நாச்சியார்கோவில், திருச்சேரை பக்கம் வெள்ளிங்கிரி, ரமேஷ்குமார் என்றெல்லாம் பெயர்களோடு பஸ்போகும் ரோட்டோர டீக்கடையில் பார்த்திபனும் வடிவேலுவும், வேண்டாம், யாரோ இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஓசி பேப்பரில் தலையை நுழைத்து சற்று ஒட்டுகேட்போம்.
ஏம்பா ஊர்ல என்ன நடப்பு, பேப்பர்ல நியூஸ் வந்திருக்காம்ல, ஆக்கிங் சொன்னார்னுட்டு. டேய் இருடா, அது ஹாக்கிங்டா. உன் ஊர் நடப்ப ஹாக்கிங் யோசிக்கராரா.
(வந்துட்டாய்யா, வந்துட்டாய்யா…) ஏம்பா, எங்கிட்டோ உள்ளார ஏலியன்ஸ் பத்தியெல்லாம் கருத்து சொல்லுறாரு, ஒரே உலகத்துல பக்கத்து நாட்டுல இருக்கற என்னயபத்தி தெரிஞ்சு சொல்லமாட்டாரா. டேய், உன்னய தெரிஞ்சுதா சொல்ல ஒண்னுமில்லைன்னு சொல்லல. இப்ப, ஆதவன்ல நெசமான ஹீரோ நீதான்னாகூட எவனும் நம்பமாட்டா இல்லயா…
சரிப்பா கிளராத, அந்தாள் என்னத்தாஞ்சொல்லுரா. அதச்சொல்லு மொதல்ல. அப்துல்கலாமோட முடிகலைஞ்ச லுக்குகூடி இல்ல, பெரிய விஞ்ஞானி கணக்கா நம்ம அல்லாத்துக்கும் பயம் காட்டுராரே. யாரோ ஏலியன்ஸ் வராங்களாமே நம்மள போட்டுதள்ள… நா இங்கன வூட்டுள்ளார தேட்டைய போடுற எலியன்ஸ் ரப்சர சரிகட்டுவேனா, எங்கனையோர்ந்து வந்து ஆட்டைய போடுவானுங்களோன்னு ஏலியன்ஸ் பத்தி…சரி சரி, என்ன டீ கணக்கா இம்புட்டு சூடாயிட்ட, ஆக்கிங்கோ வாக்கிங்கோ அவர உடுப்பா. நீ என்ன சொல்ர, ஏலியன்ஸ் உண்டா இல்லயா?
உண்டுடாங்ங்க…
எப்டீப்பா சொல்ர. நீயே இருக்க ஏலியன்ஸ் இருக்கமாட்டாங்களா.
என்னப்பா, இப்டி குண்டக்க மண்டக்க மடக்குறியே. என்ன ராவரத விட்டுபோட்டு, விசயத்த சொல்லுப்பா. டேய், நம்ம திருச்சேரை உருண்டை உலகத்துல ஒரு புள்ளி. இங்கிருந்து இங்கிலாந்துல இருக்குர ஹாக்கிங்கே கண்ணுக்கு தெரியமாட்டார். அவ்ளோ பெரிசு உலகம். அதுக்காக அவரு இல்லனு ஆயிடுமா. பேப்பர்ல போட்டா நம்பரேல்ல.
அப்பப்பப்பா, இப்ப என்னதான் சொல்ர நீ? எலேய், பூமி சூரியன சுத்துது நீ நம்பறயா?
உம், சரி, நம்பறேம்பா…இப்பய அது எதுக்கு? இருடா வெண்ன, நம்ம சூரியன்போல ஆகாசத்துல பல நட்சத்திரம் இருக்குல்ல, அதுல இதே மாதிரி பூமி சுத்தலாம்ல. அங்கணையு உன்னப்போல ஒரு தீவட்டிதடியன் இப்படி சந்தேகப்படலாம்ல, இங்க சூரியனசுத்தியபடி நீ இருப்பியான்னுட்டு…
இருப்பா இருப்பா, தலய சுத்திகிட்டு வருது, அடிச்ச சிங்கிள் டீயே அட்ரஸ் இல்லாம போய்ட்டது. ராவு வானத்துல பாக்கற அல்லா நட்சத்திரத்திலயும் சுத்தி மனுஷங்க இருப்பாங்கிறியா? கீழ விழுந்துட மாட்டாங்க?
சரிதான், உடையார், டீய போடுப்பா, ஜோலிய கவனிப்போம், கொரடாச்சேரிவரை போவனும்.
