ஷட்ஜம் சரி ஷட்ஜமம் தவறு

Standard

கர்நாடக சங்கீத விமர்சனம் ஒன்றில் இன்று ஷட்ஜமம் என்று படிக்க நேர்ந்தது. ஸ ரி க ம ப த நி ஸா ஸ்வரங்களில் ஸ வை குறிப்பிடுகையில் விமர்சகர் ஷட்ஜமம் என்கிறார். இது தவறு. ஷட்ஜம் என்பது சரியான சொல்.

ரி, க, ம, ப, த, நி ஆகிய மற்ற ஸ்வரங்களுக்கு முறையே ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று கூறுவர். அதன்படி ஸ வை ஷட்ஜமம் என்று சொல்வது வழக்கத்தில் வருகிறது போலும்.

ஷட்ஜம் என்பதற்கு ஓரளவு அர்த்தம் இருக்கிறது. ஷட்ஷு ஜாயதே ஆகவே ஷட்ஜம் என்கிறார் எம்பார் விஜயராகவாச்சாரியார். ஷடாத்வாரங்களையும் சுத்தம்செய்து புறப்படும் ஒரு சப்தமே ஷட்ஜம்.

மனிதனின் உடம்பில் ஆறு இடங்களில் இருந்து இந்த ஆதார சப்தம் புறப்படுவதாக ஐதீகம். மூலாதாரத்தில் (முதுகெலும்பிற்கு கீழ், குண்டலினி இருப்பதாக அறியப்படும் இடம்) இருந்து புறப்பட்டு ஆண்/பெண்-குறிகளை தொட்டு, நாபிக்கமலம், ஹிருதயம், கண்டம் (தொண்டை) வழியாக மூன்றாவது கண் தொட்டு இறுதியில் ஸஹஸ்ரத்தை (சிரசின் உச்சி) சேர்த்து ஸ ஸ்வரம் புறப்படுகிறதாம்.

குண்டலினி பற்றி தெரிந்தவர்கள், நம்புபவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள பாகங்கள் வழியாக குண்டலினியை எழுப்பி, உயர்த்தி, முக்தி அடைவர் என்று அறிகிறேன். இதற்கு மேல் குண்டலினி பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இசையிலேயே தொடர்கிறேன்.

இதைப்பற்றி குறிப்பிடும் – சட்டென்று நினைவிற்கு வரும் – இரண்டு தியாகராஜர் கிருதி. ஸ்வர ராக சுதா ரஸ யுத என்று தொடங்கும் சங்கராபரண ராகத்தில் அமைந்த கிருதியில், சரணத்தில் மூலாதாரத்தில் இருந்து ஆதார நாதம் புறப்படுவதையும், ஏழு ஸ்வரங்களின் மற்ற புறப்படும் இடங்களை தெரிந்துகொள்வதைப்பற்றியும் வருணிக்கிறார்.

அதேபோல ஸோபில்லுசப்தஸ்வர என்ற ஜகன்மோஹினி ராகத்தில் அமைந்த கிருதியில், நாபிஹ்ருத்கண்டரஸனா என்று அனுபல்லவியில் கர்நாடக இசை ஸ்வரங்கள் புறப்படும் இடங்கள், பாடப்படும் விதம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

இவைகளுக்கும் குண்டலினி கூறும் இடங்களுக்கும் நேரிடை ஒண்டு-ஒன் மேப்பிங் செய்யமுடியுமா என்று தெரியவில்லை. விட்டுவிடுவோம். இரண்டு கிருதியும் பாடுவோர் பாடிக்கேட்டால் அசாத்தியமாய் இருக்கும். சத்தியம்.

நண்பர் ஷட்ஜம், பஞ்சமம் போன்றவற்றிற்கு தமிழில் அர்த்தம் இருக்கிறதா என்று டுவிட்டரில் கேட்டார். அர்த்தம் இருப்பதாக அறியேன். ஒருவேளை தமிழிசையில் நிகர்சொற்கள் இருக்கலாம். பேராசிரியர் சாம்பமூர்த்தி எழுதியுள்ள புத்தகத்தில் ஏழு ஸ்வரங்களுக்கும் இயற்கையில் என்ன சப்தங்களை தொன்றுதொட்டு ஒப்பிட்டு குறிப்பிடுகிறோம் என்று கொடுத்துள்ளார். இந்த வர்ணனை வலையில் சில இடங்களில் ஆங்கிலத்தில் உலவிவருகிறது. shadjam என்று கூகிள் செய்து பாருங்கள்.

