நேனோ ஓவியம் அறிவியலை வளர்க்காது

Standard

தாஜ்மஹால் பார்த்திருக்கிறோம். அரிசியில் தாஜ்மஹால் பார்த்திருக்கிறோம். கலைஅரிசி என்று மைக்கேல்மதனகாமராஜனில் கிரேசிமோஹனால் சிலாகிக்கப்பட்ட ஓவியக்கலை. பார்க்க பூதக்கண்ணாடி வேண்டும். அந்த ஓவியங்களையும்விட சிறிதான, நேனோ ஓவியங்கள் பார்த்திருக்கிறீர்களா. ஒரு சாம்பிள் பாருங்கள்.



மேலே ஓவியத்தின் பெயர் ’இன் பீஸஸ்’. நேனோ ஓவியக்கலைஞர் கிரிஸ் ஆர்ஃபெஸ்கூ ’வரைந்தது’. அவருக்கு மிகவும் பிடித்த ஓவியமாம்.

வரைந்தது என்று கூறமுடியுமா தெரியவில்லை. ஏன் என்று செய்முறையை பார்த்தால் புரியும். கிராஃபைட் நேனோ துகள்களின் சஸ்பென்ஷனை (கொலாய்ட், கூழ்மம்) பூஜ்ஜியத்திற்கு கீழ் 196 செல்ஷியஸ் வரை நைட்ரஜனில் உறையவைத்து, அதன் பகுதியை ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் கொண்டு படம்பிடித்து, கணினியில் பெரிதாக்கி, கலரடித்து, ஜிகினா ஒட்டி, நமக்கு மேலே உள்ள படம்போல கெட்டி துணியில் அச்சாக்கித்தருகிறார்.

இவ்வகை ஓவியங்களில் எனக்கு இருக்கும் ஒரு சந்தேகம், ஓவியம் முடிந்துவிட்டது என்று எப்படித்தெரியும் (இன்னொன்று எது நேர்பக்கம்). கிரிஸை பார்த்தால் கேட்கவேண்டும்.

இது பரவாயில்லை. என் கலை அறியாமையை பொறுத்துக்கொண்டுவிடுவேன். நானோ ஓவியக்கலை அறிவியலும் கலையும் சேர்ந்திடும் இடமாம். நவீன புரட்சி, மக்களுக்கு நேனோடெக்னாலஜியை புரியவைக்க பயன்படும் என்றெல்லாம் கிரிஸ் ஆர்ஃபெஸ்கூ கூறுகிறார்.

நானோஅண்டத்தை ஓவியக்கலைஞர்கள் மக்களுக்கு பரிச்சயமாக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் (நானோடெக்னாலஜியின்) ஆக்கபூர்வமான விளைவுகளில் கவனம்செலுத்தி வேண்டாதவிளைவுகளில் இருந்து திசைதிரும்புவார்கள். சிறப்பான எதிர்காலம் வரும் என்று விஞ்ஞானிகள் நேனோஉலகை ஆராய்ந்துவருகிறார்கள். ஆதாரங்களை பார்த்தால் நேனோடெக்னாலஜிதான் பதில் என்று  தெரிகிறது. இத்தருணத்தில் அமேரிக்காவில் 70 சதவிகிதமும், மிச்ச உலகில் அதற்குமேலும் மக்கள் நேனோடெக்னாலஜி என்றால் என்ன என்றூ தெரியாமல் இருக்கிறார்கள், தினமும் நேனோடெக் பொருட்களை உபயோகித்துக்கொண்டே. இங்குதான் நேனோஓவியக்கலை மக்களுக்கு நேனோஉலகை புரிந்துகொள்வதற்கும், நேனோடெக்பற்றி விழிப்புணர்வையும், பார்ப்பதற்கு அருமையாகவும் குறுகுறுப்பாகவும் இருக்கும் இவ்வோவியங்கள்மூலம் அளிக்கிறது. கலைஞர்களும் விஞ்ஞானிகளும் சேர்ந்து பணியாற்றி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தவேண்டும்.

மேல்பத்தி அவர் இங்கு பேட்டியில் கூறியதின் சாம்பிள். இன்னொரு தருணத்தில் காதலா காதலாவில் கிரேஸி/கமல் ஓவியத்தை வைத்து கேட்பார்கள். அவரின் பேட்டியின்  சாராம்சத்தைவைத்து, நான் இங்கு ஓவியரையே கேட்கிறேன்: இதெல்லாம் எப்படிங்க உங்களுக்கு தெரியுது?

ஓவியக்கலையின் மூலம் நேனோடெக்னாலஜியின் அறிவியலை மக்களுக்கு புரியவைக்கமுடியும், அல்லது அருகாமையில் கொண்டுசெல்ல முடியும் என்று என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை.