அப்பா என்னப்பா கழண்டுக்கர; எனக்கு ஒரு வழிய சொல்லிட்டு போப்பா…ஏலியன்ஸு…
வுடமாட்டே, சரி, அப்படி ரோட்டுல குப்புறபடுத்து உலகத்த கெட்டியா புடுச்சுக்க. இல்லாட்டி நீ சொன்னமாரி வெளில வுழுந்துடுவ பாரு. கொரடாச்சேரிலேர்ந்து வரவரைக்கும் முப்பரிமாணத்துல இருந்தீன்னா, மிச்சத்த சொல்ரேன்…
*****
மேற்படி தற்குறியான சம்பாஷனை, வாசலிலேயே ஹாஸ்யத்தை கழட்டிப்போட்டுவிட்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டு அணுகவேண்டிய அறிவியலுக்கு உகந்ததாக தெரியாவிடினும் ஏலியன்ஸ் ஒருவேளை பூமிக்கு வந்தால், சம்பாஷிக்கும் அவர்களில் ஒருவரைத்தான் சந்திக்க வாய்ப்பு அதிகம். ஹாக்கிங்குடனோ, இங்கு படிக்கும் நம்முடனோ இல்லை.
கொரடாச்சேரிக்கு போவதற்காக வெட்டாமல், பேச்சை சற்று நீட்டியிருந்தால், அச்சாதாரணர்களின் உலகப்புரிதலுக்கே உதித்திருக்கவேண்டிய விஷயம்தான் டிரேக் சமன்பாடு.
இது இன்று அறிவியலாளர்கள் ஏலியன்ஸ் இருப்பதையும், இங்கு வரலாம் இல்லை நம்மை தொடர்புகொள்ளலாம் என்றும் அபிப்பிராயப்படுவதில் முக்கிய பங்குவகிக்கிறது.
டிரேக் சமன்பாடு அறிவியல் விதி அல்ல. பள்ளிப்பாடபுத்தகங்களில் வராது. ஒரு லாஜிக், அவ்வளவே. சொல்லிவிடுகிறேன்.
ஒரிஜினல் குறிகளை வைத்து எழுதினால் இப்படி இருக்கும்
N = R P n(e) f(l) f(i) f(c) L
இதில் N ஒரு காலக்ஸியில் இருக்கும் டெக்னலாஜிகல் சிவிலைஸேஷன், தொழில்நுட்பத்தில் (அதானால் அறிவிலும்) தேறிய சமூகம். இவர்களுடந்தான் நாம் தொடர்புகொள்ளமுடியும் என்று நினைக்கிறோம். ஏலியன்ஸ்.
(இடைச்சொருகல்: காலக்ஸி ஆங்கில வார்த்தை. கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் கூட்டாக ஒன்றன்மிது ஒன்று படாமல் ஒன்றுக்கொன்று பல மில்லியன் மைல்கள் தள்ளி உறையும் இடம். கான்ஸ்டலேஷன் (நக்ஷத்திர கூட்டம்) காலக்ஸி இல்லை. இவை உலகில் இருந்து பார்த்தால் மனிதன் கண்ணுக்கு நேரடியாக தெரியும் நட்சத்திர புள்ளிகளின் சேர்க்கையில் கற்பனையில் உதிக்கும் பாட்டர்ன்கள் – தனுசு, ரிஷபம், சப்தரிஷி மண்டலம் என்று. நாம் பார்க்கும் கான்ஸ்டலேஷன்கள் அனைத்தும் ஒரு காலக்ஸியில் இருக்கும் நட்ஷத்திரங்கலாகலாம். காலக்ஸி புவியீர்ப்பு விதிகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும் நட்சத்திரங்களின் நிரந்தர உறைவிடம். ஒரு காலக்ஸியில் கோடிக்கணக்கில் நட்சத்திரங்கள் இருக்கும். அனைத்தையும் பூமியில் இருந்தபடி நேரிடையாக கண்ணால் பார்க்கமுடியாது. டெலஸ்கோப் வேண்டும். இது போல கோடிக்கணக்கில் காலக்ஸிகளை கொண்டது நம் அண்டம். நிரூபணத்துடன் வானியலாளர்கள் கொடுத்துள்ளார்கள். நம்பலாம். இது போல பல அண்டங்கள்…வேண்டாம், இது தியரி லெவலில் மட்டும் இருக்கிறது.)
