கடவுள் செயல்?

Standard

விபத்திலிருந்து தப்பிப்பிழைத்த கிருஷ்ணன் மேங்களூர் ஆஸ்பத்திரி வார்டிலிருந்து தான் பிழைத்ததைப் பற்றி கூறுகிறார்:

யோசிக்கிறேன், ஏன் நான் மட்டும் என்று. எனக்கு தோன்றுவது கடவுள் எனக்கு மறுவாழ்வை கொடுக்க நினைத்துள்ளார்…

விபத்திலிருந்து பிழைத்தது கடவுள் செயல். அப்போ 160க்கும் மேற்பட்ட சக பயணிகளை சாகடித்த விபத்து?

அவருக்கு மட்டும் மறுவாழ்வளிக்க அநேகரை சாகடிக்கும் கிருஷ்ணனின் கடவுள் இவ்வளவு குரூரமானவரா?

ஒலி-கடிக்காக (சௌண்ட் பைட்) அடிபட்டு ஆஸ்பத்திரியில் படுத்திருப்பவர் மனநிலை எப்படி இருக்குமோ என்றும் பார்க்காமல் பேட்டியெடுக்கும் ஊடகங்களை சொல்வதா, இல்லை பிழைத்திருந்தாலும், உணர்ச்சிவசத்தில் சக இறந்தவர்களின் உற்றார் உறவினர்கள், பேப்பர் படிக்கும் என்னைப்போல் சிலர் தம்மைப்பற்றி என்ன நினைப்பர் என்று யோசிக்காமல் இதுபோல ஏதாவது சொல்லிவிடும் பிழைத்தவரை சொல்வதா.

அநேக அப்பாவிகளை சாகடித்த விபத்து, மனிதன் செயல். சிலர் பிழைத்தது, குருட்டு அதிர்ஷ்டம்.

கடவுளே, மனித செயல்களிலிருந்து மனிதனைக் காப்பாற்று.