ஏலியன்ஸ் இருக்கிறார்களா: ஹாக்கிங் என்ன கூறுகிறார்?

Standard

ஏலியன்ஸ் என்றால் நீ என்ன நினைக்கிறாய் என்று என் ஆறு வயது மகளிடம் கேட்டேன்: ஓ தெரியுமே; (பிறகு எல்லாம் ஆங்கிலத்தில்…) பிளானெட்டில் வசிப்பவர்கள். அப்டினா நாமா என்றவுடன், யோசித்து திருத்தி, இல்லை, மார்ஸிலோ ப்ளூட்டோவிற்கோ வந்துபோவார்கள். ஸ்பேசில் வசிப்பார்கள் அப்பா. ஸ்பேஷ் ஷிப் வைத்திருப்பார்கள்; பீச் (peach), வெளுப்பு என்று நம்மைப்போல் கலரில் இருக்கமாட்டார்கள், நீலம், பச்சை என்று கலரில், ஓவல் மூஞ்சியுடன், குச்சிகால்களுடன், காற்றே இல்லாமல் உயிர் வாழ்வார்கள்… எனக்குப் பரிச்சயமான உலகைவிட்டு, அதேசமயம் மொத்தமாக விடாமல் (விவரணையை மீண்டும் படித்துப்பாருங்கள்) போய்கொண்டே இருக்கிறாள். ஸ்டாப் ஸ்டாப். இரும்மா; புத்தனாம்பட்டியே பார்கலை நீ எங்கு புளூட்டோ வரை சென்று ஏலியன்ஸை பார்த்தாய் என்றேன். ஐய்யோ அப்பா, நான் சொல்வது கால்வின் 

ஹாப்ஸில் வரும் ஏலியன்ஸ். கார்டூன்கள். நிஜத்தில் அவர்கள் கிடையாது. ஓஹோ, அப்ப மற்ற கிரகத்தில் உயிரே கிடையாதா? ஆமாம்பா நம்மமாதிரி கிடையாது. பாக்டீரியா மாதிரி வேணா இருக்கலாம்…

ஏலியன்ஸ் பற்றி நம் அனைவருக்கும் ஒரு மனப்பிம்பம், தியரி, இருக்கிறது.


வானியல் செய்திகளில் அடிபடும் ஏலியன்ஸ் என்ற சொல்லுக்கு, நம் உலகில் இல்லாத உயிரினம் என்று பொருள்கொள்ள எத்தனித்து, வேற்று கிரக வாசிகள் என்கிறோம். நம் உலகில் இல்லாத ஒரு புதிய உயிரினம் என்பது வரை சரி. அது, அவர்கள், வேற்று கிரகத்தில் வசிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லவே. விளியில் (ஔட்டர் ஸ்பேஸ்) உஜ்ஜீவிக்கலாம். ஏலியன்ஸ் ஒரு அறிவுடைய நீலநிற சாயலாகக்கூட இருக்கலாம், டக்ளஸ் ஆடம்ஸ் Hitchhikers guide to the Galaxy கதைப்புத்தகங்களில் குறிப்பிடுவது போல. வேற்றுகிரகவாசிகள் என்று தமிழாக்கிக்கொண்டாலும்,ஏலியன்ஸின் சாத்தியங்களை அத்தமிழாக்கத்தை வைத்து குறுக்கிவிடக்கூடாது.

சரி, சமீபத்தில் இயற்பியல் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங் ஏலியன்ஸைப்பற்றி ஏதோ கூறினாரே. என்ன அது? அது சரிதானா? அப்படியென்றால் அவர் ஏலியன்ஸ் இருப்பதை நம்புகிறாரா? நாமும் நம்பலாமா? ஏதாவது நிரூபணம் இருக்கிறதா? சென்னையில் கூட ஹாக்கிங் ஏலியன்ஸ் பற்றி கூறியதும் வானத்தில் ஒளி தெரிந்ததாமே. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் திட்டவட்டமாக பதில்கூற மறுக்கிறார்களாமே, நிஜம்தானா? மக்கள் பீதி அடைவார்கள் என்று மறைக்கிறார்களா? இரவு எங்கள் வீட்டுக் கொல்லைப்பக்கத்தில், அவ்வப்போது தொடுவானத்தில் ஒரு ஒளிதெரிகிறதே, அது ஏலியன்ஸின் வின்வெளிக் கப்பலா?

