காந்த கதிரியக்க நிறமாலையில் (எலக்ட்ரொமாக்னெட்டிக் ஸ்பெக்ட்ரம்) தேடி எதுவும் பெயரவில்லை என்பதால், ஏலியன்ஸ் ரேடியோ தொடர்புதான் வைத்துக்கொள்வர் என்ற செட்டியின் ஆதார சிந்தையே தவறாக இருக்கலாம் என்ற புதிய கருத்து நிலவுகிறது. ஒருவேளை ரேடியோ அலைகளைவிட பலமடங்கு குவிப்புத்திறன் கொண்ட, அதனால் பலகாத தூரம் (பல லைட்டியர்கள்) சிதறாமல் சமிஞ்சை சத்து குறையாமல் செல்லக்கூடிய, லேசர் முலமாக தொடர்புகொள்வார்களோ என்று தற்போது வானியலாளர்கள் கருதுகிறார்கள். அதனால் இந்த புதிய (மனித கண்களால் ‘பார்க்க’ முடிந்த) ஆப்டிகல் அலைவரிசையில், ஏலியன்ஸிடமிருந்து வரலாமென்கிற லேசர் ஒளித்தேடல் தொடங்கியுள்ளது. ஆலன் அர்ரேயின் அருகில், ஒரு ஆப்டிகல் டெலஸ்கோப் இதைச் செய்கிறது.
இப்படியே போய், இன்றளவில் சென்டினல், மீட்டா, பீட்டா, மாப், பிராஜெக்ட் ஃபீனிக்ஸ், வீட்டில் செட்டி என்று அவரவர் வானியல் தகுதி, கருத்து, பொருளுதவிக்கேற்ப, பல செட்டி கிளை தேடல்கள் உலகெங்கிலும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. நாம்கூட ஹாக்கிங் போன்றோர் ஏலியன்ஸ்பற்றி ஏதாவது பேசியவுடன் சென்னையில் தலைநிமிர்ந்து எரிகற்களை முதல்முறையாக இரவில் வானில் பார்க்கிறோம். உபரியாக உன் விழியில் கலந்தேன் வின்வெளியில் பறந்தேன் என்று பாட்டுபாடி காதலியுடன் வின்வெளிப்பயணத்திற்கு ஆயத்தம் செய்கிறோம்.
*****
ரேடியோ அலைகளை 1950களில் இருந்து ’வெளி’க்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். மார்ஸ் அட்டாக்ஸ் என்ற எச்.ஜீ.வெல்ஸின் கதையை ஆர்ஸன் வெல்ஸ் 1950களில் ரேடியோவில் வாசித்த காலகட்டத்திலிருந்து, ஐ லவ் லூஸி வழிமொழிய, வண்ணச்சுடர், பல்குணன் செய்திகள், பல்குத்தல் விளம்பரங்கள், பீட்டில்ஸ் பாட்டு, தியாகராஜ ஆராதனை, அரசியல் அபத்தங்கள், அலங்கார பேச்சுகள், வெட்டிமன்றங்கள், அவசர தந்திகள்… இப்படி பலதை ’வெளி’யில் ரேடியோ அலைகளாக அனுப்பிக்கொண்டிருக்கிறோம்.
நாம் அனுப்பும் ரேடியோ டீவி நிகழ்ச்சிகளையெல்லாம் ஏலியன்ஸ் நிச்சயம் இந்நேரம் கேட்டிருப்பார்கள், இனி ஹாக்கிங் சொல்வதுபோல் (முதல் பாகம் பார்க்கவும்) வாயைமூடிக்கொண்டால் என்ன (ரேடியோ சைலன்ஸ்) இல்லாவிட்டால் என்ன என்று தர்க்கம் புரிவது சரியல்ல. இதையெல்லாம் ரேடியோ டெலஸ்கோப் வைத்திருக்கும் ஏலியன்ஸ்கள் உடனுக்குடன் கேட்டுவிடுவார்கள் என்பதற்கான சாத்தியம் சொற்பமே. நம் ரேடியோ டீவி ஏ.எம். எஃப்.எம். யு.எச்.எப். அலைகள் சூரியமண்டலத்தை தாண்டி தட்டுப்படுவதே கடினம். ஏன் என்று சமன்பாடுகள், விவரத்துடன் ஆங்கிலத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். இங்கு சமன்பாடுகள் இல்லாமல் சுருக்கிவரைகிறேன்.