R ஒரு காலக்ஸியில் நட்சத்திரங்களின் தோற்றத்தின் சராசரி கணக்கு. காலக்ஸியின் பாலகாண்டத்தில் இது பெரிய எண்ணிக்கை. வயதான காலக்ஸியில் குறைந்துவிடும். அதாவது நாம் உறையும் மில்க்கிவே எனப்படும் ஆகாச கங்கை (அருகில் படத்தில்) காலக்ஸியில் இன்று, இது கிட்டத்தட்ட வருடத்திற்கு ஒரு நட்சத்திரம். R இந்த மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொண்ட ஒரு சராசரி எண்ணிக்கை.
[ஆகாச கங்கை 360 டிகிரி பான் செய்து எடுக்கப்பட்ட படம். ஒருஜினல், விளக்கம் இங்கு இருக்கிறது]
[ஆகாச கங்கை இன்ஃப்ரா ரெட் காமிரா கொண்டு எடுக்கப்பட்ட ஒரு பகுதியின் படம். நட்சத்திரங்களின் எண்ணிக்கையை கோடிகாட்டுவதற்காக. ஒரிஜினல் படம் (9 MB), விளக்கம் இங்கு இருக்கிறது. மில்கிவேயின் இன்னொரு பகுதி-படம் 26 MB யில் இங்கு இருக்கிறது. டௌன்லோடி ஒருமுறை பிரமியுங்கள், நம் காலக்ஸியையும் அதில் நம் தூசி வாழ்வையும். அன்றாட மனக்கவலைகள் துச்சமாகிப்போகும்.]
P இவ்வகை நட்சத்திரங்களில் எவ்வளவில் சுற்றி நிரந்தரமான ஆர்பிட்டில், சுற்றுப்பாதையில், கிரகங்கள் இருக்கிறது என்பதன் விகிதம். n(e) என்பது அக்கிரகங்களில் எவ்வளவு உயிர் தோன்றுவதற்கான சீதோஷ-சூழ்நிலைகளுடன் இருக்கிறது என்பதன் விகிதம்.
மிச்சம் இருக்கும் மூன்று f உம், அக்கிரகங்களில் எவ்வளவில் உயிர் நிஜமாகவே தோன்றலாம், உயிர் தோன்றிய கிரகங்களில் எவ்வளவில் அறிவு தோன்றலாம் (பாக்டீரியா, அமீபா, புதுசா வந்திருக்கும் ஸிந்த்தடிக்காவையெல்லாம் கணக்கில் சேர்க்கமுடியாது இல்லையா – நம்முடன் சந்திக்கும் ஏலியன்ஸ்னா ஒரு லெவல் வேண்டாம்?), அறிவுடன் உயிர் இருக்கும் கிரகங்கள் எவ்வளவில் தொழில்நுட்பம் செழித்து விண்வெளிக்கப்பல், ரேடியோ டெலஸ்கோப் என்று கண்டுபிடிக்கும் என்பதன் அளவுகோள்கள்.
கடைசியில் இருக்கும் L அறிவெல்லாம் சரி நைனா, அப்படியாப்பட்ட ஏலியன்ஸ், ஒரு சமூகமாக, எவ்வளவு நாள் உயிருடன் இருப்பார்கள் என்பதற்கான குத்துமதிப்பான பதில் – ஒரு ஏலியன்ஸ் சமூகத்தின் சராசரி வயது. கூரையேறி கோழிபிடிப்பதற்குள் பூண்டோடு கைலாசம் போய்விட்டால் அப்புறம் எங்கு விண்வெளிக்கப்பலில் வானம் ஏறி பூலோக வைகுந்தம் பிடிப்பது.
டிரேக் சமன்பாடு இப்படியாக நட்சத்திரங்களும், அவற்றை சுற்றி கிரகங்களும் அவைகளில் நற்-சத்திரங்களும் தோன்றுவதற்கு ஆகும் சாத்தியங்களை எளிய விகிதங்களாக பொருத்தி, ஏலியன்ஸ் பற்றி பதிலுரைக்க விழைகிறது. என்ன, அனைத்து விகிதங்களுக்கும் நம்ம வடிவேலுவுக்கு மனதில் தோன்றும் ஏதோ ஒரு எண்ணிக்கையை பொறுத்தாமல், வானியலில் நமக்கு எவ்வளவு தெரியுமோ அதைவைத்து கணித்து ஒருவாறு அறிவியல் ரீதியாக விகிதங்களை மதிப்பிட்டு, பிறகு N எவ்வளவு என்று கணக்கிடுகிறது. பதில், கொரடாச்சேரிவரை ரமேஷ்குமாரில் செல்லும் நம்ம கிராமத்து சாதாரணன் பார்த்திபன் கூறுவதுதான்.