ஸ்லோகத்தையும் அர்த்தத்தையும் தமிழில் இங்கு எழுதிவைக்கிறேன். சும்மாதான்…

ஷட்ஜம் வததி மயூரோ காவஸ்த்ரிஷப பாஷினஹ | அஜாவிகந்து காந்தாரம் க்ரௌஞ்சஹ க்வாநதி மத்யமம் | புஷ்பசாதாரனே காலே பிகஹ கூஜதி பஞ்சமம் | தைவதம் ஹேஷதே வாஜீ நிஷாதம் ப்ரும்ஹதே கஜஹ

சுமாரான அர்த்தம் (எனக்கு அவ்ளோதான் சம்ஸ்க்ருதம் தெரியும்): மயில் அகவுதல் ஷட்ஜம், கன்றினை கூப்பிடும் பசுவின் குரல் ரிஷபம் | மந்தையில் ஆட்டின் குரல் காந்தாரம், க்ரௌஞ்ச பட்சியின் (நாரை?) குரல் மத்யமம், வசந்த காலத்தில் கூவும் குயிலின் (கோகில பட்சி?) ஒலி பஞ்சமம் | குதிரை கணைத்தல் தைவதம், யாணை பிளிறல் நிஷாதம்.

இந்த சப்தங்கள் சரியாக ஒரு ஸ வில் இருந்து தொடங்கி அடுத்தடுத்த ஆரோஹண ஸ்வரங்களாக சப்தத்தில் கூடி, மேல் ஸ்தாயி ஸா வரை வருமா என்பது சந்தேகம். ஆனால், ஒன்றைக்காட்டிலும் அடுத்த சப்தம் சற்று அதிகமாகவே வருவதுபோல்தான் அமைந்திருக்கிறது. கவனிக்கவேண்டியது (சாம்பமூர்த்தியும் குறிப்பிட்டுள்ளார்), ஸ ம, ப மூன்று ஜீவஸ்வரங்களும் பறவைகளின் ஒலியுடன் ஒப்பிடப்படுகிறது. மற்றவை மிருகங்களின் ஒலியுடன். ஏன் என்று எனக்குத் தெரியாது (சாம்பமூர்த்தியும் சொல்லவில்லை).

இன்னொரு வழியாக ஸ்வரங்களை அணுகுகிறார் முத்தையா பாகவதர், தன் சங்கீத கல்பத்ருமம் என்ற உரையில். நான் படித்ததில்லை, பார்த்ததுமில்லை. இதில் ஸ்வரங்களை மனித ரூபங்களாகவே வருணிக்கிறாராம். (ஸ்வர மனிதர்களை கண்டவர்களையும் – நாரதர் போன்றவர்கள் – சேர்த்து வருணிக்கிறார்).

இந்த வருணனையில் இருந்து மேலே சாம்பமூர்த்தி குறிப்பிடும் ஸ்லோகத்தில் சொன்ன பறவை மிருக ஒலிகளுக்கும் வேறுபாடுகள் இருக்கிறது. ஏன், எப்படி என்று தனியாக ஒருமுறை பிய்த்துக்கொள்ளலாம். ஆயகலைகள் அறுபத்துமூன்றையும் பாரபட்சமின்றி வளர்த்துவைத்துள்ள கற்பனை வளம் மிக்க சமுதாயம் நாம் என்று மட்டும் தெரிகிறது. ஒரு காலத்தில்…

இன்று இப்பழம்பெருமைகளை ஜம்பமடிப்பதற்காவது படித்துத்தெரிந்துகொள்வதற்கே பொறுமையற்றோம். திரையொலியொளிதக்கலையை பேசியே வளர்க்கும் நேரம்போக சார்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது சரியா என்று விவாதிப்பதில் ஓய்வுநேரத்தையும் கற்பனைத்திறனையும் செலவிடுகிறோம்.

சமீபத்தில் மறைந்த எஸ். ராஜம் அவர்கள் முத்தையா பாகவதரின் வருணனையை மட்டும் வைத்து, ஸ்வரங்களை மனித ரூபங்களாக வரைந்திருக்கிறார். மேலே படத்தில். ஒரிஜினல் மியூசிக் அகதெமியில் பெட்டகத்தில் இருப்பதாக கேள்வி. சென்னை வாகன நெருக்கடிக்கு அஞ்சாமல், வருடங்களாக சோம்பலிக்காமல், இப்பிறப்பிலேயே ஒரு எட்டு போய் பார்த்துவிட வேண்டும்.

இவ்விஷயங்களை எழுதுகையில் என்ன பாஷைங்க இதெல்லாம் என்று அங்கலாய்கிறார் நண்பர். இசைதான். ஆனால் தியரி. ஷட்ஜமம் என்று எழுதும் விமர்சகர்கள் மட்டுமாவது படித்துக்கொள்ளட்டும்.

கேட்கும் இசையை எதற்கு எழுதிக் கெடுக்கவேண்டும்?

செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்

செல்வத்துளெல்லாம் தலை

*****
ஸ்வரராகசுதாரஸயுத… சுதாரகுநாதன்