சேங்காலிபுரம் பக்கமாக தண்ணியுள்ள குளக்கரையில் பும்மாலை குளிக்கச்செல்கையில் அக்கரையில் கிருஷ்ணவேணியை பார்க்கிறீர்கள். தமிழ்மகள் அவளின் கவனத்தை கவர இக்கரையில் சிறு கூழாங்கல்லை குளத்துடன் சத்தமின்றி முத்தமிட வைக்கிறீர்கள். குளத்தின் நீரலை அக்கரை நோக்கிச் செல்கிறது. அதற்குள் பையில் டார்ச் லைட் (தமிழில் பைவிளக்கு, இப்போ கைவிளக்கு) இருப்பது ஞாபகம்வந்து எடுத்து ‘ஹாய் க்ருஷ்’ என்று சமிஞ்சையாக ஏற்றுகிறீர்கள். நீரலை, ஒளியலை, அக்கரை கிருஷ்ணவேணி எந்த அலையை முதலில் பார்க்க சாத்தியம் அதிகம்?
ஒளியலை என்றால் ம்ஹூஹும். குளத்தின் நீரலையைத்தான் கிருஷ்ணவேணி பார்ப்பாள் – ஏனெனில் அவள் தமிழ்ப்பெண், குனிந்த தலை நிமிரமாட்டாள்.
சரி, வேடிக்கை விட்டு யோசித்தால், டார்ச் லைட் ஒளியலை விரைவில் செல்வதோடு, ஒருவிதமாக குவிந்து, நீரலைபோல் உடனே சிதறாமல், மனித கண்களின் பார்க்கும் நிறமாலை அலைவரிசைக்குள் தெரிவதால், அதைப்பார்க்கத்தான் சாத்தியம் அதிகம். இல்லையா.
வளியில் கட்டுப்பாடின்றி செல்லும் நம் ரேடியோ டீவி நிகழ்ச்சிகளின் ரேடியோ அலைகள் குளத்தின் நீரலைகள் போல. சமிஞ்சை சத்தும் மிகக்கம்மி. சீக்கிரம் சிதறிவிடும்.
உதாரணமாக 5 மெகாஹெர்ட்ஸ் அலை-அகலத்துடன் 5 மெகாவாட்ஸ் சமிஞ்சை சத்துடன் உலகை விட்டு விளியில் செல்லும் சித்தி மானாட மயிலாட போன்ற டீவி மெகாசீரியல்களை, அரசிபோவின் (கால்கிலோமீட்டாருக்கும்அதிக விட்டமுள்ள) டிஷ் ஆன்டெனாவைப்போல 100 மடங்கு துல்லியத்துடன் ஒலிகளை பாகுபடுத்தும் டெலஸ்கோப் இருந்தாலும், சூரியமண்டலத்தை தாண்டியே சரிவர கண்டுணர்ந்து உள்வாங்க முடியாது. மேலும், சூரியமண்டலத்தின் சுறுவட்டாரத்தில் ஏலியன்ஸ் இருப்பதாய் இதுவரை காணோம். நம் மெகாசீரியல்களில் இருந்து தப்பித்தார்கள்.
விளி-அறிவு-ஜீவிகளை தொடர்புகொள்ள அரசிபோ போல் ரேடியோ வானிலை ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து அனுப்பப்படும் அலைகள் மேலே குறிப்பிட்ட குளக்கரை டார்ச் லைட் ஒளி போல. மிகுந்த சமிஞ்சை சக்தியுடன் அனுப்பப்படுபவை. சுற்றி ஒரு 100 லைட்டியர்கள் தொலைவில் ஏலியன்ஸ் அரசிபோ ஸைசில் பரவளைய ரிசீவரை வைத்துத்தேடினால் தட்டுப்படும் சாத்தியம் அதிகம். சக்திவாய்ந்த அரசிபோ சமிஞ்சை செய்தி 1974இல் இவ்வகையில் அனுப்பப்பட்டது. என்ன அது, சுருக்கமாக பார்ப்போம்.
*****
[பயொநீர் பட்டயம் படம்]
கட்டுரையில் தொடக்கத்தில் கூறியது போல, ரேடியோ அலைகளை எப்போதும் பாஸிவ்வாக ரிசீவ் – வெறுமனெ கேட்டுகொண்டு- மட்டும் இல்லாமல், ஆக்டிவாக நாமும் அவ்வப்போது ஏலியன்ஸ் கேட்பதற்கு செய்திகளை அனுப்பிக்கொண்டிருக்கிறோம். இதுவும் செட்டியின் ஒரு அங்கமே. தவிர, இன்று ஆக்டிவ் செட்டி என்று SMS போலவும் தேர்ந்தெடுத்த நட்சத்திரங்களை நோக்கிமட்டும் சக்தியுடன் சமிஞ்சை அனுப்பும் ஒரு இயக்கமும் இருக்கிறது. இதற்கு எதிர்ப்பும் இருக்கிறது. ஹாக்கிங் கூறுவது போல (முதல் பாகம் பார்க்கவும்).
ஆனால் இவ்வகை செய்திகளின் ஏலியன்ஸ் தொடர்புக்கான உபயோகத்தில் ஒரு ஆதார அவநம்பிக்கை இருக்கிறது.
