இரண்டு மனித, ஒரு நாய், ஒரு கரடி பொம்மைகளுக்கு மகள் பெயர்சூட்டும் விழா நடத்திக்கொண்டிருந்தாள். ஆங்கிலப்பெயர்களாக சூஸிக்கொண்டிருந்தவளிடம், ஏன் தமிழ்நாட்டில் தானே வாங்கினாய், தமிழ் பெயர்களே வை என்றேன். சில தர்க்கங்களுக்குப் பிறகு (என் மகளல்லவா) தன் தோல்வியை ஒப்புக்கொண்டாள்.
இரண்டு மனித பொம்மைகளுக்கு குனவதி, குமுதினி என்று சூட்டினாள். கரடிக்கு வெண்பனி. ஆங்கில ஸ்நோ-வைட் டாம், தமிழ் நாட்டில் வெள்ளை கரடி கிடையாதாம். நாய்க்கு சற்று யோசித்து, அப்பா உனக்கு பிடிச்ச பெயர் என்று வைத்தது
சரஸிஜநாபசோதரி.
காலையில் அரியக்குடியார் பாட்டாய் நான் கேட்டுக்கொண்டிருந்ததை கவனித்திருக்கிறாள். முழுப்பெயர் சரஸிஜநாபசோதரி, ஷார்ட் நேம் சரஸு. மீடியம் நேம் சரஸிஜா வாம். டுவிட்டரில் நண்பர் சரசு என்று வைத்தால் வரி விலக்கு கிடைக்கும் என்கிறார். எதற்கு, வறுக்கி வாங்குவதற்கா? சொன்னால் இல்லாள் குழந்தையை ஷார்ட் வாலாய் ஆக்குவதாய் முகத்தை வெட்டுவாள்.
சமஸ்கிருதத்திற்கும் தமிழிற்கும் தற்போது நிலவும் உறவுமுறையை விளக்கி மகளின் நாமகரணத்தேர்வை அடித்துத்திருத்த மனமில்லை.
சரஸிஜநாபசோதரி பெயர் விளக்கம் சுவையானது. தெரிந்திருக்கலாம். சரஸிஜம் என்றால் தாமரை, சரஸிஜநாப என்றால் தாமரையை நாபியில் வைத்திருப்பவர், விஷ்ணு. அவரின் சோதரி பார்வதி. முத்துஸ்வாமி தீக்ஷதரின் கீர்த்தனையை கேட்டிருந்தாலும் உங்களுக்கு இது தெரிந்திருக்கலாம். நாககாந்தாரி ராகத்தில் உள்ள ஒன் ஹிட் ஒண்டர் கீர்த்தனை என்று நினைக்கிறேன். தியாகைய்யர் இந்த ராகத்தில் கீர்த்தனை அமைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.
கீழே, எங்கள் வீட்டு சரஸிஜநாபசோதரி வீற்றிருக்கிறாள்.
தமிழ்த்தொண்டாக நினைத்துக்கொள்ளலாம் என்று நாய்குட்டிக்கு தமிழில் பெயர் வைக்க பகீரங்கமாக பரிந்துரைத்தது சுஜாதாவாம். ஆதாரத்துடன் நிருபிக்க முடியவில்லை. மூன்றாம் பிறையில் சுப்பிரமணிக்கு பாலுமகேந்திராவிடம் சொன்னாரோ என்னவோ. சதிலீலாவதியில் நாய்க்கு சபாபதி என்று பெயராம். இதுவும் சுஜாதா பரிந்துரைத்திருக்கலாம் என்கிறார் டுவிட்டரில் வரிவிலக்கிற்கு வழிசொன்ன நண்பர். இருக்கட்டும்.
கண்ட இடத்தில் உச்சா அடித்ததினால் நண்பர் வீட்டு நாய்குட்டிக்கு சனி என்று பெயர் வைத்து, பிற்காலத்தில் திரிந்து sunny ஆகி விட்டதாம். கேட்டவுடன் இன்னொரு டுவிட்டர் நண்பர், அவ்வளவு உச்சாவை கணக்கிட்டால் cloudyன்னுதானே வைத்திருக்கவேண்டும். அடுத்தவர் சளைக்காமல், ஓ இதுதான் cloud computingஇன் தாத்பர்யமா, ஞானம் பெற்றேன்…
முதலாமவர் டுவிட்டரில் மேற்கூறிய சரஸிஜாவை கேள்விப்பட்டு கும்மோணத்தில் ஒருகாலத்தில் வீட்டு நாய்க்கு பத்மநாபன் என்று பெயர் வைத்திருந்ததையும் ஷார்ட் நேம் பன் என்றும் பகிர்ந்தார். பதிலுக்கு குடவாசலில் எங்கள் வீட்டு நாய்குட்டியின் பெயர் ராமபத்ரன், ஷார்ட் நேம் ரன். கூப்பிட்டால் ஓடிவிடும் என்றால் நம்ப மறுக்கிறார்.
மகள் அடுத்தது ஆண் பொம்மைதான் வாங்கப்போகிறாளாம். தமிழ் பெயர் வேண்டுமாம். தயாரித்துவிட்டேன்.
வினதாசுதவாஹனஸ்ரீரமணா. சே, சே, பல்யாகசாலைமுதுகுடுமிப்பெருவழுதி…