அரிசியில் தாஜ்மஹால் வரைந்து அதை மக்களுக்கு பூதக்கண்ணாடி வைத்து காட்டினால், அவர்கள் அரிசி ஜெனிடிக்காக மாற்றப்பட்டது (அறிவியல்), மெஷினில் பாலிஷ் செய்யப்பட்டது, பச்சரிசி, புழுங்கல்லரிசி என்றெல்லாம் தெரிந்துகொள்வார்களா. கமலின் காமராஜனைப்போல் வாயில் போட்டு சுவைத்துவேண்டுமானால் சொல்லலாம். அதற்கு எதற்கு அதில் நுண்-ஓவியம்? குஷ்புவேறு கோபித்துக்கொள்ளுவார்.

மொத்தத்தில் மக்கள் கலைஅரிசியை பார்த்து ஆஹா நன்றாக இருக்கிறாது என்று பாராட்டலாம். ஓவியம் புரிந்தால். நேனோ ஆர்ட்டில் அதற்கு சான்ஸ் கம்மி. நேனோசெகண்ட் நெஞ்சில் கைவைத்து மேலே உள்ள ’ஓவியம்’ என்ன சொல்கிறது என்று புரிகிறமாதிரி சொல்லுங்கள் பார்ப்போம். சரி, கலைஅரிசி கலைஞரிடம் கேட்பது போல் எப்படிப்பா போட்டே என்று நேனோ கலைஞரிடம் கேட்கலாம். டெக்னிக்கை.

ஓவியர் உடனே (விஷயம் தெரிந்தவர் என்றால்) கிராஃபைட் கொலாய்ட், எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பி என்றெல்லாம் கூறுவார். இந்த சங்கதிகள் சாதாரண மனிதனுக்கும் ஒழுங்காக புரிவதற்கு அவர் நேனோடெக்னாலஜியை  காலேஜ் மேற்படிப்புவரை சென்று படிக்கவேண்டும். செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். படிப்பு முடிந்ததும் நாலு நேனோ காசு, நேனோஓவியராய் போய்விடுவாரா?

இயற்பியல் படிப்பதே வீடியோ கேம் புரொக்ராமராவதற்காக என்னும் உலகில் வேண்டுமானால் இது நடக்கலாம்.

இப்படித்தான் fractal என்று ஒரு வஸ்துவை கணிதவியலார்கள் பிரபலப்படுத்தினார்கள். கூடவே கலைஞர்களும் நிறைய படுத்தினார்கள். சிறு சிறு கணித சமண்பாடுகள் தங்கள் பகுதிகளின் ஒரு சில மதிப்புகளுக்கேற்ப, பிரமிக்க வைக்கும் பேட்டெர்ன்களை கொடுக்கும். கணினியில் சின்ன புரொக்ராம் எழுதி, வரைந்து, ப்ளோ அப் செய்து அச்சடித்து,  டீ ஷர்ட்டிலும், வீட்டு துணிப்படுதாவிலும் பிரிண்ட் அடிக்கலாம். இப்படி வரைந்த மேண்டெல்பல்ப் Mandelbulb பாருங்கள்.

எந்த பகுதியை எடுத்து பெரிதாக்கினாலும் அதற்குள் இன்னொரு இவ்வகை உலகம் தோன்றும். தோண்டத்தோண்ட புதிய பேட்டெர்ன்கள். பிரமிப்பாக இருக்கும். இதன் கணிதம் இங்கு இருக்கிறது. சும்மா க்ளிக் செய்து பார்த்துவிட்டு வாருங்கள். சாதாரண கலாரசிகனாய் இவ்வோயியத்தை (ஓவியம்னு சொல்லலாமா இதை? யார்போட்டாலும் – புரொக்ராம் எழுதினாலும் – இதுதான் வரும்) பார்த்து ரசித்துவிட்டு, இதன் கணிதத்தை (அறிவியலை) கற்பீர்களா?

ஏதோ கற்பனைத்திறன் வெளிப்பாடு நேனோசைஸில் வருகிறது என்று ஜல்லியடிப்பதுவரை ஓக்கே. ஆனால் அதைவைத்து நேனோஉலகை புரியவைக்கிறேன், இது அந்த புரிதலுக்கு உதவும் என்பெதெல்லாம் செப்படி வேலை.

கலகல என்று குலுக்கி அப்படி வெயிலில் தூக்கிப் பார்த்து ரசிக்கும் நம் வளையல் கலிடாஸ்கோப்பினால் எவ்வளவு பேர் டோட்டல் இன்டெர்னல் ரிஃப்லெக்‌ஷன் பற்றியும், அப்படியே சென்று ஆப்டிக் கேபிள் பற்றியும் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்? கலிடாஸ்கோப்பின் செய்முறை வேண்டுமானால் தெரிந்துகொள்ளலாம். பிற்காலத்தில் காதல் ஊத்திக்கொண்டதும் சேர்த்த அவளின் உடைந்த வளையல்களின் உண்மை காரணம் இதுதான் என்று சால்ஜாப்பு சொல்வதற்காகவாவது உதவும்.