நம் இசை, நாகரீகம், கலாச்சாரம், பற்றியெல்லாம் ஏலியன்ஸ் புரிந்துகொள்ள சாத்தியம் கம்மி. அவர்கள் பயாலஜிபடி அவர்கள் சைக்காலஜி வேறாக இருக்கலாம். நமக்குள்ளேயே ராஜாவா ரஹ்மானா, மெட்டாலிக்காவா தியாகைய்யரா, ராக்கா கானாவா, ருஷ்ய உகெலிலியா ஸ்காட்லாண்டின் பாக்பைப்பா என்று இசையில் பிடித்தல் வேறுபாடு. ஏலியன்ஸுடன் ஒப்பிடுகையில், நம் காதுகளுக்கு இசை என்று கேட்பது அவர்களுக்கு, காதிருந்தால், எப்படியோ. அதைப்போல நமக்கு நீலமாக தெரிவது அவர்களுக்கு எப்படித்தெரிகிறாதோ. யோசித்துப்பாருங்கள், நம்மை ஏலியன்ஸுடன் இவ்வழிகளில் இணைக்கவே முடியாதபடி இடையில் இருக்கும் ஆழிப்பள்ளம் விளங்கும்.
காந்தளூர் (காந்தம்+ஊர்) வசந்தகுமாரன், ரத்தம் வேறு நிறம் என்று சுஜாதா கதைக்கு பதில் நிஜத்த உண்மையா எழுதலாம்.
இதனால்தான் ஏலியன்ஸுடன் தொடர்புகொள்ள அறிவியல் வரையறைகளை, விதிகளை, நாடுகிறோம்.
ஏன்? ஒரு உதாரணம், (சார்பியல் திருத்தங்களுக்கு உட்பட்ட) நியூட்டனின் விதிகள் என்று எடுத்துக்கொண்டால், அது நமக்கு எவ்வாறு இவ்வுலகில் இயங்குகிறதோ அதுபோலத்தான் அண்டசராசரத்தில் எங்கும் இயங்கும். இரு பருப்பொருள்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் விசை அவற்றின் திணிவிற்கு (பொருண்மை, மாஸ்) பெருக்கல்தொகைக்கு நேர்விகிதத்திலும், இடைப்பட்ட தூரத்தின் வர்கத்திற்கு எதிர்விகிதத்திலும் சார்ந்திருக்கும். இந்த விதி மாற்றி இயங்கும் தருணம் இதுவரை நாம் அறியவில்லையாதலால், அப்படித்தான் நம்பிக்கை. இந்த நம் அறிவியல் புரிதலை, அறிவை, ஏலியன்ஸுடன் எவ்வாறாவது பகிர்ந்துகொண்டால், கலாச்சாரம், கற்பனை, குறியீடுகள், பயாலஜி தாண்டி, அவர்களுக்கும் இது புரியும்தானே.
எப்படி செய்வது. எந்த மொழியில், பொதுக்குறியீடுகளில் செய்வது? படமாக போட்டுக் காண்பிப்பதா. அப்படியெனில் எந்த வடிவங்கள் ஏலியன்ஸுக்கும் நமக்கும் பொது? இதே ரீதியில் யோசித்துக்கொண்டே போனால் ஏலியன்ஸுடன் நாம் பேசக்கூடிய மொழி, பரிபாஷை, பிரத்தியட்ச உண்மைகளை கொண்டு கட்டப்பட்டுள்ள கணிதம்தான் என்று விளங்கும்.
பை என்ற நம்பரின் சூட்சுமம் நமக்குத்தெரியும் என்பதை ஏலியன்ஸுக்கு புரியவைக்க வாய்பேசத்தேவையில்லை. பயாலஜி எப்படியோ, பார்வை என்று இருந்து, பார்த்தல் என்பது பொது என்றால், வட்டமும் ஏலியன்ஸ் பார்த்தாலும் அதே வடிவ வட்டமே.
இவ்வாறு யோசித்து முதலில் அனுப்பிய பயொநீர் பட்டயத்தில் கூட நம் ‘நிரந்தர’ அறிவியல் ‘அறிவை’ பொறித்திருக்கிறோம்.
செட்டியின் தொடக்கத்தில் பயொநீர் பட்டயம், வாயேஜர் வட்டு என்று சமுத்திரத்தில் தத்தளிக்கையில் பாட்டிலினுள் வைத்து செய்திகள் அனுப்புவதுபோல் செய்துதோம். கார்ல் ஸாகன் தலைமையில், பிரான்சிஸ் டிரேக் (டிரேக் சமன்பாடு சொன்னவர் – சென்ற பாகம் பார்க்கவும்) உதவியுடன் கமிட்டி இவற்றில் என்னென்ன விஷயங்கள் இடம்பெறவேண்டும் என்று நிர்ணயித்தது.