இப்படி அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் கூற இதை எழுதவில்லை (செய்தால், புத்தகம் போடவேண்டும்). முதலில் ஹாக்கிங் என்ன சொன்னார், அது எவ்வளவு சாத்தியம் என்று மட்டும் சுருக்கமாக பார்ப்போம். அடுத்த பாகத்தில் ஏலியன்ஸ் நாம் எப்படித்தேடிக்கொண்டிருக்கிறோம் என்று பார்ப்போம்.

டிஸ்கவரி சானலில் தன் புரொக்கிராமில் ஹாக்கிங் சொன்னதின் சாரம்சம் இது.

ஏலியன்ஸ் இருக்கலாம் என்பது என் (ஸ்டீபன் ஹாக்கிங்கின்) கணித மூளைக்கு பகுத்தறிவுக்குட்பட்டதான ஒரு சாத்தியமாகவே படுகிறது. ஆனால் அவர்கள் நம் உலகை, அதன் கனிமங்களை சூறையாடவே எத்தனிப்பார்கள். நம்மோடு உறவாட இல்லை.ஏலியன்ஸ் நம்மை பார்க்க வந்தால் அது முதன்முதலில் கொலம்பஸ் (இந்தியா என்று நினைத்து) அமெரிக்காவை கண்டு அதன் பழங்குடியினரை சந்தித்தது போலாகிவிடும் (பழங்குடியினர் சூறையாடப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர், இது வரலாறு).

ஏலியன்ஸுடன் தொடர்புகொள்ள முயலுவதை தவிர்த்து, அவர்கள் கண்ணில் படாமல் இருக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையே நாம் செயலாக்கவேண்டும். நம்மையே (மனித குலத்தையே) ஒருமுறை பார்த்துக்கொண்டால் போதும். அறிவுபெற்ற உயிரினம் எவ்வாறு நாமே சந்தித்துக்கொள்ள தயங்குபவர்களாக ’வளர்ந்து’ விடுவோம் என்று தெரிந்துகொள்ள.

(இடைச்சொருகல்: கண்ணில் படாமல் என்று நான் எழுதும் சொல்லாக்கம் எப்படி நம் சிந்தையை குறுக்குகிறது பாருங்கள். ஏலியன்ஸிற்கு கண் இருக்குமா அதைக்கொண்டுதான் ‘பார்ப்பார்களா’ என்று திட்டவட்டமாக தெரியாது.)

ஏலியன்ஸ் இருப்பது சாத்தியமே. அவர்கள் எப்படி (வடிவம், தொழில்நுட்பம் முதலியவை) இருப்பார்கள் என்று யூகிப்பதுதான் நிஜ சவால். அவர்கள் ராட்சஸ வின்வெளிக்கப்பல்களில் வாழ்ந்துகொண்டு இருக்கலாம். தேசாந்திரிகள் போல. தங்கள் தாய்கிரகங்களின் கனிமங்களை உபயோகித்துமுடித்திருப்பார்கள். வேறு கிரகங்களை அடிமைப்படுத்த காத்திருப்பார்கள்.

இப்படிக் கூறுகிறார் ஹாக்கிங்.

மொத்தத்தில் அவர் நமக்கு பரிந்துரைப்பது சுருக்கமாக ஆங்கிலத்தில் STFU; கௌரவமான மிதவசையில் சொன்னால், வாயை பொத்திக்கொண்டு இருங்கள்…

***

ஏலியன்ஸ் நம்மீது படையெடுப்பது 1950களிலிருந்தே பரவலான ஊடக உத்தி. எச்.ஜீ.வெல்ஸ் முதலில் வார் ஆஃப் தெ வோர்ல்ட்ஸ் என்ற கதையில் செவ்வாய் கிரகத்திலிருந்து ஏலியன்ஸ் வந்து நம்மை தாக்குவது போலவும் அவர்களை நாம் ஒருவாறு வெற்றிகொள்வதுபோலவும் எழுதி பிரபலப்படுத்தினார். ரேடியோ ப்ரொக்ராமாக இதை ஆர்ஸன் வெல்ஸின் வாய்ஸோவரில் அமெரிக்காவில் ஒலிபரப்பியபோது, கேட்டுவிட்டு மக்கள் பீதியில் தெருவுக்கு ஓடிவந்தார்களாம்.பிறகு படமாக எடுத்தபோது மார்ஷியன்ஸிற்கும் நம் கப்பலுக்கும் சண்டையை மேலே படம் சித்தரிக்கிறது.