N பூஜ்ஜியமல்ல. ஏலியன்ஸ் இருக்கத்தான் சாத்தியங்கள் அதிகம்.
ஏனென்றால், P மற்றும் n(e) இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று என்று கார்ல் ஸாகன் காலத்தில் இருந்தே வானியல் எக்ஸோபயாலஜி விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்படுகிறது (தனித்தனியாக இரண்டிற்கும் மதிப்பு சில விஞ்ஞானிகளின் கருத்துப்படி 0.5, 2 என்று மாறினாலும் P மற்றும் n(e) இவற்றின் பெருக்கல் தொகை கிட்டத்தட்ட எண்ணிக்கை ஒன்று என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது). அப்படியே நீட்டி, உயிர் தோன்ற ஏதுவாக இருந்தால் அக்கிரகங்களில் நிச்சயம் தோன்றும் என்று வைத்துக்கொண்டார்கள். அதாவது, மேலே சமன்பாட்டில் f(l) = 1. இவ்வகை உயிர்களில் அட்லீஸ்ட் 10 சதவிகிதத்திற்காவது அறிவு இருக்கும் என்றார்கள் (சந்தேகம்தான், ஆனால் நம்மைவைத்து ஏலியன்ஸை மதிப்பிடகூடாது). அதாவது f(i) = 0.1. இந்த அறிவுஜீவிகளில் 10 சதவிகிதமே தொழில்நுட்பத்தில் செழிப்பார்கள் என்றால் f(c) = 0.1.
அல்லா நம்பரயும் போட்டு ஒரு கலக்கு கலக்கினால் முடிவில் டிரேக் சமன்பாடு இப்படி இருக்கும்
N = 0.01L
அதாவது ஏலியன்ஸ் சமூகத்திற்கு உயிர்வாழும் வயது அதிகமாக இருக்கையில், அவர்களின் தொழில்நுட்பத்திறன் வாய்ந்த சமூகம் ஒவ்வொரு காலக்ஸியிலும் பல இருக்கலாம். உதாரணமாக நாம் உறையும் மில்க்கிவே காலக்ஸியில், மனிதகுலத்தின் வயதின் நீட்சியாக L பத்தாயிரம் வருடங்கள் என்று கொண்டால், ஒரு நூறு ’நம்மைப்போல் பலர்கள்’ மில்க்கிவே காலக்ஸிசியில் வேறு எங்கோ கிரகங்களில் இருக்கலாம் என்று டிரேக் சமன்பாடு அனுமானிக்கிறது. மனிதகுலம் நிறைய வருடங்கள் சுபிட்சமாக வாழ்ந்தால் ஏலியன்ன்ஸ் இருப்பது அவர்களை கண்டுகொள்வது இரண்டு சாத்தியங்களும் அதிகரிக்கிறது.
இப்போது புரிகிறதா, நம்மூரில் நேரிலும் டீவியில் மஹாபாரதத்திலும் பெரியவர்கள் காலில் விழுந்ததும் தீர்காயுஷ்மான்பவ, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று ஏன் நம்மை வாழ்த்துகிறார்கள் என்று.
டிரேக் சமன்பாட்டைப்பற்றி, அவரது நண்பரும், நம் ஏலியன்ஸ் தேடுதலில் முக்கிய பங்குவகித்த கார்ல் ஸாகனின் விளக்கம். ஆங்கில வீடியோ.
*****
சரி, இவ்வளவு தீர்மானமாக, அறிவியல்ரீதியாக ஏலியன்ஸ் இருப்பார்கள் என்று நம்பமுடியும் என்றால், எங்கே அவர்கள்? ஏன் இன்னமும் நம்மை தடுத்தாள வரவில்லை? இவ்வகை கேள்விகளை அறிவியலில் வேறு உருவில் விவாதிக்கிறார்கள். இதற்கு ஃபெர்மி பாரடாக்ஸ் என்கிற விஷயத்தை பார்ப்போம்.
பாரடாக்ஸ் என்றால் நல்ல தமிழில் முரண்படுமெய் அல்லது முரண்மெய். நம்ம தமிழ்ல விளக்கனும்னா: ஆக்சுவலாப் பாத்தா இப்டி இருக்கனும் (உண்மை) ஆனா அப்டி இருக்கு (உண்மைக்கு முரணாய்) என்று சொல்வதற்கு பதில் இது ஒரு பாரடாக்ஸ்-பா எனலாம்.