பயொநீர் பட்டயம் தங்க முலாம் பூசப்பட்ட அலுமினிய தகடு. 1972 மற்றும்1974இல் பயொநீர் 10, 11 வின்வெளி ஊர்த்திகளில் கழுத்தில் டோக்கன் போல மாட்டி சூரியமண்டலத்தைத் தாண்டி வின்வெளி நோக்கி அனுப்பப்பட்ட முதல் மனித ‘பாட்டில் செய்தி’.
மேலே பயொநீர் பட்டயம் படம் பாருங்கள். மொத்தமும் ஸாகனின் அப்போதைய மனைவி, லின்டா ஸாகன் வரைந்தது. பெண் உறுப்பை குன்சாய் மட்டுமே வரைந்துவிட்டிருப்பதற்கு பல நுண்அரசியல் காரணங்கள் இருக்கலாம். பின் வந்த வாயேஜர் வட்டில் நிர்வாண நரன் நங்கை நீக்கப்பட்டனர். ஏலியன்ஸ் நம்மை தவறாக நினைத்துவிடக்கூடாது என்று. சத்தியமாய் அதான் காரணமாம். இதைப்பற்றி புரளிகளே செய்தியாகும் அளவிற்கு வந்துள்ளது. ஸாகன் நேரிடையாக எதுவும் (குறை) கூற மறுத்துவிட்டார்.
சரி, அறிவியல் மேட்டருக்கு வருவோம். பட்டயத்தில் கணிதம் இரண்டடிமான எண்களில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டடிமான எண்களே கணினியின் ஆதார பருப்பொருள் என்று நமக்குத் தெரியும். ஏலியன்ஸிற்கும் தெரியும் என்பது அனுமானம். இடது மேல் கோடியில் ஹைட்ரஜன் மூலப்பொருளின் ஹைப்பர்ஃபைன் டிரான்ஸிஷன் எனப்படும் ஒரு சுருள் (ஸ்பின்) மதிப்பிலிருந்து மற்றொன்றிற்கு எலக்ட்ரான் மாறுவதை குறிப்பிடும் படம். தீக்குச்சி போல் இருக்கும் செங்குத்து கோடு (எலக்ட்ரான்) தலைகால் மாறியிருக்கிறது பாருங்கள்.
ஹைட்ரஜன்தான் பிரபஞ்சத்தில் அதிகம் விரவியிருக்கும் மூலப்பொருள். அதன் எலக்ட்ரானின் மேல்-சுருள் (ஸ்பின்-அப்) கீழ்-சுருளாய் (ஸ்பின்-டௌன்) மாறும் நிகழ்ச்சி ஒரு காலத்தையும் (1420 மெகாஹெர்ட்ஸ்), அலை நீளத்தையும் (21 சென்டிமீட்டர்கள்) நிர்ணயமாய் குறிப்பிடும். மண்டையை உருட்டாதீர்கள். பல அறைகள் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் ஒரு ஆள் ஒரு அறையில் இருந்து நடந்து மற்றொரு அறைக்கு செல்ல நிச்சயமான ஒரு காலம், தூரம் (ஆற்றல் விரயம்) இருக்குமல்லவா அது போலத்தான் இந்த ஹைட்ரஜன் எலக்ட்ரான் சுருள் மாற்றம். பிரபஞ்சத்தில் அனைத்து இடங்களிலும் இந்த சுருள் மாற்ற கால, இட மதிப்புகள் அதே (அறிவியல் கூற்று). இந்த அளவுகளை வைத்து மற்ற அளவுகளை பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
உதாரணமாய், நரன், நங்கை அருகில் வலதுகை ஓரத்தில் குறுக்காக ஒரு 1— என்பதுபோன்ற குறிகள் இருக்கிறது பாருங்கள். அது இரண்டடிமானத்தில் 1000, அதாவது, எண் 8. இந்த 8ஐ மேலே குறிப்பிட்ட அலைநீளம் 21 சென்டிமீட்டருடன் பெருக்கினால், 168 சென்டிமீட்டர் வரும்; அதாவது மனிதகுலத்தின் சராசரி உயரம்.
சூரியக்கதிர்கள் போல் இடதுபுறம் இருக்கிறதே, அதன் மையப்புள்ளி சூரியனைக்குறிக்கிறது ஆனால், ‘கதிர்கள்’ 14 பல்ஸார் வகை (ரேடியோ அலைகளை உமிழும்) நட்சத்திரங்களின் இடங்களை, சூரியனின் இருக்கும் இடத்தை வைத்து குறிப்பிடும் (திசை, தூரம்) கோடுகள். ஒவ்வொரு பல்ஸாரின் தூரத்தையும் இரண்டடிமானமாக கோடுகள்மீதே எழுதியுள்ளார்கள் பாருங்கள். ஒருவேளை பயொநீர் பட்டயம் ஏதாவது ஏலியன்ஸிடம் மாட்டினால், இந்த தகவலை வைத்து டிரையாங்குலேஷன் முறையில் நம் சூரியன் எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
சந்தேககங்கள் இருக்கும். இப்போதைக்கு இது போதும். தாண்டிச்செல்லுவோம்.