வேடிக்கை என்னவென்றால், ஏலியன்ஸுக்கு ரேடியோ அலைகள் மூலம் நாம் இருப்பதை காண்டுகொள்ள உதவும் சிக்னலும் இவ்வகை புரோக்ராம்கள்தான். ஆனால் சான்ஸ் கம்மி. இவ்வகை பிராட்பாண்டு ரேடியோ அலைகளை கண்டுகொள்ள சில தேவைகள் இருக்கிறது. அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.

ஒருவாறு இன்று செவ்வாயில் நம்மை தாக்கும் அளவுக்கு வளர்ந்த உயிரெல்லாம் இல்லை என்று தெரிகிறது. வைக்கிங் அனுப்பிய செவ்வாயின் தரிசல் பரப்பை பாருங்கள்.

ஆனாலும் இவ்வகை அச்சங்கள் நம் மனநீட்சியாக வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் ஹாக்கிங்கும் இவ்வகையில்தானே சொல்கிறார்.

ஹாக்கிங் சொல்வதைப்பார்த்தால் நம் கனிமங்களை சீக்கிரம் தீர்த்துவிடு என்கிறாரா. அவை இருந்தால்தானே ஏலியன்ஸிடமிருந்து நமக்கு டதொல்லை. இப்படி நினைத்தால், நம்மை அழிக்க தனியாக ஏலியன்ஸ் வரவேண்டாம்.

அதேபோல், நமக்கு என்னவென்றே தெரியாத ஏலியன்ஸ், கனிமம் என்று நினைப்பது நாம் கனிமம் என்று நினப்பதைத்தான் (இரும்பு, எண்ணை…) என்று சொல்லமுடியாது. ஒருவேளை ஏலியன்ஸ் கடல்நீரை கனிமமாக நினைத்தால்? நாம் ஹோகயா…

***

இவ்வகை பயமுறுத்தல்களை பால் டேவிஸ் போன்ற சில விளி-அறிவு-தேடல் விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ளவில்லை (மொத்தமாக மறுக்கவுமில்லை).

சமீபத்தில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற ராட்சஸ இயற்பியல் இயந்திரம் அணுக்கூறுதுகள்களின் இருப்பை பரிசோத்தித்துவருகிறதல்லவா. இந்த இயந்திரத்தை ஓட்டக்கூடாது, செய்தால் மைக்ரோ ப்ளாக்ஹோல்ஸ், கருந்துளைகள், தோன்றி, வெடித்து, உலகையே அழித்துவிடும் என்று கேஸ்போட்டு தோற்றார்கள். கேள்விப்பட்டிருக்கலாம். மைக்ரோ கருந்துளைகள் தோன்றுவதன் சாத்தியம் மிகக்கம்மி. கிட்டத்தட்ட பூஜ்ஜியம். ஏன் இதைச்சொல்கிறேன் என்றால், இந்த சாத்தியத்தை காட்டிலும் ஏலியன்ஸ் நம்மீது படையெடுக்கலாம் என்பதன் சாத்தியம் சற்று அதிகமே. அண்டம் அவ்வளவு பெரிது. ஏலியன்ஸ் இருக்கத்தான் சாத்தியம் அதிகம். அதனால்தான் ஹாக்கிங், பால் டேவிஸ் போன்றோர் எதிர்விவாதம் புரிகையில் ஜாக்கிரதையாக இவ்விஷயத்தை ஆலோசிக்கிறார்கள்.