டிரேக் சமன்பாட்டின்படி நம்ம காலக்ஸியிலே பல ஏலியன்ஸ் சமூகம் இருக்கலாம் என்று கணித்தால் ஏன் அவர்களை நாம் இன்னமும் சந்திக்கவில்லை என்பது ஃபெர்மி பாரடாக்ஸ். ஒரு 50 மில்லியன் வருடங்களுக்குள் மனித சமுதாயம் ஏலியன்ஸ் பற்றி கேள்விகேட்கும் அளவுக்கு அறிவில் உருப்பெறமுடிந்தால், மில்க்கிவேயில் வயது இக்காலத்தை காட்டிலும் மிக அதிகம். மற்ற இடத்திலும் இதைப்போன்ற ஏலியன்ஸ் தோற்றம் இருக்கலாமே.
டிரேக் சமன்பாட்டில் உள்ள கோளாறுகளை விஞ்ஞானிகள் அவ்வப்போது கலந்துபேசி சரிசெய்துகொண்டிருக்கிறார்கள். மேலே கூறியதில் இருந்து பெரிய மாற்றம் எதுவும் இன்னமும் நிகழவில்லை. ஆனால் சுவையான பல யோசனைகளும் கேள்விகளும் இருக்கிறது. ஆர்வமிருந்தால், ஆங்கில விக்கிப்பீடியா பக்கத்தில் படித்துப்பாருங்கள். உதாரணமாக, மற்ற அனைத்து மதிப்புகளையும் ஒப்புக்கொண்டாலும், L விஷயத்தில் நம் சிந்துசமவெளி நாகரீகம், எகிப்திய நாகரீகம் என்று தனியாக பார்த்தால் சுமார் 400 முதல் 1000 வருடங்கள் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், தொழில்நுட்பத்தில் விருத்தியாயிருக்கும் இப்போதைய நாமும் அடுத்த 1000 வருடத்தில் மறைந்துவிடுவோம் என்றுவைத்துக்கொண்டால், டிரேக் சமன்பாட்டின் L, நம்மைப்போல் ஒரு ஏலியன்ஸ் சமூகத்தின் வயது, 10000 என்றில்லாமல் சராசரியாக 1000 என்று சுருங்கிவிடலாம். ஏலியன்ஸ் சமூகம் N, மில்க்கிவேயில் 10தான் இருக்கிறது என்று வரும்.
அதேபோல் (L மதிப்பு 1000 என்பதை மாற்றாமல்) மிச்ச எண்ணிக்கைகளின் பெருக்கல்தொகை 0.01க்கு பதில் 0.001 என்றால், மில்க்கிவேயில் நாம் மட்டும்தான்!
இன்னொரு விதமாக யோசிக்கலாம். நம் மில்க்கிவே 100,000 லைட் இயர்கள் நீளம். அதாவது, ஆயிரம் கோடி கோடி கிலோமீட்டர்கள் நீளம் (ஒரு லைட் இயர் என்பது நம் ஒரு வருடத்தில் ஒளி செல்லும் தூரம்; கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி கிலோமீட்டர்கள் ஒன்றிற்கு பிறகு பதினாலு சைபர்கள்). இத்தொலைவுகளை மனதில் நினைத்துப்பார்க்க நமக்கு அளவுகோல்களே இல்லை. இவ்வளவு பெரிதான நம் காலக்ஸியில், டிரேக் சமன்பாட்டின் அனுமானத்தின்படி 100 ஏலியன் சமூகங்கள் இருக்கலாம் என்றால், அவர்கள் ஒருவருக்கொருவர் சராசரியாக 10 கோடிகோடி கிலோமீட்டர்கள் (10000 லைடியர்கள்) ’அருகில்’ இருக்கலாம். இங்கிருந்து வின்வெளிக்கப்பலில் வருவதற்கான தொழில்நுட்பம் இன்னமும் ஒருவரிடத்திலும் உதிக்காமல் இருக்கலாம். இன்டிபென்டென்ஸ் டே படத்தில் வருவதுபோன்ற ஸ்பேஸ்ஷிப்பெல்லாம் நம் விஞ்ஞானப்புனைகதைகளின் (மகத்தான) கற்பனையுடன் நின்றுபோயிருக்கலாம்.
பெர்மி பாரடாக்ஸ் எனப்படும் இந்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை.
இங்குதான் ரேடியோ அலைகளின் மூலம் விளியில் தேடல் பிரச்சனையை தீர்க்கலாம், ஏலியன்ஸுடன் தொடர்புகொள்ள வழிசெய்யலாம் என்று நம்பப்படுகிறது.
[மிச்சம் இறுதி பாகத்தில்]
ஏலியன்ஸ் இருக்கிறார்களா: முதல் பகுதி