இதேபோல் வாயேஜர் வட்டிலும், இவ்வகை யோசனைகளை விரிவாக்கி, பல அறிவியல் விஷயங்களை பொறித்து அனுப்பியுள்ளோம். வாயேஜர் வட்டு படம் அருகில். பயொநீர் பட்டயம் பாட்டில் செய்தி என்றால், இது இசை பாட்டில் செய்தி. உலகின் சப்தங்கள் அடங்கியது.
[வாயேஜர் வட்டு பின்பக்கம்]
இவற்றிலிருந்து மாறுபட்டது அரசிபோ ரேடியோ சமிஞ்சை. உலகிலிருந்தபடியே குறிப்பிட்ட ரேடியொ அலைவரிசைகளில் அனுப்பப்பட்டது. இது திட்டமிட்டு ஏலியன்ஸிற்காகவே அனுப்பப்பட்ட நம் முதல் ரேடியோ அலை செய்தி.
ஏற்கனவே குறிப்பிட்ட அரசிபோ வானியல் ஆராய்ச்சிமையத்திலிருந்து சக்தி வாய்ந்த சமிஞ்சையாய் அனுப்பியுள்ளோம். பல அறிவியல் விஷயங்களை (இதுவரை பார்க்காத) ஏலியன்ஸுடன் பகிர்ந்துகொள்கிறது. அருகில் படத்தில் அரசிபோ சமிஞ்சை செய்தியின் படம் உள்ளது. இச்செய்தியும் இரண்டடிமான எண்களால் ஆனது.
[அருகில் படத்தில்: 73 x 23 அணிவரிசையில் பார்த்தால் தெரியும் அரசிபோ சமிஞ்சை செய்தி]
மொத்தம் 1679 எண்கள். 1679 ஒரு செமி-பிரைம் அதாவது இரண்டு பிரைம் எண்களின் (23 x 73) பெருக்கல் தொகை. செய்தியை புரிந்துகொள்ள ஒவ்வொன்றும் 23 இலக்கங்களை கொண்ட73 வரிகளில் எழுதவேண்டும். அருகே படத்தை பாருங்கள். 73 கிடை வரிசை (row), 23 நெடுக்கு வரிசைகள் (column) இருக்கும். மாற்றி 73இன் கீழ் 23 என எழுதினால் செய்தி குப்பையாகிவிடும். மிச்ச எண்களின் சேர்க்கையிலும் 1679ஐ கொண்டுவந்தாலும் குப்பையே. விளி-அறிவு-ஜீவிகளான ஏலியன்ஸிற்கு நிச்சயம் கணித உண்மைகளான, பிரைம் எண்கள், இரண்டடிமான எண்கள் (கணினி தொடர்பு) பற்றி தெரிந்திருக்கும் என்று அனுமானம்.
1679 டிஜிட்டுகளில் உள்ள இச்செய்தி நீளம் கிட்டத்தட்ட 200 கணினி பைட்டுகள். 2380 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் அனுப்பப்பட்டது (நம்மூர் எஃப்.எம். கோல்டு 102.3 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை – கர்நாடக இசை நிறைய ஒலிபரப்புவார்கள்). இரண்டடிமானம் என்பதால் ஒன்று அல்லது பூஜ்ஜியம் மட்டுமே செய்தி வடிவம், இல்லையா. இவ்வெண்களை ஒரு நொடிக்கு பத்து பிட்கள் என்று பிரித்து மூன்று நிமிடங்களுக்குள் அனுப்பினார்களாம்.
முக்கியமான விஷயம், நம் அன்றாட ரேடியோ நிகழ்ச்சி சமிஞ்சை சக்தியிலிருந்து பலமடங்கு அதிகமான சக்தியுடன் அனுப்பப்பட்டது. 1 டெர்ரா வாட்கள். டெர்ரா என்றால் ஒன்றிற்கு பிறகு 12 பூஜ்ஜியங்கள். 500 மெகாவாட் (என்று நினைக்கிறேன்) வடசென்னை பவர்-ப்ளாண்ட் போல இருபதின் மொத்த உற்பத்திதிறனும் 3 நிமிடங்களுக்கு இந்த சமிஞ்சையை சத்தூட்ட செலவிடவேண்டும்.
மின்சாரத்துறை பலசமயம் மின்வெட்டுத்துறையாய் பணியாற்றும் ஆற்றல் பற்றாக்குறை காலத்தில், இந்த ஆற்றல் செலவீனங்கள் கட்டுப்படியாகாது என்றுதான் நாம் ஏல்யன்ஸிற்கு இவ்வகை சமிஞ்சை சத்துடன் செய்தி அனுப்புவதை தவிர்கிறோம். செய்யமுடியும் என்பதற்கு அடையாளமாய் அரசிபோ சமிஞ்சை.