பால் டேவிஸ் சொல்வதின் சாராம்சம் இது: ஹாக்கிங் சொல்வதுபோல் வின்வெளிக்கப்பலில் உலவும் ஏலியன்ஸ்கள், வின்வெளிக்கப்பலை செய்து இவ்வளவு தூரம் வரமுடிந்தவர்கள் நம்மை பல காலம் கண்கானித்திருந்திருப்பர். நம் உலகு தோன்றியது 4.5 பில்லியன் வருடங்கள் முன்னர்தான். அதற்கு முன்னரே பல நட்சத்திரங்களும் அவற்றை சுற்றி கிரகங்களும் இருந்திருக்கிறது. அங்கு எங்கும் ஏலியன்ஸ் தோன்றியிருக்கலாம். அப்படி தோன்றிய, வின்வெளிக்கப்பலை வடிவமைத்து செயல்படுத்தக்கூடிய ஏதாவது ஒரு ஏலியன் கூட்டம்,  நாம் தோன்றி, ரேடியோ டெலஸ்கோப் வடிவமைக்கும் டெக்னாலஜிவரை வருவதற்கு பல யுகங்கள் முன்னரே நம் உலகின் கனிமவளம் பற்றி தெரிந்துகொண்டிருக்கும் சாத்தியம் அதிகம். நம் கனிமத்தின் மீது கண் என்றால், இந்நேரம் அதைகொண்டு போயிருப்பர். நாம் மனிதர்களாக வளர்ந்து, பிறகு நம்மை அழித்துத்தான் அதைக்கொண்டு போகவேண்டும் என்று என்ன அவசியம்.

மேலும் ஏலியன்ஸ் வின்வெளிக்கப்பலில் வருவதாக ஹாக்கிங் கூறுவது அசாத்தியமானது. நம் பக்கத்து நட்சத்திரமே 4.5 லைட் இயர்  (25 ட்ரில்லியன் மைல்கள்)  தொலைவில் இருக்கிறது. அறிவியலார்களில் ஆப்டிமிஸ்டுகளே ஏலியன்ஸ் இருந்தால் அட்லீஸ்ட் 100 லைட்டியர் தூரத்திற்கப்பால் இருக்கலாம் என்கிறார்கள். வின்வெளிக்கப்பலில் இங்கு வருவதெல்லாம் சாத்தியமே இல்லை. அவர்களும் நம்மைப்போல ரேடியோ அலைகளின் தொடர்புமட்டுமே செய்ய எத்தனிப்பர். வேறு வழி இல்லை.

அப்படியே ஃப்ளூக்கில் இங்கு ஏலியன்ஸ் வந்தாலும் அவர்கள் கொலம்பஸ்போல் சூறையாடுவர் என்று நினைப்பது அபத்தம். நம் மனிதகுலம் அப்படி என்றால், புதியகுலமான அவர்களும் அப்படித்தான் என்று நினைப்பது மனிதகுலமையசிந்தனையின் (anthropocentrism) வடிவம். அவ்வளவு சண்டைக்காரர்களாக இருக்கும் ஏலியன்ஸ் இந்நேரம் அவர்களையே அழித்துக்கொண்டிருப்பர். இப்படிப்போகிறது பால் டேவிஸின் தர்க்கங்கள்.

பால் டேவிஸ் எதிர்பார்ப்பது ஒரு க்ளோஸ் என்கௌண்டர்ஸ் ஆஃப் தெ தெர்ட் கைண்டை.

ஸ்பீல்பெர்க் ஆதியில் எடுத்த இப்படத்தில் ஏலியன்ஸ் வருகைதந்து நம்முடன் ஓரளவு சுமுக உறவாடுவர். தேர்ட் கைண்ட், மூன்றாம் வகை, ஏன் என்று பெயர்காரணம் இருக்கிறது. ஏலியன்ஸுடன் தொடர்பு முதல் இரண்டு வகைகளிலும் உண்டு. டாக்டர் அலன் ஹைனக் என்பவர் வகுத்தது இது (இவரும் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் வருவார்). முதல் வகை ஏலியன்ஸின் பொருட்களை பார்ப்பது மட்டும். யூ.எப்.ஓ. UFO பார்ப்பது இவ்வகை. அமெரிக்காவில் மட்டும் 1970, 80 களில் மில்லியன் கணக்கில் இவ்வகை கேஸ்கள் தோன்றி, ஒன்றில் கூட சரிவர நிருபிக்கமுடியாமல் (நாஸாவில் ஒருகாலத்தில் ஆராய தனி டிவிஷனே இருந்தது), பலர் பதினைந்து நிமிட புகழில் மங்கி மறைந்தனர். இரண்டாவது வகை, தரையிறங்கி வந்த UFOவில் இருந்து ஏலியன்ஸை மேலே படாமல் ஆசாரமாக பார்த்தோ, இல்லை அவர்களின் ஏதோ ஒரு பொருளையோ எடுத்துவருவது. மூன்றாவது வகை என்கௌண்டர் ஏலியன்ஸுடன் கைகுலுக்கிக்கொள்வது (இல்லை அடித்துக்கொள்வது). இந்த வகையைத்தான் ஸ்பீல்பெர்க் தன் படத்தில் காட்டினார். பிறகு அவரே நாமும் ஏலியன்ஸும் அடித்துக்கொள்வதையும் டாம் க்ரூயிஸை வைத்து சமீபத்தில் படமெடுத்தார். விஞ்ஞானபுனைகதைகளில் இவ்வகை கற்பனைத்திறன் வெளிப்பாடு பிரமிக்கத்தக்கதாக இருக்கும். அலஸ்டர் ரெனால்ட்ஸ், வெர்னர் வின்ஞ், டேவிட் பிரின் போன்றோர் அசாத்தியமாய் ஏலியன்ஸை நாம் சந்திப்பதற்கான அறிவியல்களை அலசி கதை சொல்லியிருக்கிறார்கள். பிறகு பார்ப்போம்.