சரி, என்ன செய்தி அனுப்பினோம்? அது ஏழு பகுதிகளாலானது. நம் எண்களிலிருந்து (படத்தில் முதல் நான்கு வரிசைகள்), மரபணுவின் முலப்பொருள்களின் அணு-எண்கள், மனித அளவுகள், என்று பயொநீர் பட்டய பட்டியலைவிட நீண்ட ஒரு பட்டியல். இப்போதைக்கு விட்டுவிடுகிறேன்.
அரசிபோ சமிஞ்சை M13ஐ நோக்கி 1974இல் அனுப்பியுள்ளோம் என்று பார்த்தோம். சென்றடைய 25000 வருடங்கள் பிடிக்கும். கேட்டு அதே வேகத்தில், சக்தியில், ரேடியோ அலை பதில்போட்டால் இன்னொரு 25000 வருடங்கள் ஆகும் நாம் அரசிபோ ஆன்டெனாவில் ரிசீவ் செய்ய.
ஏற்கனவே பார்த்தபடி, ரேடியோ அலையின்றி, நேரடியாக பயொநீர் பட்டயம் பிறகு 1977இல் உலகின் ஓசைகளை அடக்கி வாயேஜர் வட்டு என்று அனுப்பியுள்ளோம்.
2004இல் சூரியமண்டலம் என்று நாம் (ப்ளூட்டோவை தாண்டி) வரையறுத்து வைத்துள்ள இடத்தை கடந்து வாயேஜர் 1 ‘வெளி’யே சென்றுவிட்டது. வாயேஜர்2 தற்போது இத்தூரத்தை கடந்துகொண்டிருக்கிறது. என் சஷ்டியப்தபூர்த்தியில் (2036இல்?) ஹெலியோ-பாஸ்ஸை கடந்துவிடும் என்று ஞாபகம். ஒரு 40000வருடங்கள் கழித்து இரண்டும் அருகில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்களுக்கு அருகே சென்றுகொண்டிருக்கும்.
அங்கிருக்கும் கிரகங்களில், யாராவது பாட்டிலை மறித்து பாட்டுக்களை கேட்டால் பதில் தூதோ, தூமகேதுவோ அனுப்பலாம். நாம் அனுப்பியதுபோலவே தூதென்றால், அது இங்குவர இன்னொரு 40000 வருடங்கள் ஆகும். வேறு ஏதோ அதீதவேகத்தில் அனுப்பும் தொழில்நுட்பம் என்றால், நம் ஆசைக்கு உடனே வந்துவிடும் என்று கற்பனை செய்துபார்க்கலாம்.
மனிதகுலம் அதுவரை உயிருடன் இருந்தால், நம்ம ஆண்டிரோமிடா ஏலியன்ஸ் லெட்டர் போட்டிருக்கான், சூரியன் சிவப்புராட்சஸனாவதற்குள் ஒரு எட்டு நம்மை பார்க்க ஃபோட்டான்டிரைவ் வின்வெளிக்கப்பலில் ஹைப்பர்ஸ்பேசில் வாரானாம் என்று ஹைபர்நேஷனில் ஞாபகார்த்தமாய் உயிருடன் பதப்படுத்தப்பட்ட, ஆறாவது முறையாய் (புஷ்பராக தோடுடன்) புதுக் காது மாற்றிக்கொண்டிருக்கும், வீட்டு எள்ளுப்பாட்டிகளிடம் செய்தி சொல்லலாம்.
*****
ஏலியன்ஸுடன் தொடர்பு என்பது இவ்வகை அறிவியல் யோசனைகள், கற்பனை நீட்சிகளின் சுவையான சாகரம் இது. அறிவுத்துறையும் இலக்கியமும் கடவுள் பாதி கனவு பாதியாய் கலந்து செய்த கலவை. கார்ல் ஸாகன் தன் கான்டாக்ட் விஞ்ஞானப்புனைகதையில் இப்படி பல உதாரணங்கள் கொடுத்திருப்பார். அனைத்துமே அறிவியல் நீட்சியாய் சாத்தியங்களே. இக்கதையை திரைப்படமாகக்கூட எடுத்தார்கள்.
SETI பற்றி கார்ல் ஸாகனின் 1979 பேச்சு இன்றும் பெருமளவு உண்மையே.
கட்டுரை, கவனம் இவற்றின் சுருக்கம் கருதி இவ்விளக்கங்களை இத்துடன் நிறுத்துகிறேன்.
ஆனால்…
இவ்வகை ரேடியோ செய்திகள், தேடல்களில் ஏலியன்ஸிடம் தொடர்பு கொள்ள சாத்தியம் மிகக்கம்மி என்று கசப்பாக இப்போது புரிகிறது. எழுபதுகளில் இருந்த ஆரம்ப ஜோர் போய், இப்படி தேடுவதற்கான பொருளுதவி இப்போது பெருமளவில் குறைந்துவிட்டது. முயற்சியை விட்டுவிடக்கூடாது என்று டிரேக்-ஸாகன் வழிவந்தவர்கள் இன்னமும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இப்படித் தேடியும் இன்னமும் மாட்டவில்லை. ஒருவரும் பதில் பேசவில்லை. பட்ஜெட் தட்டுப்பாட்டுடன் இன்னமும் ஓய்வுநேரத்தில் நாமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். உருவகமாகவோ என்னவோ, இன்று உலகிலேயே பெரிய அரசிபோ ரேடியோ டெலஸ்கோப் ஜேம்ஸ்பாண்ட் வில்லனுக்கு உதவும் சாட்டிலைட் ரிசீவர் சாதனமாக (பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ்பாண்டாய் முதலில் நடித்த கோல்டன் ஐ படத்தில்) சித்தரித்து புதிய தலைமுறைக்கு கொடுக்கிறோம்.
ஒருவேளை, அவர்கள் லோக ஹாக்கிங் கருத்தை (முதல் பாகத்தில் பாருங்கள்) மதித்து, ஏலியன்ஸும் நம்மைப்போல பயந்துகொண்டு சத்தம்போடாமல் இருக்கிறர்களா? ஏலியன்ஸும் நாமும் (அனைவரும் அடுத்தவருக்கு ஏலியன்ஸே) ஒருவருக்கொருவர் இவ்வாறே நினைத்தால் யாரும் அடுத்தவரை தொடர்ப்பு கொள்ள எத்தனிக்காமல் ‘மறைந்து’ வாழ்வோம். இதுவரை அதுதான் நடக்கிறாதோ? யோசித்துப்பார்த்தால் ஒருவகையில் சென்ற பாகத்தில் குறிப்பிட்ட ஃபெர்மி பாரடாக்ஸிற்கு இது சரியான தீர்வு.
ஏலியன்ஸ் தேடல் புனித கோப்பையை தேடிப் போகும் இன்டியானா ஜோன்ஸின் பயணம் போல. முடிவில் கோப்பையை அடையவேண்டும் என்பதல்ல; வழியில் சந்திக்கும் உன்னதங்கள் பல. மேலும் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. புத்தகமாக எழுதமுடிகையில் சொல்கிறேன்.
முடிக்கும் முன் ஒரு ஷார்ட் ரீக்காப். மறுவுரைச்சுருக்கம்:
ஏலியன்ஸ் இருக்கிறார்களா? இவ்வளவு பெரிய அகண்டத்தில், இருக்கத்தான் சாத்தியம் அதிகம். ஹாக்கிங், பால்டேவிஸ் என்று அநேக அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.
அறிவியல் ரீதியாக ஏலியன்ஸை நம்பலாமா? பிரபஞ்சத்தின் குணாதிசியங்களின் நம் அறிவியல் புரிதல்களை வைத்துக்கொண்டு, மனித உள்ளுணர்விலிருந்தே நம்பலாம். டிரேக் சமன்பாடு இவ்வகை லாஜிக்கின் எழுத்துவடிவம். ஆனால் அறிவியல் கூற்று இல்லை. சரியா தவறா என்று நிரூபணம் செய்யமுடியாது. ஏலியன்ஸை பார்க்கும்வரை நிச்சயம் கிடையாது. ஆனால் பொய்-அறிவியலும் இல்லை. நாம் தோன்றி, இருக்கலாம் என்றால், வேரொருவரும் அவ்வாறே இருக்கலாமே என்பதன் அறிவியல்ரீதியான நம்பிக்கை.
நம் தேடல் பயனளிக்குமா? தெரியாது. ஏலியன்ஸ் – தேடினால் நிச்சயம் கிடைப்பார்களா என்று தெரியாது. ஆனால் நாம் தேடாமல் விட்டால் நிச்சயம் கிடைக்காமல் போய்விடுவார்கள். ஏதோ மொத்தமாக மூடிவைத்துவிட்டு, நாம் ஏலியன்ஸிற்கு ரேடியோ அலை தகவல் அனுப்புவதாக சால்ஜாப்பில், ஓய்வை மெகாசீரியல் கற்பனைத்திறன் வெளிப்பாட்டில் செலவிடச் செல்லாமல் இருந்தால் நன்று.