பால் டேவிஸ் தன் சமீபத்திய ஈரீ ஸைலன்ஸ் Eerie Silence புத்தகத்தில் கற்பனைசெய்து நினைப்பது, ஒரு சமாதானமான, இரண்டு பக்கமும் அடுத்தவர்களை மரியாதையாக, அறிவில்தேர்ந்தவர்களாக, நட்பிற்குகந்தவர்களாக நடத்தும், ஒரு என்கௌண்டர்.

***

இரு வேறுபட்ட கருத்துக்களை பார்த்தாகிவிட்டது. சரி, முதலில் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள்.

அப்படியென்றால் ஹாக்கிங் ஏலியன்ஸ் இருப்பதை நம்புகிறாரா? ஆமாம். என்ன, அவர் கூற்றை எதிர்க்கும் பால் டேவிஸும் நம்புகிறார்.

நானும் நம்பலாமா? உங்கள் இஷ்டம். நியூட்டனின் விதியை நம்புகிறீர்களா? பேய் இருப்பதை? கடவுள்? அடுத்தவீட்டுப் பெண் (ஆண்) பார்க்கும் பார்வையை?

ஏதாவது நிரூபணம் இருக்கிறதா? இல்லை. செட்டி, மெட்டி, வீட்டில் செட்டி, என்று ரேடியோ டெலஸ்கோப்பில் நிருபணத்தை இன்னமும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இவையெல்லாம் என்ன, ஏன் தேடுகிறார்கள் என்று அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.

சென்னையில் கூட ஹாக்கிங் ஏலியன்ஸ் பற்றி கூறியதும் வானத்தில் ஒளி தெரிந்ததாமே. ஆமாம். நான் கூட பார்த்தேன். அன்று இரவுகூட ராஜீவ் காந்தி என் வீட்டிற்கு டின்னர் சாப்பிட வந்திருந்தார். என்னையும் டீவில காட்டுவீங்கல்ல.

சம்பந்தப்பட்டவர்கள் யாரும் திட்டவட்டமாக பதில்கூற மறுக்கிறார்களாமே, நிஜம்தானா? ஆமாம். வீட்டில் சமயலுக்கு கறிவேப்பிலை வாங்கிக்கொடுப்பது போன்ற வேறு உபயோகமான வேலை ஏதாவது செய்துகொண்டிருந்திருப்பார்கள்.

மக்கள் பீதி அடைவார்கள் என்று மறைக்கிறார்களா? ஆமாம். ஒருவருக்கு மட்டும் கடவுளோ, ஏலியன்ஸோ, கனவில் ரம்பையோ தெரிந்தால் நம்பவைப்பது கடினம். உண்மையில் ஏலியன்ஸையோ அவர்களின் வின்வெளிக்கப்பலையோ, விளைவுகளையோ பார்த்துவிட்டு அவர்களால் சாதாரணமாக நடமாடமுடிகிறதென்றால், அதைப்பகிர்ந்துகொண்டால் மற்றவர் மட்டும் ஏன் பீதி அடையவேண்டும். பார்த்ததை வெளியில்சொல்லாமல் இருக்க ஏலியன்ஸ் ஹஷ்-மனி, லஞ்சம், கொடுப்பார்களா என்று எனக்குத் தெரியாது.

இரவு எங்கள் வீட்டுக் கொல்லைப்பக்கத்தில், அவ்வப்போது தொடுவானத்தில் ஒரு ஒளிதெரிகிறதே, அது ஏலியன்ஸின் வின்வெளிக் கப்பலா? இருக்கலாம். ஆனால் கொல்லப்பக்கத்தில் அடுத்த ப்ளாட்டோ, பக்கத்து வீட்டுக்காரர் உச்சா அடிக்கச்செல்கையில் வரும் டார்ச் ஒளியோ, பொட்டலில் தொடுவானத்தில் தார்ரோட்டில் கடந்து செல்லும் லாரியின் ஹெட்லைட்டோ ஏலியன்ஸின் வின்வெளிக்கப்பலாக இருக்காது.

உண்மையில் மேலே உள்ள கேள்விகளில் உள்ளதுபோன்ற யேஷ்யங்களை பரிசோதிக்காமல் ஒரு முடிவுக்கு உங்களால் வரமுடியாது. ஏலியன்ஸ் விஷயத்தில் இது கஷ்டம். உண்டு இல்லை என்று எந்த பக்கமும் சாய்வதற்கு நம்மிடம் டேட்டா கிடையாது.

அதனால்தான் நிச்சயமாக சொல்லமுடியாத தருணத்தில், அவரவர் உள்மனது ஆசைகள் தியரியாய் – சில சமயம் தெளிவாய், சோதித்துபார்கமுடிவதுபோல், பல சமயம் குன்சாய், சோதித்துப்பார்க்க முடியாத கூற்றாய், வெளிப்படுகிறது. ஏலியன்ஸ் இருந்தால் நன்றாயிருக்குமே, நம்மைத்தவிர அண்டத்தில் யாருமேவா இல்லை, சே சே இருக்காது, பாலவாக்கத்திலேயே பக்கத்தில் வீடு வந்துவிட்டது, பக்கத்து காலக்ஸியிலாவது யாராவது இல்லாமலா போவர். நம்மை மாதிரி அழகாக இல்லாவிட்டாலும் ஒரு வாலுடன் நீலக்கலரில் கழுதை காதுடன் அங்கயற்கண்ணியாய் அவதரிக்கட்டுமே… இப்படி நம்மில் சிலருக்கு அபிலாஷை.

ஹாக்கிங் போன்றோருக்கு (அவர் மட்டும் எச்சரிக்கவில்லை, ஸ்டீபன் கௌல்டு, ஜேர்ரட் டைமண்ட், ஃப்ரீமன் டைஸன் முதலான அறிவியலாளர்களும் ஒத்தகருத்துடையவர்களே) ஏலியன்ஸ் பற்றி எச்சரிக்கையுணர்வுடன், அபிலாஷை, மனநீட்சி, தோன்றுகிறது.

பால் டேவிஸ் போன்றோர் ஏலியன்ஸை சாத்வீகளாக பார்க்கிறார்கள். நம் அபிலாஷையின் இன்னொரு முகம். இதுவும் சாத்தியமே. என்ன, இதற்கும் நிரூபணம் கிடையாது.

எதை நம்பலாம்? காயாதகானகத்தே செல்கிறோம். எதிர்படுவது சிட்டுக்குருவியா, புலியா என்று தெரியாது. பார்த்தவுடன் ஹலோ சௌக்கியமா என்று சொல்ல, இரண்டும் பேசும் மொழியும் தெரியாது. ஆனால் இரண்டும் இருக்கலாம் என்று மட்டும் மனிதகுலத்தின் உள்மனது சொல்கிறது. தானியங்களுடன், உறையுனுள் துப்பாக்கியும் வைத்துக்கொள்வதே நல்லதோ?

அட்லீஸ்ட் காட்டினுள் மம்பட்டியான் பெயரையாவது வாயில் முணுமுணுத்துக்கொண்டு செல்வது நல்லது…

*****

[அடுத்த பாகத்தில் ஏலியன்ஸை நாம் எப்படித்தேடிக்கொண்டிருக்கிறோம் என்று பார்ப்போம். டிரேக் சமன்பாடு, ஃபெர்மி பாரடாக்ஸ், ரேடியோ ஸைலென்ஸ் என்று சுவையான விஷயங்கள் இருக்கின்றன.]

ஹாக்கிங் கூறியது பற்றி மேலும் படிக்க செய்திச்சுட்டிகள்