சரி, தேடினால் எப்போது கிடைப்பார்கள்? தெரியாது. ஏற்கனவே தேடலுக்காகும் செலவை மொத்தமாக குறைத்து விட்டோம். பொதுமக்கள், பணக்காரர்கள் சிலரின் தயவில் இப்போது முடிந்த இடத்தில் ரேடியோ அலைகள் அடித்து தேடிக்கொண்டிருக்கிறோம். போறாக்குறைக்கு தேடும் வழிகளே தவறோ என்று அவ்வப்போது கால்களுக்கிடையே (லாஜிக்கிலேயே) அடிவாங்குகிறோம். சுதாரித்து ரேடியோ இல்லையேல் லேசர் இல்லையேல்…என்று நம்பிக்கையை கரெக்ஷன் செய்துகொள்கிறோம். இப்படி புதிய டேட்டா, விஷயங்கள், கிடைக்க அதைவைத்து தன் கூற்றுக்களை மாற்றி புதுப்பித்துக்கொள்ளுதல் அறிவியலுக்கு அழகு. ஏலியன்ஸ் கிடைக்கிறர்களோ இல்லையோ, எக்ஸோ-பயாலஜி, xeனாலஜி, ரேடியோ வானியல், தகவல்தொடர்பு, சார்ந்த யோசனைகள், பரிசோதனைகள் என்று நம் அறிவியலை, புரிதல்களை ஓரளவு வளர்த்துகொள்ள இத்தேடல்கள் அவ்வப்போது உதவுகிறது.
பூமிக்கு ஏலியன்ஸ் வந்துள்ளார்களா? வந்ததற்கான, வருவதற்கான ஆதாரம் எதுவும் ருசுவுடன் நிருபிக்கப்படவில்லை. இடையே இன்டிபென்டென்ஸ் டே போன்ற திரைப்படங்கள், ஏலியன்ஸுடன் பாலியல் தொடர்பு, வேற்றுகிரக-இறை அனுக்கிரகம், சார்ந்த ஊடக பேட்டிகள், ஒலிக்கடிகள் (சௌண்ட்-பைட்), எரிக் வான் டனிக்கனின் சாரியட்ஸ் ஆஃப் காட் போன்ற பாதி-உண்மை (மீதி உட்டாலக்கடி) ‘பாப்புலர்’ புத்தகங்கள், வெகுஜன சஞ்சிகைகளில் புருடா கட்டுரைகள் என்று பதினைந்து நிமிடப்புகழ் வெளிச்சம் தொடர்ந்து நம்மில் பலருக்கு கிட்டுகிறது.
பூமிக்கு ஏலியன்ஸ் வருவார்களா? வரமாட்டார்கள் என்று நான் கூறவில்லை. வந்தால் நன்றாக இருக்குமே என்றுதான்… பால் டேவிஸ் கருதுகிறார். ஹாக்கிங் அப்படிக்கருதவில்லை (முதல் பாகம் பாருங்கள்). நம் அநேகர் கருத்து, வந்தா பாத்துப்போம்யா, பொழப்ப கவனிப்போம்…
என் அபிப்பிராயம்? சொந்தமாக வளர்க்கும் அளவிற்கு அபிப்பிராயம் நாய்குட்டியா. மேலும், டேட்டா இல்லமல் உண்டு இல்லை என ஒரே அபிப்பிராய நாய்குட்டி வளர்ப்பது அறிவியல் சிந்தைக்கு கெடுதல். ஏலியன்ஸ் என்ன அரசியலா, மதமா, உலகிலுள்ளோர் அனைவரும் ஒரு செல்ல நாய்குட்டி வளர்ப்பதற்கு.
நான் உடன்படும் கருத்தை கீழே கால்வின் ஹோப்ஸிடம் கூறுகிறார் பாருங்கள். ஒரிஜினல் கருத்து, கார்ல் ஸாகன் 1968இல் தன் இண்டெலிஜெண்ட் லைஃப் இன் தெ யூனிவெர்ஸ் புத்தகத்தில் கூறியது.
சிலசமயம் நா என்ன நினைக்கிறேன்னா, பிரபஞ்சத்தில் வேற எங்கயோ அறிவுள்ள உயிர் இருக்குங்கறத்துக்கு நிச்சயமான அறிகுறியே நம்மோட அவங்க தொடர்பு செய்ய முயலாததே.
***** முற்றும் *****
குறிப்பு
[1] SETI என்ற அக்ரோநேமை செடி என்றுதான் எழுதமுடியும். ஆனால் செடி என்றால் தாவரம் என்று குழம்பிவிடுவீர்களோ என்று T ஒலிப்பதற்காக அநாவசியமாயினும் ஒரு ட் ஒலி கூட்டி, செட்டி என்று எழுதியுள்ளேன். படிக்கையில் chetti என்றோ இல்லை jetti என்று ஆங்கிலத்தில் நினைத்து, மீண்டும் தமிழில் ஜெட்டி என்று படிக்காதீர். ஸாகன் ரொம்ப வருத்தப்படுவார்.
[2] ஏலியன்ஸ் தேடல் புனித கோப்பையை தேடிப் போகும் இன்டியானா ஜோன்ஸின் பயணம் போல. முடிவில் கோப்பையை அடையவேண்டும் என்பதல்ல; வழியில் சந்திக்கும் உன்னதங்கள் பல. மேலும் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. புத்தகமாக எழுதமுடிகையில் சொல்கிறேன்.